: 57

இவை நாடகங்களல்ல: அவையே நாடகங்கள். .. .. ..

Image missing

உலகம் ஒரு நாடகமேடை; அதில் நாம் அனைவரும் நடிகர்கள்’ என்ற புகழ் பெற்ற வாசகத்தை ஒவ்வொருவரும் பல தடவை கேட்டிருக்கலாம். நாடக மேதை சேக்ஸ்பியரின் -அஸ் யூ லைக் இட்( As you like it) நாடகத்தில் இடம்பெற்ற தனிமொழிக் கூற்றின் தொடக்கவரிகள்

அந்த வாசகம் சொல்கிறவர்களின் கோணத்தில் பொருள் தரக்கூடிய வாசகம். ‘இறைவனால் இந்த உலகம் இயக்கம் கொள்கிறது’ என்று நம்ப வைக்க விரும்பும் சமயச் சொற்பொழிவாளர் கூட அந்த வாசகங்களை தனது சொற்பொழிவில் மேற்கோள் காட்டிப் பேசலாம் . அப்படிப் பேசும்போது ‘’ இறைவன் தான் அந்த நாடகத்தின் இயக்குநர்’’ என்ற துணை வாக்கியத்தையும் சேர்த்துக்கொள்வார் என்பது கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

வாக்கியத்தைச் சேர்த்துக்கொள்வது மட்டுமல்ல; வாக்கியத்திலிருந்து ஒற்றைச் சொல்லை உருவி எடுத்துக்கூடத் தங்கள் போக்கில் மனிதர்கள் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். அதிலும் ‘நாடகம்‘ என்ற சொல்லை நமது அரசியல்வாதிகள் பயன்படுத்தும் நிலையைப் பார்த்தால் நாடகக்கலையை நேசிக்கும் ஒருவர் வருத்தப்படாமல் இருக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தித் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ இ அதிமுக இந்தியப்பாராளுமன்றக் கட்டத்தின் முன்னாலும், பாராளுமன்ற நடவடிக்கை தொடங்கும்போது உள்ளேயும் பதாகைகள் ஏந்திப் போராட்டம் நடத்தியது; கூச்சல் போட்டது; குழப்பம் விளைவித்தது.

இந்தப் போராட்டத்தைத் தனியாகப் பார்த்தால் போராடுபவர்களின் செயல் நியாயமானது என்று தோன்றும். தங்களது மாநிலத்தின் வாழ்வாதாரச் செழுமையைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் காவிரிநீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசைத் தட்டிக் கேட்கவேண்டிய இட த்தில் இருக்கும் மைய அரசுக்கு  நீதிமன்றம் வழிகாட்டிக் குறிப்பைச் சொல்லிவிட்டது. இந்த மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று நோக்கிய போராட்டம் செய்யவேண்டிய போராட்டமே; அதையே தமிழகத்தைச் சேர்ந்தஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செய்கிறார்கள் என்று தோன்றும். ஆனால் இந்தக் கலவரச்சூழலைப் பயன்படுத்தி அரசு தன்மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை எடுத்துக்கொள்ளாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது என்றொரு வினைக்குக் காரணமாக இருக்கிறது என்பதால் இவர்களின் செயல்பாடுகள்நாடகம்எனக் குறிக்கப்பட்டது. இங்கே நாடகம்ஏமாற்றுஎன்ற அர்த்தத்தில் பயன்பட்டுள்ளது.

 

இதேபோல் முன்பும் ஒரு நாடாளுமன்ற நடவடிக்கை பார்க்கப்பட்டது.  அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டினால் எங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வோம்’’ இடதுசாரிக்கட்சிகள்  விடுக்கும் எச்சரிக்கை வாசகம் இது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைத் தொடங்கிய காலத்திலிருந்தே  செய்தித்தாள்களில் தொடர்ந்து இடம் பெறும் வாசகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த வாசகம் உண்மையில் அரசியல் வாசகமா? அல்லது அபத்த நாடகத்தின் உணர்ச்சியற்ற வசனமா ? இடதுசாரிகள் நாடகம் போடுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் அளவிற்கு அந்த வாசகத்தைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதின் விளைவு அது.  அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதாகச் சொல்லும் இடதுசாரிகள்,  உண்மையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களா? அல்லது நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றுகிறார்களா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு அந்த வாசகத்தைப் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்களது நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக மாறியது.

அதேபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை இந்த அரசு அமைக்காது என்று தெரிந்துகொண்டே அதன் அரசியல் சட்ட விரோத- நீதித்துறை வழிகாட்டுக்குறிப்பை மதிக்காத அதன் போக்கை எதிர்க்காமல் அதனைக் காப்பாற்றும் நோக்கம் கொண்ட கூச்சல், குழப்பமும், தர்ணா போராட்டங்களும், அவர்களோடு கூட்டம் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்ற வாசகமும்  அ இ அதிமுகவினர் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிவிட்டது.

அரசியல் களத்தில் நம்பகத்தன்மையை இழப்பதும்,இழந்த நம்பகத் தன்மையை மீட்டெடுக்க வேறு ஒரு உத்தியைப் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாதது. இங்கே நாடகம் என்ற சொல் நம்பகத்தன்மை இல்லாத ஒன்றாக நிற்கிறது. கர்நாடகத்தின் முதல்வராக இருக்கும் எத்தியூரப்பா முதலில் ஒருமுறை 14 நாட்கள் முதல்வராக இருந்து பதவியை இழந்தார். அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அவசரமாக எடுத்த முடிவின் விளைவு அது. பதவி இழந்த அடுத்த கணம் கர்நாடக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஒகேனக்கல் பிரச்சினைக் கையிலெடுத்துப் போராட்டக் களத்தில் குதித்தார். அப்போதும் பத்திரிகைகளும் அவரை எதிர்ப்பவர்களும் இவை எல்லாம் நாடகம் என்றே குறிப்பிட்டன. இப்போது அ இ அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், காவரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்கிறார். இந்த வாசகம் ஒரு அபத்தநாடகத்திலும் அங்கத நாடகத்திலும் சேராத விநோத முரண்கொண்ட நாடகத்தில் உச்சக் காட்சியின் வசனமாக மாறிப்போனது.

இங்கேயெல்லாம் நாடகம் என்ற சொல் திசை திருப்பும் ஒன்றைக் குறிக்கிறது. ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு விமரிசனங்களை முன் வைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் பாடுகள் பல நேரங்களில் திடீர் திருப்பங்கள் கொண்ட நாடகங்கள் என்றே முன்பு வருணிக்கப்பட்டன. அக்கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது துன்பியல் நாடகத்தின் சோக முடிவாகவே பத்திரிகைகளால் வருணிக்கப் பட்டது. அரசியல் தளத்தில் இயங்கும் கட்சிகள் என்றில்லை.

பொது வாழ்க்கையில் இயங்கும் பெரிய பெரிய அமைப்புகள் தனது உறுப்பினர்களைத் திசை திருப்புவதற்காகப் புதிய புதிய உத்திகளைக் கையாள்வதும் உண்டு. தனது தலைமையின் மீது அதிருப்திகள் தோன்றும் போது மாநாடுகளை நடத்துவதும், பாதயாத்திரைகளை மேற்கோள்வதும், உண்ணாவிரதம், மறியல் , போராட்டம் என இறங்குவதும் அரசியல் தலைவர்கள் மட்டுமே செய்வன அல்ல.

தொழிற்சங்கத்தலைவர்களும் சாதிச் சங்கத்தலைவர்களும் கூட இந்த உத்தியைப் பின்பற்றத்தான் செய்கிறார்கள்.பொது வெளியில் மட்டும் அல்ல குடும்ப வாழ்க்கையிலும் கூடக் கணவனும் மனைவியும் அப்படியான உத்திகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பெற்றோர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடப் பிள்ளைகளும், பிள்ளைகளை ஏமாற்றப் பெற்றோரும் பின் பற்றும் உத்திகள் சுவாரசியமானவை. அவை பல நேரங்களில் நேர்மறை விளைவுகளை உண்டாக்கக் கூடும். சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளைத் தரவும் கூடும். தனிநபர்களோ, அமைப்புக்களோ சரியான அர்த்தத்தில் முன் வைக்கும் நிகழ்வுகள் கேள்விக்கு உட்படுத்தப் படுவதில்லை.

ஒருவரை இன்னொருவர் ஏமாற்றுவதற்காக ஒரு காரியத்தைச் செய்யும் போது ‘நாடகம் போடுகிறான்’ என்ற சொல்லால் குறிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டத்தை மொத்தமாகத் திசை திருப்புவது என்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் ஒரு நிகழ்வைக் குறிக்கவும் நாடகம் என்று சொல்லையே விமரிசனச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்கள்.மோசமானது; திசை திருப்புவது; ஏமாற்றுவது; அற்பத்தனமானது என்பதான அர்த்தங்களில் நாடகம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் விமரிசனங்களின் சாரம், மொத்தத்தில் நம்பகத்தன்மை அற்றது என்பதாக இருக்கிறது. ஆனால் நாடகக் கலை நம்பகத்தன்மை இன்மையில் உருவாகும் அமைப்பல்ல. நாடகங்களைப் படிப்பதிலும் பாடம் நட த்துவதில் பார்ப்பதிலும் பங்கெடுப்பதிலும் விருப்பம் கொண்டவன் என்றவகையில் நாடகக்கலை நம்பகத்தன்மையை உருவாக்குவதின் வழியாக வாழும் கலையாக இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

வாழ்க்கையின் உண்மையான பகுதிகளை- சிக்கல்களை- மனப் போக்கை- தவிப்பை மேடையின் சிறிய வெளியில், குறைந்த கால கட்டத்தில் நிகழ்த்திக் காட்டும் கலை நாடகக் கலை . அரங்கத்தில் நிகழும் அக்கலை எல்லாக் கலைகளையும் போல புனைவுகளைக் கொண்டது என்றாலும் மோசடியின் வடிவம் அல்ல. புனைவு வெளி, புனைவுக் காலம், புனைவுக் கதாபாத்திரங்கள் என்ற மூவொருமைகளைக் கொண்டு நாடகம் தான் வாழ்க்கையின் கண்ணாடி என்று நாடகக் கலையின் இலக்கணங்கள் கூறுகின்றன.

இங்கே நாடகம் பற்றிய புரிதல் நேர் எதிரானதாக இருக்கிறது. நாடகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அதன் உண்மையான அர்த்தத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது வருத்தமான ஒன்று. நாடகக் கலையின் உன்னதப் பெயர் களான சேக்ஸ்பியர், இப்சன், செகாவ், பிராண்டெல்லோ, பெர்னாட்சா , பெர்ட்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்டர், சாமுவேல் பெக்கட் போன்ற உலக நாடக ஆசிரியர்களைக் கூட விட்டு விடுங்கள்.

மிகச் சிறந்த நவீன இந்திய நாடகங்களை எழுதிய கிரிஷ் கர்னாட், விஜய் டெண்டுல்கர், சுரேந்திர வர்மா, இந்திரா பார்த்தசாரதி, பாதல் சர்க்கார், மோகன் ராகேஷ் போன்றோரின் நாடகங்களை மேடை ஏற்றி பார்த்தால் தெரியும். நாடகங்களில் வெளிப்படுவது முழுக்க நம்பகத்தன்மையுடையது; உண்மையானது என்பதை மேடை ஏற்றத்தின் மூலமாகத்தான் உணர முடியும். கிரிஷ் கர்னாடின் துக்ளக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப்பும் வரலாற்றுப் பின்புலத்தில் சமகால இந்திய அரசியலைப் பேசும் நாடகங்கள்.

பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மன அலைச்சல்; உளைவுகள்.பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து இந்திய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சத்தை வேறெந்த நகரமும் உணராத அளவிற்குச் சென்னை மாநகரம் கடந்த வாரம் உணர்ந்தது. உணர்ந்தது என்று சொல்வதை விட தவித்துப் போனது; பதறிப் போனது என்று தான் சொல்ல வேண்டும்.

சாதாரண பெட்ரோல் கிடைக்கவில்லை என்ற முணுமுணுப்பு கோபமாக மாறி எதிர்ப்பு வடிவம் எடுத்த போது பற்றாக்குறை என்ற எதிர் நிகழ்வு முன் நிறுத்தப்பட்டது. பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்டது பதற்றம். பதற்றம் கோபத்தைக் குறைத்து விட்டுத் தேடுதலை மேற்கொண்டது; தேடுதலின் தொடர்ச்சியாகப் பற்றாக்குறை சரி செய்யப்பட்டது. பற்றாக்குறை சரியாகும் போது மனம் கோபத்தையும் குறைத்துக் கொள்ளும் முணுமுணுப்பையும் விட்டு விடும் என்பது உளவியல்.

இது தனிமனித உளவியல் மட்டுமல்ல; சமூக உளவியலும் கூட.சாதாரணப் பெட்ரோல் அல்ல; பிரிமியம் அல்லது பவர் பெட்ரோலாவது கிடைத்தால் போதும். விலை ஒரு பொருட்டல்ல என்று மனத்தைத் தகவமைக்கும் உத்தி சரியாக செயல்பட்டுள்ளது. இதுவும் திட்டமிட்ட நாடகம் தானோ?


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை