: 67

தன்னம்பிக்கை எழுத்துகள்- ஒரு பார்வை

தமிழில் அதிகம் விற்கும் நூல்கள் எவை என்ற புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. எழுத்தின் வகைகளில் இலக்கிய வகைகளாகச் சொல்லப்படும் கவிதை, புனைகதை, நாடகம் போன்றவைகள் முதல் மூன்றிடங்களில் இருக்காது என்பதே உண்மை. தொடர்கதைகளாக எழுதியபின் நாவல் என்று வகைப்படுத்திப் பதிப்பிக்கப்படும் கதைகள் அதிகம் விற்றுள்ளன. கடந்தகாலத்திலிருந்து இன்றுவரை சாதனையாக இருப்பவர் கல்கி. பாலகுமாரன், விமலாரமணி, போன்றவர்கள் நிகழ்கால உதாரணங்களாக இருக்கிறார்கள்.

திரைப்படப் பாடலாசிரியராக இருந்ததால் - இருப்பதால் அதிகம் விற்கும் கவிதை நூல்களை எழுதியவர்களாகக் கண்ணதாசனும்,. வைரமுத்துவும் இருக்கிறார்கள். சிறுகதை ஆசிரியர்கள், நாடகாசிரியர்களெல்லாம் போட்டிக்கே வருவதில்லை. ஆனால் இவர்களோடு போட்டியிடுபவர்களாக தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள்/ எழுத்தாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். எனது இளமைப்பருவகாலத்தில் எம்.எஸ். உதயமூர்த்தி இருந்தார். அவரது பேச்சுகளைக் கேட்டதில்லை. ஆனந்தவிகடனில் தொடராக எழுதப்பெற்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பிறகு நூல்களாகவும் வாசித்திருக்கிறேன். ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இருந்தத்தில்லை. எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் வேறுவேறாக இருக்குமோ தவிர புதியன தேடும் ஒரு வாசகனுக்கு வாசிப்புக்களிப்பை அவை தருவதில்லை. 
தன்னம்பிக்கை எழுத்துகள் என்பதின் நிகழ்கால அடையாளமாகப் பலர் இருக்கிறார்கள். வெகுமக்கள் ஊடகங்களில் திரும்பத்திரும்ப அறியப்படும் பெயராக இருப்பவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இவரைப்போலப் பலர் பலவிதமான இதழ்களில் எழுதிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களது எழுத்துகளைப் பற்றியும்கூடப் பல்கலைக்கழக ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஆய்வுகள் என்னவகையான முறையியலை - ஆய்வுப்பார்வையைக் கொண்டிருக்கின்றன என்பது பெரிய கேள்வி. தமிழ் ஆய்வுகளில் வெவ்வேறு வகையான இலக்கியவகைப்பாடுகளுக்கும் தனித்தனியான வரையறைகள் இருப்பதான நம்பிக்கைகள் எதுவும் வெளிப்படவில்லை. 
தமிழில் எழுதப்பெறும் எல்லாவகையான எழுத்துகளையும் ஒரே அளவுகோல்களால்தான் அளக்கிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் - முறைப்படுத்தும் ஆய்வு மையங்கள் எதுவும் இங்கு இல்லை. இருப்பதாக நம்பிச் செயல்படும் அதிகாரம் இருப்பதாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றன நினைக்கவுமில்லை. அவைகளும் இன்னொரு பல்கலைக்கழகத்துறைகள் போலவே செயல்படுகின்றன.
இதனைச் சுட்டிக்காட்டவும் எவ்வாறு பார்க்கலாம் என்பதைக் கோடிட்டுக்காட்டவுமான ஒரு வாய்ப்பை ஒரு அறக்கட்டளைச் சொற்பொழிவைப் பயன்படுத்திக்கொண்டேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் கவிதாசன் பெயரில் நிறுவப்பெற்றுள்ள அறக்கட்டளை அது. கவிதாசன் அவர்கள் முதன்மையாகத்தன்னை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக/ எழுத்தாளராக நம்புகிறார். வெளிப்பட்டிருக்கிறார். 50 நூல்களுக்கும் மேல் அவர் எழுதியதாக அச்சிடப்பெற்றுள்ளது. தொடர்ந்து மறுபதிப்புகளும் கண்டுள்ளன. விற்றுக்கொண்டிருக்கின்றன. தன்னம்பிக்கைக் கருத்துகளை உரைநடையில் சொன்னதையே கவிதை வடிவிலும் சொல்ல முயன்றுள்ளார். அவரது எழுத்துக்களில் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும் சொற்களாக முயற்சி, தன்னம்பிக்கை, வெற்றி என்பன. இந்தச் சொற்களைக் கொண்டு அவர் சொல்லாடும்போது இருப்பைக் குறித்தே பேசுகிறார். உன்னை நீ அறிந்துகொள்; உன் இருப்பை மாற்ற முயற்சி செய்; தன்னம்பிக்கையோடு முயற்சி செய்; வெற்றி உறுதியானது சொல்லும் இந்தச் சொல்லாடல்கள் வெற்றிக்கான வழிமுறைகளைச் சொல்வதில்லை.
இத்தகைய குரல்களுக்கு ஒரு பின்னோக்கிய தடங்கள் இருக்கின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் எனப் போய் பின்னிடைக்காலத்தில் எழுதப்பெற்ற நீதிநெறிவிளக்கம், சதகங்கள், எனச் சென்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வெளிப்படும் நல்லன எவை? கெட்டன எவை? என்ற தொகுப்புரைகளில் நிலைகொள்ளும். அந்தத்தொகுப்புரைகள் அவ்வக்கால இருப்பை ஏற்றுக்கொண்டு தனிமனித மனங்களுக்கான நினைவுப்பாதையை உருவாக்கித் தருவனவாக இருந்ததை உணர்த்தலாம். இந்த வகையில் - நிலைப்பாட்டில்தான் தன்னம்பிக்கை எழுத்துகளும் இலக்கியமாக அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றை இலக்கியம் என்ற தனி அடையாளமாகக் கொள்வதைவிட ‘எழுத்துகள்’ என்ற பொது அடையாளத்துக்குள் நிறுத்திக்கொள்ளலாம்.

Image may contain: Raja Sundararajan
Image may contain: 5 people, including Vel Kannan, people standing


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை