: 62

நடப்பும் குறிப்புகளும்

ஆண்டாளென்னும் கவி
========================
இலக்கியப்பிரதிக்குள் வெளிப்படும் தகவல்களும் உணர்ச்சிகளும் எழுதியவளின்/னின் தன்னிலை வெளிப்பாடு எனத் தீர்மானமாகப் பேசும் விமரிசனமுறை பிரதியை மட்டுமே ஆதாரமாகக்கொள்ளாது. அப்பிரதியின் காலம் பற்றிய ஒதுக்கமுடியாத பிற ஆதாரங்களையும், எழுதியவரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் நம்பகமான தகவல்களையும் கொண்டுதான் முடிவுசெய்யும்.

ஆண்டாளைப் பொறுத்தவரையில் அவள் எழுதிய திருப்பாவை என்னும் 30 பாடல்களும், நாச்சியார் திருமொழி என்னும் 143 பாடல்களையும் கொண்ட பிரதி ஆதாரம் மட்டுமே உள்ளன. இப்பிரதிகளின் வெளிப்பாட்டுத்தன்மை, உணர்வெழுச்சிகள் எல்லாம் ஒரு பெண் தன்னிலையின் உடல் வெளிப்பாடுகளாகவும் மற்றும் மன வெளிப்பாடுகளாகவும் குறிப்பான வெளிக்குரியதாகவும் குறிப்பான காலத்தில் வாசிக்கத்தக்கனவாகவும் முன்வைக்கின்றன.

கடவுளின் மீதான காதல் என்னும் மையத்தில் நின்றுகொண்டு தன்னை -உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அளிக்க நினைக்கும் மனநிலை அது. அந்தவகையில் ரசிக்கத்தக்க கவிதை வெளிப்பாடு. இதனைத் தாண்டி அவளைப்பற்றிய தகவல்களும் வரலாறுகளும் கவிதைப்புனைவைவிடக் கூடுதல் புனைவுகள் நிரம்பியவை. புனைவான வரலாற்றைக்கொண்டு அவளைத் தெய்வப்பெண் எனவோ தேவதாசியெனவோ முடிவுசெய்வது இலக்கிய விமரிசனத்தின் எல்லைகளுக்குள் இல்லை. அவையெல்லாம் தனிமனித இச்சைசார்ந்த குறிப்புகள்.கொங்குதேர் வாழ்க்கை: வகையறியாத் தொகை
============================= =====================
எல்லாவகைச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையான அறிவு வேண்டும். அந்த அடிப்படை அறிவு வகைப்படுத்துதலில் தொடங்குகிறது. இயற்கைப் பொருள் இவை; செயற்கைப்பொருள் இவை என வகைப்படுத்தத் தெரியாமல் உலகத்தின் இருப்பை நீங்கள் தொகைப்படுத்திட முடியாது.

ஒருமொழியில் எழுதப்பெற்ற கவிதைகளைத் தொகையாக்கித் தரும் முயற்சி மொழிக்குச் செய்யும் ஒரு பணிதான். அந்தப் பணியில் இறங்குவதற்கு முன்னால் வகைப்படுத்துதல் என்னும் அடிப்படை அறிவோடு இறங்கவேண்டும். சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்களுக்கு அகம் எது? புறம் எது? என்ற அடிப்படை அறிவு தெரிந்திருந்தது. அது ஒன்றே போதும் என்ற புரிதலுடன் தொகுத்தார்கள். நுட்பங்களுக்குள் நுழைந்தால் விளக்கம் தரவேண்டியதிருக்கும் என நினைத்தபோது கவிதைகளின் வரிகளை மட்டும் வைத்துக் குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, நெடுந்தொகை என்னும் அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் எனவும் பத்துப்பாட்டு எனவும் பிரித்தார்கள். அதற்குள் நுட்பம் காட்டவேண்டுமென நினைத்தபோது திணையின் அடையாளங்கள் கூறிப் பகுத்துச் சொன்னார்கள். 
நவீனக் கவிதையைத் தொகைப்படுத்த நினைப்பவர்கள் கவிதை நுட்பங்களான உரிப்பொருட்கள், கருப்பொருள் அடையாளங்கள், சொல்முறைமைகள், தன்னிலை உருவாக்கம், இருப்பின் மீதான விமரிசனம் என எதையும் பார்த்து வகைப்படுத்தித் தரவேண்டுமென நினைப்பதில்லை. அது முடியவில்லை என்றால் எந்திரத்தனமான வகைப்பாட்டு முறையையாவது பின்பற்ற வேண்டும்.

அதையும் செய்யாமல் “ கவிதை என்றால் நான் மனதிற்குள் நினைப்பதின் அடிப்படையில்” தொகுக்கிறேன் என்ற போக்குதான் இருக்கிறது. மனதில் நினைப்பது இதுதான் என்றுகூடச் சொல்வதில்லை.வகைப்படுத்தித் தொகையாக்குவது எளிய அடிப்படை விமரிசனப்பார்வை. இதையே மறுக்கும் விமரினப்பார்வைதான் தமிழின் “ மேன்மை”யான பார்வை.

தமிழ் ஆய்வுக்குள் நுழைந்து விலகிய ராஜமார்த்தாண்டனுக்குத் தொகைநூல்களின் முறைமைகள் தெரியாததில்லை. அதைக்குறிப்பிட்டுக் கேட்டபோதுகூட அவர் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றுதான் சொன்னார். இப்படிச் சொல்வது அடிப்படையில் தான், தனது, என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு.ராஜமார்த்தாண்டன் என்னும் மனிதர் அகங்காரம் ஏதுமற்ற அமைதியான மனிதர். பழகிய எனக்கும் தெரியும் . இப்படி எளிமையாகவும் மென்மையாகவும் இருந்தது புறநிலை . ஆனால் அவரது அகநிலையில் கவிதை என்பது விளக்கமுடியாத அநுபூதி என்ற அகங்காரப்பார்வை இருந்தது. அவர் போட்ட விதையின் மரத்தில் போடப்படும் ஒட்டு வேறொன்றாக ஆகமுடியாமல் தவிக்கிறது..


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை