: 41

பரப்பியல் படிப்புகள் தேவை

நியூஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையின் குணா. குணசேகரன் போராடும் மக்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருக்கிறேன். மக்களோடு நடக்கும் இந்த விவாதங்களும் குமுறல்களும் புரிந்துகொள்ளப்படாமல் போகும் அவலம் ஏன் நடக்கிறது என்று காதில் ரீங்காரமாய் ஒலிக்கிறது. இந்திய ஆட்சிப்பணி நிர்வாகங்களும் காவல்துறைப் பணியாளர்களும் என்ன செய்வதென்று கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் உரையாடலை நடத்துகின்றன.

புயல் உண்டாக்கிய கடல்சார் அவலம் போன்று அண்மைக்காலங்களில் விவாதங்களுக்குள்ளாகும் சிக்கல்கள் எல்லாம் பரப்பியல் படிப்புகள் (Area Studies) இந்தியாவில் ஏன் இன்னும் அறிமுகமாகவில்லை என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.. வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படிப்புகள் அந்நாடுகளைப் பொருளாதாரரீதியாக நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதனால் அயல்நாடுகளின் படிப்பின் பகுதியாக இருக்கின்றன. பன்னாட்டு வணிகக்குழுமங்களின் நிதியுதவியோடு இயங்கும் பரப்பியல் படிப்புகள், . பொருளாதார வளர்ச்சி, வணிகமேலாண்மை, பண்பாட்டுக்கூறுகள் வழியாகப் பெருந்திரளின் உளவியலைப் படிப்பித்தல், விளிம்புநிலை மனிதர்களின் ஆதங்கம் போன்றவற்றைக் கவனப்படுத்துகின்றன. நிலவியல் பரப்பை அதன் அனைத்துப் பின்புலங்களோடும் கற்றுத்தரும் பரப்பியல் கல்வியை இந்தியா போன்ற நாடுகளில் மனிதவளக்கல்வியின் பகுதியாக உருவாக்கவேண்டும். மனிதவளம் இந்தியாவில் ஒரேமாதிரியான திறன்களையோ வெளிப்பாட்டு முறைகளையோ கொண்டன அல்ல.

கலை, அறிவியல், மொழி என்பதான மரபான பிரிவுகளின் அடிப்படையில் கல்விப்புலங்களை உருவாக்கும் முறையை இது முற்றிலும் நிராகரிக்கக் கூடிய படிப்பு. நிலத்துக்கடியிலும் நீருக்கடியிலும் பொதிந்துகிடக்கும் வளங்களோடு இணைந்தது இந்திய மனிதவளம். மலைசார்படிப்பு, கடல்சார்படிப்பு, சமவெளிப்படிப்பு, நகர்சார்படிப்பு போன்ற பரப்பியல் படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அறிவையும் ஊடாடும் விவாதங்களையும் உருவாக்கும் நோக்கம் அவற்றிற்கு இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல் இந்திய அரசின் உயர்கல்விக்கு ஆலோசனைகூறும் பல்கலைக்கழக மானியக்குழு, ஆய்வு & வளர்ச்சி மையங்கள், தொழில்நுட்ப ஆய்வுக்கழகங்கள், அறிவியல் கல்வி ஆலோசனைக்குழுக்கள் போன்றன இன்னும் இன்னும் தனித்தியங்கும் துறைகளையும் படிப்புகளையுமே பரிந்துரைக்கின்றன.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை