: 168

தப்பும் குறிகள்

Image missing

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவக் கல்விதான் வாழ்வின் லட்சியம் என்று நினைத்தவர்கள் மாநிலக்கல்வி வாரியப் பாடங்களோடு மையக் கல்வி வாரியப் பாடங்களையும் தனிப்பயிற்சியாகப் படித்திருப்பார்கள். சென்ற ஆண்டு கோட்டை விட்டதாக நினைத்தவர்களும் இந்த ஆண்டு திரும்பவும் விண்ணப்பம் அனுப்பியிருக்கக் கூடும். புதியவர்களும் பழையவர்களும் தேர்வு மைய ஒதுக்கீடு என்ற இன்னொரு ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அரசுகளும் அரசு நிறுவனங் களுமே காரணம் எனச் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. நான் அப்படி நினைக்கவில்லை.

 இதுபோன்ற மையப்படுத்தப்பெற்ற தேர்வுகளை நடத்தும் பொறுப்பு அரசுத் துறைகளிடமிருந்து புறநிலைப் பங்களிப்பாளர்களிடம் (அவுட் ஷோர்சிங்) ஒப்படைக்கப்பட்டிருப்பது முதன்மையான காரணம். இணையவழி விண்ணப்பம் தொடங்கி, தேர்வுகள் நடத்துவது, திருத்துவது, முடிவுகள் அறிவிப்பது, கல்லூரிகளை ஒதுக்குவது வரை அரசுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்று, ஒற்றைச் சாளர முறையில் நடத்திய முறை தமிழ்நாட்டில் இருந்தது. இந்த முறைக்கு மாறாக யார் நடத்துகிறார்கள் என்பதையே அறிய முடியாத முறை - அவுட் ஷோர்சிங்- இப்போது நடைமுறையில் இருக்கிறது. அதைப் பெற்றவர்கள் மைய அரசின் முக்கியமானவர்களின் தொடர்பினால் தான் இந்த வேலையைப் பெற்றிருப்பார்கள். அந்த நிறுவனங்கள் எதுவும் பதில் சொல்ல முன்வராமல் மௌனமாக இருக்கின்றன. அதனை அறிந்துகொள்ள விரும்பாத - அறிந்தாலும் பேச முடியாத இடத்தில் இருக்கும் அரசின் கல்வித்துறைகள் ஒன்றும் சொல்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை மருத்துவக்கல்விக்கு நடக்கும் தேர்வின் பிரச்சினை மட்டுமல்ல. ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவித்தொகைகளுக்கும், விரிவுரையாளர் பதவிக்கான தகுதித்தேர்வுகளுக்கும் இப்போது விரிவடைந்துள்ளன.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழியாக வழங்கப்பெறும் பட்டியலின மாணவர்களுக்கான ராஜீவ் காந்தி பெயரிலான உதவித் தொகை, சிறுபான்மையினருக்கான மௌலான அபுல்கலாம் ஆஸாத் உதவித்தொகை போன்றன முறைப்படியான தகவல்களை மாணவர்களுக்கு அனுப்புவதில்லை. தேர்வுகள் இல்லாமல் தெரிவு செய்யப்படும் மாணாக்கர்களுக்குத் தனிக்கடிதங்கள் வழியாகத் தெரிவிக்கப்படுவதில்லை. எல்லாம் இணையத்தில் பட்டியலாக வெளியிடப்படுவதோடு சரி. ஒவ்வொரு நாளும் இணையத்தை மேய்ந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே அதைக் கண்கொத்திப் பாம்பாக இருந்து பிடிக்க முடியும். குறிப்பிட்ட தேதிக்குள் கவனித்து அவ்விணையம் தரும் இன்னொரு இணைப்பின் வழியாகச் சென்று தன்னைப் பற்றிய தகவலைத் தராமல் விட்டுவிட்டால் அதன் கதை அம்போ தான். எல்லா நேரமும் மின்சாரம் கிடைப்பதே சிக்கல் இங்கே. ஆனால் இந்தியாவின் கிராமப்புறப் பட்டியல் மாணவ, மாணவிகளும், சிறுபான்மை மாணாக்கர்களும் ஒவ்வொரு நாளும் இணையத்தில் நுழைந்து வெளியேற வேண்டுமென்கிறது நமது அரசின் தனியார் மயக்கொள்கை. போகிற போக்கில் நான் இதனைச் சொல்லவில்லை. என்னிடம் ஆய்வுசெய்த இசுலாமிய மாணவி ஒருத்திக்குக் கிடைத்த உதவித்தொகையைப் பெற முடியவில்லை.என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.

இணையவழிப் பதிவேற்றம், விண்ணப்பம், தேர்வுகள் எல்லாம் இனிச் சாத்தியம் எனச் சொல்பவர்கள் சில உண்மைகளை உணரவேண்டும்.நான் பணியாற்றும் பல்கலைக்கழகம் மட்டுமல்ல: பல பல்கலைக்கழகங்களும் அனைத்துவகையான விண்ணப்பங்களையும் இணையவழியாகவே பெறுகின்றன. விண்ணப்பங்களை அளித்தல், நிரப்பியதைச் சரிபார்த்தல், செலுத்தப்பெற்ற வங்கி ரசீதுகளைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற வேலைகளைப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் செய்வதற்குப் பதிலாக மாணவர்களே இணையம் வழியாகப் பதிவேற்றம் செய்கிறார்கள். வங்கிப் பணியாளர்கள் செய்கிறார்கள். அதன் மூலம் பல்கலைக்கழகங்களின் வேலைகள் குறைந்திருக்கின்றன. ஆனால் மாணாக்கர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.இங்கே ஒவ்வொருவரிடமும் கணினி தரப்பட்டிருக்கிறது என்றாலும் இணையத் தொடர்புக்கு இன்னும் கணினி மையங்களுக்கே செல்கிறார்கள். எல்லாத் துறை மாணாக்கர்களுக்கும் தேவையான பயிற்சிகள் தரப்படவில்லை. நகர்ப்புற மாணாக்கர்களுக்கு இவை எளிது; செலவு குறைவு. ஆனால் கிராமப்புற மாணாக்கர்களுக்குச் சிக்கல். செலவும் கூடுதல்.

பல்கலைக்கழகங்களும் இணையவழி விண்ணப்பங்களைச் சரிசெய்ய - அதில் ஏற்படும் சிக்கல்களைக் களையப் புறநிலைப் பங்களிப்பாளர்களிடமே காத்துநிற்கின்றன. மொத்தத்தில் லாபம் புறநிலைப் பங்களிப்பாளர்களுக்கே.

 இந்திய ஒன்றிய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் செயல்படுத்துபவர்களும் நகர்ப்புற மேல்தட்டுவர்க்க/ சாதிகளுக்காக வேலை செய்கிறார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்கள். ஆனால் கிராமப்புறத்தைக் கொண்டாடுவதாகப் பாவனை செய்கிறார்கள். அந்தப் பாவனைகளைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் தங்கள் அம்புகளைக் குறிதவறிப் பாய்ச்சுகிறார்கள்.

 இந்தியா ஒரேநாடு; இந்தியாவில் இருக்கும் எல்லாக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தின்படி, கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு நகர்த்தி, மையப்பட்டியலில் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கிய போதே இவையெல்லாம் நடக்கும் என்பதை ஊகித்திருக்கவேண்டும். தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியைக் கொண்டு உருவாக்கப்பெற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் தொழில் கல்லூரிகளிலும் பிற மாநிலங்களின் மாணவர்கள் நிரப்பப்பட இருக்கிறார்கள். அதைத் தடுக்கும்விதமாக மாநில உரிமையை நிலைநாட்டும் அரசாக தமிழக அரசு இல்லை.

முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை