: 37

ஜல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்


படப்பிடிப்புக் கருவிகளுடன் தவிக்கும் செய்தி ஊடகக்காரர்களின் ஒருவார காலத் தவிப்பாக ஆகி விட்டது ஜல்லிக்கட்டு. காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு போன ஆண்டு நிகழ்வு. இந்த ஆண்டும் நிகழலாம்; இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரலாம்.

மிருகவதைத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவு நியாயமானது.?
மனிதர்களுக்காக இந்த உலகமும் இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் படைக்கப் பட்டிருப்பதாகக் கருதிக் கொண்டு மனிதர்கள் வதைக்கும் மிருகங்களும் பறவைகளும் தினந்தோறும் எத்தனை எத்தனை?
அங்கீகரிக்கப் பட்ட கோழிக்கடைகளிலும் கறிக்கடைகளிலும் வெட்டப்படும் மிருகங்களை எந்த வதைச் சட்டத்தின் மீது தடை செய்ய முடியும்?.
மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் வந்து விடும் என்பதற்காக லட்சக் கணக்கான கோழிகள் கொல்லப்படுகின்றனவே? அதையெல்லாம் சட்டத்தினைக் காரணம் காட்டித் தடுக்க முடியுமா?
ஜல்லிக்கட்டில் மட்டும் தான் மிருகங்கள் வதை செய்யப்படுகின்றனவா?
இப்படியெல்லாம் கேள்வி எழுப்புவது விதண்டாவாதம் தான். ஒரு விதண்டாவாதத்திற்கீடாக இன்னொரு விதண்டா வாதம் தானே பதிலாக இருக்க முடியும். 
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தின் அடையாளம் அல்ல; அது பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்தத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கூட அல்ல. அப்புறம் எதற்குத் தமிழ் நாட்டில் ஜல்லிக் கட்டு நடத்தவேண்டும் எனக் கேட்கலாம். ஜல்லிக் கட்டுதான் தமிழர்களின் அடையாளம் ; அதை அழிந்து விடாமல் காக்க வேண்டும்; அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டை அரசாங்கம் ஏற்று நடத்தவேண்டும் என யாரும் கேட்கவில்லை; கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி நடத்துவோம் என அரசும் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. 
ஜல்லிக்கட்டைத் தங்களின் அடையாளமாகக் கருதும் ஒரு சிறு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்திக் கொண்டிருந்தது அவ்வளவுதான். ஜல்லிக்கட்டு பண்டைய தமிழகத்தின் பரப்பிலும் கூட மொத்தத் தமிழ் நாட்டிலும் இருந்த அடையாளம் அல்ல. வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்களின் அடையாளம் தான். செவ்வியல் இலக்கியங்களின் காலத்தில் வேளாண்மைவளம் நிரம்பிய மருத நிலப் பின்னணியில் தான் காளைகளை அடக்கும் வீர விளையாட்டாக ஏறு தழுவுதல் இருந்துள்ளது. ஏறு தழுவிய ஆடவன், ஆண்மை மிக்கவன். அவன் மீது பெண் காதல் கொண்டாள் என்றுதான் இலக்கியங்கள் சொல்கின்றனவே ஒழிய காளையை அடக்கினால் தான் திருமணம் என்று முன் நிபந்தனை எதுவும் இல்லை. 

இன்றைய சல்லிக்கட்டுக்கு மஞ்சுவிரட்டு, காளைவிரட்டு என்ற பெயர்களும் உண்டு. தமிழர்களின் ஆண்டுத்தொடக்க மாதமாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் மாதம் தை. தையின் வருகையைப் புதுவரவுக்கொண்டாட்டமாகக் கருதுவது தமிழர்கள் மனம். நெல்லரிசியை உணவாகக் கொண்ட நாகரிகம் தோன்றிய மருதநில வயல்பண்பாடு தையின் வரவைப் பொங்கலிட்டுக் கொண்டாடியது. மார்கழியின் கடைசி நாளில் பழையன கழிக்கும் போகியாகவும், அடுத்தநாளைப் பொங்கல் திருநாளாகவும், இரண்டாவது நாளை மாட்டுப்பொங்கலாகவும் கொண்டாடும் மரபு இன்றும் தொடர்கிறது. மாட்டுப்பொங்கல் நாளே மஞ்சுவிரட்டு நாள். பொங்கலோ பொங்கல்! பால்பானை பொங்கல்! பட்டி பலுக! மூதேவி போக ! சீதேவி வர! பொங்கலோ பொங்கல் என வாழ்த்திப் பாடித் திறக்கப்படும் வாடிவாசல் வழியே கிளம்பும் மாடுகளும் அதைத்தொடர்ந்து வரும் ஆடுகளும் கோழிகளும் குஞ்சுகளுமெனத் தமிழ் அடையாளத்தின் பெருங்குறியீடு ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தொடர்ந்து நடக்கும் விவாதங்கள் மறைமுகமாக வேறு சில உண்மைகளை உணர்த்துவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர் வாழ்க்கை முறை, புதியபுதிய அடையாளங்களோடு நவீன வாழ்முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது; அதனைத் தடுக்கும் விதமாகச் சில பண்பாட்டுக் கூறுகள் முன் நிற்கின்றன. அவற்றை விட்டு விடுவதா ..? தொடர்ந்து பின்பற்றுவதா ..? என்று முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறது தனிமனித மனம். அந்தத் தவிப்பின் தொடர்ச்சியாக முடிவு எடுக்கும் வேலையை, மனம் என ஒன்றில்லாத அரசு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட முனைகின்றனர் மனிதர்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள சட்டங்கள் என்ற அளவுகோலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றன. ஆனால் பண்பாட்டுக் கூறுகள் அவ்வளவு சுலபமாகச் சட்ட விதிகளுக்குக் கட்டப்படக் கூடியவை அல்ல. 
இன்று பிரபலமாக ஜல்லிக்கட்டை நடத்தும் பாலமேடும் அலங்காநல்லூரும் வைகைப் பாசன வயல்வெளிகளைக் கொண்ட கிராமங்கள். பொறுப்பேற்று நடத்தும் அம்பலகாரர்கள் அந்தக் கிராமங்களில் நிலவுடைமையாளர்கள். ஜல்லிக் கட்டுக் காளைகளின் உரிமையாளர்களும் நிலவுடைமையின் காரணமாகப் பெருந்தனக்காரர்களாக அறியப்படுபவர்கள். ஆனால் காளைகளை அடக்குபவர்கள் அத்தகைய பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்கள் அல்ல. அதனால் ஜல்லிக்கட்டில் ஏற்படும் உயிரிழப்புகளும் படுகாயங்களும் அப்பாவிக் குடும்பங்களைத் தான் பாதிக்கிறது என்ற வாதமும் இங்கே முன் வைக்கப்படுகிறது. இந்த வாதத்தோடு பண்டைய கிரேக்க சமுதாயங்களில் நிலவிய அடிமைகளின் மோதலைக் கண்டு களிக்கும் பிரபுத்துவ மனநிலையோடு தொடர்புபடுத்தியும் கூட வாதிடுகின்றனர். ஆனால் இத்தகைய வாதங்கள் அடிப்படைகளற்ற வாதங்கள் எனச் சுலபமாகச் சொல்லிவிடலாம். 
அடிமைகளை மோதவிட்டு வேடிக்கை பார்த்த பிரபுக்களைப் போலக் குரூர இன்பம் இங்கே கிடையாது. யாரும் யாரையும் கட்டாயப் படுத்தி வாடிவாசலுக்குள் அனுப்புவதில்லை. தான் வீரன் எனக்கருதும் ஒருவன் , அதை வெளிப்படுத்த விரும்பித் தானே கோதாவில் இறங்கிக் காளையை அணைகிறான். இத்தகைய வெளிப்பாடு ஒரு காலகட்டத்திய- வட்டாரம் சார்ந்த வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சமய நம்பிக்கை சார்ந்த நேர்த்திக் கடனில் இருக்கும் கேள்விகளற்ற நம்பிக்கையும் நேர்த்திக் கடனைச் செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் கூட இதில் கிடையாது.
பத்தாண்டுகளுக்குமேலாகப் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நின்று போயுள்ளன. வேளாண்மை சார்ந்த பண்பாட்டிலிருந்து விலகும் போது அதன் கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் மதிப்பீடுகளையும் மனிதர்கள் விட்டு விடுவார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. வடமாவட்டங்களில் பிரபலமாக இருந்த தெருக்கூத்து ஒரு உதாரணம். தெருக்கூத்து மட்டும் அல்ல. வட்டாரம் சார்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த நாட்டார்கலைகள் பலவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. சென்னை சங்கமம் போன்ற வருடாந்திர நிகழ்வுகளால் அவற்றைக் காட்சிப் பொருளாக ஆக்க முடியும். ஆனால் அதன் மொத்த உயிர்ப்புடன் வாழ வைக்க முடியாது. அப்படி வாழ வேண்டுமானால் நிகழ்கால மனிதனின் ஓய்வுப் பொழுதைத் தனதாக்கும் கூறுகளைக் கொண்டதாக அவை மாற வேண்டும். 
நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் நுழையும் ஆவேச வேகத்துடன் இருக்கும் தமிழர்களுக்கான கலைவடிவமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிகழ்வுகள் ஆகிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு நாட்டார் கலைகள் போட்டியிட்டு உயிர் வாழ்வது சாத்தியம் என்று சொல்ல முடியாது. மக்களின் பண்பாட்டு அடையாளங்களான சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றில் நுழைய அரசுக்கும் அதன் துணை அமைப்புக்களான காவல்துறை, நீதிமன்றம் போன்றவற்றிற்கு எந்த அளவு இடம் தரலாம் என்ற முக்கியமான கேள்வியை ஜல்லிக்கட்டு தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கிறது.  
இதேபோல் பத்தாண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு பிறப்பித்த கோயில்களில் உயிர்ப்பலித் தடைச் சட்டம் கூட அத்தகைய கேள்வியை எழுப்பிவிட்டுப் பின் வாங்கிய ஒன்றுதான். படித்தவர்களும், அதனால் நடுத்தர வர்க்கமாக மாறிவிட்ட மனிதர்களும் உயிர்ப்பலி தடை, ஜல்லிக்கட்டுக்குத் தடை போன்றவற்றிற்கு நேரிடையாக இல்லையென்றாலும் மனத்தளவில் ஆதரவு தெரிவிக்கத் தான் செய்வர். ஆனால் அதனை ரத்தமும் சதையுமாகக் கருதி, வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி வைத்திருக்கும் மனிதர்கள் அப்படிக் கருதுவதில்லை. அதற்குப் பதிலாகச் சிறுபான்மைப் பண்பாட்டின் மீது பெரும்பான்மைப் பண்பாடு ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகத்தான் கருதுவார்கள். அப்படிக் கருதும் போது எழும் உணர்வெழுச்சிகள் வன்முறைக்கு இட்டுச்செல்லும். தனது வீரத்தைக் காட்ட வாய்ப்பளிக்கும் ஜல்லிக்கட்டில் உயிரைத் துச்சமாக மதித்து, காளைகளை அடக்கத் துடிக்கும் இளைஞர்களைப் போலப் பண்பாட்டுக் கூறுகளைக் காப்பாற்ற விரும்புவது நனவிலி மனத்தின் கூட்டுச் செயல்பாடு என்பது உளவியல்.
வட்டாரம் சார்ந்த அடையாளங்கள் மதம், மொழி, இனம் என்ற பெரிய கதையாடல் சார்ந்த அடையாளங்கள் போன்றன அல்ல. மதம், மொழி, இனம் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் பல நேரங்களில் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முற்போக்கான பார்வையை வளர்த்தெடுப்பதற்கும் தடைகளாக இருக்கின்றன. ஆனால் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு அடையாளம் அப்படியொரு தடையாக இருப்பதில்லை என்பதையும் அரசும் நீதிமன்றமும் கவனம் கொள்ள வேண்டும்.                                                                                                        =================================================                                                                                                            

 2008 இல் காலச்சுவடில் எழுதிய கட்டுரையின் திருத்திய வடிவம்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை