: 26

தரம் உயர்த்திக்கொள்ளல்

நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

முயற்சி திருவினை ஆக்கும் என்னும் அறவுரை தனிமனிதர்களின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான தூண்டுகோல். கடின உழைப்பு, தோல்வியில் துவளாமை, விடாப்பிடியான பயிற்சிகள் போன்றன தனிமனிதர்களின் வாழ்க்கைக்கான திறன்கள். அவைகளுக்குப் பின்னணியில் முயற்சி இருக்கிறது என்று நம்புவது மனித இயல்பு. இத்தகைய நம்பிக்கையை ஒரு நிறுவனம் கைக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்வதானால், தனிமனிதர்களின் தர உயர்வுக்கும் நிறுவனங்களின் தர உயர்வுக்கும் பின்னணியில் ஒரேவிதமான இயங்கியல் இருப்பதில்லை என்றாலும் இரண்டுக்கும் பின்னணியில் தரமானது எனக் காட்டிக்கொள்ளும் உத்தி இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. எமது பல்கலைக்கழகம் தன்னைத் தரமானது எனக் காட்டிக்கொள்ளக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் உழைப்பைச் செய்தது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்களும், நிர்வாகப்பணியாளர்களும், அவர்களை வழிநடத்திய துணைவேந்தர் அவர்களும் கூட்டாக இணைந்து விடாப்பிடியாக வேலைகளைச் செய்தார்கள்.

பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் அதனதன் அளவில் தன்னைத் தரப்படுத்திக்கொள்வதன் மூலம் பொதுத்தரநிலைக்கு உதவ முடியும் என்பதை உணர்ந்துகொள்ளும்படி பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஓராண்டுக்கு முன்பே தரப்படுத்துதலை அளவிடும் ஏழு வகைப்பாடுகளுக்கேற்ப முன்வைப்புகளும் சான்றுகளும் அனுப்பப்பட்டன. அதனை ஏற்றுக்கொண்டு தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழு வருகையை உறுதிசெய்தது. ஜூலை 18- 21 இல் வந்தது. இடையில் அளிக்கப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக மாணாக்கர்களிடம் இணையவழிச் சோதனைகளைச் செய்தது அந்தக் குழு.

தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் வருகைக்கு முன்பு இரண்டு மாதிரிக்குழுவின் பார்வைக்கு ஏற்பாடு செய்தார் துணைவேந்தர்.அக்குழுவின் பரிந்துரைப்படி மேலும் செய்யவேண்டிய பணிகள் கவனம் பெற்றன.அதிகம் கவனம் பெறவேண்டிய துறைகள், வேலைகள் கண்டறியப்பெற்றன. சிறப்பான துறைகளை மேலும் சிறப்பாக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. பொதுநிலைப்பணிகளான சாலைகள், வளாகப் பாதுகாப்பு, மாணவர்கள் நலன் சார்ந்த மருத்துவம், விடுதிகள், சுற்றுச்சூழல் கவனம், உதவித்தொகைகள், தகவல் தொடர்பில் தடையின்மை, விழிப்புணர்வூட்டல் போன்றன கூடுதல் கவனம் பெற்றன. இப்போது பல்கலைக்கழக வளாகம் தேர்ந்த கல்வி வளாகமாக - முழுமையை நோக்கி நகர்ந்துவிட்டது.

முதன்முதலில் வந்த குழுவின் அறிக்கை மற்றும் ஆலோசனையில் எங்கள் தமிழியல் துறையின் செயல்பாடுகளும் இருப்பும் அறிக்கை அளிப்பும் சிறந்ததாகக் கொண்டாடப்பட்டது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொள்கிறேன். அதன் தொடர்ச்சியாகத் துணைவேந்தரின் கவனம் தமிழியல் துறையின் பக்கம் திரும்பியது. மேலும் நிதி ஒதுக்கி நாங்கள் ஆவணப்படுத்தியிருந்த பண்பாட்டுக் காட்சியகத்தை விரிவாக்க உதவினார். நவீனக் கருவிகளை வாங்கும்படி வேண்டிக்கொண்டார். உள்ளரங்கக் காட்சியகமாக இருந்த பண்பாட்டு ஆவணக்காப்பகம் திறந்தவெளி காட்சியகமாக விரிக்கப்பட்டது. குழுவினரும் வந்து பார்வையிட்டுப் பாராட்டினர்.

தரப்படுத்துதல், தரத்தைத் தேர்வுசெய்தல், தரம் உயர்த்துதல், தரமானவற்றை விரும்புதல் என்ற சொல்லாடல்கள் ஒருவிதத்தில் உள்வாங்கும் சமூகப்போக்குக்கு எதிரானது. தரமானவை X
தரமற்றவை என்ற இரட்டை எதிர்வில் தரமற்றவை கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்படும் என்பதும், காலப்போக்கில் காணாமல் போகும் என்பதும் அதன் இயங்கியல். நிகழ்கால அரசியல் பொருளியல் அடிப்படைகள் இதனையே விரும்புகின்றன; ஏற்றுக்கொண்டுவிட்டன. அதனைப் புரிந்து கொள்ளாத பொதுப்புத்தியும் அதனை நம்புகிறது; ஏற்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் ஒவ்வொருவரின் இருப்பும் உறுதியாகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நிலைபெறுகிறது.

தேசிய அளவுப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னேறும்போது அதன் பலனைத் துணைவேந்தரும் நிர்வாகமும் மட்டும் அனுபவிக்கப்போவதில்லை. துணைவேந்தருக்குப் பெருமையும் பாராட்டும் கிடைக்கும் என்பது உண்மைதான். அது அவரது அடுத்த தாவலுக்கு உதவும் என்பதும் உண்மை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல்கலைக் கழகத்தின் இந்தத் தாவல் இங்கே பயின்று பட்டம் பெறுபவர்களுக்கு முதன்மையாகப் பயனளிக்கக் கூடியது. அவர்களது சான்றிதழில் இந்தக் குறியீடு இடம்பெறும். அதனாலேயே அவர்கள் பெறும் பட்டம் மதிப்புப்பெறும். அதன் வழியாக அவர்களின் வேலைவாய்ப்பும் பணி உயர்வும் சாத்தியமாகும். இங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆய்வு வாய்ப்புகள் கிடைக்கும். அனுப்பப்படும் ஆய்வுத்திட்டங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யும், தொடங்கவும் தொடரவும் நிதி ஒதுக்கீடுகள் நடக்கும்.

நாம் இருக்கும் இடத்தின் தரம் நம்மை உயர்த்தவும் உதவும். இது இப்போது நடந்திருக்கிறது. இதற்குக்காரணமான பல்கலைக்கழகத்தின் இப்போதைய துணைவேந்தர் திரு. கிருஷ்ணன் பாஸ்கர் பாராட்டுதலுக்குரியவர்.
.

https://www.msuniv.ac.in/Home/Video-Gallery

Image may contain: 4 people, people standing


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →



இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை