: 38

நிகழ்நிலைக் கவிதைகள்

ரத்தக் கடைகள்
===============

இந்த வழியாகத்தான் போகவேண்டும்.

மணிமுத்தாறு - தூத்துக்குடி.
புறநகர் நான்குவழிச்சாலை..
கட்டபொம்மன் நகர் 
மாலைநேரத் தேநீர்க்கடை.

‘சர்க்கரை போடாமல் காபி’
நான் சொல்லி முடித்தபோது 
ஐந்து பேருந்துகள் வரிசைகட்டின
காக்கிச் சட்டையில் இல்லை
விரைப்பில்லாத வெள்ளைச் சட்டைகளும் 
வட்டக்கழுத்துப் பனியன்களும்

ஒருவர் உத்தரவு போட்டார்:
“பத்து ஸ்ட்ராங் டீ.,ரத்தச்சிவப்பில்..”

போனவர்கள் திரும்புவார்கள்.
தேநீர்க் கடையை மூடி 
ரத்தம் விற்கச் சொல்லவேண்டும்

காபிக்குப் பதில் ரத்தம் 
குடித்துப் பழகவேண்டும்..

இந்த வழியாகத்தான் 
அவர்கள் வரவேண்டும்

================== 22-05-2018


’ஓரடி முன்னால் 

ஈரடி பின்னால்’
அறிந்திருந்தவர்கள் மறந்துவிட்டார்கள்.
பயன்பாடில்லை.

எதிர்த்தவர்கள் 
உணர்ந்திருக்கிறார்கள்
பயன்படுத்துகிறார்கள்.

நேற்று நேற்றோடு போய்விடும்
இன்று இன்னொரு நாள். 
நாளையென்பது .. நாளைகள்


=============== 20-05-2018

மரணத்தூக்கம்
==============
ஒருநாளை நீளவாட்டில் விரித்துப் படுத்துக்கிடக்கிறது மரணம்.
நடப்பதற்குக் கால்களைப் பயன்படுத்துவதில்லையென்பதால்
இணைவதற்கும் புணர்வதற்கும்கூட மனிதர்களைப் பின்பற்றுவதில்லை.

தப்பித்தல் வேண்டிக்கிடாய்வெட்டியவர்களுக்கு அளித்த சாபக்கல் மண்டுக்கல் ஆனது.
குத்திவைக்கப்பட்ட சூலில் வழியும்கறை மூன்றாம் நாள் அழுக்கு 
ரயிலேறிப்போனவர்களின் சங்கொலி வசீகரத்தில் தொடரும் அமாவாசை.
துயில் தொலைத்த இரவுக்குப்பின் செவ்வரளிக் கோடுகளோடு நகரும் ரணம்..
தூக்கம் துக்கத்தில் இருக்கிறது

====================================== 06-04-2018


பொய்களின் நேசம்
=====================
காலம் கணகாலம் ஆனதற்குப் 
பின்னான சந்திப்பு.
பொய்களை வாங்கி விற்று
வளர்ந்து பெரியவர்களான 
கதையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

உண்மையைப் பேசிவிடும் நினைப்பில் 
நிறுத்திநிறுத்திப் பேசிக் கொண்டிருந்தான்.
பொய்களைத் தரிசிக்கும் திளைப்பில்
நெருக்கம் குறைந்துவிடக்கூடாதென்ற
கவனத்துடன் கண்கள் சிமிட்டவில்லை.

உண்மைகளிடம் தருவதற்காக
உண்மையைச் சொல்லச் சொன்னாள். 
பொய்யைப் பொய்யாக மட்டுமே 
சொல்லத் தெரிந்தவன் 
உண்மையாகவே திணறிப்போனான்.

பொய்யை எப்படிச் சொல்ல முடியும்.?
பொய் அன்புக்குரியது. ஆசைப்படுவது. 
அன்பும் ஆசையும் உண்மையல்ல; பொய்
யெனச் சொல்ல யாருக்குச் சாத்தியம்?

பொய்கள். பொய்களை நேசிக்கின்றன .

============================ 04-04-2018


நீர்வழிப் படூஉம்
=====================

நீரே வீழ்தல் நீர்வீழ்ச்சி
ஆர்ப்பரிப்புடன் கொட்டும் அருவிநீர் 
நுரையடங்கின் பசுந்தண்ணீர்
பச்சைத் தண்ணீர்
நதியாகி நகர்ந்துவிடும். 
நிறுத்தப்பட்டால் நிலை உயரும்;

குளத்து நீராகி நிலையுயர்த்தும்.
கால்வாய் வழியோடிக் 
கலந்து உறவாடும்
காற்றின் குணமாகும்
ஆற்றின் அடியாழம் நீரோட்டம்.
சுழிப்புகளுண்டு; சுழற்சிகள் உண்டு.
எனினும் குதித்து விளையாடலாம்.
கரையேறிக் குதிக்கலாம்.

அருவிநீராயினும், ஆற்றுநீராயினும் 
கால்வாய் நீராயினும் காண்பது இனிது.
இறங்குதல் அதனினும் இனிது.
ஆபத்தெனக் கணித்துக் 
கரையொதுங்கி நிற்றல் கவனக் குறைவு
வெதுவெதுப்பு வேண்டினும் 
தண்குளிர் தழுவினும் தாவிடல் வேண்டும்.
தாவுதல் இன்றெனில் தவிப்புகள் மிஞ்சுதல்
காணுதல் அன்றெனில் கானல்நீர் விரியும்

நீரே வீழ்தல் நீர்வீழ்ச்சி
ஆளே வீழ்தல் யார்வீழ்ச்சி?

#காவிரிநீர்/    03-04-2018


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை