: 69

அறிமுகத்தோடொரு வரவேற்பு: உலகத்தமிழிலக்கிய வரைபடம்.


‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகம் ’ என்றொரு மரபுத்தொடரைத் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனன் சொல்கிறார். ஆனால் அவர் காலத்திலேயே தமிழ் மொழியின் இருப்பும், தமிழ்மொழியைப் பேசிய மனிதர்களின் போக்குவரத்தும் இவ்வெல்லைகளைத் தாண்டியனவாக இருந்தன என்பதற்கான குறிப்புகளை அந்தத் தொல்காப்பியச் சூத்திரங்களே சொல்கின்றன. வடசொல், திசைச் சொல் பற்றிய குறிப்புகளும் மட்டுமல்லாமல், கடல்கடந்து செல்லும் வழக்கம் – முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை போன்ற குறிப்புகளுமாகப் புலம்பெயர்தல், இடம்பெயர்தல் பற்றியக்குறிப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியத்தின் இருப்பும் உருவாக்கமும் வெளிப்பாடுகளும் தமிழக எல்லையைத் தாண்டியவை என்பதற்கான சான்றுகள் இப்போது செவ்வியல் இலக்கியங்களாகப் பட்டியலிடப்படும் பலநூல்களில் கிடைக்கின்றன.

இலங்கைத்தீவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் வருகையால் உருவான காலனிய இடப்பெயர்ச்சியால் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கையின் மலையகம், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குப் பெயர்ந்து அந்நாட்டின் குடிகளாகவே ஆகியிருக்கின்றனர். அங்கும் தமிழ்மொழி பேச்சாகவும் எழுத்தாகவும் இருக்கிறது. தனி ஈழப்போராட்டமும், உலக முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உலகமயப் பொருளாதார உறவுகளும் தமிழர்களை புலப்பெயர்வு அகதிகளாகவும் இடப்பெயர்வுக் கூலிகளாகவும் நகர்த்தியிருக்கிறது. இவையெல்லாமும் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தைப் பன்னாட்டு அடையாளத்திற்குரியதாக ஆக்கியிருக்கிறது.

இந்த நேரத்தில் உலகப்பல்கலைக்கழகங்களில் முதன்மையானவை என்று பட்டியலிடப்பட்டுள்ள பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனித்ததொரு தமிழ் இருக்கை உருவாக்கப்பட உள்ளது என்பதை நினைவில் கொள்கிறேன். அதற்காக முன்முயற்சிகள் செய்த தனிநபர்கள் மரு.ஜானகிராமன், மரு.ஞானசம்பந்தன், ஹெர்பர்ட் வைதேஹி, அ,முத்துலிங்கம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அதற்குத் தேவையான பணத்தில் நான்கில் ஒரு பங்கைத் தந்து உதவியிருக்கிறது தமிழக அரசு. அது பாராட்டுதலுக்குரியது. அதேபோல் வார்ஷ்வா, பாரிஸ், கொலான், மாஸ்கோ, பிராக், லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பென்சில்வேனியா, கலிபோர்னியா, விஸ்கான்சின் முதலான அமெரிக்கப்பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் தென்கிழக்காசிய, தென்னாசியவில் துறைகளில் ஒன்றாகவும், இந்தியவியல் துறைகளில் பகுதியாகவும் தமிழ் இருக்கைகள் உள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களில் அலிகார், சாந்திநிகேதன், கல்கத்தா, ஹைடிராபாத், கோழிக்கோடு, மும்பை, போன்ற நகரங்களில் இருக்கும் அரசு பல்கலைக்கழகங்களில் இந்தியமொழிகள் புலத்தின் பகுதியாகத் தமிழ் இருக்கைகள் இருந்தன; இருக்கின்றன. அவைகள் தொடர்ந்து இயங்கவும் ஆய்வுகள் செய்யவும் பண உதவி செய்யவேண்டும்; இதையும் தமிழக அரசும் இந்திய அரசும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழர்களும் தமிழ் மாணவர்களும் தூண்டுகோலாக இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழமுடியவில்லையே என்ற எண்ணம் உருவாக்குவது துயரங்களே. இடப்பெயர்வுகள் உருவாக்கும் துயரங்களுக்கு முதன்மையாக இருப்பன பொருளாதாரக் காரணங்களே. வேலைதேடியும் தொழில் செய்வதற்காகவும் அலையும் அல்லது இடம்பெயரும் மனிதர்களின் துயரங்களை உணர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றின் இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. மற்ற இந்திய மொழிகள் அதிகம் பதிவுசெய்ய வாய்ப்பில்லாத பெரும்நிகழ்வு புலம்பெயர்வு.இந்த அனுபவம் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பிற தேசிய இனங்களுக்குக் கிடைக்காத அனுபவம். தமிழ்மொழி பேசும் ஒரு தேசிய இனம் அவற்றைத் தனது மொழியின் வழியாக வாசிக்கவும் எழுதவும் செய்கிறது என்பது நேர்மறைப் பலனாக நான் நினைக்கிறேன்.

ஈழநாட்டுக்கோரிக்கையின் விளைவாக நடந்த போர்கள் தமிழ்பேசும் மனிதர்களை உலகின் பலநாடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அகதிகளாகப் போனவர்கள், அந்தந்த நாட்டுக் குடியேற்றச் சட்டங்களுக்கேற்ப இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் குடிமக்களாக ஆகியிருக்கின்றனர். அங்கு வாழநேர்ந்தபோது குடியேற்றப் பிரச்சினைகளோடு தனிமனித, குடும்பச் சிக்கல்களும் பண்பாட்டு நெருக்கடிகளும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதவை. அவற்றைப் பதிவுசெய்து எழுதப்பெற்ற தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தந்திருக்கிறது.

காலனிய அதிகாரத்தை உருவாக்கித் தந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மனிதர்களை அதிகாரிகளாகவும் அலுவலர்களாகவும் அனுப்பிவைத்ததையே கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதிவைத்த இலக்கியங்களைக் கொண்டு உலக இலக்கிய வரைபடங்களை அந்தந்த மொழிகளில் உருவாக்கியிருக்கின்றன. அவற்றைவிடவும் கூடுதலான அனுபவப்பகிர்வுகள் கொண்டவையாக இருக்கின்றன 2000 -க்குப் பின்னான தமிழ் இலக்கியம். இலக்கிய உருவாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களாக -விளிம்புநிலை வாழ்க்கைக்குரியவர்களாகத் தமிழர்கள் உலகெங்கு இருக்கிறார்கள். அவர்களின் வெளிப்பாடுகள் பெரும் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. லண்டன், பாரிஸ், கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற இடங்களிலிருந்து இயங்கும் ஈழத்தமிழ் குழுக்களின் தொகுப்புகள் பற்றிய அறிமுகங்களும் விவாதங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அ.முத்துலிங்கம், சேரன், ஷோபாசக்தி போன்ற தனித்த ஆளுமைகளின் எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைக்கின்றன. மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடம்பெயர்ந்த சூழல்களும் பாடுகளும் எழுதப்பட்டுள்ளன. மொரீசீயஸ், அரபுநாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றிற்குப் போய் அடையாளமிழக்கும் மனிதர்களாகவும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவையெல்லாம் தொகுக்கப்பட வேண்டும். அவற்றிலிருந்து உலகத் தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்க முடியும். இந்த வரைபடத்தில் தமிழ் நாட்டுத் தமிழ் இலக்கியத்தின் இடத்தையும் மதிப்பிட வேண்டும்
.
தமிழ் இலக்கியத்தின் எல்லைகள் விரிவாகியிருப்பதுபோலவே பரப்பும் அளவும் அதிகமாகியிருக்கிறது.அதனைப் புள்ளிவிவரங்களாகச் சேகரிக்க வேண்டியது முதல் தேவை. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் அது நடந்துகொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் மொழியின் ஊடாகத் தங்களை ஒரே இனமாக அடையாளப்படுத்தும் மனிதர்கள் எழுதிய/ எழுதும் மனிதர்களின் இலக்கியப்பிரதிகளுக்குள் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் நிலவுகின்றனவா எனப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு நிலவியல், வாழ்வியல் சூழல்கள் காரணமாக வேறுபாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது. அந்த வேறுபாடுகளுக்கான காரணிகளை ஆய்வு செய்து போக்குகளையும் சிறப்புகளையும் கண்டுணர்ந்து பேசவேண்டும். அப்படிப்பேச முனையும்போது தமிழ்மொழியில் எழுதப்பெற்ற இலக்கியங்கள் இந்திய இலக்கியம், இலங்கை இலக்கியம், மலேசிய இலக்கியம், சிங்கை இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், கனடிய இலக்கியம் எனத் தமிழர்கள் வாழுமிட இலக்கியங்களோடு கொள்ளும் உறவையும் முரண்பாடுகளையும்கூடப் பேச முடியும். அந்தப்பேச்சுகளின் தொடர்ச்சி, உலக இலக்கியங்கள் என்னும் வரைபடத்திற்குள் தமிழின் இடத்தைக் கண்டடைவதாக அமையும். இந்தப் பேறு இந்திய நாட்டின் பிறமொழிகளுக்குக் குறைவு. செம்மொழி என்னும் பழைமை காரணமாகவும் இடப்பெயர்வு, குடியேற்றம், புலம்பெயர்வு என்ற தேடலும் வலியும் இணைந்த நிகழ்வுகளாலும் சாத்தியமாகியிருக்கின்றன.

தமிழுக்கு இதுவரையிலான உலக அங்கீகாரம் அல்லது கவனம் என்பது செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட- பழைய இலக்கண, இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்ட மொழி என்பதனாலேயே கிடைத்துள்ளது. பழைய பெருமைகளைப் பேசியே நீண்ட காலத்தைத் தாண்டியிருக்கிறோம். இனியும் அதையே செய்துகொண்டிருக்க முடியாது. இப்போது தமிழில் எழுதப்படும் கவிதைகளும் கவிதைகளையும் பார்க்கச் சிறுகதைகளும் உலக இலக்கியத்தின் பகுதிகளாக இருக்கத்தக்கன என்பதை உலக இலக்கியத்தோடு வாசிப்புத் தொடர்புகொண்ட யாரும் ஒப்புக்கொள்வர். அத்தோடு தமிழில் எழுதப்படும் நாவல்கள் வடிவ நிலையிலும் பேசுபொருள் நிலையிலும் உலக நாவல்களுக்கு இணையாக இருக்கின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மைகள். ஆகவே இப்போதைய தேவை தமிழ்மொழியைச் செவ்வியல் தளத்திலிருந்து நவீன மொழியாக ஆக்குவதே. இந்தப் புரிதலோடுதான் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்த அளவு விவாதிக்கத்தக்க கட்டுரைகள் வராத நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாகச் சிலரை அழைத்துக் கருத்துருவாக - விவாதப்புள்ளிகளைத் தொகுக்கலாம் என்று திட்டமிட்டு இரண்டுநாள் நிகழ்வை இப்போது நடத்துகிறோம்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், இமையம், கவி.கலாப்ரியா, மொழிபெயர்ப்பாளர்கள் சா.தேவதாஸ், பா.ஆனந்தகுமார், திறனாய்வாளர்கள், தி.சு.நடராசன், க.பூரணச்சந்திரன், நா.முத்துமோகன், ஆகியோர் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகப் பேரா. மகேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து கவிதா நவகுலன் வந்துள்ளார்கள். அங்கிருந்து கட்டுரைகள் வந்துள்ளன. இந்திய அளவில் தில்லி, திருவாரூர், சென்னை, காந்திகிராமப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள். கட்டுரைகளும் வந்துள்ளன. உங்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் தமிழியல் துறையின் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் சார்பிலும் வருகவருகவென வரவேற்கிறேன்.

தமிழியல் துறைத் தனித்தனியாகச் சொற்பொழிவுகளை நடத்தும் முறைக்கு மாறாக ஒரு பெரும் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தும் யோசனையை முன்வைத்தவர் நமது துணைவேந்தர். தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் காட்டிவரும் அவரோடு உரையாடும்போது அவர் வாசித்த இலக்கியவாதிகளைக் குறிப்பிட்டுப் பேசுவதைக் கவனித்திருக்கிறேன். இந்த நிகழ்வுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வருகிறார் என்று சொன்னபோது, அவரது எழுத்துமுறையை நினைவுபடுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்தார். துறையின் செயல்பாடுகளுக்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருக்கும் அவர்களைத் துறையின் சார்பில், திரளாக வந்துள்ள மாணாக்கர்கள் சார்பிலும் வருகவருகவென வரவேற்கிறேன்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை