: 80

நிறைய எழுதுவதும் வித்தியாசமாய் எழுதுவதும்

2015ஆம் ஆண்டு மதுரைப் புத்தகக்காட்சி தொடங்கி  2016 டிசம்பருக்குள் அடுத்தடுத்துத்  தனது மூன்று நூல்களை வெளியிட்டுக் கவனம் பெற்ற சரவணன் சந்திரனின் மூன்றோ நான்கோ இந்தப் புத்தகச் சந்தைக்கு வரும் என்ற தகவலைத் தொடர்ச்சியாக அவரது முகநூல் பக்கம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறது. அவரது முதல் நாவலான ஐந்துமுதலைகளின் கதையின் வெளியீட்டுவிழாவில் ஒரு பார்வையாளனாகக் கலந்துகொண்டேன். அவ்விழாவில் அதனை வெளியிட்டுப்பேசிய முன்மொழிவுகளின் வழியாகவே அதனை வாசிக்கத் தொடங்கினேன். ஒரே மூச்சில் வாசிக்கத்தக்க நாவல் என்று சொல்வார்களே அதற்குச் சரியான உதாரணமாக இருந்த புத்தகம் அது

நிகழ்காலத்தை அறிமுகமில்லாத வெளியில் - தைமூர் என்னும் குட்டி நாடொன்றில் நிகழும் நிகழ்வுகளால் நகர்த்திக் காட்டிய நாவலில், ‘ நடக்கும் ஒவ்வொன்றையும் மிரட்சியோடும் அசட்டுத் தைரியத்தோடும் எதிர்கொள்ளும்  கதைசொல்லியை மையமாக்கி எழுதியிருந்தார். நடந்துகொண்டிருக்கும் உலகமயத்தை - வணிகப்பரப்பை - அதில் அடையவேண்டிய வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் தனிமனித அறப்பிறழ்வுகளை எழுதிக்காட்டிய அந்த நாவல் நம்காலத்தின் நகர்வு மரபான சமயவாழ்க்கையை ஒதுக்கிவிட்டு உருவான நவீனத்துவ அறங்களையும் கைவிடத் தயாராகிவிட்டது என்பதைத் துலக்கமாக வெளிப்படுத்தியது. இந்த ஒற்றை நோக்கத்தை ஒரு பாத்திர உருவாக்கமென்னும் நவீனக் கதைசொல் முறைக்கு மாறாகப் பலரையும் சின்னச்சின்னக் கோடுகளால் வரைந்து காட்டும் இழைகள் என்னும்  கதைசொல்முறையில் விவரித்துக்காட்டியது. ஒவ்வொரு இழையிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வீழ்ச்சியடைகிறார்கள் எனக் காட்டிய சரவணன் சந்திரன், கதை சொல்லியாகிய அந்த இளைஞனின் தோல்வியுற்றுத் திரும்பும் முடிவின் வழியாகத் தனது நிலைபாட்டைச் சொல்வதாகத் தன்னை அடையாளப்படுத்தினார்.

அடுத்தடுத்து வந்த ரோலக்ஸ் வாட்சும், அஜ்வாவும் கதைசொல்முறையிலோ, மனிதர்களை உருவாக்கி அழித்தல் என்னும் பாத்திர வார்ப்பிலும் முதல் நாவலையே பின்பற்றின. இரண்டு நாவல்களின் இடப்பின்னணி மட்டும் சென்னையும் தமிழ்நாட்டின் சில வட்டாரங்களுமாகக் காட்டப்பட்டிருந்தன. பலரையும் கூட்டி உட்காரவைத்துக் கதைசொல்லும் பாணியில் தனது எழுத்துப்பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் சரவணன் சந்திரனின் நாவல்களில் ஒரு மனுசியின்/ மனிதனின் ஏற்ற இறக்கம் சார்ந்த விசாரணைகளையோ, வாழ்வின் நகர்வுகளையோ குறிப்பான இடப்பின்னணியில் வாசித்து நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.  

விவசாயமையம் என்னும் கிராமிய வாழ்வையோ, தொழில் மையமென்னும் நகரவாழ்வையோ எழுதும் எழுத்தாளன் அல்ல நான்என்பதை உணர்ந்துள்ள சரவணன் சந்திரன், நவீன வணிகத்தின் விதிகளற்ற விதிகளை எழுதிக்காட்டும் எழுத்தாளராகத் தொடர்ச்சியாகத் தன்னை நிறுவி வருகிறார். அதனைக் குறிப்பான வெளி மற்றும் காலப்பின்னணியில் எழுதும்போது எடுத்துக்காட்டிப் பேசத்தக்க மனிதர்களை அடையாளப்படுத்தமுடியும். அப்படியான முயற்சியை - எத்தணிப்பை இனிவரும் அவரது நாவல்கள் தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்கிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றிய விரிவான அனுபவங்கள் கொண்ட அவருக்கு இது சாத்தியம்தான். ஆனால் அந்த அனுபவங்களே கூட எதிராகவும் இருக்கக்கூடும். ஒன்றை முன்வைத்து நம்பச் செய்யும்  ஏற்கும்படி வலியுறுத்தும் கட்டுரை வடிவத்தின் மொழியைக் கைவிட்டுவிட்டு புனைவுமொழியைக் கைக்கொள்ளவேண்டும்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை