: 67

அச்சமூட்டுவது அதிகாரத்தின் விளையாட்டு

பாம்பு படமெடுத்து ஆடும் அழகு கண்ணுக்கு விருந்து. ஆட்டுவிக்கும் பிடாரனின் மகுடியின் வெளிப்பாடு காதுக்கு சுகம். அதே நேரத்தில் பையிலிருக்கும் பணத்துக்கு ஆபத்து. 


மகுடியிலிருந்து கிளம்பும் ஒலிக்குக் காதைக் கொடுத்துவிட்டுப் படமெடுக்கும் பாம்பின்மீது கண்ணை வைத்திருக்கும் நேரத்தில் பாம்பாட்டியின் நண்பர்கள் தங்கள் கைவரிசியைக் காட்டிவிடுவார்கள். கால்சட்டைப் பையிலிருக்கும் பணத்தைத் திருடிவிடும் வாய்ப்புகள் அதிகம் திருடுவதற்கான - திசைதிருப்பலுக்காகவே பாம்பு, மகுடி, பிடாரன் என ஒத்திசைந்த தாளலயம் உருவாக்கப்படுகிறது. இந்தக் கருத்தோட்டம் புரிந்தவர்கள் அந்த இடத்தில் நிற்பதே இல்லை.


எனக்கு அந்த அனுபவம் உண்டு. எனது பணப்பொதியைப் பறிகொடுத்திருக்கிறேன். என்றாலும் பிடாரனின் மூச்சிழுப்பையும் ஆடி அடங்கும் பாம்பையும் பார்க்கும் ஆசை தீரவில்லை.


இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் வழியாக நல்லாட்சி நடத்துவதற்கான மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றபோதிலும் தேர்தல் திருவிழாவிற்காகக் காத்திருப்பதில்லையா? போட்டியிடும் கட்சிகள் குறித்து, அமையும் கூட்டணிகள் குறித்து, அவற்றின் தந்திரமான உத்திகள் குறித்து, நிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து எனத் தொடர்ந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறோம். எல்லாமே ஒருவிதத்தில் பாம்பும் பிடாரனும் அவரது நண்பர்களும் நடத்தும் கூட்டுவினைகள் போலவே இருக்கின்றன.

அடுத்த ஆட்டத்திற்கான - திருட்டுக் கொள்ளைக்கான இசைலயம் ஊதப்படுகின்றன. இன்னும் பாம்புகள் வட்டப்பெட்டிக்குள்ளிருந்து வெளியே வரவில்லை. வரப்போவது ஒற்றைப்பாம்பா? ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து கூடும் சேர்க்கைப் பாம்புகளா என்பதும் இன்னும் முடிவாகவில்லை. பாம்பாட்டிகளின் தகடுதித்தங்களைக் கூவிக்கூவிச் சொல்லும் எச்சரிக்கை மணிகளின் நாதங்கள் நிறுத்தப்படுகின்றன. ஓங்கி முரசறைந்து சொல்வார்கள் என்று அறிந்துகொள்ளப்பட்டவர்கள் அடைக்கப்படுகிறார்கள். பாம்புகளால் துரத்தப்படுவீர்கள் என்ற அச்சவுணர்வு ஊட்டப்படுகிறது.

எல்லா அதிகாரங்களும் கொண்ட பேரரசனுக்கு ஆபத்து அவரது காவலர்களால் ஏற்படக்கூடும். வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. புனைவுகளும்கூடச் சொல்லியிருக்கின்றன. இப்போது சொல்லப்படுவது பாதுகாப்பற்றவர்களாய் அலையும் தனிநபர்கள் - நான் பாதுகாப்பாற்றவனாய் இருக்கிறேன்; என்னைப்போலவே நீங்களும் பாதுகாப்பற்றவர்களாய்த்தான் இருக்கிறீர்கள் என்று பெருங்கூட்டத்திடம் பாதுகாப்புக்கேட்பவர்கள் அச்சமூட்டுபவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்களின் அடையாளங்கள் கவியாக இருக்கிறது. மனித உரிமைப் பணியாளர் என்பதாக இருக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் மௌனத்தை மொழிபெயர்ப்பவர் என்பதாக இருக்கிறது. தங்கள் அறிவை மக்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும் அறிவுஜீவிகள் என்ற சொல்லை நகர நக்சலைட்டுகள் என மொழிபெயர்த்துத் திரிக்கிறது அதிகாரம்.

அச்சங்கொண்ட அமைப்பு தனிமனிதர்களை அச்சத்துக்குரியவர்களாகச் சொல்வது விநோதம்; வேடிக்கை. . கண்டிக்கப்படவேண்டிய நகைமுரண்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை