: 169

கொடிவீரன் : கைவிடப்பட வேண்டிய கலைக்கோட்பாடு

Image missing

அண்மையில் வந்த கொடிவீரன் என்ற சினிமாவை இயற்பண்புவாத சினிமாவாக வகைப்படுத்தி விமரிசனம் செய்யலாம். இந்தப் படம் மட்டுமல்ல; இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பனும் சசிகுமார் நடித்த குட்டிப்புலியும் கூட இயற்பண்புவாத(Naturalism)க் கலைக்கோட்பாட்டோடு பொருந்தும் சினிமாக்கள்தான். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தை  வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட வெளியாகக் கொண்டு நிகழ்ச்சிகளைக் காட்சிகளாக உருவாக்கும் இயற்பண்புவாதப் படங்கள் நுட்பமான தரவுகளை அடுக்கிக்காட்டும் இயல்புடையன. திருவிழா, விளையாட்டு, போட்டிகள், கண்மாயழிப்பு போன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளையும் குடும்பச்சடங்கு நிகழ்வுகளான  குழந்தை பிறப்பு, காதுகுத்து, கல்யாணம், தொடங்கிச் சாவுவீடு வரை உள்ளவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அடுக்குவதின் மூலம் பண்பாட்டு ஆவணமாகத் தோற்றத்தை உண்டாக்கும் தன்மையை இத்தகைய படங்களில் காணலாம்.

இந்த ஊரில் அல்லது இந்த இடத்தில் எனக்  குறிப்பாகக்  காட்சிகளுக்கு இடப்பின்னணியைத் தருவதின் மூலம் அவை உண்மையில் நடந்தவை; நடப்பவை என்று நம்பச்செய்துவிடும் தன்மையை உருவாக்கிக்கொள்கிறது.    அத்தன்மைகள் அப்படியே வழிவழியாக வருபவை; இயல்பானவை; இயற்கையாக நடப்பவை எனக் காட்டுவதின் மூலம் கலையின் ஒரு பாணியாகத் தன்னை முன்னிறுத்தும் நோக்கத்தில் வெற்றிபெறுபவை. இப்படி அடுக்கப்படும் தரவுச் சேகரிப்புக்காக (details) பாராட்டுகளைப் பெற்றுவிடக்கூடியவையும் கூட. அதிலும் இந்தப் பண்பாட்டு நடவடிக்கைகள் மண்ணின் மரபு, உழைக்கும் மக்களின் பண்பாடு எனச் சொல்லாடல்களை உருவாக்குபவர்களால் கொண்டாடப் படக் கூடியவையும்கூட. முத்தையாவின் இந்த மூன்று படங்கள் மட்டுமல்ல; இதுபோன்ற தரவுச்சேகரிப்பும் அடுக்குதலும் கொண்ட கிராமியப்படங்கள் பலவும் வெற்றிகரமான சினிமாவாகத் திரள் மக்களால் பார்க்கப்பட்டுள்ளன; வணிக வெற்றியடைந்துள்ளன. சிலவகையான ஆய்வாளர்களின் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்தியப் பொதுப்புத்தியில் சாதியும், மதமும் அவைசார்ந்த சடங்குகளும் இயல்பானவை என்று நம்பிக்கை உள்ளது. அந்தச் சடங்குகள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவையெனவும் கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய பொதுப்புத்தியின் மேல் விசாரணைகளை எழுப்பாமல்,  திரள் மக்களின் நம்பிக்கைகளைக் கூடுதலாக்கிப் பழைமைக்குள் இருத்திவைக்கும் நோக்கம் கொண்டவை என்பதை உணரவேண்டும்அறிவொளிக்கால மரபை மறுத்துப் பின்னோக்கிய அரசியலை முன்னெடுக்கும் காலகட்டத்தில் பெரும்பான்மைவாத அரசியலுக்கு உதவும் நோக்கம் கொண்டவை என்பதை உணரவேண்டும்

1990 -கள் தொடங்கிச் சாதியடையாளத்தையும் வட்டார அடையாளத்தையும் காட்டி வணிக வெற்றிபெற்ற படங்களை நினைவுக்குக் கொண்டுவந்தால் சில உண்மைகள் புரியவரலாம். இத்தகைய படங்களுக்குப் பின்னணி அடையாளத்தைத் தந்த கொங்கு வட்டாரமும் தென் தமிழகப் பகுதிகளான மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களும்  நிலம் சார்ந்த வட்டாரங்கள் மட்டுமல்ல. பெரும்பான்மைச் சாதிகளின் ஆதிக்கம் நிரம்பிய இடங்களும்கூட. ஆர்.வி. உதயகுமார், ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள்  திரட்டி நிரப்பித் தந்த  அடையாளங்கள் கொங்குவேளாளர்களின் அடையாளங்களாகவே இருந்தன. தேவர் மகனில் தொடங்கி, பாரதிராஜாவின் பசும்பொன் வழியாக கொம்பன், குட்டிப்புலி, கொடிவீரன் வரை நீளும்  படங்கள் திரட்டித் தரும் அடையாளங்கள் தேவரினம் எனப்படும் முக்குலத்தோர்களின்  குடும்ப நிகழ்வுகளாகவே இருக்கின்றன என்பதை விரிவாக விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இவ்விரண்டு சாதிகளுமே கடந்த இருபதாண்டுத் தமிழக அரசியலையும் திரைப்படத்தயாரிப்புகளையும், வெளிப்படையற்ற பொருளியல் நடவடிக்கைகளையும்  தீர்மானிக்கும் சாதிகளாகவும் இருக்கின்றன என்பதையும் தற்செயல் நிகழ்வுகளாகவும் சொல்லமுடியாது.

பெரும்பான்மைவாதத்தின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இந்த இரண்டு சாதிகளும் இரண்டு வட்டாரங்களின் சிறு அடையாளங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளித் தங்களது பண்பாட்டு நடவடிக்கைகளேயே வட்டார நடவடிக்கைகளாக ஆக்கிவருகின்றன என்பதும்கூட கள உண்மைகளே. இந்த வட்டாரங்களில் பொதுநிகழ்ச்சிகளுக்காகவும் அரசியல் நிகழ்ச்சிகளுக்காகவும் அச்சிட்டு நிறுத்தப்படும் வண்ணச்சுவரொட்டிகள் தொடங்கிக் குடும்ப சடங்குகளுக்காக அச்சிடப்படும் அழைப்பிதழ்கள் வரை எழுத்துச் சான்றுகளாக இருக்கின்றன. அவை உண்டாக்கியுள்ள செய்ம்முறை வடிவங்களும் அதை உறுதிசெய்கின்றன.

கலைகளைப் பார்வைக்கலைகளாகவும் கேட்புக்கலைகளாகவும் வாசிப்புக் கலைகளாகவும் பிரித்துப் பேசியதோடு அவற்றில் காணப்படும் பாணிகளுக்கும் பெயரிட்டுச் சொல்லாடல்களை உருவாக்கியது மேற்கத்தியத் திறனாய்வு மரபு. நடப்பியல் அல்லாத பல்வேறு வகைப் பாணிகளின் கலவையாக மாறிவிட்ட  நவீனத்துவ, பின் - நவீனத்துவக் காலத்திற்கு முந்திய மரபுக் காலத்தில் தோன்றிய கலைபாணிகளைச் செவ்வியல், புனைவியல், இயற்பண்பியல், நடப்பியல் என வகைப்படுத்தியும் காட்டினர். இந்நான்கில் செவ்வியல், புனைவியல், நடப்பியல் அளவுக்கு இல்லாமல்  மிகக்குறைவான காலமே செல்வாக்குப் பெற்ற கலைப்பாணி  இயற்பண்புவாதம் ஓவியமாயினும் சிற்பமாயினும் அதன் இருப்பின் அளவில் - இயல்பை மாற்றாமல் உருவாக்கவேண்டும் என்ற வாதத்தை முன்வைத்த பாணி அது. நீளம், அகலம்,பருமன் என முப்பரிமாணத்திலும் ஓவியத்தையும் சிற்பத்தையும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டிய கலைஞர் போலச்செய்வதில் என்ன இருக்கிறது எனத்தோன்றிய சலிப்பு மனநிலையில் அதனை விரைவாகவே கைவிட்டனர். அவர்களுக்கு அந்தச் சலிப்பை உண்டாக்கியவர்கள் அரங்கவியலாளர்கள் என்று கூடச் சொல்லலாம். ஒரு வெட்டுக்காயத்தை மேடையில் காட்டுவதற்காக நடிகர்களின் உடலை வெட்டிக்காட்டிய ஆபத்தெல்லாம் ஐரோப்பிய நகரங்களின் மேடைகள் நடந்தன. அதன் காரணமாகவே இயற்பண்பியல்வாதத்தின் மீது கடுமையான விமரிசனங்களும் எழுந்தன.

இயற்பண்பியல் வாதத்திற்கு இப்படியொரு எதிர்மறைக்குணம் உண்டென்றாலும், ஒரு கலைஞனின் நுட்பமான கவனிப்பையும் அதனை உள்வாங்கி வெளிப்படுத்தும் நுணுக்கமான வெளிப்பாட்டுமுறையும் அதன் உடன்பாட்டுத் தன்மை என்பதையும் மறுப்பதற்கில்லை. தமிழ்ச் சினிமா இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இயற்பண்புவாதத்தின் உடன்பாட்டுத் தன்மையைக் கைக்கொள்வதாகக் கருதிக்கொண்டு எதிர்மறைக்கூறுகளுக்குள் பயணம் செய்கின்றனர். சடங்குகள் பண்பாட்டு அடையாளம் எனச் சொல்ல நினைத்துசாதியே பண்பாட்டுக் கூறு எனச் சொல்லும் நிலையை உண்டாக்கிவிட்டனர். சாதி இயற்கையானது எனக் கூறுவதின் தொடர்ச்சியாகச் சில சாதிகளின் குத்து, வெட்டு, கொலை, திருட்டு, கள்ளச்சாராய வியாபாரம், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டமீறல்களும் இயல்பானது; இயற்கையானது எனக்காட்டுவதில் நிறைவுகொள்கிறார்கள். கல்விபெற்றதின் வழியாகத் தன்னிலையை உணர்ந்தவளாக மாறிய பெண்களைத் திரும்பவும் மரபான சடங்குகளைப் பேணவேண்டியவளாகச் சித்திரிக்கின்றன. மீறும் பெண்களைக் கௌரவக்கொலைகள் செய்வதையும் ஆதரிக்கின்றன.

இயற்பண்புவாதத்தின் ஆபத்தைப் புரிந்துகொண்ட மேற்கத்திய அரங்கியலாளர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே அதனைக் கைவிட்டுவிட்டு நடப்பியல் பாணிக்கு நகர்ந்தனர். காரணம் கலையின் மூலம் விழிப்புணர்வையும் முற்போக்கு மனநிலையையும் உருவாக்க வேண்டுமென்ற நோக்கம் அவர்களுக்கிருந்தது. ஆனால் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கு  அதில் செயல்படும் இயக்குநர்களுக்கு அப்படியொரு நிலைப்பாடு இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் தொடர்ச்சியாக இப்படியான படங்களை எடுத்துத்தள்ள மாட்டார்கள்.  கைவிடப்பட்ட கலைக் கோட்பாடு என்று தெரிந்தபின்பும் அதையே தொடர்பவர்களின் நோக்கம் நல்ல நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை