: 53

மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் யானைகள்


பின் - நவீனத்துவம் கருத்தியல் ரீதியாகச் சிற்றலகுகளை உருவாக்கும்; கொண்டாடும். ஆனால் இந்தியாவில் முற்றிலும் எதிர்நிலையில் இருக்கிறது. மரபைக் கைவிடாமல் நவீனத்துவத்திற்குள் நுழைந்த இந்தியப் பரப்பு அதே கோலத்தோடு பின் நவீனத்துவக் 
கட்டமைப்பையும் உள்வாங்கத்தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான சிற்றலகுகள் நவீனத்துவத்தை மறுக்கும் மரபு அமைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உருவாகும் சிற்றலகுகளை- சிற்றலைக் கதையாடல்களாகக் (LITTLE NARRATION ) கருதமுடியவில்லை. இந்தியச் சூழலில் தோன்றும் அல்லது தோற்றுவிக்கப்படும் சிற்றலைக்கதையாடல்கள் ஒருவிதமான தொங்குதசைகளாக மாறி, தாங்கும் உடலுக்கு நோய்மைகளையே உண்டாக்குகின்றன.

மக்களாட்சி முறைமையின் தர்க்கங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையற்ற அரசமைப்பைக் கொண்ட இந்தியாவின் தேர்தல் காலங்கள் இதனைத் தொடர்ச்சியாகப் புலப்படுத்தி வருகின்றன. பொதுத்தேர்தல்கள் மட்டுமின்றை இடைத்தேர்தல்களும் அதனை உறுதிசெய்கின்றன.

நேற்றைய ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பின் முன்வைக்கப்படும் சொல்லாடல்களைக் கவனித்தால் இது ஓரளவு புரியலாம். அ இ அதிமுகவின் தலைவர் யார்? என்பதை இந்தத் தேர்தல் காட்டிவிட்டது என்ற ஏற்கத்தக்க சொல்லாடலைத் தாண்டி ”ஒரு தலைவர் உருவாகிவிட்டார்” என்பதைப் பலவிதமான வாக்கியங்களில் சொல்கிறார்கள்.தேர்ச்சியும் திறனும் கொண்ட தலைவர்; மக்களின் மனம் அறிந்த மனிதர், துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் தலைவர் எனத்தொடங்கித் “ தமிழ்நாட்டின் முதல்வர்” என்பதில் போய் நிறுத்துகிறார்கள். இப்படிச் சொல்கிறவர்கள் யாரென்று கவனித்தால் சிற்றமைப்புகளின் தலைவர்களாக இருப்பவர்கள்.அடிப்படைவாதக் கருத்தியல்களை நேரடியாகப் பேசாமல் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட குழுக்களின் நலன்களுக்காக அமைப்புகளை நடத்தும் நபர்களாக இருக்கிறார்கள்.

இத்தகைய அமைப்புகளும் நபர்களும் தங்களின் இருப்பைத் தக்கவைக்கப் பேரமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.ஒரு சிறு நிகழ்வைக்கூடப் பெருநிகழ்வாக மாற்றி, அதன் காரணிகளை அல்லது காரணமான நபர்களைக் கொண்டாடும் நிலைபாட்டை எடுக்கிறார்கள். அந்த நிலைபாடு தங்களுக்கீழ் உள்ள கூட்டத்தை வழிநடத்த மட்டுமே என்பதில் தொடங்கி, தமிழ்/இந்திய நிலப்பரப்பின் வெகுமக்களுக்கான கருத்தியலாக மாறிவிடுகிறது. அப்படி மாற்றிவிடுவதில் பெருகிவழியும் செய்தி அலைவரிசைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மரபிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தை நகர்த்துவதை நோக்கமாகக் கொள்ளவேண்டிய ஊடகங்கள் எதிர்நவீனத்துவத்திற்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன.

அடிப்படைவாதச் சிற்றலகுகளோடு ஒத்துப்போகும் கருத்தியலை விமரிசனமின்றி ஏற்றுநகரும் ஊடகங்களின் இந்தப் போக்கு, அவற்றின் பொருளாதார அடித்தளமான பன்னாட்டு முதலீட்டியத்தையே காவுவாங்கும். இதைப் புரிந்துகொள்ள ஊடகங்களும் ஊடகப் பேரமைப்புகளும் இன்னும்சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை