: 96

பாரதீய ஜனதாவின் நமதே நமது ::பின் காலனியத்தின் நான்காவது இயல்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத்தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்  வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன;  நின் புகழைப் பரவுகின்றன. 

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!


கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன  என்ற கவிதையின் அதிகாரப்பூர்வ தமிழாக்கம் இது. 1911 இல் கல்கத்தாவில் நடந்த இந்தியதேசியக் காங்கிரஸின் மாநாட்டில் இந்தப்பாடல் பாடப்பெற்றது. பாடியவர் சரளாதேவி சௌதுராணி; தாகூரின் உறவினர் அவர். 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பெற்றபோது அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்தால், இந்தக் கவிதை தேசத்தின் கீதமாக அறிவிக்கப்பெற்றது. 


1911 - இல் கவி தாகூர் எழுதியபோது அதன் நோக்கம் பிரிட்டானிய இளவரசருக்கு வரவேற்புக் கொடுப்பது. அதிகாரத்தின் முன்னால் தன் பெருமைகளையும் தன்னைச் சார்ந்தோரின் பெருமைகளையும் சொல்வதில் பல நோக்கங்கள் இருக்கக்கூடும். இவ்வளவு பெருமைமிக்க தேசத்தின் தலைவனே நீ வாழ்க என்று சொல்வது நேரடியான பாராட்டு. ஆனால் அந்நியநாட்டின் அரசனாக இருந்துகொண்டு நம் நாட்டையும் அதிகாரம் செய்யும் ஒருவரிடம் இப்படிச் சொல்வது நேரடியான வாழ்த்தாக இருக்க வாய்ப்பில்லை. 

இவ்வளவு வளமும் பெருமைகளும் பண்புகளும் நிறைந்த தேசத்தையும் தேசத்து மக்களையும் ஆள்கிறீர்கள்; அடக்கி வைத்திருக்கிறீர்கள். கடல் கடந்து எங்கோ இருந்துகொண்டு அதிகாரத்தின் கரத்தை நீட்டிக் களிக்கும் உங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். என்றாலும் நீங்கள் அந்நியர்கள். எங்கள் பெருமைகளைத் தகர்த்துவிடாதீர்கள் என்று வேண்டுகோளாகக் கூட இதனைச் சொல்லியிருக்கலாம். கவிதைகள் காலத்தின் பின்னணியில் பொருள் தரக்கூடியன. எழுதிய காலத்தில் கவி தாகூருக்கு என்ன நோக்கம் இருந்தது என்பதை இப்போது சொல்ல முடியாது. 

இப்போது படிக்கும்போது அந்தக்கவிதை - இந்தியாவின் தேசியகீதம் -ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும்போதே இந்திய அறிவுஜீவிகளிடம் உருவாகியிருந்த சில அடிப்படைகளைச் சொல்கிறது. தேசம் என்னும் நிலப்பரப்பு எங்கெல்லாம் விரிந்துகிடக்கிறது எனச் சொல்வதோடு அதை ஒற்றைத்தேசமாக உருவகம் செய்தார்கள் எனக் காட்டுகிறது. நதிகளாகவும் மலைகளாகவும் காடுகளாகவும் கடலலை களாகவும் ஆர்ப்பரிக்கும் இவை தேசத்தின் வளங்கள் மட்டுமல்ல;  பண்பாட்டின் அடையாளங்கள் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.  மக்களின் இன்பதுன்பங்களை நிர்ணயிக்கிற அரசுகளால் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும்; காக்கப்படவேண்டும் எனவும் கோரியிருக்கிறார்கள். அதற்கான கருத்தியலை உருவாக்கும் வேலையைக் கவிகளும்,  நாடகாசிரியர்களும், புனைகதையாசிரியர்களும் அவரவர் தாய் மொழியில் எழுதித் தந்திருக்கிறார்கள், ஓவியம், சிற்பம், இசை, அரங்கியல் எனச் செயல்பட்ட கலைஞர்கள் அவற்றைப் பதிவுசெய்து வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். அவையெல்லாம் காலனியக் கால இந்தியாவையும், அதிலிருந்து விடுபட நினைத்த இந்தியர்களின் ஆசாபாசங்களையும் சொல்கின்றன. தமிழில் ஆகச் சிறந்த உதாரணமாக இருப்பவன் கவி பாரதி. அவன் எழுதிச் சென்ற தேசபக்திக் கவிதைகளின் சாரம் இவைதான்.  பாரதி உருவாக்கிய கவிதையடையாளத்தைக் கா.சி.வேங்கட ரமணியின் ‘தேசபக்தன் கந்தன் ’ தந்தது.  கொடுமுடி கோகிலமும், மதுரகவி பாஸ்கரதாஸும் இசையடையாளமாகவும் அரங்கியல் அடையாளமாகவும் வெளிப்பட்டார்கள். இப்படி வெளிப்படக்காரணமான போராட்டக்களத்திற்கு முந்திய காலமே காலனியக் காலம்(Colonial India)

காலனியமும் ஏகாதிபத்தியமும்

உலக அளவில் 16 ஆம் நூற்றாண்டில் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் கொண்ட கலைச்சொல் காலனியம். தங்களின் வாழ்நிலம் பிரிதொரு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருக்கிறது என்ற எண்ணத்தை உண்டாக்கும் மனநிலையைக் குறித்த கலைச்சொல் உலக அளவிலான கலைச்சொல்லாக ஆனாலும், அதற்கும் முன்பே நாடுகளை அடிமைப்படுத்துதலுக்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் உண்டு. அகிம்சையின் அடையாளமாகச் சொல்லப்படும் அசோகனின் ஆசைகள் நாடுபிடிப்பதில் தான் தொடங்கின. கங்கைகொண்ட - கடாரம் வென்ற - ஈழம் சென்ற சோழர்களும் அங்கெல்லாம் போனதின் பின்னணிக்காரணங்கள் காலனிய உருவாக்கமல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும். இல்லையென்றால் இதன் நீட்சியான ஏகாதிபத்திய ஆசையாக இருக்கலாம். 

காலனியத்தின் மாற்றுவடிவமாகவே ஏகாதிபத்தியம் என்னும் கலைச்சொல் உருவானது என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. போரிட்டு வென்று தங்களின் ஆளுகையை இன்னொரு நிலப்பரப்பின் மீது உண்டாக்கும் நடவடிக்கையைக் குறிக்கப்பயன்படும் சொல்லாக இருப்பது காலனியம். அதற்கு மாறாக நிலப்பரப்பின் மீது செலுத்தும் அதிகாரத்தோடு தங்களின் நலனை - ஆதிக்கத்தை - பண்பாட்டை இன்னொரு குழுவின் மீது ஏற்றி வைத்து , அதுவே மேலானது என நம்பச் செய்யும் நோக்கம் கொண்டது ஏகாதிபத்தியம். காலனியம் அடிமைகொள்ள நினைக்குமென்றால், ஏகாதிபத்தியம் மாற்றங்களை உண்டாக்கித் தகவமைக்கும் வேலையையும் செய்யும். காலனியம் அச்சமூட்டுவதின் வழி இலக்குகளை அடையும்; ஏகாதிபத்தியம் தந்திரங்களின் வழியும் நுட்பங்களின் வழியும் நிலைகொள்ளும்.

 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த ஐரோப்பியர்கள் - குறிப்பாக ஆங்கிலேயர்கள் காலனியவாதிகளாக இருந்தார்கள். இந்தியாவைத்தாண்டி ஆசியநாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பலவிதமான காலனியநாடுகள் உருவான பின்பு அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளாக மாறினார்கள். ஏகாதிபத்திய நடைமுறைகளையும் கடைப்பிடித்தார்கள். இரண்டையும் உள்ளடக்கி - ஏறத்தாழ 300 ஆண்டுக்கால அந்நிய ஆட்சி இந்தியாவில் உண்டாக்கிய மாற்றங்கள் விதவிதமானவை. அது இந்தியாவின் பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒரேவிதமான மாற்றங்களை உண்டாக்கவில்லை. பொருள் உற்பத்திசார்ந்த - மனிதவளம் சார்ந்த வேறுபாடுகளுக்கேற்பவே மாற்றங்களும் நடந்தன. 


தொடக்கநிலை

காலனியக் காலத்தைப் பேசும் கதைப்பாடல்கள் பலவற்றில் 56 தேசத்து ராஜாக்கள் எனப் பொதுவான எண்ணிக்கை சொல்லப்பட்டாலும், சில நூறுதேசங்கள் இன்றைய இந்தியப் பரப்புக்குள் அன்று இருந்தன. இன்றைய தமிழகப் பரப்புக்குள்ளேயே ஒரு நூறு தேசமாவது இருந்திருக்கும் என ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கமுடியும். இன்றுள்ள பஞ்சாயத்து யூனியன் அளவை விடக் குறைவான நிலப்பரப்புகூட  ‘நாடு’ என்றும், அதன் ஆட்சியாளர்கள் மூவுலகையாளும் ’முடிமன்னர்கள்’ என்றும் சொல்லப்பட்டார்கள்; அரசவைக்கவிகள் அப்படித்தான் அவர்களை விளித்துக் கவியெழுதி வாழ்த்தினார்கள்; வயிறு வளர்த்தார்கள்.  ஜமீந்தார்கள், சமஸ்தானாதிபதிகள், பாளையக்காரர்கள், நவாப்புகள் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டவர்கள் ஐரோப்பிய வணிகக் குழுக்களுக்குக் கட்டிய கப்பங்களை மக்கள் அறிந்தவர்களில்லை. கவிகளும் கலைஞர்களும் கூட அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் அந்தந்தப் பிரதேசத் தலைவர்கள் தான். அதுவரையிலான காலனியம் இந்தியாவைச் சுரண்டும் நோக்கம் கொண்டது மட்டுமே. நிர்வாகம் செய்வது அவர்கள் நோக்கமல்ல. நிர்வாகம் சார்ந்து இந்திய சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தவேண்டும் என்று நினைக்கவுமில்லை

மாற்றங்கள் 1858 - ஆம் ஆண்டுக்குப் பின்பே தொடங்கின. விக்டோரியா மகாராணியின் நேரடியாட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்ட 1876-க்குப்பின்பு இந்திய நிலப்பரப்பில் பிரிட்டானிய ஆட்சியாளர்களின் நிர்வாகம் இங்கே முழுமையாக உணரப்பட்டது. மேற்கின் கல்வி அறிமுகம் ஆனது. கலை இலக்கியப் பார்வைகள் உணரப்பட்டன; பாதைகள் போடப்பட்டன; பயணங்கள் நிகழ்ந்தன. பணிகள் உருவாக்கப்பெற்றன. பணிக்காக இடப்பெயர்வுகள் ஏற்பட்டன. 

நகர்வுகளும் மாற்றங்களும் பதிவுகளும்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிகழ்ந்த இடப் பெயர்வுகளும் நகரங்களை நோக்கி நகர்ந்து, நகரியங்களை உருவாக்கிய நிலவெளி மாற்றங்களும் நடுத்தரவர்க்க உருவாக்கமும் ஒருபடித் தானவையல்ல. பிரிட்டானிய அரசின் நிர்வாகம் உருவாக்கிய நகர்வுகள் ஒருவிதமானவையென்றால், ஐரோப்பியத் தொண்டு நிறுவனங்களும் சபைகளும் உருவாக்கிய நகர்வுகள் அதற்கு எதிரானவை.  நிர்வாக அமைப்புகள் உருவாக்கிய அனைத்தையும்  முதலில் ருசி பார்த்தவர்கள் இந்திய சமூகத்தின் உச்சியில் இருந்த பிராமணர்களே. அசையாச் சொத்துகளான நிலத்தோடு உழைப்பு சார்ந்த உறவைக் கொண்டிராத பிராமணர்கள் காலனியத்திற்கு முந்திய அரசுகளிடம் கல்வியின் பெயராலும், கலை இலக்கியங்களின் பெயராலும், சோதிடம், வானசாஸ்திரம், மனையியல் போன்றவற்றின் பெயராலும் சலுகைகளை அனுபவத்தவர்கள். இவை யனைத்தையும் கடவுளோடும், கடவுள் இருக்கும் இடமாகச் சொல்லப்படும் கோயிலோடும் இணைத்துக் கட்டமைப்புச் செய்து மானிய நிலங்களையும், அவற்றின் வருமானங்களையும் பங்கிட்டுக் கொள்ள உரிமை கொண்டிருந்தவர்கள். தங்களின் மேலாதிக்கத்திற்குச் சாதகமான கருத்தியல்களைப் பேசும் ஸ்மிருதிகளையும் உபநிசத்துகளையும் வேதங்களையும் கொண்ட சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் களாகக் காட்டிக் கொண்டதின் வழியாக மேலானவர்களாக ஆகிக் கொண்டவர்கள். அப்படி ஆனதின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மறுத்துக் கடவுளின் வரத்தால் நடந்த சாகசம் என நம்பியவர்கள். அந்த நம்பிக்கையைத் தகர்த்தது காலனியத்தின் கடைசிக்காலமும் ஏகாதிபத்தியத்தின் தொடக்க காலமும்.


பிராமணர்களின் இடப்பெயர்வு நடந்த அதே கால கட்டத்திற்கு முன்னும் பின்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இன்னொருவிதமான நகர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. பெருந்திரளின்மீது ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாக இருந்த சாதீயப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாகக் கிராமங்களில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்காங்கே மருத்துவ மனைகள் ஏற்படுத்தப்பட்டன.  தென்னிந்தியத் திருச் சபையினராலும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை களாலும் இவற்றின் உட்பிரிவுகளாலும் பள்ளிகளும் மருத்துவமனைகளும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே   சபைகளும், தேவாலயங்களும் ஆரம்பிக்கப்பெற்றன என்பதும் உண்மை. பசித்திருந்தவர்களுக்கு அன்னமும் இறைச்சியும் கூட அளிக்கப்பெற்றன.  கல்வி, உணவு, மருத்துவம், பயணம் ஆகியவற்றோடு ரட்சிப்பையும், மீட்பையும், தேவனிடத்தில் ஐக்கியத்தையும் தந்தன அவை. 


முப்பிடாதிகளையும், பேராச்சிகளையும், சாத்தன்களையும், கன்னியம்மனையும், இசக்கியம்மனையும் கொண்டாடிக் களித்தபோது கிடைக்காத அனுபவங்களை ஆத்ம நேசரும் அன்னை மரியும் தருவார்கள் என நம்ப வைக்கப்பட்டனர்.  ஜீவாத்மா, பரமாத்மா, இரண்டின் கலப்பு, விசிஷ்டத்தின் பயணம் எனப் பேசப்பட்ட கருத்துகளை அந்நியமான சொற்களாகவே கேட்டிருந்த விளிம்புநிலை மனிதர்கள் கிறித்தவமதச் சொல்லாடல்களால் ஆன்மபலன் பெற்றவர்களாக நம்பினார்கள்; நுழை வதற்கு  அனுமதி மறுக்கப்பட்ட கோயில்களின் இடத்தை மாற்றீடு செய்த தேவாலயங்களுக்குள் நுழைந்தார்கள்;மதம் மாறினார்கள். இவை யெல்லாம் 19 ஆம் நூற்றாண்டின் கதைகள். தலித்துகளும், மீனவர்களும், நிலவுடைமை யாளர்களாக இல்லாது பனையேறிகளாக இருந்த நாடார்களும் , சாராயம் காய்ச்சிய காசில் வயிறு வளர்த்த மறவர்களும் வேகம்வேகமாகக் கிறித்தவர் களாகவும் சில இடங்களில் இஸ்லாமியர்களாகவும் மாறிய நகர்வுகள் இந்திய விடுதலைக்கு முன் நிகழ்ந்த முக்கியமான சமூக நகர்வுகள். 
திருநெல்வேலியைச் சுற்றியிருந்த அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, சேரன் மாதேவி, நாங்குநேரி, ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் கற்குளம், ஸ்ரீவைகுண்டம் போன்ற நகரங்களின் அக்கிரஹாரங்கள் காலியாகித் திருநெல்வேலிக்கும், மதுரைக்கும், சென்னையின் மைலாப்பூருக்கும் நகர்ந்த கதைகள் ஒரு நூற்றாண்டுக்கு முந்தியவை.  இருவகை நகர்வுகளையும் தமிழ் இலக்கியம் கூட எழுதிக் காட்டியிருக்கிறது. அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், வேதநாயகம் சாஸ்திரியாரின் சர்வசமய சரித்திரக்கீர்த்தனை போன்றன தொடக்ககால நகர்வுகளைப் பேசிய இலக்கியப் பிரதிகள் என்றால், ஹெப்சிபா ஜேசுதாசன், ஆர். எஸ். ஜேக்கப்,   சுந்தரராமசாமி, வண்ணநிலவன், ஐசக் அருமைராஜன், ரா. சு. நல்லபெருமாள், பி. ஏ. கிருஷ்ணன் போன்றோரின் நாவல்களும் சிறுகதைகளும் தொடர்நடவடிக்கைகளின் ஆழத்தைப் பதிவுசெய்த பிரதிகள்[குறிப்பாகப் பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றையை வாசித்தால் பிராமணக்குடும்பங்களின் நகர்வுமணத்தையும், அதனோடு இணைந்துகொண்ட தேசவிடுதலைப் போராட்டத்தின் அடுக்குகளையும் நுகரலாம்].  20 -ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கியப்பரப்பில் தாமிரபரணிக் கரையின் கதைகள் இரண்டையும் பேசின.காவிரிக்கரையின் கதைகளை எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம், தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் எழுத்துப் பிரதிகளில், அக்கிரஹாரங்களின் நசிவும், கர்நாடக இசைக்கச்சேரி,  பரதநாட்டியம், மரபான கல்வி முறைகள், கலைப்பயிற்சி போன்றவைகளின் வீழ்ச்சிகளும் விலகல்களும் மட்டுமே  பேசப்பட்டுள்ளன. இவைகளோடு போட்டிபோடும் அளவுக்கு வைகைக் கரையின் கதைகள் எழுத ஆளில்லை. என்றாலும் சி.சு. செல்லப்பாவிடமும், பி.எஸ். ராமையாவிடமும் தேடினால் கிடைக்கவே செய்கின்றன.  

நதிநீர்ப்படுகை நிலங்களின் மீது மறைமுக உரிமைகொண்டிருந்த பிராமணர்கள் கல்விக்காகவும் வேலைக்காகவும் நகரங்களை நோக்கி - பெருநகரங்களை நோக்கி நகர்ந்த இடப்பெயர்வுகள் அந்தக் காலகட்டத்தின் முக்கியமானவை சமூக நகர்வுகள். இந்த நகர்வைச் செய்துகொண்டே - அது தரும் பலன்களை அனுபவத்திக் கொண்டே, இழப்பின் வலி (Nostalgia)யையும் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்கள். மிகுந்த குற்றவுணர்வோடு கிராமங்க ளையும், அக்கிரஹார வாழ்வையும், கோயில்சார் கலைப் பண்பாட்டு நடவடிக்கைகளையும் விட்டுவிலகுவதாகப் புலம்பினார்கள்.  அந்த இடப்பெயர்வும் நகர்வுமே பின்னர் தேசத்தின் மீது கொண்ட பற்றாகவும் தொலையும் பண்பாட்டின்மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகவும் உணரப்பெற்றது. உணர்த்தப்பெற்றது. இவையே இப்போது உள்ளே - வெளியெ என்னும் பண்பாட்டு அரசியலாக வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நதிக்கரை அக்கிரஹாரங்களின் இடப்பெயர்வுக் கதைகள் போலவே . இந்தியா முழுக்க நதிக்கரையோரங்களின் கதைகள் சின்னச்சின்ன வேறுபாடுகளோடு நடக்கவே செய்தன. பிராமணர்களாலும் பிராமணியத் தாலும் ஒதுக்கப்பட்ட விளிம்புநிலை - உழைக்கும் மக்களின் வெளியேற்றமும் எதிர்நிலையில் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. அப்படி மதமாறியவர்கள் எந்தவிதக் குற்றவுணர்வுமில்லாமல் கிராமத்துத் தெருக்களில் வேதாகமத்தைச் சுமந்துகொண்டு ஓய்வுநாளின் நடவடிக்கையாகச் சர்ச்சுகளுக்குள் நுழைந்தார்கள். அந்த நுழைவுகளை விடுவிப்பின் அடையாளமாக - அதுவரை செலுத்தப்பெற்ற ஒதுக்குதலின் -தீண்டாமையின் பிடியிலிருந்து பெற்ற விடுதலையின் குறியீடுகளாகக் கருதிச் சென்றார்கள் என்பதும் குறித்துக்கொள்ள வேண்டியது. 


எதிரெதிர்ப் பயணமென்னும் சாகசம்

கடந்த காலத்தில் காலனியத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் ஏற்பட்ட  இழப்பின் வலியைப் போக்கும் அருமருந்தாக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி பார்க்கப்படுகிறது. 2014 இல் ஆட்சியப் பிடிக்க உதவிய  திரு நரேந்திரமோடி என்னும் தேசப்பற்றுக் கொண்ட தலைமையின் கீழ் கலாசாரத் தேசியத்தை உருவாக்கும் அரசாக அது தன்னை முன் வைக்கிறது. அதற்குக் காரணமாக நாடாளுமன்றத்தில் தேவைக்கதிகமான உறுப்பினர்களோடு கூடிய முழுபலத்துடன் வந்துள்ளதை வாய்ப்பாக நினைக்கிறது. முழுமையான மாற்றத்திற்கான முழு அதிகாரத்தை முதன்மை அமைச்சராகியிருக்கும் திரு. நரேந்திரமோடி பயன்படுத்த வேண்டும் என திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகிறது அதனால் தான் ஆளுங்கட்சியின் கருத்தியல் குழுக்களும், அவற்றை வழிமொழியும் ஊடகப்பரப்புரைகளும், தேசத்தின் முன் திரு நரேந்திரமோடியை ஆகக் கூடிய சக்திமானாக முன் வைக்கின்றன. ஆகக்கூடிய அந்த சக்தியை நிரூபிப்பதற்காக அவர் எதிரெதிர்ப் பாதையில் பயணம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார். அதனை நிர்ப்பந்தம் என்பதை உணர்ந்தோ அல்லது உணராமலோ எந்தச் சாகசத்திற்கும் தயாராகிவிடுகிறார் அவர்.  

பொருளாதாரத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளைப் பின்பற்றி - பங்கேற்பு முதலாளியத்தைப் பின்பற்றி வலிமைவாய்ந்த இந்தியாவை - வல்லரசு இந்தியாவை உருவாக்கிக் காட்ட நினைத்து அதற்காக முழுநேரமும் வேலை செய்கிறார். விமானங்களில் ஏறி, நாடுநாடாகப் பயணம் செய்து அதன் தலைவர்களோடு ஒப்பந்தங்கள் செய்கிறார். அந்தந்த தேசங்களில் வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் பன்னாட்டுக் குழுமங்களின் தலைவர்களையும் சந்திக்கிறார். அவர்களோடு இந்திய முதலாளிகளுக்கு உறவை ஏற்படுத்திக் கொடுப்பதோடு சலுகைகள் வழங்கும்விதமான சட்டங்களை அறிமுகம் செய்கிறார்.  அங்கிருக்கும் பெரும்பணக்காரர்களைப் போல இந்தியாவிலும் ஆகப்பெரும் முதலாளிகளை உருவாக்கி அவர்களிடம் நாட்டின் வளர்ச்சியைக் கையளித்துவிடலாம் எனவும் திட்டமிடுகிறார். அந்த நோக்கத்தின் நெருக்கமான அடையாளங்களாக  அதானிகள் தெரிகிறார்கள். கொஞ்சம் விலகலான அடையாளங்களாக அம்பானிகளும் தொடர்கிறார்கள். இன்னும் இன்னும் பலர் இருக்கக்கூடும். 

வளர்ச்சிக்குக்காக முன்னோக்கிப் பயணம் செய்வதாகக் காட்டிக் கொள்ளும் நாட்டின் முதன்மை அமைச்சர் காலனிய, ஏகாதிபத்திய ஆட்சியாளர்களாலும், அவர்களின் கருத்தியல் அடிமைகளாலும்  சிதைக்கப்பெற்ற பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்கும் இன்னொரு சக்திமானாகவும் உருவெடுக்க வேண்டி யுள்ளது.  அதற்காக இந்தச் சக்திமானின் பயணம் முன்னோக்கித் தாவுச் செல்வதாக இல்லாமல்  பின்னோக்கிய பயண மொன்றைச் செய்ய வேண்டியிருக்கிறது.  ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிக் கடந்து போய்ச் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் யோகா, சமஸ்கிருத ஞானம், குருகுலத்தன்மை கொண்ட பாரம்பரியக்கல்விமுறை போன்ற மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். அந்த மூலிகைகளை வளர்த்தெடுத்த பிராமணர்களுக்கு மறுவாழ்வு - கலாசார முதலிடம்- அளிக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. 

நடைமுறை வாழ்க்கையில் எதிரெதிர்த் திசையில் ஒருவர் பயணம் செய்வது சாத்தியமாகலாம். தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்களின் இடையே உள்ளூர்ப் பயணங்களை மேற்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு தேசம் - அதன் பொருளாதார அடித்தளத்தை ஒன்றாகவும், அவற்றால் உண்டாக்கப்படும் கல்வி, கலை, பண்பாடு போன்ற மேல்தள நடவடிக்கைகளை நேரெதிர்த் திசையிலும் அமைத்துக்கொள்ளல் சாத்தியமா? என்பது மிகப்பெரிய கேள்வி. சாத்தியமாகாததைச் சாத்தியமாக்கு வதற்காகத்தான் சக்திமான்கள் தேவைப்படுகிறார்கள். இது நான்காவது இயல்


1947 இல் சுதந்திரமடைந்த - காலனி யாட்சியிலிருந்து விடுபட்ட இந்தியா காலனியத்தின் அடையாளங்களைத் துடைத்தாக வேண்டும் என்பது இந்த ஆட்சியின் நோக்கம். அதற்கேற்பப் பின்காலனியத்தின் நான்காவது இயலை  முதன்மை அமைச்சர் திரு நரேந்திர மோடி எழுதியாகவேண்டும். அதை எழுதும்போது இதற்கு முந்திய இயல்களின் போக்கையும் சீராக்கவேண்டிய பெரும் வேலை அவர் முன் இருக்கிறது. ஒருவர் முந்திய நடவடிக்கைகளைப் படிக்கல்லாக மாற்றிப் பயணம் செய்யலாம். அல்லது  தடைக்கல்லாக நினைத்துத் தாண்டலாம். நரேந்திர மோடி தாண்டித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவரை வழிநடத்தும் கட்சியும் வழிகாட்டுக்குழுக்களும் கருத்தியல் சிந்தனை யாளர்களும் முதலிரண்டு இயல்களையும் தடைக்கல்லாகவே நினைக்கின்றன.  அவர் தாண்டுவாரா? நான்காவது இயலை எப்படி எழுதுவார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு முதல் மூன்று இயல்களை மட்டும் வரிசைப்படுத்திவிட்டுப் பின்னர் தொடரலாம். 

மூன்று இயல்களையும் (அத்தியாயங்களை) மூன்று  முதன்மையமைச்சர்கள் (பிரதமர்கள்) எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதற்கான கால அவகாசத்தை இந்தத் தேசத்து மக்கள் அவர்களுக்கு வழங்கினார்கள். முதலாமவர் பண்டித ஜவஹர்லால் நேரு 1964 வரை 17 ஆண்டுகள் ஆட்சி செய்து முதல் இயலைக் கலப்புப் பொருளாதாரம் மற்றும் அறிவியல் பார்வை யென்னும் கருத்தியலால் எழுதினார். 

இரண்டாவது இயலைக் கடுமையான நிர்வாகம், முழுமையான தேசவுடைமை என்னும் கருத்தியலால் எழுதப்பார்த்தார் அவரது மகள் திருமதி இந்திராகாந்தி.  அதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் 15 ஆண்டுகள். 

தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்னும் கருத்தியலால் மூன்றாவது இயலை எழுதிச் சென்றுள்ளவர் டாக்டர் மன்மோகன்சிங். முந்திய இரண்டு இயல்களிலிருந்தும் விலகிய பார்வை கொண்ட இவ்வியலை எழுத அவருக்கு 5 ஆண்டுக்கால நிதியமைச்சர் பதவியும், 10 ஆண்டுக்கால முதன்மை அமைச்சர் பதவியும் தேவைப்பட்டது. 

பெரும் முதலீடுகொண்ட. தொழில்துறை மற்றும் வணிகம், பெரும்பண்ணை வடிவிலான வேளாண்மை என்னும் கருத்தியலோடு முரண்படும் கலாச்சார தேசியம் என்னும் துணைக்கருத்தியலையும் உள்வாங்கி நான்காவது இயலை நரேந்திரமோடி எழுத நினைக்கிறார். உள்ளே - வெளியே என்னும் இந்த ஆட்டத்தை ஆடிப்பார்க்க இப்போது கிடைத்திருக்கும் 5 ஆண்டுகள் நிச்சயம் போதாது. முன்னோடிகளான மூவரையும் தாண்டி 20 ஆண்டுகள் தேவையென இவர் நினைக்கக்கூடும்; அவ்வளவு காலம் ஆளவேண்டும் என்று ஆசைப்படவும் கூடும். அந்த வாய்ப்பைக் காலமும் தேசமும் வழங்காது என்ற அச்சமும் இருக்கக்கூடும்.  எப்படித்தாண்டுவார் எனப் பார்க்கலாம்..

நன்றி: உயிர்மை -ஜூலை, 2015


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை