: 49

நிகழ்வுகளின் மீது இரண்டு குறிப்புகள்

கலங்காத நதியின் உறுமீன்
========= ================
உள்நாட்டு மீன்பிடிப்புக்கு உகந்த காலமல்ல இது. பொழுதுபோக்காக அதைச் செய்யவிரும்பும் ஒருவர் நல்ல தூண்டிலோடு செல்லலாம்.கரைகளில் அமர்ந்து தூண்டிலை வீசிக்காத்திருக்கலாம். புழுவைத் தின்னும் மீன்கள் வளை ஊசிகளை ஒதுக்கித் தூண்டில் புழுவை மட்டும் ருசித்து விளையாட்டுக் காட்டலாம். நன்றாகப் பொழுதுபோகும்.

எனக்கு மீன்பிடித்தே ஆகவேண்டும் என்று கிளம்பும் நபர் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் படகொன்றை எடுத்துக்கொண்டு நீர்ப்பரப்பிற்குள் செல்ல வேண்டும். ஆழமான நீர்ப்பரப்பில் மீன்பிடிக்க உதவும் வலைகளைக் கையாளும் திறன் தனக்கு இருக்கிறது என நம்பிச்செல்லும் அவருக்கு எச்சரிக்கையும் வேண்டும். இல்லையென்றால் பெரும் புறாக்கள் படைக்க கவிழ்த்துப் போடும். சிறிய வலையோடு சென்ற அவர் மேலேவந்து மூச்சுவாங்கும் சின்னச்சின்ன மீன்களைப் பிடித்துத் திரும்பிவரலாம். அதில் திருப்தி அடைய வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்ப்பெருக்கு. மலைப்பிரதேசங்களில் மழை பெய்வதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. நதிகளிலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் நீர்ச்சுழல். நீர்நிரம்பும் பெருவெளிகள் தாண்டி சிறுவெளிகளான ஏரிகளிலும் கண்மாய்களிலும் குளங்களிலும்கூட நீர்ப்பரப்பு தளும்பி நிற்கிறது. 
இந்த நேரத்தில் குளங்களையோ குட்டைகளையோ கலக்கி மீன் பிடிக்கலாம் என நினைப்பது முட்டாள்தனமானது.

தமிழகத்தின் அரசியல் மீன்களும் உறுமீன்களாக இருக்கின்றன. கலங்கியநதியாக மாறாத கருத்தியல் ஓட்டம் அதன் வெளிப்பாடு. அங்கு வருமீன்களைக் கையாளலாம். உறுமீன்களைக் கவ்விப்பிடித்தல் எளிதல்ல.

Image may contain: one or more people, sky, tree, ocean, outdoor, nature and water

நடுநிலையின் மொழி
=====================
நடுநிலையின் அடையாளமும் சார்புநிலையின் அடையாளமும் முகம் திரும்பும் அளவுகளில் வெளிப்பட்டுவிடும்.எதிரெதிராக இருக்கும் இரண்டு வரிசைகளுக்கும் நடுவில் நின்றாக வேண்டும். இரண்டு பக்கமும் சமஅளவில் திரும்பும்/ திருப்பும் வாய்ப்பையும் விருப்பத்தையும் கழுத்தும் கண்ணசைவும் கொண்டிருக்கவேண்டும்.

இங்கே நடுநிலையாளர்கள் இதற்கு மாறாகவே வெளிப்படுகிறார்கள். ஏதாவதொரு பக்கத்தின் முன்வரிசையில் உட்காரவே விரும்புகிறார்கள்; உட்காருகிறார்கள். சிலநேரம் அவ்வரிசையின் நடுவில் அமர்கிறார்கள்; சில நேரங்களில் அதே வரிசையின் ஓரத்தில் அமர்கிறார்கள். அவர்கள் பேசத்தொடங்கும்போது அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கத்தின் பின்வரிசைக்காரர்களைப் பார்ப்பதுகூடக் கிடையாது. பார்க்கவேண்டுமென நினைப்பதும் கிடையாது. அவர்மீது அவருக்குப் பின்னிருப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்றுகூட நினைப்பதில்லை. அவ்வப்போது பின்னிருந்து ஒலிக்கும் கைதட்டலும் ஆலாபனைகளும் அதை உறுதிசெய்யும் குறிப்பான்கள் என்பதைத் தெரிந்திருக்கிறார்கள்.

பின்னிருக்கும் கூட்டத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் எதிர்வரிசையை நோக்கிக் கும்பிடுவதும் குழைவதும் அவர்களின் வெளிப்படையான உடல் மொழியாக இருக்கிறது. குரல்மொழியில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். கிடைத்துவிட்டால் எதிர்வரிசைக்குத் தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குகிறார்கள். அவர்களின் சார்பாளராகவே இந்தப்பக்கம் அமர்ந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.

உலகமயத்திற்குப்பின்னான தொலைக்காட்சி ஊடகங்களின் வருகையும் வெளிப்படையை வரவேற்கும் சமூக ஊடகங்களின் பெருக்கமும் நடுநிலையாளர்களின் உடல்மொழியையும் குரல்மொழியையும் அம்பலத்திவிட்டன. சாதாரண நாட்களில் போராளிகளாகத் தோன்றும் ஆளுமைகள், நெருக்கடியான நிகழ்வுகளின்போது நகைச்சுவையாளர்களாகத் தோன்றுகிறார்கள். பெயர்கள் சொல்லி - எடுத்துக்காட்டுகள் காட்டி விமரிசிக்க வேண்டியன என்பது புரிகிறது. அப்படி எடுத்துக்காட்டினால், பெயர் சொன்னால் அவர்களோடு நின்றுபோகும். மற்றவர்கள் அப்படியில்லை என்று விலகிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதைத் தவர்க்கவே உதாரணங்கள் சொல்லப்படவில்லை.அவரவர்களுக்குப் புரியும்; புரியவேண்டும்.

சிறுபிள்ளைத்தனமும் எள்ளலும் அங்கதமும் பேதமையும் கவனத்துடன் கையாள வேண்டிய உத்திகள்.

No automatic alt text available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை