: 81

பாம்பும் பிடாரனும்

பாம்பின் தோலையொத்த வண்ணத்தில் இருக்கும் ஓலைப்பெட்டிக்குள்ளிருந்து நழுவி வரும் பாம்பு படமெடுத்து ஆடும் அழகு கண்ணுக்கு விருந்து. காதுக்கு சுகம். அதே நேரத்தில் பையிலிருக்கும் பணத்துக்கு ஆபத்து.
மகுடியிலிருந்து கிளம்பும் ஒலிக்குக் காதைக் கொடுத்துவிட்டுப் படமெடுக்கும் பாம்பின்மீது கண்ணை வைத்திருக்கும் நேரத்தில் பாம்பாட்டியின் நண்பர்கள் தங்கள் கைவரிசியைக் காட்டிவிடுவார்கள். கால்சட்டைப் பையிலிருக்கும் பணத்தைத் திருடிவிடும் வாய்ப்புகள் அதிகம் திருடுவதற்கான - திசைதிருப்பலுக்காகவே பாம்பு, மகுடி, பிடாரன் என ஒத்திசைந்த தாளலயம் உருவாக்கப்படுகிறது என்ற கருத்தோட்டம் கொண்டவர்கள் அந்த இடத்தில் நிற்பதே இல்லை. எனக்கும் அந்த அனுபவம் உண்டு. எனது பணப்பையை ஒருமுறை பறிகொடுத்திருக்கிறேன். என்றாலும் பிடாரனின் மூச்சிழுப்பையும் ஆடி அடங்கும் பாம்பையும் பார்க்கும் ஆசை தீரவில்லை.
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் வழியாக நல்லாட்சி நடத்துவதற்கான மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றபோதிலும் தேர்தல் திருவிழாவிற்காகக் காத்திருப்பதில்லையா? போட்டியிடும் கட்சிகள் குறித்து, அமையும் கூட்டணிகள் குறித்து, அவற்றின் தந்திரமான உத்திகள் குறித்து, நிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து என தொடர்ந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறோம். எல்லாமே ஒருவிதத்தில் பாம்பும் பிடாரனும் அவரது நண்பர்களும் நடத்தும் கூட்டுவினைகள் போலவே இருக்கின்றன. இப்போது தேர்தல் ஆணையத்தை எடுத்துக்கொள்வோமே..

தேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிக்கையைச் சொன்ன நாள் முதல் அரசாங்கம் என்பதே தேர்தல் ஆணையம் தானோ என்ற ஐயம் வருகின்ற அளவிற்கு அண்மைக் காலங்களில் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. சுவர்களில் எழுதப்படும் விளம்பரங்களை அழிப்பது தொடங்கி, வரிசைகட்டும் கார்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, வினயல் தட்டிகளை வைப்பதைக் கட்டுப்படுத்துவது, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்யும் விளம்பரங்களைக் கண்காணிப்பது எனத் தேர்தல் ஆணையம் தன் இருப்பைக் காட்டுவதின் உச்சமாக ஒவ்வொரு நெடுஞ்சாலைகளிலும் காவல் துறையினரை நிறுத்திப் பணப்பரிமாற்றம் நடப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருந்தொகைகளைக் கைப்பற்றுவது என நீள்கிறது.

இதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அரசமைப்பை விடக் கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகப் பாவனை செய்கிறது. தேர்தலில் வேட்பாளர்களாகப் பங்கேற்க விரும்பும் அரசியல்வாதிகளிடம் காட்டும் அதிகாரத்தை மெதுவாக நகர்த்தி வாக்காளர்களுக்கும் உணர்த்துகிறது ஆணையம். கட்டுப்பாடுகள் சார்ந்த அரசின் இருப்பைத் தனது இருப்பாகக் காட்டும் தேர்தல் ஆணையத்தின் மீது தேர்தல் காலத்தில் ஏற்படும் நன்மதிப்பின் பின்னணியில் அதன் வேறுசில செயல்பாடுகளும் பாராட்டத் தக்கதாகவே உள்ளன.

தனக்கென விரிவான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமலேயே நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கண்டறிந்து வாக்குரிமையை, அடையாள அட்டையோடு வழங்கியிருக்கிறது. ஒரு நூறு எண்ணிக்கைக்குள் அடங்கும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் பகுதிகளாக இருக்கக் கூடிய கல்வித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை போன்றவற்றின் உதவியோடு மாநில அளவிலான தேர்தல்களையும், நாடு அளவிலான தேர்தல்களையும் நடத்துகிறது நமது தேர்தல் ஆணையம். அதற்கு உதவும் விதமாக அரசுத் துறைகளிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கமும் கூட நமது மக்களாட்சியின் மெச்சத்தக்க தன்மையே..

மெச்சத்தக்க பணிகளைச் செய்து காட்டும் தேர்தல் ஆணையத்தின் வாழ்நாள் தேர்தல் காலம் மட்டும்தானா? அல்லது புதுடெல்லியில் நெடிதுயர்ந்து நிற்கும் வெறும் கட்டடமா? என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. தேர்தல் காலங்களில் கட்டுப்பாடுகள் காட்டுவதும் இறுக்கத்தை உணரச் செய்வதுமாக வெளிப்படும் அதன் இயக்கம், மற்ற காலங்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக இருப்பது ஏன்? தேர்தல் காலத்தில் அதன் கையில் இருப்பதாகத் தோற்றம் தரும் அதிகாரம் தேர்தலுக்கு முன்னால் எந்த அமைப்பிடம் இருக்கிறது? அதைத் தேர்தல் ஆணையத்திற்கு கைமாற்றித் தரும் நடைமுறை எதுவும் பின்பற்றப்படுகிறதா? தேர்தல் முடிந்து மக்களின் பிரதிநிதிகளிடம் அவற்றை அப்படியே ஆணையம் கைமாற்றுகின்றதா? கைவரப் பெற்றனவற்றைத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் இறுக்கமும் கட்டுக் கோப்பும் அற்றதாகத் தளர்வடையச் செய்யும் மாயத்தை எப்படி மேற்கொள்கிறார்கள்?

இப்படியான கேள்விகளை மக்களாட்சியின் தற்காலிகக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நேரத்தில் கேட்கத் தோன்றும். அதேபோல தங்கள் முறை வரும்போது, தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் நீதிமன்றங்கள், இந்திய அரசின் நிதி மற்றும் கணக்குத் தணிக்கைத் துறைகள் போன்ற அமைப்புகளையும் நோக்கிக் கேட்கத் தோன்றுகிறது. இப்படிக் கேட்பதன் வழியாக அவற்றை அம்பலப்படுத்த வேண்டும் என்பதல்ல நோக்கம். தவறுகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னால் சுட்டிக் காட்டும் இடத்தில் இருக்கும் இந்த அமைப்புகளை, தடுத்து நிறுத்தும் இடத்தில் இருக்கும் அமைப்புகளாக மாற்ற வேண்டும். அதற்காகவே இத்தகைய கேள்விகளும், அவற்றிற்கான விடைகளும் அவசியம். இந்தியாவில் மக்களாட்சி வலுவானதாக ஆக்கப்படவேண்டுமென்றால், அரசியல் கட்சிகளை மக்கள் மயப்படுத்துவதோடு, அரசியல் அமைப்புகளையும் தன்னாட்சி மிக்கதாக மாற்றவேண்டும்.அதிகாரம் மிக்க அரசின் தலைமைப் பதவிகளில் உட்காரவரும் நபர்களுக்கேற்பத் தன்னாட்சி உரிமை கிடைக்கும் என இருப்பது எப்போதும் ஆபத்தானது.

தன்னாட்சி என்பது பாம்பாட்டியின் மகுடிக்கும் பாம்புக்குமான உறவாக இருக்கக் கூடாது. மூச்சடக்கு ஊதித் தலையில் தட்டிப் பெட்டிக்குள் அடக்கிவிடும் பாம்பாட்டிகள் தங்கள் மூச்சுக்காற்றோடு இரவல் மூச்சுகளையும் வாங்கி மகுடியின் வழியே அனுப்புவார்கள். பாம்பு ஆடி ஆடிக்களைத்துப் போய்விடுவதைத்தவிர வேறுவழியில்லை. இப்போதுள்ள நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
=====================================================
நன்றி: வண்ணநிலவனின் சிறுகதைத்தலைப்பு


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை