: 96

பண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்

முன்னுரை 

உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும்  செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர்.

நாடகத்தன்மையைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரம் கூட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் தான்.  ஆக உலக இலக்கியத்தின் ஆதி வடிவங்கள் கவிதையும் நாடகமும் என்பதில் சிக்கல் இல்லை. அப்படியானால் கதை என்னும் இலக்கிய வடிவம் ஆதியிலக்கிய வடிவமாக எங்குமே இல்லையா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.  அதற்கும் தொல்காப்பியம் போகிற போக்கில் பதில் ஒன்றைச் சொல்கிறது. யாப்பின் வழியாகச் சொல்லப்படுவது இலக்கியம் என வரையறை செய்யும் தொல்காப்பியம் அவை பாட்டுஉரைநூல்வாய்மொழிபிசி,அங்கதம்முது சொல் என ஏழு என்கிறது. தமிழ்மொழி வழக்கிலிருக்கும் நிலப்பரப்பில் கிடைக்கக் கூடிய இலக்கியவகைகள் இவை என்பது அச்சூத்திரம் சொல்லும் செய்தி (தொல்.செய்யுளியல் 1336). ஏழுவகைகள் பற்றிப் பேசினாலும் அது சொல்லும் இலக்கிய உருவாக்கக் கோட்பாடு பெருமளவு பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு என்றே நாம் புரிந்து கொண்டுள்ளோம். தொல்காப்பியத்திணைக்கோட்பாட்டை விளங்கிக் கொண்டால், நாவல் உருவாக்கத்திற்கும்,  நாவல் விமரிசனத்திற்குமான அடிப்படைகள் தொல்காப்பியத்தில் இருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ளமுடியும். நாவல் என்னும் எழுத்துவகை எதனை எழுதுகிறது? அதனை வாசிப்பது எப்படி? என்ற கேள்வியை எழுப்பிக்கொள்வோம்.  

 இந்தக் கேள்விக்குத் தொல்காப்பியரிடம் நேரடியாகப் பதில் இல்லை. அவரிடம் இருப்பதெல்லாம், கவிதையை எப்படி வாசிப்பது அல்லது கவிதை எவ்வாறு உருவாகும்? என்பதற்கான பதில் மட்டும் தான். அதேபோல் அரிஸ்டாடிலிடம் கிடைக்கக்கூடிய பதில் நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம் அல்லது நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதற்கான பதில் மட்டும் தான். இருவரையும் ஆழமாக வாசிக்கும் ஒருவருக்குக் கவிதை எதை எழுதிக் காட்ட முயல்கிறது என்பது புரிந்திருக்கவே செய்யும்.

முதலில் கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டியுள்ளன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை- பின் வாங்கியதின் காரணத்தை, தோல்வி தந்த துயரத்தை என ஒரு பயணமாக அதைச் சொல்லலாம். அல்லது  தேடிக் கண்டடைந்ததின் கொண்டாட்டத்தை - கொண்டாட்ட மனநிலையை அடுத்தவர்க்கும் அளித்துவிட நினைக்கும் பரவசத்தை - பரவசமாய்ப் பரவிக் கிளர்த்தும் முடிவாக நிற்கும் இன்மையை என இன்னொரு பயணமாக அமையலாம்.

கவிதை எழுதும் பயணம் எத்தகையதாக இருந்தாலும் கவிதை எழுதப்படுவதற்கு ஓர் உணர்வு வேண்டும். அவ்வுணர்வைத் தன்னிலை (self) சார்ந்தும், பிறநிலை (other) சார்ந்தும் இரண்டாகப் பிரிக்கலாம். தன்னிலை தன்னிலையோடு கொள்ளும் உறவும் முரணும் எழுப்பும் உணர்வுகள் என்பன ஒரு பாதை. தன்னிலை பிறநிலையோடு கொள்ளும் உறவும் முரணும் என்பது இன்னொரு பாதை. பிறநிலையும் பிறநிலையும் கொள்ளும் உறவையும் முரணையும் கண்டு நிற்கும் தன்னிலையின் பாடுகள் என்பன மற்றொரு பாதை. இவற்றையே அகவுணர்வு, புறவுணர்வு, புறப்புற உணர்வு எனத் தமிழின் தொடக்கநிலைக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் விரிவாகப் பேசுகிறது.

 தன்னிலையின் விருப்பத்தால் குடும்ப அமைப்பு உருவாகிறது. பிறநிலையின் மீது கொள்ளும் அக்கறையால் குடும்பம் தவிர்ந்த அரசு போன்ற அமைப்புகளும், அதன் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிறா அமைப்புகளும் உருவாகின்றன.  தொல்காப்பியம் இவ்வுணர்வுகளை உரிப்பொருட்கள் எனவும், மெய்ப்பாடுகள் எனவும் பேசியுள்ளது. புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல், ஒருதலைக்கோடல், பொருந்தா நோக்கு என்பன அகநிலை உணர்வுகள். அதன் புறனான வெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன புறநிலை உணர்வுகள். இவைகளை ஏற்றுக்கவிதையாக்கும்போது உருவாகும் உணர்வு வெளிப்பாட்டுநிலையை மெய்ப்பாடுகள் எனச் சொல்லி அவை முதன்மையாக  நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டாகும் எனவும், இவ்வெட்டே எட்டு எட்டாய் விரியும் எனவும் அது விரித்துள்ளது.

ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம் பெறுதல் அவசியம். அவை முதல்பொருள்கருப்பொருள்,உரிப்பொருள் என்பன. இந்த மூன்றும் ஒரே கவிதையில் அமைவது கட்டாயமில்லை. முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றில் எது முக்கியம் என்றால்உரிப்பொருள்தான் என்பதை வலியுறுத்த. 

 முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

 நுவலுங்காலை முறைசிறந்தனவே

பாடலுள் பயின்றவை நாடும் காலை”  (அகத்திணையியல்.3) 

என எழுதியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.  உரிப்பொருள் இல்லாமல் கவிதை அல்லது இலக்கியம் இல்லை. ஆனால் அவ்வுரிப்பொருள் தெய்வம், உணவு, விலங்கு, மா,மரம் புல்,பறை, செய்தி, யாழ் முதலான கருப்பொருள்களால் விளக்கம் பெறுகிறது. உரிப்பொருளும் கருப்பொருட்களும் முதல்பொருளால் அர்த்தம் பெறுகின்றன. முதல் பொருள் என்பன நிலமும் பொழுதும் (Time and Space) என்பன. இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தினூடாக விளக்கும் அரிஸ்டாடில் இவ்விரண்டையும் மையப்படுத்தியதோடு பாத்திரங்களையும், அவற்றின் வினைகளையும் மையப்படுத்தியே விளக்கங்கள் அளித்துள்ளார். மூவோர்மைகள் (three unities) - காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள்-  பற்றிய அரிஸ்டாடிலின் கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை என்பதை நினைவில் கொள்வோம். அவர் சொன்ன  பாத்திர முரண் சார்ந்த தொடக்கம் , சிக்கல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என அமையும் நாடகவடிவம் நல்திற நாடகவடிவமாக உலகம் முழுவதும் இலக்கியம் கற்பிக்கும் துறைகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கவிதையின் வடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியரின்  “பொருள் கோட்பாடுதமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லவேண்டியுள்ளது. இலக்கியத் திறனாய்வு செய்பவர்களும் உணரவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வடிவம் பற்றிய விரிவான கருத்துகளைச் சொல்லும் தொல்காப்பியரும் அரிஸ்டாடிலும் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசவில்லை. காரணம் அவை பேசி முடிக்கக் கூடியன அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இயங்குதலுக்கும் காரணங்கள் வேறாக இருக்கும் என்பதால் உள்ளடக்கத்தை வரையறை செய்யும் முயற்சியை இருவருமே செய்யவில்லை. இதை உணர்ந்த நாம், நமது மரபைத் தீர்மானித்தது தொல்காப்பியக் கவிதையியல் என்பதை உலகத்திற்குச் சொல்லிப் பெருமைகொள்ளத் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.

அகமாகவும் புறமாகவும் வகைப்படுத்தப்பட்டு அதற்குள்ளும் புணர்தல் கவிதைகளையும் ஊடல் கவிதைகளையும் பிரிதல் கவிதைகளையும் இருத்தல் கவிதைகளையும், இரங்கல் கவிதைகளையும் கைக்கிளைக் கவிதைகளையும் பெருந்திணைக் கவிதைகளையும் எழுதிக் குவித்த தன்னிலைகளால் நிரம்பியது தமிழ்க் கவிதையின் தொடக்கப் பெருமிதம். அந்தப் பெருமிதத்தின் மறுதலையே நிரைகவர நடத்திய வெட்சிப் போர்க் கவிதைகளும், மண்ணாசை காரணமாக நடத்திய வஞ்சிப் போர் பற்றிய கவிதைகளும், கோட்டைகளைக் கைப்பற்றுவதற்கும் காப்பதற்கும் நடத்தப்பெற்ற உழைஞைப் போர்க் கவிதைகளும், பேரரசுக் கனவுகளோடு நடத்தப்பெற்ற தும்பைப் போர்க் கவிதைகளும், ஒருமுறை கிடைத்த வெற்றியினைச் சுவைத்தபின் தொடர்ச்சியாக ஏறும்  வெற்றியின் வெறியால் தூண்டப்பட்டு நிகழ்த்தப்பெறும் வாகைப்போர்க் கவிதைகளும்,  வெற்றியே வாழ்க்கை; வெற்றி பெற்றவனே கொண்டாடப் படக்கூடியவன் என நம்பிப் பாடப்பெற்ற பாடாண் திணைக்கவிதைகளும், பலப்பல விதமான விருப்பங்களாலும் ஆசைகளாலும் நடக்கும் போட்டி மற்றும் போர்களால் கிடைக்கும் வாழ்க்கையின் நிலையாமை பற்றிய காஞ்சிக் கவிதைகளாலும் நிரம்பியது அந்த மறுதலை. செவ்வியல் பெருமிதங்களின் நீட்சியே நீதிக்கவிதைகளாக ஒரு கோட்டையும் பக்திக் கவிதைகளாக இன்னொரு கோட்டையும் நீட்டித்தன. அந்தக் கோடுகளின் கிளைகளைத் தொன்னாற்றாறு வகைப் பிரபந்தங்களில் தேட முடியும்; தனிப்பாடல் திரட்டில் தேடிக் காட்ட முடியும். பாரதி, பாரதிதாசன் வழியாக ஆத்மாநாமிடம், தேவதேவனிடம், கலாப்ரியாவிடம்மனுஷ்யபுத்திரனிடம், சல்மாவிடம், குட்டிரேவதியிடம், சக்திஜோதியிடம், யவனிகா ஸ்ரீராமிடம்,  யோகியிடம், அனாரிடம் என்று மரபின் தொடர்ச்சியைக் கண்டு ரசிக்க முடியும். ஆனால் உள்ளொலியின் கவித்துவ மனத்தையும்,வெற்று நிலத்தில் தனித்தன்மையைத் தேடியலைந்த மில்டனின் கவித்துவமும் கைவரப்பெற்றவர்கள் என்ற திமிரில் திளைக்கிறது விமரிசனப் பார்வைகள். மேற்கத்திய திறனாய்வு முறையையும் அறியாமல் தமிழின் வாசிப்பு மரபையும் அறியாமல் பார்வையற்ற அந்தக நிலையில் தவிக்கிறது தமிழ்க் கல்விப்புலம்.

உள்ளடக்கமும் அணுகுமுறைகளும்:

இலக்கிய உருவாக்கம் என்பது மனிதர்களின் ஆதாரப்பிரச்சினையின் வெளிப்பாடு என்பதில் வெவ்வேறு கருத்தியல் நிலைபாட்டாளர்களும் ஒன்றுபடுகின்றனர். அதனைக் கண்டறிவதற்கு இலக்கியப்பிரதி மட்டுமே போதுமானவையல்ல; அவை உருவாகக் காரணமான கருத்தியலைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற நிலைபாடே திறனாய்வு அணுகுமுறைகளை(Literary Approachமுன்மொழிந்தன.

மரணத்தைக் கண்டு பயப்படுதலே மனிதர்களின் ஆதாரப் பிரச்சினை என்பது ஒருவகைக் கருத்தியல். இக்கருத்தியலின் தோற்றுவாய்களாகவும் காரணிகளாகவும் இருப்பன சமயங்களும், அவற்றின் பரப்புரைகளும், அவை முன்மொழியும் தீர்வுகளும் ஆகும். இமானுவேல் காண்ட் என்ற நவீன அறிஞர் இதனை விரிவாகப் பேசியுள்ளார். மனித அனுபவங்களுக்குப் பின் இருக்கும் காரணிகள் பற்றிப் பேசும்போது மரணபயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைத் தேடுதல் என்பதே மனிதனை இயக்குகிறது என விவரிப்பார். இதிலிருந்து உருவான இலக்கிய அணுகுமுறை அறவியல் அணுகுமுறையாக அறியப்படுகிறது.

  இரண்டாவதாக இருக்கும் இன்னொரு கருத்தியல் மனிதர்களின் எதிர்பால் கவர்ச்சியும் இச்சையுமே வாழ்க்கையின் காரணிகளாக இருக்கிறது என்பது. இதைத்தான் இலக்கியம் எழுதிக் காட்டியிருக்கிறது என்பது ப்ராய்டியத்தை இலக்கியப்பார்வையாக முன்மொழிபவர்களின் நிலைப்பாடு. அதிலிருந்தே உளவியல் அணுகுமுறையும் அதன் கிளைகளும் உருவாகி இருக்கின்றன. மூன்றாவதாகவும் முக்கிய மானதாகவும் கருதப்படும் கருத்தியல் மனிதர்களின் உணவுத்தேவை அல்லது பொருட்தேவை உருவாக்கும் நெருக்கடிகளை மையப்படுத்துவது. பொருளாதார உடைமை காரணமாக மனிதர்கள் வர்க்கமாகப் பிளவுபட்டிருக்கிறார்கள் எனவும்,  ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்ற இருபெரும் பிளவுக்குள்ளான முரணே மனிதவாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளது. அதையே இலக்கியங்கள் எழுதிக்காட்டின என்பது அந்தக் கருத்தியலின் அடிப்படை. கார்ல் மார்க்சின்அடிப்படை விளக்கங்களிலிருந்து உருவான இந்தக் கருத்தியலின் கொடையே சமூகவியல் அணுகுமுறையும், மார்க்சிய அணுகுமுறையும். அதன் கிளைகளே பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலைப் பார்வை போன்றன.

 மொழியைக் கண்டுபிடித்ததே மனித ஆற்றலின் முதல் சாதனை. அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது என்ற கருத்தியல் வழி உருவான அணுகுமுறைகள் பல. மொழியியல் அணுகுமுறையாகவும், அமைப்பியல், பின்-அமைப்பியல் அணுகுமுறை யாகவும் வளர்ந்த வளர்ச்சிக்குப் பின்னணியாக இருப்பன மொழிபற்றிய பார்வைகளே. இந்த வரிசையில் உலகப் பல்கலைக்கழகங்களில் சொல்லாடலாக மாறியிருக்கும் அண்மைப் படிப்பு அல்லது அணுகுமுறை பண்பாட்டு நிலவியல் (Cultural Geography ) என்பது. அதனைக் கொஞ்சம் விளங்கிக் கொள்ளலாம்.

புவிபரப்பின் பல்வேறு நிலவெளிகளின் (Landscape) இயல்புநிலையை விளக்கும் நிலவியல், புவியை வாழும் இடமாகவும்வாழிடங்களைச் சார்ந்த இடமாகவும் விளக்குகிறது. மனிதர்கள் குறிப்பிட்ட நிலவெளிகளில் தொடர்ச்சியாக வாழத் தொடங்கும்போது அந்த வெளி சார்ந்து பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் உருவாகின்றன. அவையே தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் போது பண்பாட்டுக் கூறுகளாக மாறுகின்றன. இந்த வகையில் பண்பாட்டுக் கூறுகள் குறிப்பிட்ட நிலவெளிகளோடு பின்னிப்பிணைந்து அந்நிலவெளிகளுக்குக் குறிப்பான அடையாளங்களைத் தருகின்றன. நிலவெளியின் குறிப்பான அடையாளங்களை மனிதர்கள் தங்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய அடையாளமாகக் கட்டமைக்கின்றனர்.

    மனித வாழ்க்கைக்குப் பயன்படும் வெளிகள் பல்வேறு விதமானவை. அவற்றை நிரந்தர வெளிகள் (Permanent Space)எனவும் தற்காலிக வெளிகள் (Temporary Space) எனப் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒரு மனித உயிரியின் நிரந்தர வெளியின் மிகச் சிறிய கூறு குடியிருப்பு. தமிழில் வீடுமனைஇல்லம் போன்ற சொற்களால் குறிப்பிடப்படும் குடியிருப்பு ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகளாலும் அர்த்தப்படுத்தப்படுகிறது. குடும்பம் என்கிற சமூக நிறுவனத்தின் நிரந்தர வெளியே இல்லம். இல்லம் தனிநபருடைய இருப்பிடமன்று;குடும்பமாக வாழ்தலின் அடையாளம். ஆணும் பெண்ணும் இணைந்து தங்களுடைய வாரிசுகளை உற்பத்தி செய்வதற்காகத்தங்கியிருக்கும்விதமாக இல்லம் என்னும் வெளி அடையாளப் படுத்தப்படுகிறது. இல்லம் என்னும் ஒரு புவிப் பரப்பு,குடும்பம் என்னும் சமூகநிறுவனத்தோடு இணைகிறபோது பண்பாட்டு வெளியாக மாறுகிறது. இந்த எடுத்துக்காட்டின் வழியாக நிலவியல்பண்பாட்டு நிலவியலாக மாறுவதை விளங்கிக் கொள்ளலாம். இல்லம் என்னும் நிரந்தர அடிப்படைப் பண்பாட்டு வெளியைப் போலவேஇல்லங்களால் உருவாக்கப்படும் தெருக்கள்,தெருக்களால் உருவாக்கப்படும் ஊர் அல்லது நகரம் ஊர் மற்றும் நகரங்களைக் கொண்ட மாநிலம்,மாநிலங்களின் தொகுதியான நாடு என ஒவ்வொன்றும் பண்பாட்டு வெளிகளாக மாறுகின்றன. நிரந்தரமான நிலவெளிகள்நிரந்தரமான பண்பாட்டு வெளிகளை உருவாக்கும் என்பதை இதனோடு இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

      நிரந்தரமான நிலவெளிகளைப் போல மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான தற்காலிக நிலவெளிகளும் உள்ளன. நமது சமகாலத்தில் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் நிரந்தரவெளிகளோடும்தற்காலிக வெளிகளோடும் உறவு கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பண்பாட்டு நிலவியல் மையப்படுத்துகிறது. நிரந்தர வெளியான இல்லத்திலிருந்து அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக தற்காலிக நிலவெளிகளுக்குச் சென்று வரவேண்டியவர்களாகச் சமகால மனிதர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். கல்வியின் பொருட்டுப் பள்ளி,கல்லூரிபல்கலைக்கழகங்கள் போன்ற தற்காலிக வெளிகளுக்குப் போய் வரவேண்டியுள்ளது. வாழ்க்கைக்குத்தேவையான பணத்தைப் பெறும்பொருட்டுபணியிடங்களான அலுவலகங்கள்தொழிற்சாலைகள் சென்று வரவேண்டிள்ளது.  உடல் நலத்தை பாதுகாப்பதற்காக மருத்துவ மனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இவை போலச் சிறியதும் பெரியதுமான தற்காலிக வெளிகளுக்குள் மனிதர்கள்  நுழைவதும் வெளியேறுவதுமாக இருக்கின்றனர். இவ்வாறு நுழைந்து வெளியேறுவதன் மூலமாகக் குடும்பம் என்னும் சமூகநிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் மனிதர்கள் தற்காலிக வெளியில் இயங்கும் தற்காலிக உறுப்பினர்களாக மாறி,திரும்பவும் குடும்ப உறுப்பினர்களாக மாறுகிறார்கள். இதன்மூலம் நிரந்தர நிலவெளி உருவாக்கும் பண்பாட்டுக்கூறுகளோடுதற்காலிக நிலவெளி உருவாக்கும் பண்பாட்டுக் கூறுகளும் தாக்கம் கொள்கின்றன.  என்பதைப்பண்பாட்டு நிலவியல் விரிவாக விளக்குகிறது.

     மனிதர்களே விரும்பி நுழைந்து திரும்பும் தற்காலிக நிலவெளிகளான கல்வி நிறுவனங்கள்பணியிடங்கள் போன்றவை மட்டுமல்லாமல் சுற்றுலாத் தலங்கள்கோயில்கள்ஓய்வுக்கான பூங்காக்கள்கடற்கரைகள்,கலைகளின் இயங்கு வெளிகளான அரங்குகள் போன்றனவும் தற்காலிக வெளிக்குள்ளேயே அடங்கும். மனிதர்களின் விருப்பமின்றிச் சில நேரங்களில் காவல் நிலையங்கள், சிறைகள் போன்ற நிலவெளிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுண்டு. குடும்பம் என்னும் சிறு சமூக அமைப்பின் மறுதலையாக அரசு என்னும் அமைப்பைப் பெரும் நிறுவனமாகச் சொல்லலாம். மொத்த சமூகத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அதற்கு உண்டு. அதற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்காகக் கல்வி நிறுவனங்கள்,பணியிடங்கள்மருத்துவமனைகள் போன்றவற்றை உருவாக்கித் தரும் அரசுகட்டுப்படாத மனிதர்களுக்காகச் சில தற்காலிக நிலவெளிகளை உருவாக்கி வைத்துள்ளன. காவல்நிலையங்கள்நீதிமன்றங்கள்சிறைச்சாலைகள் போன்றவற்றை அத்தகைய நிலவெளிகளாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிலவெளிகளுக்குள் சென்று வர வேண்டிய மனிதர்களோடும்சில வகையான பண்பாட்டு அடையாளம் ஒட்டிக் கொள்ளும்.

 மனிதர்களைமனிதர்களின் வாழ்வெளியால் உருவாக்கப்படும் பண்பாட்டுக் கூறுகளோடு இணைத்து ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தும் பண்பாட்டு நிலவியல் அதனளவில் இலக்கியத்தோடு நேரடித் தொடர்பு கொண்டது அல்ல. ஆனால் மனிதர்களின் வாழ்க்கை மற்றும் மன அமைப்புகளே இலக்கிய உருவாக்கத்திற்கு காரணம் என்னும் பொது அடிப்படையில் பண்பாட்டு நிலவியல் இலக்கியத்தோடு உறவுடையதாக மாறுகிறது. எனவே பண்பாட்டு நிலவியல் எவற்றையெல்லாம் தன்னுடைய ஆய்வு கருவியாகவும் வெளியாகவும் கருதுகின்றதோஅவற்றையெல்லாம் இலக்கியத் திறனாய்வு தனக்கான கருவியாகக் கொள்ளமுடியும். நிலப்பரப்பிற்குப் பதிலாக இலக்கியப் பிரதி/பனுவல் என்னும் பரப்பிற்குள் தேடி தொகுத்துக்கொண்டு பண்பாட்டு நிலவியல் இலக்கிய அணுகுமுறையாக - புதுவகை அணுகுமுறையாக மாற்றம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

     அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் துறையின் பகுதிகளாக அறியப்படும் மானுடவியல்உடல்கூறு மானுடவியல் (Physical Anthrapology), பண்பாட்டு மானுடவியல் என தொடக்க நிலையில் வகைப்படுத்தப்பட்டன.தற்போது அவையிரண்டையும் இணைத்துப் பண்பாட்டு மானுடவியல் என்னும் துறையாக மாற்றிப் பயில்கின்றனர்அதுவே இலக்கியத் திறனாய்வின் பகுதியாக மாறும்போது மானுடவியல் அணுகுமுறை என்று வடிவம் கொண்டது. இதைப்போலவே நிலவியலும் இயற்பியல் நிலவியல் (Physical Geography), எனவும், பண்பாட்டு நிலவியல் எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலக்கிய திறனாய்வின் பகுதியாக மாறியுள்ளது. அம்மாற்றமே பண்பாட்டு நிலவியல் அணுகுமுறை என வடிவம் கொண்டுள்ளது.

 பண்பாட்டு நிலவியல் என்பது நிலவியல் என்னும் புலத்திற்குள் இடம்பெறும் உட்பிரிவுத்துறை ஆகும். அது பண்பாட்டு உற்பத்திஅதற்கான விதிகள் ஆகியவற்றைப் பற்றிக் கவனம் செலுத்துவதோடுவெளியை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திக் காட்டுவதோடு அவற்றிற்கு இடையேயுள்ள உறவுகளையும் விளக்க முனைகிறது. பண்பாட்டு நிலவியல் கல்வி முக்கியமான பண்பாட்டு நடவடிக்கைக் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் கருதுகிறது. மொழிசமயம்பல்வேறு வகையான பொருளாதார உற்பத்தி முறைகள்அரசின் கட்டமைப்புகள்,கலைஇசை போன்ற பண்பாட்டுக் கூறுகள் முதலியன எவ்வாறு அல்லது ஏன் மக்களுக்குத் தேவையாக இருக்கிறதுஅந்தத் தேவை குறிப்பிட்ட வெளி சார்ந்த தேவையாக இருக்கிறதாஎனப் பேசுகிறது. இந்தப் பின்னணியில் உலகமயமும் இதன் கவனத்திற்குரிய பொருளாக இருக்கிறது. ஏனென்றால் இவ்வம்சங்கள் அனைத்தும் உலகமயத்தின் பின்னணியில் ஓரிடம் விட்டு இன்னோர் இடத்திற்குப் பயணம் செய்யும் நெருக்கடியைச் சந்திக்கின்றன.

 பண்பாட்டு நிலவெளிகளும் பண்பாட்டு நிலவியலின் முக்கியக் கூறுதான். ஏனென்றால் மனிதர்கள் வாழ்வதற்கான இயல்பியல் சூழலை அந்நிலவெளிகள் தான் தருகின்றன. இக்கூறு அதிமுக்கியத்துவம் உடையது என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால் பண்பாட்டுக் கூறுகளுக்கான எல்லை அல்லது விரிவாக்கத்தை உண்டாக்குவதில் நிலவெளிக்கு முக்கியமான பங்குண்டு. உதாரணத்திற்குக் கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் நகரப்புற மனிதர்களை விடவும் இயற்கையான சூழலோடும்அச்சூழலில் உள்ள பண்பாட்டு நடவடிக்கைகளோடும் அதிகப்படியான பிணைப்புக் கொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம். இந்த உறவை மனித- நில உறவு எனப் பண்பாட்டு நிலவியல் குவிமையப்படுத்தும். மனிதர்கள் இயற்கை மீது ஏற்படுத்தும் தாக்கம்,  இயற்கை மனிதர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம்சூழல் பற்றி மனிதர்கள் உருவாக்கிக் கொள்ளும் புரிதல் என்பனவும் இங்கே முக்கியமாகின்றன. 

 

தமிழ் நாவல் வரலாற்றை அறிந்தவர்கள் 1970-களில் நடந்த மாற்றத்தைக் கவனமாகப் பரிசீலிப்பார்கள். புராணத்தன்மையும் வரலாற்றுப் புனைவுமாக இருந்த தமிழ் நாவல்கள் குடும்ப வெளிக்குள் நகர்ந்ததும் முடிவுக்கு வந்த காலம் 1960-களின் இறுதி ஆண்டுகள். எழுபதுகளில் தமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நிலப்பரப்பின் குறிப்பான பின்னணிக்குள் நகர்ந்தது. வட்டார நாவல்கள் என்னும் பெயரைப் பெறவில்லையென்றாலும் அதன் அடையாளங்களோடு வந்த நாவல்களே தமிழ் நாவல் வரலாற்றின் முக்கியப் பதிவுகளாக மாறியவை என்பதை நினைவுபடுத்துவதற்குப் பின்வரும் மூன்று நாவல்களையும் முன் வைக்கலாம். அவை: 

            1. சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை (1966 )

            2. சா.கந்தசாமியின் சாயாவனம் (1969)

            3. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் (1976)

     இம்மூன்று நாவல்களும் உருவாக்கி வைத்த தடங்களே தமிழ் நாவல் போக்குகளாக மாறியிருக்கின்றன. இம்மூன்றும் மனிதர்களின் பிரச்சினைகளை நிலவியலின் பிரச்சினைகளோடு இணைத்துப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தவை என்பதை நாவல் இலக்கிய மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள்.

 

சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை உண்மையில் புளிய மரத்தின் கதையல்ல. நாகர்கோவில் என்னும் பெருங்கிராமம் நகராட்சியாக மாறி, ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்தபோது அடைந்த மாற்றங்களையும் முரண்களையும் எழுதிக்காட்டிய நாவல். அந்த மாற்றங்களும் முரண்பாடும் ஜனநாயக அரசியலால் நிகழ்ந்த மாற்றத்தை ஒரு குறிப்பிட்ட நிலவியலுக்குள் - அதன் பண்பாட்டிற்குள் வைத்துப் பார்த்து எழுதிய நாவல். அவ்வகையான எழுத்து முறையைப் பின்னர் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் எழுதிக் காட்டினர். 

 

சா.கந்தசாமியின் சாயாவனம் தமிழ்நாட்டுக்கிராமம் ஒன்று தொழிற்பெருக்கத்தின் நெருக்கடிக்காகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பதிவு. வளமான காவேரிக்கரைப் படுகைக்  கிராமம் சந்தித்த முரண்கள் மற்றும் மாற்றங்களைப் பண்பாட்டு நிலவியல் பின்னணியில் கூடுதலாக விளங்கிக் கொள்ள முடியும். நகரம்xகிராமம் அல்லது வேளாண்மை வீழ்ச்சி x இயந்திரத்தொழில் வளர்ச்சி என்ற முரண்பாடுகளை உரிப்பொருளாக்கிய நாவல்களின் முன்னோடிப் புனைகதை அது. அதேபோல்  கோபல்லகிராமம் இடப் பெயர்வுகளால் ஒரு கூட்டம் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதிக்காட்டும் எழுத்தின் முன்னோடி வகைமை. முழுக்கவும் புதிய வெளிக்குள் ஒரு கூட்டம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள நடத்திய நீண்ட போராட்டத்தைப்பற்றியது. இந்த நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பலவற்றிற்கு முன்மாதிரியாக அமைந்த நாவல். மொழி சார்ந்து வட்டாரநாவல் போக்கைத் தொடங்கிவைத்ததைப் போல இடம் பெயர்தல் மற்றும் இனக்குழுவாக அடையாளப்படுத்திக் கொள்ளுதல், நாட்டார் மரபுகளைத் தொகுத்துக் கதையாக்குதல், காலத்தொடர்ச்சியற்றுக் கதை கூறல் எனப் பலவற்றின் முன்னோடி அது. வட்டார நாவல்களே வர்க்க நாவல்களையும் தலித் நாவல்களையும் உருவாக்கின. புலம்பெயர் மனிதர்களின் அலைவுறு வாழ்க்கையைப் பதிவு செய்யும் நாவல்களின் எழுத்தாளர்களும் கூட கோபல்லகிராமத்தின் சொல்முறையை உள்வாங்கியவர்களாகவே வெளிப்படுகின்றனர்.

 இம்மூன்று நாவல்களின் ஆசிரியர்கள் நிலவியலைப் பதிவு செய்வதில் செலுத்தியுள்ள  கவனம் பண்பாட்டு நிலவியலாளர்கள் சொல்லும் அனைத்தோடும் பொருந்துவதோடு, திணைக் கோட்பாட்டில் முதல் பொருளும் கருப்பொருளும் பதிவு செய்யப்பட்டுள்ள தன்மையோடு இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. குறிப்பாகத் தொகைக்கவிதைகள் நெடும்பாடல்களாக மாறும்போது நிலமும் காலமும் விரிந்து நீண்டதையும், அவற்றிற்குள் தெய்வம், உணவு, மா, மரம், புல், பறை போன்ற கருப்பொருள்களின் பெருக்கம் கூடியதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். நிலவியல் பண்பாடு இலக்கியப் படைப்பாக்கத்தின் பின்னணியாக இருக்க முடியும் என்று நிறுவியுள்ளதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயங்கவேண்டியதில்லை. ஏனென்றால் அந்த ஏற்புதொல்காப்பியப் பொருள் கோட்பாடு உலகக் கோட்பாடாக ஏற்புச் செய்வதற்கான அடிப்படை.

----------------------------------------------------------------------------------------------------------------------- 

மதுரை உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த  உலகத்தமிழ்                                       எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிவர்த்தனைக் கருத்தரங்கில்   

14-03-15 அன்று வாசிக்கப்பெற்ற கட்டுரை

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை