: 135

புத்தகக் கண்காட்சி என்னும் பெருநிகழ்வு

Image missing

நானும் புத்தகக் கண்காட்சிகளும்

சென்னை போன்ற பெருநகரத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பண்பாட்டு நடவடிக்கையின் பகுதி என வரையறை செய்வதைவிட  சுற்றுலாப்பொருளியலோடு தொடர்புடைய பெருநிகழ்வு என வரையறை செய்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். இந்த ஆண்டு -2018 ஜனவரியில் 13 நாட்கள் நடந்த (10 -22) புத்தகக் கண்காட்சியின் பக்கம் முதல் பத்துநாட்கள் தலையைக் காட்டவில்லை. 11 ஆவது நாள் தான் போகமுடிந்தது.  இரண்டு சனி, ஞாயிறுகள் உள்ளடங்கிவரவேண்டுமென அதனைத் திட்டமிடுபவர்கள் ஆரம்பம் முதலே திட்டமிட்டு நடத்திவருகிறார்கள். அதற்குப் போக விரும்புபவர்களும் ஏதாவது சனி, ஞாயிறுகளையே தங்களுக்கான நாட்களாகத் தேர்வு செய்கிறார்கள். சனி, ஞாயிறுகளை விரும்புவது ஒருவிதத்தில் நடுத்தரவர்க்க மனோபாவத்தோடு தொடர்புடையது. சென்னைப்புத்தகக் கண்காட்சியும் அது தொடங்கிய காலம் தொட்டே சென்னைப் பெருநகரத்து நடுத்தரவர்க்கத்துப் பார்வையாளர்களுக்கான வாரக்கடைசிக் கொண்டாட்டங்களுள் ஒன்றாகவே இருந்து வருகிறது.

என்னைப்போலத் தமிழ்நாட்டின் தென்கோடி(திருநெல்வேலி) வாசிகளுக்குச் சென்னை நோக்கிக் கிளம்பிவரவும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளே ஏற்ற நாட்கள். நெருக்கடிகள் இல்லாமல் புத்தகங்களைத் தேர்வு செய்ய முடியும். இதில் ஏதாவது சில வருடங்களில் மாற்றம் இருந்தன என்றால் அந்த வருடங்களில் எனது புத்தகங்கள் வெளியாகியிருக்கும். அல்லது நண்பர்களின் புத்தக வெளியீடுகளில் கலந்துகொண்டு பேசுவதற்காக வந்திருப்பேன். நான் புத்தகக் கண்காட்சிகளுக்குப் போவது எனக்கான புத்தகங்களை வாங்குவதற்காக மட்டுமல்ல. நான் பணியாற்றும் பல்கலைக்கழக நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டிய புத்தகங்களைப் பரிந்துரை செய்வதற்காகவும், என்னுடைய துறை நூலகத்தில் இடம் பெற வேண்டிய நூல்களைத் தெரிவுசெய்யவுமே ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப்  போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒவ்வொருவருடமும் குறைந்தது 30000 –க்குக் குறையாமல் துறை நூலகத்திற்கு நிதி ஒதுக்கித்தரும். ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் தொடக்க நிலையில் அந்தப் பணம் சில லட்சங்களாகக்கூட இருந்ததுண்டு. பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கவேண்டிய தமிழ் நூல்களையும்கூட தமிழியல்துறை ஆசிரியர்களே தேர்வுசெய்து நூலகத்திற்கு வாங்குவோம். அல்லது ஒன்றிரண்டு புத்தகக் கடையைத் தேர்வு செய்து நேரடியாகப் பல்கலைக்கழக நூலகரைத் தொடர்புகொள்ளும் ஏற்பாட்டைச் செய்வோம். எப்படிச் செய்தாலும் என்னென்ன நூல்களை வாங்க வேண்டும் என்ற பட்டியல் தயாரிப்பதும் அதை ஏற்றுப் பரிந்துரைப்பதும் பெரும்பாலும் என்னிடம் வந்துவிடும். 20 வருடங்களுக்கு முன்னால் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றிய போதும் (1989-97) இந்தப்பணிகளை நானே விரும்பிச்செய்து கொண்டிருந்தேன். விருப்பமான இந்தப் பணியே சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கும்படியான நெருக்கடிக்குள்ளாக்கியது.

எனது புத்தகவாசிப்புப் பழக்கத்திற்கும் சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொன்னால் அது உண்மையில்லை. என்னுடைய வாசிப்புகள் பெரும்பாலும் நூலகங்கள் சார்ந்தே நடந்து வந்துள்ளது. பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கும் எனக்கு இந்த வசதி சாத்தியம்; மற்றவர்களுக்கு அது சாத்தியமில்லை. அதைவிடவும்  உடனடியாக வாசிக்க என்று எந்த புத்தகத்தையும் நினைப்பதில்லை என்பதும்கூட உண்மையே.  வாசித்தே ஆக வேண்டுமென்றால் அந்தப் புத்தகங்களைப் புத்தகக் கடைகள் வழியாகவோ, தபால் மூலமாகவே பெற்றே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்படியிருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் பார்வையாளனாகப் போய்க் கொண்டேயிருக்கிறேன். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மட்டுமின்றி, மதுரையில் கடந்த 13 ஆண்டுகளாக நடக்கும் புத்தகக் காட்சிக்கும் பார்வையாளனாகப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன்.

பண்பாட்டு நிகழ்வாகப் புத்தகக் கண்காட்சி.

பின்பனிக்காலமான மார்கழி மாதமும் தை மாதமும் தமிழ் நாட்டுப் பண்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய காலங்களுள் ஒன்று.போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினமெனத் தொடர்ச்சியாக வரும் பண்டிகைக்காலம் நீண்ட  விடுமுறைக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய நாட்கள். தைப்பொங்கல் தமிழர்களின் முதன்மையான அடையாளம். தமிழகம் தழுவிய அந்த அடையாளத்தோடு தைப்பூசமும் காவடிச்சிந்துமாக முருகன் கோவில்களுக்கு நடக்கும் பக்தர்கள் ஒருபுறம் போய்க் கொண்டேயிருப்பார்கள். இன்னொருபுறம் ஒருமண்டலம் விரதமிருந்து சபரிமலைக்குப் போகும் கூட்டமும் இந்தக் காலத்தைத் தான் தேர்ந்தெடுக்கிறது. கடவுள் நம்பிக்கைசார்ந்து நடக்கும்  இவ்விரண்டு பயணங்களும் நகரவாழ்க்கை சார்ந்த நடுத்தர வர்க்கத்து அடையாளங்கள் அல்ல. கிராமப்புறத்து வேளாண் சாதிகளின் அடையாளங்கள். தென்மாவட்டங்களில் கிறித்துவர்களின் தாத்தாக்களும் இந்தக் காலத்தில் தான் வீதியுலா வருகிறார்கள். ஆனால் வைணவக் கோயில்களின் மார்கழி மாதப் பஜனைகளும் நோன்புகளும் அதிகாலைக் குளியல்களும் இந்துப் பண்டிகைகளாக மாறியது நடுத்தர வர்க்க நகர்வுகள் . சென்னை நகரத்துச் சபாக்களின் கர்நாடக இசைக் கச்சேரிகளும் அதன் தொடர்ச்சியான திருவையாற்று இசைக் கொண்டாட்டங்களும் நடுத்தரவர்க்க அடையாளங்களில் ஒன்றாக மாற்றம் பெற்றதும் கடந்த அரைநூற்றாண்டுப் பண்பாட்டுப்பெருநிகழ்வுகள்.

திராவிட இயக்கங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் தங்களின் வாழிடங்களையும் பணியிடங்களையும் தில்லிக்கும் அமெரிக்காவிற்குமாக நகர்த்திய பிராமணர்களுக்கு சபா நிகழ்வுகள் ஒருவித பண்பாட்டு ஏக்கம். மார்கழி மாதத்தில் சென்னை சபாக்களில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் இசைக்கச்சேரி கேட்கவும், பாடவும் தயாராகும் கூட்டம் இன்று உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது. சென்னையின் சபாக்களில் இருந்துவிட்டுத்  தொடர்ச்சியாகத் திருவையாற்றுக்குச் சென்று தியாகராஜர் ஆராதனை நிகழ்வான பஞ்சரத்தினக் கீர்த்தனை என்னும் சேர்ந்திசைக் கூட்டத்தில் அமர்ந்தெழுவதை ஊடகங்கள் ஒவ்வோராண்டும் தொகுத்து வழங்குகின்றன. கலையீடு பாட்டைச் சாக்காக வைத்துக் கொண்டு தங்கள் பூர்வீக அக்கிரகாரத்து வீடுகளைப் பார்க்கவும் கோயில்களைத் தரிசிக்கவும் தமிழ்நாட்டுக்கு வருவதோடு, தங்களின் நனவிலிக்குள் இருக்கும் சமூகமேலாண்மையை நினைத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. அது இன்னொருவிதத்தில் இழந்தை நினைவுக்குள் நிறுத்தும் நனவுடைத் தோய்தல்.

சமய நம்பிக்கை சார்ந்த இப்பெருநிகழ்வுகளிலிருந்து விலகிய நிகழ்வுகளாகக் கடந்த 40 ஆண்டுகளில் சென்னை உருவாக்கிக்கொண்ட இருபெரும் கொண்டாட்டங்களில் முதன்மையானது சென்னைப் புத்தகக்கண்காட்சி.  இன்னொன்று கவிஞர் கனிமொழியின் முன்னெடுப்பில் வடிவம் கொண்ட  சென்னை சங்கமம். தான் சார்ந்த கட்சியின் பெரும்போக்குக்கு மாறாகக் கிராமப்புறத் தமிழ் அடையாளங்களான ஆட்டங்கள், பாட்டுகள், கூத்துகள், கோலங்கள், உணவுகள், சிலைகள், கலைகள் என ஒவ்வொன்றையும் காட்சிவடிவ அளவில் நகரவாசிகளுக்கு அறிமுகம் செய்த அந்நிகழ்வு தொடர்ந்து நடந்திருக்கவேண்டும். ஆனால்   தனிமனித முயற்சியால் வடிவம் கொள்ளும் பெருநிகழ்வுகளுக்கு என்ன நேருமோ, அதன்படி அந்நிகழ்வு நின்றுபோய்விட்டது. திரும்பவும் உயிர்ப்பிக்க வேண்டிய பெருநிகழ்வு.

இத்தகைய பெருநிகழ்வுகளை அரசுகள் ஒரே கோணத்தில் பார்த்து ஒதுக்கிவிடுவது சரியல்ல. அவற்றுக்குப் பலவிதமான கோணங்கள் உண்டு; பங்கும் உண்டு. சென்னை சங்கமம் போன்றன பண்பாட்டு நிகழ்வுகள். சென்னைப் புத்தகக்கண்காட்சி  முதன்மையாக அறிவார்ந்த விழிப்புணர்வையும் வாசிப்புப் பழக்கத்தையும் தூண்டும் அறிவியக்கத்தின் பகுதி. அத்தோடு அதனோடு இணைந்து நடக்கும் இலக்கியச் சொற்பொழிவுகள், விவாதங்கள், நூல் வெளியீடுகள் போன்றன பண்பாட்டு உருவாக்கச் செயல்பாடுகள். இவ்விரண்டு நிகழ்வுகளுமே இன்னொரு விதத்தில் சுற்றுலாப் பொருளாதாரத்தோடு இணைந்த வளர்ச்சிநிலை. சபா நிகழ்வுகள், திருவையாறு ஆராதனை, சென்னை சங்கமம், சென்னைப் புத்தகக் காட்சி என ஒவ்வொன்றையும் தமிழக அரசுக்குக் கூடுதல் வருமானத்தை உண்டாக்கும் சுற்றுலாவோடு இணைத்துப் பார்த்தாலே போதும். அரசுகளின் நடைமுறைகளும் திட்டமிடல்களும் மாறிவிடும். எப்போதும் சமயம் சார்ந்த சுற்றுலாப் பொருளாதாரத்தை மட்டும் ஊக்குவிக்கும் இந்திய/ தமிழ்நாட்டுஅரசுகள் இதில்கவனம் செலுத்தத்தவறுகின்றன. 42 முறை நடந்தேறியுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இதுவரை உறுதியான ஆதரவுக் கரங்களைத் தெரிவிக்கவில்லை தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த கட்சிகள் என்பதைக் கவனித்தாலே அவர்களது விருப்பங்களும் திட்டமிடலும் எப்படிப்பட்டவை என்பது புரியும். 

கொஞ்சம் வரலாறு

428 பங்கேற்பாளர்களின் 708 கடைகளோடு 42 வது புத்தகக்கண்காட்சி இந்த ஆண்டு  நடந்து முடிந்தது. பார்வையாளர்கள் எண்ணிக்கை சில பத்துலட்சங்கள் இருக்கும். இதனைப் பொறுப்பேற்று நடத்தும் அமைப்பாக இருப்பது பாப்பாஸி (BAPASI) யென அழைக்கப்படும் தென்னிந்தியப் பதிப்பாளர்கள் மற்றும் புத்தகவிற்பனையாளர்கள்சங்கம். அதன் தொடக்கத்திற்குக் காரணமாக இருந்தவர் ஆங்கிலப்புத்தகங்களைப் பதிப்பித்த பி.ஐ.பதிப்பகத்தின்(B.I.Publication)  பொறுப்பாளரான கே.வி. மாத்யூ. அவரால் திட்டமிடப் பெற்ற அமைப்பு  1977 ஆம்ஆண்டு டிசம்பர் 14 முதல் 24 வரையில் நடத்தியபோது பங்கேற்ற கடைகள் 22 மட்டுமே. மெட்ராஸ்- - ஆஸாம் பள்ளி மைதானத்தில் நடந்த முதல் புத்தகக் கண்காட்சியை மட்டுமல்லாமல்  முதல் ஐந்து புத்தகக் கண்காட்சிகளையும்  கே.வி.மாத்யூ தான் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். அதே கால கட்டத்தில்   மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியைக் கூடத்திட்டமிட்டிருக்கிறார். ஆனால் ஒன்றிரண்டு தடவைக்கு மேல் அது நடக்கவில்லை. தொடக்க ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையில் டிசம்பர்மாதங்களில் நடந்து கொண்டிருந்த புத்தகக்கண்காட்சி மெதுவாகப் பொங்கல் விடுமுறையை நோக்கி நகர்த்தப் பெற்றதும், பள்ளி மைதானத்திலிருந்து ஒய்.எம்.சி.. மைதானத்திற்கும் உட்லண்ட் உணவுவிடுதி அரங்கத்திற்குள்ளுமாக நகர்ந்து பின்னர் அண்ணாசாலைக் கருகில் இருக்கும் காயிதே மில்லத்கல்லூரி வளாகத்திற்கு நகர்த்தப் பெற்றதும் பிந்தியவரலாறுகள்.

1980 களின் கடைசி ஆண்டுகள் தொடங்கி, 2006 வரை அந்தக்கல்லூரி மைதானத்தில் தான் புத்தகக் கண்காட்சிகள் நடந்தன. அதிகமான ஆண்டுகள் நடந்த இடம் என்றால் அதுதான். நானெல்லாம் முதல் முறையாகச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்தது அந்தக் காலகட்டத்தில்தான். அண்ணாசாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் வேறு இடங்கள் தேடப்பட்டன. 2007 இல் இப்போது நடக்கும் புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடந்தன. அங்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதால் ஒய்எம்சி விளையாட்டு  மைதானத்தில் 3 ஆண்டுகள் நடந்தன. ஒருமுறை அரசுக்குச் சொந்தமான தீவுத்திடலில் நடந்திருக்கிறது. அந்த ஆண்டு பெரும் தீவிபத்தில் சிக்கிப் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகிப் பெருஞ்சேதம் உண்டானதால் அந்த இடம் கைவிடப்பெற்றது. தனது சிலிக்குயில் பதிப்பக நூல்கள் தீயில் கருகிப்போனதைச் சொல்லிச் சொல்லிக் கவிதை எழுதிய பொதிய வெற்பனின் முகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. முனைவன், பறை, சிலிக்குயில் என வெளியீடுகளைச் செய்த பொதியவெற்பன் புத்தகங்களைப் பிரிந்த துயர் கண்காட்சியின் ஒரு பகுதி.  2015 கடைசியில் பெருமழை பெய்து சென்னை நகரம் நீரில் மூழ்கியதால் 2016  ஜனவரிக்குப் பதிலாக ஜூலை மாதம் நடந்தது. மழையில் நனைந்த புத்தகங்களோடு பதிப்பகத்தார் பட்ட துயரங்கள் இன்னொரு வரலாறு. இப்போது திரும்பவும்  பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் தனியார் பள்ளியான புனித ஜார்ஜ் பள்ளியிலே நடந்து வருகிறது.

இந்தியாவில் நடக்கும் இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக்காட்சி தமிழ்ப்புத்தகக் கண்காட்சி என்னும் அளவுக்கு தமிழ்ப்புத்தகங்களாலும் தமிழ்ப்புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களாலும் நிரம்பி வழிகிறது. ஆனால் 22 வது கண்காட்சி வரை ஆங்கிலப் பதிப்பகங்களே நிரம்பியிருந்தன. 2002 இல் பாப்பாஸி தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடும்போது 15 நாட்களுக்குக் கண்காட்சியை நடத்தியுள்ளது. தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகளை வழங்குகிறது பாப்பாஸி. 2000 –க்குப் பின் தமிழ்ப் பதிப்பகங்களின் வளர்ச்சியும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புதிய அடையாளங்களை உருவாக்கின.

புத்தகக் கண்காட்சியும் இலக்கியப்பதிப்பகங்களும்

சென்னைப் புத்தகக் கண்காட்சி தமிழ்மொழி மற்றும் எழுத்துப்பரப்பில் இருவகை விளைவுகளையும் உருவாக்கியிருக்கிறது. அதுவரை தங்களின் நூல்களை வெளியிடப் பதிப்பகங்களை நாடிச்சென்று காத்திருந்து வெளியிட்ட நிலையில் மாற்றம் நடந்துள்ளது. எழுத்தாளர்களை நாடிப் புத்தகங்களை வெளியிடும் ஆர்வத்தைத் தெரிவிக்கும் பதிப்பகங்கள் உருவாகியிருக்கின்றன.  தமிழில் கவிதை, கதை, நாடகம், திறனாய்வு எனப் பல தளங்களில் செயல்படும்  தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் எழுத்து வாழ்க்கையின் அடையாளமாகச் சென்னைப் புத்தகக்கண்காட்சியில் தங்களின் புதிய புத்தகத்தைக் காட்சிப்படுத்துவதை நினைக்கின்றனர். அதனை மனதில் வைத்து ஒவ்வொரு எழுத்தாளர்களும் எழுதும் மனப்பாங்கு உருவாகியுள்ளது. இந்த மாற்றம் அதற்கு முன்பிருந்த சிறுபத்திரிகை மனநிலையிலிருந்து விலகிய போக்கு.

 மரபான புத்தக வெளியீடுகளிலிருந்து தமிழ்ப் பதிப்பக உலகம் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாக நூல்களைக் கொண்டுவரும் பாய்ச்சலுக்குள் நுழையக் காரணமாக இருந்தது இப்புத்தகக் காட்சியின் நிகழ்ச்சி நிரலே என்றால் மிகையில்லை. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகளும் இணைந்து எழுத்தாளர்களின் கூடுகையாகவும் கொண்டாட்டமாகவும் மாறியதை 2000- க்குப் பிந்திய புத்தகக் கண்காட்சியினையொட்டி நடக்கும் நிகழ்வுகளின்போது கவனித்திருக்க முடியும். குறிப்பாக உயிர்மைப்பதிப்பகமும் காலச்சுவடு பதிப்பகமும் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் சென்னையை நோக்கி எழுத்தாளர்களை வரவைத்தன. புக்லேண்ட், ராணி சீதை அரங்கு, தேவநேயப் பாவாணர் நூலகத்தின் கூட்ட அரங்குகள், காமராசர் அரங்கு, கவிக்கோ அரங்கு, எனப் புத்தக வெளியீடுகள் கவனிக்கத் தக்க நிகழ்வுகளாக மாறியதையும் நாம் மறந்துவிட முடியாது. கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு நடக்கும் இவ்வெளியீட்டு நிகழ்ச்சிகள் அல்லாமல் கண்காட்சி நாட்களில் அதனருகில் நடக்கும் சிற்றரங்குகளிலும் காட்சிப்படுத்தப்பட்ட  அரங்குகளிலேயே சிறிய அளவில் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அதிகமான புத்தகங்கள் விற்கக்கூடிய எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்களுக்காகப் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுத்தருகிறார்கள். 24 மணிநேர செய்தி அலைவரிசைகள் கண்காட்சிக் காலங்களில் புத்தகங்களைப் பற்றிப்பேசுவதற்காக எழுத்தாளர்களை நாடுகின்றன. ஒவ்வொரு நாளும் மாலையில் எழுத்தாளர்கள் சந்திப்புகள் நடக்கின்றன. கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கிறார்கள். நாடகக்காரர்கள் நூல்களின் பகுதிகளைக் காட்சிப்படுத்தி அரங்கேற்றம் செய்கிறார்கள்.  இவையெல்லாம் புத்தகங்கள் சார்ந்து முக்கியமான மாற்றம் என்றே சொல்லலாம். இதைச் சொல்லும்போது உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்த வெளியிட்டு நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் வசனம் எழுதிய ஒரு படத்தில் தனது பெயரைக் களங்கப்படுத்திவிட்டார் எனப் பெண்ணியக்கவி குட்டிரேவதிக்காகத் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த நிகழ்ச்சி இன்னும் எனது நினைவிலிருந்து மறையவில்லை.

இந்த மாற்றத்தின் பின்னணியில் பதிப்புத் துறையில் புதிய நிறுவனங்களின் நுழைவும் அவற்றை வியாபாரக் குழுமங்களின் கட்டமைப்போடு நடத்துவது என்ற முயற்சிகளும் இருந்தன. கிழக்குப் பதிப்பகம் தனது புத்தக விற்பனை மையங்களை வலைப் பின்னல்களாகத் தொடங்கி பெரும் முயற்சியில் ஈடுபட்டது. காலச்சுவடு பிரைவேட் லிமிடெட் என்னும் வணிக அமைப்புக்கு மாறியது. சென்னைப் புத்தகச் சந்தையின் விற்பனையிலேயே ஒரு நூலாக்கத்தின் செலவுபோக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பதிப்பகங்களின் நூல் வெளியீட்டு எண்ணிக்கைகள் உறுதிசெய்கின்றன. அம்முயற்சிக்குப் பின்னால்  சிறுபத்திரிகை மனோபாவங்களிலிருந்து இடைநிலை இதழ்கள் என்னும் பரிமாணத்திற்குள் தமிழ் இலக்கியப்பரப்பு நகர்ந்த இயக்கமும் இருந்தது. அந்த இயக்கத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் நகர்த்தியது மாறிவிட்ட சென்னைப் புத்தகக் கண்காட்சியும் அதனைப் பெருநிகழ்வாக மாற்றிய பாப்பாஸியின் விளம்பரங்களும். கண்ணுக்குப் புலப்படாத காரணிகள்.

2000 –க்கு முந்திய சிறுபத்திரிகை மனோபாவம் என்பது விடாப்பிடியாகச் சில அடையாளங்களைக் கருத்தியலாகவும் செயல்நிலையிலும் கொண்டிருந்தது.    குறைவான வாசகர்களிடம் தனிச்சுற்று வழியாகப் போய்ச்சேர்தல் என்ற அடையாளத்தைத் தாண்டித் தமிழின் சிறுபத்திரிகை மரபுக்குச் சில அடையாளங்கள் உண்டு. பெரும் எண்ணிக்கையில் அச்சாகி பீடி, சிகரெட் விற்கும் பெட்டிக்கடைகளின் முகப்புகளில் வாரந்தோறும் புதியபுதிய அட்டைப்படங்களோடு- பெரும்பாலும் திரைப்பட நட்சத்திரங்களின் முகங்களைத் தாங்கியனவாய்- தொங்கும் வணிக நடைமுறைப் பத்திரிகைகளின் நோக்கங்களோடு உடன்பாடில்லை என்ற அறிவிப்புகள் ஓரடையாளம்.   வணிக முகாமை முறைகள் எதனையும் பயன்படுத்தும் வலைப்பின்னல் சாத்தியங்களற்ற சிறுபத்திரிகைகள் எப்போதும் சோதனை ரீதியான எழுத்துகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்து கொண்டே இருந்தன. அவை குறித்த விவாதங்களை முன்னெடுத்தலையும் தவிர்க்காமல் செய்தன. உலக அளவில் அறியப்பெற்ற ஏதாவதொரு இலக்கியம் மற்றும் அறிவியக்கத்தோடு –தங்களை  அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் அதன் அடையாளங்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டன. இத்தகைய புரிதலோடு தொடங்கி நடத்தப்பெற்ற பத்திரிகைகளும் புத்தக வெளியீட்டு முயற்சிகளை முன்னெடுத்தன. 2000 –க்கு முன்பு தொடங்கப்பெற்ற அஃ, க்ரியா, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், அன்னம், சிலிக்குயில், நிகழ், விடியல், அலைகள் போன்றன அத்தகைய பதிப்பகங்கள். இப்பதிகங்களின் பின்னால் அதே பெயரில் வந்த இதழ்களும், ஏற்கத்தக்க கருத்தியல்களைக் கொண்ட இதழ்களும் இருந்தன. இவற்றிலிருந்து திட்டவட்டமான விலகலைக்கொண்டனவாக  காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, அம்ருதா, போன்ற இதழ்களின் வருகையும், அதே பெயரில் அவை ஆரம்பித்த பதிப்பகச்செயல்பாடுகளும் இருந்தன. இடைநிலை இதழ்களாக வரத்தொடங்கிய  இவற்றோடு இணைந்த பதிப்பகத் தொடக்கங்களும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விளைவுகள் என்றே சொல்லவேண்டும். இந்த விளைவுளில் தமிழ்மொழிக்கும் எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் நேர்மறைப்பலன்களும் கிடைத்திருக்கின்றன. எதிர்மறைப் பலன்களும் உண்டாகியிருக்கின்றன. நூல்களின் வருகையும் வெளிப்பாட்டு முறைகளும் விரிந்துள்ளன. ஆனால் ஒரு பதிப்பகத்திற்கென்று உருவாக்கப்பட வேண்டிய அடையாளம் தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.  குறிப்பிட்ட பதிப்பகம் குறிப்பிட்ட வகையான நூல்களையும் குறிப்பிட்ட வகையான சிந்தனைப்போக்கில் எழுதுபவர்களையும் மட்டுமே வெளியிடும் என்ற முதன்மையான அடையாளம் தொலைந்தது. ஒவ்வொரு ஆண்டும் இத்தனை புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற இலக்கிற்கேற்ப நூல்களை அவை வெளியிடுகின்றன. இதில் முன்னணிப்படையாக இருப்பது கிழக்குப் பதிப்பகம். தனது அடையாளமாகத் தாராளவாத வலதுசாரிப் பதிப்பகம் என்பதைச் சொல்லிக்கொண்டு அனைத்துவகையான பலசரக்குக் கடையைபோல எல்லாவகையான நூல்களையும் வெளியிடுகிறது. மற்ற பதிப்பகங்களும் அதனை நோக்கிக் கிட்டத்தட்ட நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நகர்வு காரணமாக முதலில் கொல்லப்பட்டது  இலக்கிய விமரிசனம்.   அவரவர் பதிப்பக நூல்களை நிலை நிறுத்துவதும், இலக்கியக் கூட்டங்களைப் பாராட்டுக்கூட்டங்களாக ஆக்குவதும் நடந்தேறியிருக்கிறது. முதலில் இடைநிலை இதழ்களைத் தொடங்கி விட்டுப் பின்னர் பதிப்பகம் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த நிலையிலிருந்து மாறிப் பதிப்பகம் தொடங்கிவிட்டு, அதன் நூல்களைப் பரப்புரைசெய்வதற்காக இதழ்களைத் தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். காவ்யா, நற்றிணை போன்றன பதிப்பகத்திற்காக  இதழ்களைத் தொடங்கியுள்ளன. உங்கள் நூலகம், புத்தகம் பேசுது போன்றனவும் பதிப்பகங்களின் நூல்களை அறிமுகம் செய்யும் நோக்கங்களோடு வரும் இதழ்களாகவே இருக்கின்றன. பனுவல்களை, அதன் கட்டமைப்பின் வழி உருவாகும் அழகியலை அல்லது அழகியல் இன்மையை, ஆசிரியரின் சார்பை, சார்பின் வழி அவர்கள் முன்னெடுக்கும் கருத்தியலை, சமூகப்பாத்திரத்தை முன்வைக்கும் விமரிசனக் கட்டுரைகள் வெளியிடும் இதழ்கள் ஒன்றும் இப்போது இல்லை. அச்சிட்டு வெளியாகும் ஒரு நாவலை அல்லது சிறுகதைத் தொகுப்பை அல்லது கவிதைத் தொகுப்பை அதன் வரலாற்று நிலையிலோ, நிகழ்காலக் கருத்தியல் போக்கிலோ இணைப்படுத்திப் பேசும் கட்டுரைகளைக் கேட்டு வாங்கி அச்சிடும் முயற்சிகளை இந்த இதழ்கள்  தவிர்க்கின்றன.

சென்னைப் புத்தகக் கண்காட்சியும் ஈழத்தமிழர்களும்

 சென்னைப் புத்தகக் கண்காட்சியின் வளர்ச்சியிலும் இலக்கியம் மற்றும் கருத்தியல் சார்ந்த மாற்றங்களிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமே பங்கெடுத்துள்ளார்கள் என்பதில்லை. நேரடியாகவும் மறைமுகமாகவும்  ஈழத்தமிழர்கள் நடத்திய யுத்தங்களும் அதனால் நிகழ்ந்த புலம்பெயர்வுகளும் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கின்றன. 1980- களில் தமிழ் –சிங்கள முரண்பாட்டின்போது தமிழர்களை அரசியல் மயப்படுத்தி விரும்பிய போராளிக்குழுக்கள் அரசியல் கருத்துகள் அடங்கிய சிற்றேடுகளை உருவாக்கவும்,  உலகு தழுவிய தேசிய இனப்போராட்டங்களின் வரலாற்றைச் சொல்லும் நூல்களை உருவாக்கவும் விரும்பின. அதற்கான முயற்சிகளில் தமிழ்நாட்டில் சில அச்சகங்களுக்குப் பண உதவி செய்தன. அதன் தொடர்ச்சியாக ஈழப்போராட்ட ஆதரவுக் கருத்துகளையும் போராட்ட இலக்கியங்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும் இலங்கையில் நடப்பதைச் சொல்வதின் மூலம் ஆதரவுத் தளத்தை உருவாக்கவும் விரும்பிச் சில இதழ்களையும் இங்கே தொடங்கி நடத்தின. பொதுநிலையில் மனித உரிமைகள், தேசிய இன உரிமைகள், பெண்களுக்கான விடுதலை, சாதிய முரண்களைக் களைதல் போன்றவற்றை முன்னெடுத்த அரசியல் குழுக்கள் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுக்குழுக்களாக அறியப்பெற்றன. இவைகளோடு ஈழப் போராளிக் குழுக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகொண்டு வெளியீடுகளைக் கொண்டுவந்தன. இங்கிருந்த வெகுமக்கள் அரசியல் கட்சிகளும்கூட இந்தப் போக்கில் ஆதரவு நிலைப்பாடோடுதான் இருந்தன.

போராளிக்குழுக்கள் தங்களுக்குள் முரண்பட்ட காலகட்டத்தில் வெகுமக்கள் அரசியல் கட்சிகள் பின்வாங்கிக்கொண்டன. அரசியல் சார்ந்த வெளியீடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இலக்கிய வெளிப்பாடுகள் முன்னிலை பெற்றன.  குறிப்பாக 1990- களில் கவிதைகள் வெளிப்பாடு ஈழப்போராட்டக்காரர்களின் முதன்மையான கருவிகளாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் அந்தக் கவிதைகள் தமிழ்நாட்டு அச்சகங்களிலேயே அச்சிட்டுத் தரப்பட்டன. அங்கே அனுப்பப்பட்ட அதே நேரத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் முக்கிய விற்பனைப் பண்டங்களாகவும் மாறின. உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா எனப் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களுக்குத் தங்களின் போராட்ட நிலத்தை நினைத்துக்கொள்ளவும் மனரீதியாகப் போராட்டக்காரர்களாகக் கருதிக்கொள்ளவும் அந்தக் கவிதைகளும் அவற்றின் உள்ளடக்கங்களும் உணர்ச்சிமிக்க சொற்கூட்டங்களும் பயன்பட்டன. எழுதப்பெற்ற கைப்பிரதிகளோடு தமிழ்நாட்டின் பதிப்பாளர்களைத் தேடிவந்த இலக்கியக்காரர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கவிதை எழுதும் ஆர்வத்தையும் நூலாக வெளியிட்டுப் பார்க்கும் ஆசையையும் தூண்டியதில் கூடச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கொரு பங்குண்டு. ஈழப்போராட்டம் பற்றிய தீர்மானமான நிலைப்பாடில்லாத பதிப்பகங்கள் அவர்களின் புத்தகங்களை வெளியிடுவதில் தீர்மானமான ஆதரவு நிலைபாட்டைக் கொண்டிருப்பது இப்போது வரை தொடர்கிறது.  புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து எழுதப் பெற்ற கவிதைகளையும்  அவற்றை நூலாக்குவதற்காகப் பெற்ற  தொகையிலும் எந்தவிதச் சமநிலையும் இல்லை என்று வருத்தப்பெற்ற ஈழ நண்பர்களையும் எனக்குத் தெரியும். அந்த அனுபவத்தில் இலங்கைத் தமிழர்களே சில பதிப்பகங்களையு சென்னை முகவரியிலேயே நடந்துகின்றனர். அவைகளும் சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி நூல்களை வெளியிடுகின்றன. நூல்கள் எழுதுபவர்கள் மட்டுமல்லாமல்,  புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் ஒருவரோடொருவர் சந்தித்துக்கொள்ளவும்  உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பான ஒரு நிகழ்வாகச் சென்னைப் புத்தகக்கண்காட்சி இருந்துவருகிறது. அந்த விதத்தில் சென்னைப் புத்தகத் திருவிழா இன்னொருவகையான நினைவுகளின் தேடல்தான்.

அரசியல் எழுத்துகளையும் கவிதைகளையும் ஈழத்தமிழர்களுக்காக வெளியிட்டுத் தந்த  பதிப்பகங்கள் 2009 முள்ளிவாய்க்கால் துயரத்திற்குப் பிறகு புனைகதைகளுக்கு நகர்ந்து விட்டன. போர்க்கால நாவல்களும் போருக்குப் பிந்திய நாவல்களும் சிறுகதைகளும் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் வெளியிடப்படுகின்றன. கண்காட்சிக்குப் பிறகு அவை இலங்கைக்கும் பிற புலம்பெயர் நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன; படிக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. ஈழத்தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாமல்  பெருந்தொகுப்புகளாகவும் கிளாசிக்கல் வரிசைகளாகவும்  அச்சிட்டு வெளியிடப்படும் தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களின் முதன்மையான வாசகர்களாகவும் வாங்குபவர்களாகவும் இருப்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே எனப் பதிப்பகங்களின் விற்பனைப் பொறுப்பில் இருக்கும் நண்பர்களே சொல்கிறார்கள்.

கண்காட்சி நாட்களில் முகநூலில் வெளியிடப்படும் எழுத்தாள முகங்களில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களும் கணிசமாகவே இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களைத் தேர்வுசெய்யும்பொருட்டுக் கண்காட்சிக்குள் சுற்றிவரும்போது நிச்சயம் நாலைந்து ஈழ எழுத்தாளர்களைச் சந்தித்து விடுவதுண்டு. தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கியமாக வளர்ச்சிபெற்ற நிலையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களும்கூடச் சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டித் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் வழியாக நூல்களை வெளியிடத்தொடங்கியுள்ளனர். அதற்காகச் சுற்றுலாவைப் போலத் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வந்தவர்கள் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு எழுத்தாளர்களையும் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வெளியிட்டுக்கொண்டே இருந்ததைப் பார்த்திருக்கலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சி என்னும் பெருநிகழ்வு திரும்பவும் தமிழுக்கான தலைநகர் சென்னைதான்; தமிழர்களுக்கான தாயகம் தமிழ்நாடுதான் என்பதை உறுதிசெய்து கொண்டிருக்கிறது. அந்த உறுதியான நடவடிக்கைகளுக்குப் பின்னால் தமிழ் வளர்ச்சியும் தமிழ் இலக்கியத்தை உலகத் தமிழ் இலக்கியமாக மாற்றும் நோக்கமும், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களுக்காகப் பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற அக்கறையும் வெளிப்படுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதில். தமிழ்நாட்டரசும் புத்தகக் கண்காட்சியை நடத்தும் பாப்பாஸியிம் கலந்துபேசி பன்னாட்டுப் பதிப்பகங்களை வரவழைக்கலாம். சர்வதேசப் பதிப்பகங்களோடு உடன்பாடு செய்துகொண்டு தமிழ் இலக்கியங்களை அந்த நாட்டு மொழிகளுக்குள் கொண்டுசெல்லும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அந்நாட்டு நூல்களைத் தமிழுக்குள் கொண்டுவரும் வேலைகளுக்கு உதவி செய்யலாம். அறிவுப்பரிவர்த்தனையையும் புத்தகக் கண்காட்சியின் விற்பனைப்பண்டமாக ஆக்கும்போது தமிழ் வளர்ச்சி கைக்கெட்டியதாக ஆகும் .

     

 

 

 முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை