: 43

பழையன திருப்புதல்

சென்னைப் புத்தகக் காட்சி-2018 
====================== ==========
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போவது என்பது எனக்கான புத்தகங்களை வாங்குவதற்காக அல்ல. நான் வேலைசெய்த துறைகளுக்கான புத்தகங்களை வாங்கும் வேலையின் ஒருபகுதியாகவே ஒரு சனி, ஞாயிறில் போவேன். பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை ஆசிரியராகச் சேர்ந்த காலம்தொட்டு சென்னைப் புத்தகக்காட்சிக்குப் போய்வருவது ஒரு வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு பதிப்பகமும் வெளியிட்டுள்ள புதிய நூல்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல்களைப் பெற்றுக்கொண்டு வந்துவிடுவேன். பட்டியல்களைத் துறையின் மற்ற ஆசிரியர்களின்/ மாணவர்களின் பார்வைக்குக் கொடுத்துத் துறையின் தேவைகளை அறிந்துகொண்டு நூல்களை வாங்கும் பணியை உடனடியாகத் தொடங்குவேன். அனைவரின் பங்கேற்பும் அவசியம் என்று நினைத்தாலும் மற்றவர்களின் பங்கேற்பு அதிகம் இருப்பதில்லை.புத்தகவாசனை பிடிக்காத நிலையில் மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்வார்கள்.

ஜனவரி கடைசியில் வாங்கத் தொடங்கினால்தான் மார்ச் மாதத்தில் முடியும் நிதியாண்டுக்கணக்குக்குள் முடிக்க முடியும். கல்லூரி ஆசிரியர்களுக்கு இதுபோன்ற வேலைகள் குறைவு. ஆனால் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு துறைக்குமெனத் தனியாகப் பணம் ஒதுக்குகின்றன. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் வழக்கமான பணத்தைவிட இரண்டுமூன்று மடங்குக் கூடுதல் பணம் ஒதுக்குவதுண்டு. அப்படியொதுக்கப்படும்போது அந்தப் பணத்தில் வாங்குவதற்கான புதிய நூல்கள் கிடைப்பதே அரிதாகிவிடும்.

நேற்று- 20/01/18- புத்தகக்காட்சி தொடங்கிய ஒரு மணிநேரத்தில் - காலை 11 மணிக்கெல்லாம் அங்குபோய்விட்டேன். ஒரு மொழி, இலக்கியத்துறைக்குத் தேவையான நூல்களை வாங்கும்பொருட்டு, நின்று பார்க்கவேண்டியக் கடைகள், கடந்துசெல்லவேண்டிய கடைகள் எதுவென முடிவுசெய்துகொண்டு நடக்கவேண்டும். இதற்கு உதவும் விதமாக மணிவாசகர் பதிப்பகம் அச்சிட்டுத் தந்திருந்த 4 பக்கத்தாள் அங்கே இருந்தது. அகரவரிசைப்படி கடைகளை அச்சிட்டு எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.கடைகளின் இருப்புநிலையைத் தெரிந்து கொண்டு எந்தெந்தக் கடைக்குப் போய் நின்று பார்க்கவேண்டுமெனக் குறித்துக் கொண்டு ஒவ்வொரு வரிசையாகப் போய்வந்தேன். பட்டியல்களை வாங்கிக்கொண்டேன்.

எனது முன்னுரையோடு வந்துள்ள ‘வன்னியாச்சி’யைக் காலச்சுவடுவில் நாகத்திடம் பெற்றுக்கொள்ளலாம் என அதன் ஆசிரியர் ’தாமரைச்செல்வி’ சொல்லியிருந்தார். பத்திநாதனோடு கொஞ்சம் ஈழ அரசியல், இலக்கியம் பேசிவிட்டு பக்கத்தில் இருந்த கிழக்குக்கு நகர்ந்தேன். 
எனது நேர்காணல் வந்துள்ள’காலம்’ இதழைக் கிழக்கு பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளும்படி செல்வம் சொல்லியிருந்தார். அ்தனையும் பெற்றுக்கொண்டு அடுத்து இருந்த நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தில் நுழைந்து வெளியே வந்து பார்த்தால் இம்மூன்றுமே தமிழ்ப் புத்தக விற்பனையில் முன்னோடிகள் எனப் புரிந்தது. நந்நான்கு கடைகளில் நிரப்பியிருக்கிறார்கள் தமிழ்ப்புத்தகங்களை.

தலைவர் திருமாவளவன் வந்திருக்கிறார் என்ற அறிவிப்பு ஒலித்துக்கொண்டே இருந்தது.பார்த்துவிடலாம் என்று சென்றபோது சுற்றிநின்ற கூட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. வேடிக்கை பார்த்துவிட்டு ஒதுங்கிவிட்டேன். மாலையில் ஷோபா சக்தி வாசகர்களைச் சந்திக்கிறார் என்றும் ஒலிபெருக்கி சொல்லிக்கொண்டே இருந்தது. பிற்பகல் சூரியன் சூடு குறைக்கும் நேரம் எழுத்தாளர்கள் வருவார்கள்; படம் எடுத்துக்கொள்வார்கள் என்ற கருதுகோளுக்கேற்ப 4 மணிக்குப் பின்னால் ஆங்காங்கே நின்று படம்  எடுத்துக்கொண்டிருந்தார்கள். சந்தியா பதிப்பகத்தில் வண்ணதாசனோடு வண்ணநிலவனும் கலாப்ரியாவும் மும்மூர்த்திகளாக நின்றார்கள். வண்ணநிலவன் மட்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்ததால் கையைப்பிடித்துக் கொண்டார்.கவி. சிற்பி வாங்கவேண்டிய நூல்களை ஒருவர் எடுத்துக்காட்ட, ’வாங்கலாம்; வேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். க்ரியா பதிப்பகத்தின் நாற்காலியில் வழக்கமான கரைவேட்டியோடு எழுத்தாளர் இமையம் அமர்ந்திருந்தார். அவரது செல்லாத பணம் நாவலை அவரது கையால் வாங்கிக்கொண்டு பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ நிறுத்தத்தில் ரயிலேறும்போது மணி 5.57.

கல்விப்புலப்பதிப்பகங்களில் புதிய தொகுப்புகள் எதுவும் இல்லை. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் பழைய நூல்களை அச்சிட்டுக் காட்சிப்படுத்தியிருக்கிறது. சென்னைப்பல்கலைக்கழகம் பழைய தாள்களில் அப்படியே நிரப்பியிருக்கிறது. செம்மொழி வெளியீடுகள் வாங்கும்படியாக இல்லை. வழக்கம்போல சாகித்திய அகாடெமியில் விலை குறைவாக நூல்கள் கிடைக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் கல்கியின் பொன்னியின் செல்வன் புதுப்புது வடிவில் வந்துநிற்கிறார். எனது பேரனின் வேண்டுகோளை ஏற்றுச் சிறுவர்களுக்காகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படங்களுடன் வெளியிடத்திட்டமிட்டுள்ள பொன்னியின் செல்வனுக்கு முன்பதிவாக 3045 ரூபாய் செலுத்திவிட்டு ஞானபானுவில் நுழைந்து நண்பர் ஞாநியை நினைத்து ஒருநிமிடம் நின்றுவிட்டுக் கையெழுத்தொன்றைப் போட்டுவிட்டு வந்தேன். முகநூலில் படங்கள் போடுவதாலும் தொடர்ந்து எழுதுவதாலும் புதியவர்கள் பலர் கைகுலுக்கினார்கள்.

இடதுசாரிப்பதிப்பகங்கள் 70 கள் தொடங்கி 90 கள் வரை வந்த நூல்களை மறுபதிப்பு செய்து விற்கின்றன. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்,  மாஒ, என எல்லோரும் திரும்பவும் வந்துநிற்பதோடு தமிழ்நாட்டு இடதுசாரிகளின் எழுத்துகளும் வேறுவிதமாகத் தொகுக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பெரியாரும் சிங்காரவேலரும் அம்பேத்கரும் இப்போதும் விற்பனைக்குரியவர்களாக இருக்கிறார்கள். இடதுசாரித் திறனாய்வாளர்களான கைலாசபதி, சிவத்தம்பி, அ.மார்க்ஸ், கேசவன் போன்றவர்கள் அந்த அடையாளம் துறந்து பரவலாக விற்கப்படுகிறார்கள். புனைகதையின் சாதனையாளர்களான புதுமைப்பித்தன், கு.ப.ரா. தி.ஜானகிராமன், .சு.ரா, போன்றவர்கள் புத்துயிர்ப்பு பெற்று ” பெருந்தொகை, செவ்வியல், தேர்ந்தெடுக்கப்பெற்ற” என்பதான துணைத்தலைப்புகளில் நடமாடுகிறார்கள்.நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர்கள் வெவ்வேறு அடையாளத்தில் வெவ்வேறு வடிவில் காட்சிதருகிறார்கள். ஆய்வு செய்பவர்கள் எந்தப் பதிப்பைச் சரியானது எனக் கணிக்கமுடியாமல் திண்டாடக்கூடும். கட்சி மாறிய புது எழுத்தாளர்கள் புது இடத்தில் முன்வரிசையிலும் பழைய இடத்தில் இருட்டிலும் கிடக்கிறார்கள்.

புதிதாக வந்த நூல்களைத் தேடும் ஒருவருக்கு இந்தப் புத்தகக்கண்காட்சி ஈர்ப்புடையதாக இருக்க வாய்ப்பில்லை. எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் ஏற்கெனவே அறிமுகமான நூல்களும் ஆசிரியர்களின் பெயர்களுமே வேறுவிதமாக முன்னே நிற்பதாகவே தோன்றியது. பழையன திருப்புதல் என்பதை எல்லாவிதமான பதிப்பகங்களும் செய்து கொண்டிருக்கின்றன.புதியன புகுத்துதலாக எதனைச் செய்வது என்னும் திசையறியாமல் இருக்கிறார்களா? புதியன புகுத்துதல் தேவையில்லை; பழையனவே போதும் என்ற நம்பிக்கையோடு வேலைசெய்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

தமிழ் எழுத்து என்பது கவிதை, கதை மட்டும் என்பது வரவேற்கவேண்டிய ஒன்றல்ல. கட்டுரைகள் என்றால் அரசியல் அல்லது சினிமா பற்றிய குறிப்புகள் என்பதாக இருப்பதும் நல்லதல்ல. உலகத்தின் அறிவுத்துறைகளின் அடிப்படைகள்கூடத் தமிழில் எழுதப்படாமல் இருக்கின்றன. இதையெல்லாம் செய்யவேண்டியது கல்விப்புலப்பதிப்பகங்களின் வேலை என்ற நிலை மாறவேண்டும். எல்லாம் தனியார்மயமாகும் சூழ்நிலையில் தமிழின் அறிவு உற்பத்தியும் தனியாரிடம் சென்றுசேரத்தான் வேண்டும். முழுமையான வணிகம் என்பதைக் குறைத்துக்கொண்டு தீவிரமான அறிவு உற்பத்தி என்பதில் கவனம் செலுத்தினாலும் விற்கமுடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உலகத்தில் தமிழ் வாசிக்கும் மக்கள் கூட்டம் இப்போதைக்குக் குறையப்போவதில்லை.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை