: 93

தேர்வுமுறைகளும் மாறவேண்டும்.


தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) அறிமுகப்படுத்தப்பெற்ற பின்னணியில் தமிழகப் பள்ளிக்கல்வி வாரியம் பள்ளிப்பாடங்களைச் சீரமைப்பு தொடர்பாகவும், தரமுயர்த்துவது தொடர்பாகவும் பல்வேறு விவாதங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. மைய பள்ளிகள் வாரியப் பாடங்கள், சிறப்பான கல்வியை வழங்கும் கேரளப்பள்ளிக் கல்வி வாரியம் மட்டுமல்லாமல், வெளிநாடுகள் சிலவற்றின் பாடத்திட்டங்களையும் பெற்று ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் கல்வியாளர்கள். ஆரம்ப நிலைப்பேச்சுகள் தாண்டி, பாடங்கள் எழுதும் நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது பள்ளிக்கல்வி வாரியம். நானும் தமிழ்ப் பாடங்கள் எழுதும் குழுக்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன்.

கல்வியின் தரம் உயர்த்துதல் என்பதைச் சிந்திக்கும் யாரொருவரும் பாடங்களை மட்டும் மாற்றினால் மாற்றங்கள் வந்துவிடும் என நினைக்கக்கூடாது. கல்வியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் என்ற இருசாராரும் ஈடுபடும் பணிகள் மூன்று. கற்றல், கற்பித்தல், சோதித்தல் என்பன இருசாராரும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டியன. இம்மூன்றையும் சம அளவில் முக்கியமானதாகக் கருதவேண்டும். இந்தியாவில் / தமிழ்நாட்டில் அப்படிக் கருதுவதில்லை. கற்பித்தலுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இணையாகக் கற்கவேண்டும். ஆனால் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கல்வி வரை ஆசிரியர்களுக்கு அப்படியொரு நெருக்கடியைத் தரும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை. தனது ஆசிரியர்கள் கற்றுத் தந்த குறிப்புகளையே இன்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கல்லூரி ஆசிரியர்களை நானறிவேன்.

வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் நான் நடத்தும் தேர்வுகளில் மாற்றங்களைச் செய்துகொண்டேயிருப்பேன். நான் இக்கால இலக்கியங்கள், திறனாய்வுமுறைகள், கோட்பாடுகள் சார்ந்து பாடம் நடத்துபவன் என்பதால், அவற்றைப் புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே சோதிக்கிறேன். புரிந்துகொண்டதை எழுதிக்காட்டத்தெரிந்தவர்களாக இருப்பதையும் நான் கணிக்கிறேன். எனது வினாக்களுக்கு ஒரேமாதிரி விடையை எல்லா மாணவர்களும் எழுத முடியாதவகையில் நான் பாடங்களை நடத்துகிறேன்.இக்காலக் கவிதைகளை, நாடகங்களை, புனைகதை வாசிக்கும் முறை, அதன் வழியாகப் பிரதிகளை, பிரதிகளின் வழியாக அதனை உருவாக்கிய எழுத்தாளரின் திறனை அறிவதும் புரிவதமாக எனது வகுப்பறை உரையாடல்கள் அமையும். எழுத்தாளரின் எழுத்து உருவாக்கும் பாத்திரங்களின் முழுமையை அல்லது முழுமையின்மையை, அப்பாத்திரங்கள் நடப்பு வாழ்க்கையில் அடையாளப்படுத்தும் மனிதர்களை, அவர்களின் மெய்ப்பாடுகளை, பாவனைகளைக் கண்டறிவது எப்படி எனப் பாடம் நடத்துவதையே எனது வகுப்பறை உரையாடல்கள் செய்கின்றன. நானே வினாக்கள் தயாரித்து நானே மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கும் உள்மதிப்பீட்டுத்தேர்வுகளில் வினாக்களை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த வினாக்களுக்கான விடைகளைத் தயாரிப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் முதல் ஒருவாரம்வரை கூடத்தேவைப்படும். அதுதான் பாடம்; அதுதான் தேர்வு.

 

 

கற்றல், கற்பித்தல், சோதித்தல் என்ற மூன்றில் சோதித்தலுக்கான நடைமுறையாக இருப்பது தேர்வுகள். தேர்வுமுறையில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் கற்பித்தல் மாற்றங்கள் பெரும்பயன் அளிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை இரண்டு அல்லது மூன்றுமணி நேரத்தேர்வுகளில் மாணாக்கர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் ஒரேமாதிரியான வினாத்தாள்கள் வழியாகச் சோதிக்கப்பெற்றன. இப்போது அதனைப் பருவ அடிப்படையில் பிரித்து இரண்டு அல்லது மூன்று பருவங்களாக நடத்தலாமா? என்று பள்ளிக்கல்வித் துறை சிந்தித்துக்கொண்டிருக்கிறது. கல்லூரிகளில் பருவமுறை நடைமுறைக்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பள்ளியிறுதி வகுப்புகளில் பெறும் மதிப்பெண்கள் தான் உயர்கல்விக்கு -குறிப்பாகத் தொழிற்கல்விக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்ற அடிப்படையை இப்போது வந்துள்ள தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு பொருளற்றதாக்கிவிட்டது. இந்த நேரத்தில் நாம் தேர்வுமுறைகளில் மாற்றம் செய்வதுபற்றியும் சிந்திக்கவேண்டும். 40 -50 மணி நேரம் கற்பித்த ஒரு பாடத்தை  ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மணிநேரத்தில் சோதித்து மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக மாற்றுவடிவங்களைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொண்டுள்ள விதம், விளக்கும் விதம், விவாதிக்கும் திறன், வெளிப்படுத்தும் பாங்கு போன்றன கவனிக்கப்படவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்பலகுகள் தரப்படவேண்டும்.

நான் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய வார்சா பல்கலைக்கழகத்தில் தேர்வுக்காலத்தை மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுத்தரும். ஒரு பாடத்திற்குரிய தேர்வு நாட்களை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துபேசி முடிவுசெய்துகொள்ளலாம்.அங்கு இந்தியவியல் துறையில் ஒரு பேராசிரியர் 23 மாணாக்கர்களுக்கு 12 நாட்கள் தேர்வு நடத்தினார். ஒரு மணி நேர எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் ஒரு மணிநேரப் பேச்சுத்தேர்வை ஒவ்வொருவரும் எதிர்கொள்வார்கள். பேச்சுத்தேர்வுக்கான விவாதக்குழுவில் தாளின் ஆசிரியரோடு துறையின் இன்னொரு ஆசிரியரும், தாளின் பாடத்திட்டத்தோடு தொடர்புடைய ஆசிரியரும் இருப்பார்கள். அவர்களோடு அதே வகுப்பின் மாணாக்கர் ஒருவரும் விவாதத்தில் கலந்துகொள்வார். தேர்வுக்காலமான 3 மணிநேரத்தில் இரண்டு மாணாக்கர்களுக்குத் தேர்வை நடத்திவிட்டுக் கிளம்பிவிடுவார். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி வினாத்தாள், தனித்தனி விவாதப்பொருள் என அமையும் அந்தத் தேர்வுமுறையில் வகுப்பிலுள்ள அனைவரையும் ஒப்பிட்டு மதிப்பெண் வழங்கும்- ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் முறை கிடையாது.ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறன்களை, எடுத்துரைப்பு முறைகளைக் கண்டறிந்து மதிப்பலகு(grade) கொடுக்கும் முறை அது. கல்வித்துறை மாற்றங்கள் என்பன என்னவகையான சமுதாயத்தை இளையோர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பதிலிருந்து உருவாகவேண்டும்.

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை