: 74

நீரும் நிலனும்


பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடிய புறநானூற்றுப் பாடலை முதலில் நமது மாநிலத்தின் தலைமை அமைச்சர் திரு. பழனிச்சாமி அவர்களை வாசிக்கும்படி கேட்டுக் கொள்வோம். 
=========================================
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே

செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே

வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. 
======================
புறநானூறு-18/ 
======================
இதில் அவர் வைக்கும் கோரிக்கை நீருக்கானது; நீரும் நிலனும் இணையும் வாழ்க்கைக்கானது.
புலவர் வைக்கும் கோரிக்கை தான் இன்றைய தமிழகத்தின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை அந்தக் காலத்து மொழியில் இப்படியொரு கவிதையாக எழுதியிருக்கிறார்.
அதன் சாரம் இது: 
“ நீ ஒன்றைப் பத்துத்தடவை அடுக்கிய கோடிக்காலம் வாழலாம். அப்படியான நீண்ட வாழ்நாள் கிடைக்க வாழ்த்துகிறேன். ஆனால் நீண்ட வாழ்க்கைக்குப் பிறகு இவ்வுலக வாழ்வை முடித்து வானுலக வாழ்க்கைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் நீ செய்யவேண்டிய முதன்மைப் பணி ஒன்று உண்டு. அனைவருக்கும் நீர் கிடைக்கும்படி செய்வதே அந்தப்பணி. எந்த உடம்பும் நீரில்லாம் வாழமுடியாது. அத்தோடு உணவில்லாமலும் வாழமுடியாது. உணவு வேண்டுமென்றால் அதனை உற்பத்திசெய்ய நீர் வெண்டும். நீரில்லாமல் நிலம் உணவுக்கான தானியங்களைத் தர இயலாது. நீரும் நிலனும் புணர்ந்துதான் உடம்பும் உயிருமான மனிதர்கள் வருகிறார்கள்; வாழ்கிறார்கள். எனவே இந்த அரசனே! செழியனே! பாண்டியனே! இந்த நாட்டிற்குத்தேவையான -வேளாண்மைக்குத்தேவையான நீர்வளத்தை உருவாக்கித் தரவேண்டுகிறேன். அந்த ஏற்பாட்டைச் செய்யாத அரசனை இந்த உலகத்து மனிதர்களும் மதிக்க மாட்டார்கள்; வானுலுகத்திற்குப் போகும்போது ஏற்காமல் தள்ளிக் கதவை அடைத்துவிடுவார்கள். எனவே நீருக்கும் ஏற்பாடு செய்க”

திராவிட இயக்கப்பாரம்பரியத்தில் வந்த திரு. பழனிச்சாமி அவர்களுக்கு வானுலக வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமது ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் திரு. மோடி அவர்களுக்கு நிச்சயம் அந்த நம்பிக்கை இருக்கும். இவ்வுலக வாழ்க்கையில் செய்யும் கர்மங்களின் பலன் அடிப்படையில்தான் மோட்சத்திற்கான சொர்க்கவாசல் திறக்கும் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்.அவரது தன்னிலையை உருவாக்கிய இந்துத்துவத்தின் மையமே அதுதான்.

இந்தப் பாடலை மொழிபெயர்த்து அவருக்குப் புரியும் இந்தியிலோ, குஜராத்தியிலோ தரவேண்டும். தமிழ்நாட்டில் அதற்கான பண்டிதர்கள் பலர் இருக்கிறார்கள்.இந்திய ஒன்றியத்தின் பகுதியாக - அவரது தலைமையில் இருக்கும் நாட்டின் பகுதிக்குத் தேவையான நீர்வளத்தைத் தராததால் தனது வானுலக வாழ்க்கைக்குப் பங்கம் ஏற்படும் என்ற பயத்தில் - கடவுள் மேல் கொண்ட அச்சத்தில் காவிரிநீரைத் தர உடனே ஏற்பாடு செய்வார்.

தமிழ்நாட்டுத் தலைமையமைச்சர் அவர்களே! இந்திய ஒன்றியத்தின் தலைமையமைச்சர் அவர்களே!!
இன்றைய தமிழக மக்களுக்காக - அவர்களின் யாக்கையின் இருப்புக்காக - வாழ்க்கைக்காக ஈராயிரம் வருடத்திற்கு முன்பே ஒரு கவிதையை எழுதிச் சென்ற குடவியபுலனாரின் கோரிக்கையை நிறைவேற்றுவீராக.!!!


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை