: 58

ஆக்கம் - தழுவலாக்கம்

·         ஆக்கம் - தழுவலாக்கம் என்றால் என்ன சார்.

·         நாடகத்தில் தழுவலாக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னென்ன?
ஆக்கம் என்பது புதிதாக உருவாக்குவது. புதிதாக உருவாக்குவதற்கு அதன் உட்கிடைப்பொருட்கள் தேவை.  அதைக் கண்டுபிடித்து இணைத்து உருவாக்க வேண்டும். உருவாக்கிய ஆக்கம் பயன்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆக்கத்திற்கும் அதற்கான முதன்மைப் பயன்பாடு இருக்கிறது. அதைச் சரியாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது நல்ல ஆக்கம் எனப் பாராட்டப்படும். முதன்மைப் பயன்பாட்டிற்குப் பதிலாகச் சில ஆக்கங்கள் துணைப்பயன்பாடுகளையே தரும். அந்த நிலையில் அவை முக்கியமான ஆக்கமாகக் கருதப்படும் வாய்ப்பைத் தவறவிட்டுவிடும். சில ஆக்கங்கள் எதிர்மறைப் பயன்பாட்டைத் தந்துவிடும். அப்போது கண்டனத்திற்கும் தடைக்கும் உரியதாக மாறிவிடும். உணவு, உடை, இருப்பிடம் சார்ந்து என எல்லாவகை ஆக்கங்களுக்கும்  இவை பொதுவான நடைமுறைகள். இப்பொதுவான நடைமுறைகள் படைப்பாக்கங்களுக்கும் குறிப்பாக  நாடகப் படைப்பாக்கத்திற்கும் பொருந்தக்கூடியன தான்.
படைப்புத்துறையில் ஆக்கம் என்னும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு இரண்டு கலைச்சொற்கள் இருக்கின்றன. ஒன்று மொழியாக்கம், இன்னொன்று தழுவலாக்கம். ஒரு படைப்பை வேறு மொழியில் வாசிக்கும் ஒருவர் அப்படைப்பின் நுட்பம், பேசுபொருள்,  எழுப்பும் உணர்வுகள் போன்றன சிறப்பாக இருக்கின்றன என்று கருதும் நிலையில் அதனைத் தனது மொழியின் வாசகர்களுக்கு அப்படியே தரவேண்டும் என நினைக்கலாம். அப்படி நினைக்கும்போது அம்மொழியின் பனுவலைத் தனது மொழியில் மாறாமல் தருவது மொழிபெயர்ப்பு (Translation).மொழியாக்கத்திலேயே கூட முழுமையும் அப்படியே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டுபோக முடியாது எனச் சொல்லப்படுகிறது. ஒருமொழியின் கட்டமைப்பை இன்னொரு மொழியின் கட்டமைப்பு அப்படியே ஏற்பதில்லை. அதனால் மொழிபெயர்ப்பவர் மூலமொழியின் அனைத்துக் கூறுகளையும் கூடியவரைத் தனது மொழியில் கொண்டுவர முயல்கிறார்கள். முடியாமல் போகிறபோது தனதுமொழிக்கட்டமைப்புக்கேற்ப மாற்றம் செய்கிறார். இதனைக்குறிக்க மொழியாக்கம் (Trans-creation) என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு.
தழுவலாக்கம் என்பது மொழிபெயர்ப்புமல்ல; மொழியாக்கமுமல்ல. ஒரு படைப்பை வாசிக்கும்போது ஒருவருக்குப் பிடித்திருக்கலாம். அந்தப் படைப்பு அவரது மொழியில் இல்லாமல் இருக்கலாம். சில நேரங்களில் அவரது மொழியிலேயே கூட இருக்கலாம். ஆனால் பேசுபொருளும் முன்வைப்பும் அவர் வாழும் காலத்திற்குப் பொருந்தாமல் இருப்பதுபோலத் தோன்றலாம். அந்த நிலையில் அந்தப் படைப்பைத் தனது காலச்சூழலுக்கேற்ப மாற்றம் செய்து வாசிப்பவர்களுக்குத் தரவேண்டுமென ஒருவர் நினைக்கும்போது அந்த வேலை தழுவலாக்கம் (Adaptation) என அழைக்கப்படுகிறது. ஒரு படைப்பின் கட்டமைப்பு மாறாமல் உட்கூறுகளில் செய்யப்படும் மாற்றமே தழுவலாக்கம்.
உலக அளவில் அதிகமாகத் தழுவலாக்கம் செய்யப்படுபவை நாடகங்களே என்பது எனது கருத்து. கவிதைகள், கதைகள் எல்லாம் படித்து முடித்த வாசகர்களிடம் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது. அதனை வாசித்தவர்களுக்கு அந்த உணர்வோ, கருத்தோ வந்து சேர்ந்தவுடன் அப்படியே விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சிலருக்கே இதை நமது மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமெனத் தோன்றும். ஆனால் நாடகக்கலை அப்படிப்பட்டதல்ல. மேடையில் பார்த்தவுடன் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பார்வையாளர்களின் சூழலுக்குப் பொருத்தமானதா என்ற சிந்தனையையும் உண்டாக்கக் கூடியது. நாடகத்தில் இடம்பெறும் மொத்த நிகழ்வுகளும் பார்வையாளர்களோடு தொடர்புடையதாகத் தோன்றவில்லை யென்றாலும் ஒன்றிரண்டாவது தொடர்புடையதாகத் தோன்றும். அப்படித்தோன்றும் நிலையில் அதைத் தனது மொழிக்கு - தனது பார்வையாளர்களுக்குத் தரவேண்டுமெனத் தூண்டும். அப்படித்தூண்டும்போது மொழியாக்கம் செய்வதைவிட தழுவலாக்கம் செய்வதே பொருத்தமானது என்ற கருத்தும் உருவாகும். ஆகவே தான் உலக நாடகங்கள் பலவும் வெவ்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாகப்போவதைவிடத் தழுவலாக்கமாகப் போய்ச் சேர்கின்றன.
அத்தோடு தழுவலாக்கம், என்பது ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு மொழியிலேயே  முன்காலத்தில் எழுதப்பட்ட ஒன்றை இப்போதைய பொருத்தப்பாட்டிற்கேற்ப மாற்றுவதும் தழுவலாக்கம் தான். கவிதையிலிருக்கும் ஒரு படைப்பை நாடகமாக ஆக்குவது, உரைநடைக்கதையாகத் தருவது போன்றனவும்கூடத் தழுவலாக்கம் தான். இந்தியாவின் புராண இதிகாசங்களிலிருந்து உருவாக்கப் பெற்ற பல படைப்புகள் தழுவலாக்கமாகவே இருக்கின்றன. மொத்தக் கதையாக இல்லாமல் ஏதாவது ஒரு நிகழ்வு தரும் உந்துதலால் உருவாகும் தழுவல்களே அதிகம். பாரதியின் பாஞ்சாலி சபதம் தழுவலாக்கத்திற்குச் சரியான உதாரணம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்ற பலரும் புராணங்களிலிருந்து தழுவலாக்கம் செய்துள்ளனர். தழுவலாக்கம் நடப்பதால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை அறிய க. கைலாசபதியின் அடியும் முடியும் என்னும் திறனாய்வு நூலை வாசித்துப்பார்க்கலாம். அடிமுடி தேடியகதை, அகலிகை கதை, நந்தன் கதை, கண்ணகி கதை போன்றன வெவ்வேறு காலகட்டங்களில் தழுவல் செய்யப்பட்டு என்னென்ன இலக்கியவகைகளாக மாறின; அதன் பின்னணியில் எவ்வகையான சமூகக் கருத்தோட்டங்கள் இருந்தன என விரிவாக ஆய்வு செய்து கூறியிருக்கிறார்
நாடகத்தழுவலாக்கம் செய்யும்போது நாடகத்தின் கட்டமைப்பை மாற்றாமல், அதன் உட்கூறுகளான காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றையும் தனது கால மற்றும் சமூகச் சூழலுக்கேற்ப மாற்றுவதே நாடகத்தழுவலாக்கம் எனப்படுகிறது. அரசுகளின் வன்முறையால் - அரச பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்ட மனிதர்களின் சடலங்களின் மீது விவாதத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் ஒருவருக்குக் கிரேக்க நாடகமான சோபாக்ளீசின் ஆண்டிகனி தழுவல் செய்ய ஏற்ற நாடகம். நிகழ்கால மக்களாட்சியிலும் குடும்ப அரசியலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் நடக்கும் அதிகாரவெறியை விமரிசிக்க விரும்பும் ஒருவருக்கு சேக்ஸ்பியரின் கிங் லியர் தழுவ எழுதக் கூடிய நாடகமாக இருக்கும்.  மக்கள் நலன் என்ற பெயரில் தங்கள் குடும்பநலனை அரசியல்வாதிகள் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லவிரும்பும்போது இப்சனின் மக்கள் விரோதி நாடகம் தழுவத்தக்க நாடகமாக ஆகிவிடும். ஏமாந்துவிடும் பெண்களின் அவலத்தைச் சொல்ல விரும்பும் ஒருத்தருக்குக் காளிதாசனின் சாகுந்தலமும், விருப்பமற்ற மணவாழ்வைச் சுமத்தும் சமூக அமைப்பைச் சாடுவதற்கு அகல்யாவின் கதையும், அதிகாரத்தை எதிர்க்கத்துணியும் தனிமனிதர்களின் இருப்பைப்பேசுவதற்குப் பாஞ்சாலியின் கதையும் தழுவுவதற்கு ஏற்றனவாக ஆகியிருக்கின்றன.
பாதைகள் முக்கியமல்ல; இலக்குதான் முக்கியம் என நினைக்கும் மனிதர்களை மேடையில் கொண்டுவர மேக்பத்தைத் தழுவலாம். அரசும் அமைப்பும் மக்களை மதிப்பதில்லை எனச் சொல்ல அயனெஸ்கோவின் காண்டாமிருகத்தைத் தழுவல் செய்யலாம்..
தழுவலாக ஒரு நாடகத்தை எழுதும்போது மூல நாடகத்தின்  பெயர்களெல்லாம் நமது சூழலுக்கேற்ப மாற்றப்படவேண்டும். இடப்பெயர், பாத்திரப்பெயர் என அனைத்தும் மாற்றப்படவேண்டும்.  காலத்தை நமது காலமாக மாற்றும்விதமாக நாடக நிகழ்வினை மாற்றி உருவாக்க வேண்டும். மேடைப்பொருட்கள், ஆடைகள், ஒப்பனைகள் வழியாக இவை சாத்தியமென்றாலும், மையமாகச் சிக்கலையும் நமது காலத்தின் பார்வையில் கொண்டுவரும்போதே ஒரு தழுவல் நாடகம் வெற்றிகரமாக மாறும்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை