: 140

பாரதி : விற்கும் சரக்கு

Image missing

 ‘துறைத் தலைவர் நேரில் விளக்கம் தரவும்’,

துறைத்தலைவரின் குறிப்புகள் தேவை

துறைத்தலைவர் விளக்கம் அளிக்கவேண்டும்

இப்படியான குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதிய கோப்புகள்  துணைவேந்தர்களிடமிருந்து பல்கலைக்கழகத்துறைகளின் தலைவர்களுக்கு அவ்வப்போது வருவதுண்டு. நிதானமாகச் சொல்லலாம் என்றால்  கோப்புகளையே அனுப்புவார்கள். உடனடியாகச் சொல்லவேண்டிய பதிலென்றால் உள்ளகத் தொலைபேசிவழியாக அழைத்து உடனடியாக வந்து பார்க்கவும் என்பார்கள். அழைக்கப்பட்ட தொனிக்கேற்பத் துறைத்தலைவர்கள் பதறியடித்துக்கொண்டுபோய்ப் பார்ப்பார்கள். மற்ற துறைத்தலைவர்கள் அளவுக்கு நான் பதற்றமடைவதில்லை.

அப்படியொரு பதற்றமில்லாத ஒரு சந்திப்புக்குக் காரணமாக அமைந்தது பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனின் 32 பக்கக் கடிதம்.  நேரடியாகப் பல்கலைக்கழகத்திற்குத் தொடர்பில்லாத அந்தக் கடிதம் துணைவேந்தருக்கு ஏன் அனுப்பப் பட்டிருக்கிறது என்ற குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் துணைவேந்தர் அழைத்தார் என்பதை  அவர் பேசத் தொடங்கியவுடன் புரிந்துகொண்டேன். துணைவேந்தரின் பணிகளுக்குத் தொல்லையளிக்காமல் அதே அறையின் ஒரு மூலையில் இருக்கும் வசதியான இருக்கையில் அமர்ந்து சீனி.விசுவநாதனின் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

ஒரு சொற்கேளீர்என விளிக்கும் சொற்றொடர் இடது முளையில் அச்சிடப்பெற்றிருந்தது. தொடர்ந்து மையப்படுத்தப்பெற்ற அடியாக, “பொறுமையினால் அல்ல….” என்ற சொற்றொடரும்,

மகாகவி பாரதியாரைப்

              பணிவதையே

வாழ்க்கைப் பயனாகக்          

                கொண்டுள்ள

பாரதி அன்பர்களின்

             மனக்குமுறலின்

வெளிப்பாடே

           இந்தச் சுற்றறிக்கை

 

 

 

 

 

 
என்ற குறிப்பு சதுரக் கட்டத்திற்குள்ளும் அச்சிடப் பெற்றிருந்தன.  அதனைத் தொடர்ந்து பாரதியின்நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத்திறமுமின்றி வஞ்சனைகொள்வாரடீ -கிளியே வாய்ச்சொல் வீரரடிஎன்ற பாடல் வரிகள் கவனப்படுத்தப்படும்விதமாக அச்சிடப்பெற்றிருந்தது.

அந்தப் பக்கத்தின் கடைசியில் இன்னொரு செவ்வகப் பெட்டிக்குள்

சீனி. விசுவநாதன்

 5/52 மாடல் ஹவுஸ் லேன்,

சி..டி. நகர், சென்னை, 600 035.

தொடர்புக்கு: 9444 029137” 

 


 

 

 

என தொடர்பு விவரங்கள் தரப்பட்டிருந்தன.

இரண்டாவது பக்கத்தில், ’ கடந்த பல ஆண்டுகளாகவே நான் மகாகவி பாரதியாரின் படைப்புகளைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். சமீபகாலமாக என் முன் அனுமதி பெறாமலேயே தாங்கள் வெளியிடும் பாரதி நூல்களில் நான் பெரும்பாடுபட்டுத் தேடிப்பெற்றுள்ள அரிய செய்திகளையெல்லாம் சர்வ சாதாரணமாகதாராளமாகப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த டிசம்பர் 2017 ஆம் ஆண்டு சென்னை சந்தியா பதிப்பகம் பாரதியாரைப் பற்றிப் பாரதி விஜயம் என்னும் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளது. நூலின் பதிப்பாசிரியர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் என்பவராவர். 

பாரதி விஜயம் நூலின்முன்னுரையில் நான் கடந்த பல ஆண்டுகளாக மிகவும் பாடுபட்டு அரிதின் முயன்று தேடிப்பெற்றுப் பதிப்பித்துள்ள ஜீவநாடியாகவும் தனித்துவம் கொண்டதுமான  ஆதாரபூர்வமானநம்பகத்தன்மையுடன் கூடிய அரிய தகவல்களை ஓரிரு சொற்களைநடைமாற்றங்களுடன் பயன்படுத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய கடித விவரம் வருமாறு:

எனத் தொடங்கிச் சந்தியா பதிப்பகத்திற்கு எழுதிய கடிதத்தை அப்படியே தந்திருந்தார்.  அந்தக் கடிதத்தின் சாரமாக , பாரதி விஜயம் எழுதிய கடற்கரை தனதுகாலவரிசைப் பாரதி படைப்புகளின் 12 தொகுதிகள், மகாகவி பாரதிவரலாறு, பாரதி ஆய்வுகள் சில சிக்கல்கள், மகாகவி பாரதி நூற்பெயர்க்கோவை, கவி பிறந்த கதை ஆகிய நூல்களை அவரது முன் அனுமதி பெறாமல் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார். அத்தோடு, ‘பாரதிய உலகம் அதுவரை அறிந்திராத பற்பல அரிய உண்மைகளைதானே கண்டறிந்த துபோல பயன்படுத்தி உள்ளதைப் படித்துப் பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் எனக்குறிப்பிட்டுவிட்டு,   பதிப்பாசிரியர் (கடற்கரை) தனது நூலில் எனது பாரதி நூல்களினின்றும் கையாடவில்லை என்று கூறுவாரேயானால், அவற்றிற்கான தகுந்த சான்றுகளையோஆதாரங்களையோதெரிவித்தாக வேண்டும்; தவிர தக்க விளக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அவரைச் சார்ந்தது என்பதை இக்கடித்தின் வழி தெரியப்படுத்திக்கொள்கிறேன்என முடித்திருந்தார்.

இந்தக் கடிதத்திற்குப் பாரதி விஜயம் நூலை வெளியிட்ட பதிப்பாசிரியர் நேரடியாகப் பதில் தரவில்லை. நூலாசிரியர் கடற்கரையும் பதில் தரவில்லை. அதற்குப் பதிலாக சந்தியா பதிப்பகத்தின் வழக்குரைஞரின் கடிதம் ஒன்றை மிரட்டும் ஆங்கிலத்தில் அனுப்பியிருக்கிறார்கள். அதனை அப்படியே தந்ததோடு மென்மையான தமிழ்ச் சொற்களால் மொழிபெயர்த்தும் தந்திருக்கிறார் சீனி விசுவநாதன். அந்த வழக்குரைஞர் கடிதத்திற்குப் பதில் அளிக்கும் விதமாக, 2017 டிசம்பரில் வெளியான கடற்கரையின் பாரதி விஜயம் நூலில் 21 இடங்களைப் பக்க எண்களோடு குறிப்பிட்டு அவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துத் தான் எழுதியிருப்பதாகத் தனது நூலின் பகுதிகளையும் பக்க எண்களோடு காட்டி விளக்கியிருக்கிறார். இந்தப் பகுதியில் கடற்கரை முன்வைக்கும் கருத்துகளும் தகவல்களும் விளக்கங்களும் நான் விளக்கியவை என்பதைச் சொல்வதோடு கடற்கரை இதையெல்லாம் தானே கண்டுபிடித்ததாகவும் தமிழ் ஆய்வுலகத்தைத் தட்டியெழுப்பிவிட்டதாகக் கூறுவதும் பொருத்தமற்றது மட்டுமல்ல; அவருக்கு முன்னால் பாரதி ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகளைகண்டுபிடிப்புகளைஉழைப்பை  மறைக்கும் நோக்கம் கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனி விசுவநாதனின் 32 பக்க்கடித்தில் சுட்டிக்காட்டப்படும் 21 இடங்களும் அதற்கான மறுப்பு விளக்கங்களும் தேர்ந்த மதிப்பீட்டாளரின் நேர்த்தியோடு இருந்தது. அவரது பாரதி ஆய்வுகள் பலவற்றையும் வாசித்தவன் என்ற வகையில் இந்த நேர்த்தியும் சொல்முறையும் எனக்குப் புதிதல்ல. கடற்கரை தனது நூலில் புது தகவல் என்று சொல்லும் பலவற்றைத் தனது நூல்கள் ஏற்கெனவே அச்சிட்டுள்ளன என்று காட்டுவதோடு, பெயர், இதழ், ஆண்டு போன்ற தகவல் பிழைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். சீனி விசுவநாதனின் நூல்களிலிருந்து மட்டுமல்லாமல், மற்ற பாரதி ஆய்வாளர்களிடமிருந்தும் கடற்கரை எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு, அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று விலகிக் கொள்கிறார்.  

அந்தச் சிற்றேட்டை வாசித்து முடித்தபின்பு எமது துணைவேந்தரிடம் வாய்மொழியாக இப்படிச் சொன்னேன்.  அலுவல் ரீதியாக இப்படித்தான் சொல்ல முடியும் . எழுதிக் கேட்டால் எழுதித் தரவேண்டும் என்பது பணிசார்ந்த கடமையும்கூட. சீனி.விசுவநாதனின் புகார் எமது பல்கலைக்கழகம் சார்ந்ததாகவோ, இன்னொரு பல்கலைக்கழகப் பட்டங்கள் சார்ந்ததாகவோ இல்லை என்பதால் எழுதித்தரும்படி வலியுறுத்தவில்லை.  எழுதிக்கேட்டிருந்தால் இப்படி எழுதித் தந்திருப்பேன்:

இது பல்கலைக்கழகப் பட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆய்வேடு அல்ல. ஆய்வேடாக இருந்தால் ஆய்வு முறைகளைப் பின்பற்றாமல், முன்னாய்வுத் தரவுகளைத் தனது கண்டுபிடிப்புகளாக காட்டும் அவரின் ஆய்வு நேர்மை ஏற்கத் தக்கதல்ல என்பதால், நமது பல்கலைக்கழகம் பட்டம் வழங்கக் கூடாது எனப் பரிந்துரை செய்வேன். அத்தோடு பலருடைய உழைப்பைத் தனது கண்டுபிடிப்பாகச் சொல்பவரைப் புலமையாளர் பட்டியலில் சேர்க்கவே கூடாது என்றும் சொல்வேன்.  இப்போது ஒரு பதிப்பகத்தின் வழியாக அச்சிட்ட நூலாக வந்துள்ளது. அதை நூலகத்தில் வாங்கி வைப்பதன் மூலம் ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டிவிடும் ஆபத்து இருப்பதால் நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன். அந்தத் தகவலை ஆய்வு நூலகங்களுக்குக் கடிதம் மூலம் ஒரு தகவலாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறேன்.

பின்குறிப்புகள்:

பல்கலைக்கழகப் பேராசிரியராக அந்தக் குறிப்பை எழுத வேண்டியது பணிசார்ந்த கடமை. அதைத் தாண்டிச் சிறுபத்திரிகை உலகத்தோடும் தமிழியலில் புலத்திலும் செயல்படும் அ.ராமசாமி என்ற தனிநபராக சிலவற்றைச் சொல்லவேண்டும்.   

துணைவேந்தரிடம் விளக்கிவிட்டு வந்தபின் சீனி.விசுவநாதனோடு தொலைபேசியில் பேசினேன். அவரது முன் வைப்புகள் ஏற்கத்தக்கவை; பதிப்பகத்தாரும் நூலாசிரியரும் உங்களோடு பேசியிருக்க வேண்டும்; அதற்குப்பதிலாக வழக்குரைஞர் வழியாகப் பேசியதை ஏற்க முடியவில்லை எனச் சொல்லிவிட்டு இந்தச் சிற்றேட்டை எங்கள் துணைவேந்தருக்கு அனுப்பிய காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டேன்.

நான் எல்லாப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் மட்டுமல்லாமல் ஆய்வு நிறுவனங்களுக்கும்  பெரும்பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரிகைகளுக்கும் அனுப்பியிருக்கிறேன் என்றார். உங்கள் பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குப் பேராசிரியர் சுந்தரனார் விருது வழங்கியது என்பதால் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவேண்டியது கடமையல்லவா என்று கேட்டார். அத்தோடு எனது கோரிக்கையை ஏற்று தினமணியில் மட்டும் ஒரு கண்டனக்குறிப்பு வந்திருக்கிறது என்றும் சொன்னார். கடற்கரைக்கு இந்த நூலுக்கு விருதுகொடுத்த ஆனந்தவிகடனுக்கும் அனுப்பியிருக்கிறீர்களா? என்று கேட்க நினைத்தேன்; ஆனால் கேட்கவில்லை.  

கடற்கரையை நான் அறிவேன். குமுதம் இதழில் மட்டுமல்லாமல் அதன் இலக்கிய முகமான தீராநதியிலும் காலச்சுவடு போன்ற இதழ்களிலும் எழுதிவந்த கடற்கரை மத்தவிலாச அங்கதம் (கடற்கரய்) என்பவரிடமிருந்து இப்படியொரு நிலைபாட்டை எதிர்பார்க்கவில்லை. முறைப்படியான மேற்கோள்களோடும், நன்றியறிதலோடும் முன்னோடி ஆய்வாளர்களை ஏற்றுக்கொள்பவராகவே நான் எதிர்பார்த்தேன். இலக்கிய அறம்சார்ந்த கேள்விகளை எழுத்தாளர்களிடமும் கல்விப்புலப்பேராசிரியர்களிடமும் அவ்வப்போது எழுப்பு வந்தவர். இப்போதும்கூட அவரது முகநூல் பதிவுகளில் அந்த அறம்சார் கேள்விகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. கடற்கரை குறித்த  எனது  மதிப்பீடும் நம்பிக்கையும் பொய்யாகிவிட்டது. 


சீனி.விசுவநாதனின் கடிதத்திற்குச் சந்தியா பதிப்பகத்தின் சார்பில் வழக்குரைஞர் என்ற வகையில் கடிதத்தைத் தயார் செய்து கொடுத்தவர் வெறும் வழக்குரைஞர் மட்டுமல்ல. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த செந்தில் நாதன் என்பது கூடுதலாக அதிர்ச்சியளித்தது. பாரதியையும் பாரதி ஆய்வாளர்களையும் கொண்டாடிய ஓர் இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்தவரால் இப்படியொரு கடிதத்தை உருவாக்கித் தருவது எப்படிச் சாத்தியம்? வழக்குரைஞர் தொழில்சார் கடமை என்று மட்டும் சொல்லி விலகிக்கொள்ள முடியுமா? 

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை