: 37

மூன்று கதைகள், ஐந்து விமரிசனங்கள், எட்டு நினைவுக்குமிழிகள்

அதிஷா அதிஷா

 ஃபேஷ்புக் பொண்ணு, 2014 இல் உயிர்மை வெளியிடுகளில் ஒன்று.  சிறுகதை என்ற வகைப்பாட்டில் 15 தலைப்புகளில் அச்சிடப்பட்டுள்ள தொகுப்பு. மொத்தமாக வாசித்தபின் இப்பதினைந்தும் சிறுகதைகள் தானா? என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளாமல் நகரமுடியவில்லை.

கதைக்குள் பாத்திரங்களை உருவாக்கும் கதாசிரியரால், ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளின் இணைப்பு மூலமும், அவை நிகழும் காலப்பின்னணி உருவாக்கும் முரண்பாடுகள் அல்லது மனவோட்டங்கள் மூலமும் கதையின் வடிவம்  உருவாகின்றது என நம்புபவன் நான். இந்த அளவுகோல்களோடு அதிஷாவின் கதைகளை வாசித்தபோது  நீலக்கை, ஓம்புயிர், கெட்டவார்த்தை ஆகிய மூன்று மட்டுமே கதைகளாக இருந்தன. கோயம்புத்தூரில் நடந்த தொடர்வெடிகுண்டு வெடிப்புப் பின்னணியில் நடக்கும் நீலக்கை, நேசிக்கப்படும் நாய்க்கும் அதன் குட்டிக்குமான உறவுக்குப் பின்னால் தன் தாயைத் தேடும் குழந்தை மனம் வெளிப்படும் ஓம்புயிர், தாயின் மரணத்தின் பின்னணியில் ஒருவனது இயலாமை உருவாக்கும் கெட்டவார்த்தைக் கோர்வைகள் என மூன்றும் கதை வாசிக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன. 

அவற்றத் தாண்டினால் ஐந்து பிரதிகள் சமகால நிகழ்வுகளை வெளிப்படையாக நினைவூட்டுகின்றன. சமகாலத்தின் மீது விமரிசனங்களை வைக்கின்றன. ஆனால் நினைவூட்டல்கள், கதையென எழுதியனவற்றைக் கட்டுரைத் தொனிக்குள் கொண்டுபோய் நிறுத்திவிடுகின்றன.  நித்யானந்தா ஆஸ்ரமத்தை நினைவூட்டும் சாமியார் மகிமை, விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கரை நினைவுபடுத்தும் பாட்டுத்தலைவன், குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க உதவும் தொண்டு நிறுவனங்களை நினைவுபடுத்தும் பத்து பத்து எழுத்தாளர்- வாசகர் உறவை விமரிசிக்கும் இரண்டு கதைகள் (வாராது வந்த வாசகன், விதியுடனொரு விளையாட்டு)  என ஐந்தும் உருவாக்குவன நகைச்சுவைத் தொனி. முழுமையும் நகைச்சுவையாகவும் இல்லாமல் விமரிசனமாகவும் இல்லாமல் இவை வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் ஒரு புன்னகையைத் தோற்றுவிக்கின்றன.  அதைத் தாண்டி அவை உருவாக்கும் அனுபவம் நிலையானவையல்ல; உடனடித்தன்மை கொண்டவை. மீதமுள்ள அனைத்தும் தீவிரமான சிறுகதைத் தொனியுடன் எழுதத் தொடங்கி, தொடங்கிய இடத்திலேயே நிற்கின்றன. பெரும்பாலும் ஒரு தகவல், ஒரு நபர் அல்லது ஒரு சந்திப்பு காரணமாக உண்டாகும் எண்ண ஓட்டங்களாகவே விவரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணங்களின் முடிவில் ஏதாவதொரு நீதியை  அல்லது நடைமுறைச் சிக்கலை(குழந்தை பொய் சொல்லாது ஆணும் ஆணும் காதலிக்க முடியாது, கல்யாணமானவன் காதலிக்க மாட்டான், ஒருபால் உறவு ஏற்கத்தக்கதல்ல போன்ற ஒழுக்கவிதிகள்) முன்வைத்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த முடிப்புகள் பெரும்பத்திரிகைக் கதைகளின் தன்மையிலானவை. ஆனால் எண்ண ஓட்டங்கள் தீவிரமானவை. 


பாதிக்கும் மேற்பட்ட கதைகள் நிகழ்காலத்தின் தகவல் தொடர்புச் சாதனங்களையே கதைவெளிகளாகக் கொண்டிருக்கின்றன. பிறமொழிச் சொற்களை எப்படி எழுத வேண்டுமென்ற அக்கறை எதுவும் இல்லாது, மொழியைப் பயன்படுத்தியுள்ளார். உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் மீதான நம்பகத்தன்மையைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்ற தீர்மானமும்கூட வெளிப்படவில்லை. ஆனால்,  அவரது கதைகளை அவரே படித்து விமரிசனப் பார்வையை உருவாக்கிக்கொள்ளும்போது எழுத்துப் பாணியையும் கண்டடையக்கூடும். அந்தப் பக்குவம் அதிஷாவுக்கு இருப்பதாக இந்தப் புத்தகம் சொல்கிறது.

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை