: 215

அந்தப் போட்டியில் நானும் இருந்தேன்.

அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன் அவர்களைத் தெரிவுசெய்து நியமித்திருக்கிறார் தமிழக ஆளுநர். துணைவேந்தராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவுக்குழு உருவாக்கப்பெற்று அதன் பணிகள் 02-07-2017 தொடங்கியது. இந்திய அளவில் 35 பேர் தங்களின் தகுதிகள், திறமைகளை உரிய விண்ணப்பத்தில் நிரப்பி 27/8/2018 -க்குள் அனுப்பி வைத்திருந்தார்கள். நானும் விண்ணப்பம் அனுப்பியிருந்தேன். அனுப்பிய விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த தெரிவுக்குழு 25 பேரைத் தவிர்த்துவிட்டு 10 பேரை மட்டும் நேரடி உரையாடலுக்கு அழைத்தது. 10 பேரில் ஒருவனாக நானும் இருந்தேன். உரையாடலுக்குப் பின் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்படும் 3 பேர்கொண்ட பட்டியலில் நான் இல்லை. இடம்பெற்ற 3 பேருமே மொழியியல் துறை சார்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வழிநடத்தத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை எனத் தெரிவுக்குழு நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் 3 பெயர்கொண்ட பட்டியலில் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரையும் இணைக்கவில்லை. இதுவரையிலான தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக இருந்தவர்களில் பல தமிழ்ப் பேராசிரியர்களும் இருந்திருக்கிறார்கள்; சிலர் மொழியியல் துறையில் பேராசிரியர்களாக இருந்தவர்கள். அதன் முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியம் மொழியியலும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர். முனைவர் ச.அகத்தியலிங்கமும் அப்படியே. ஆனால் முனைவர் கி.கருணாகரன் தமிழ் அறிந்த மொழியியல் பேராசிரியர். இப்போது வந்துள்ள முனைவர் கோ. பாலசுப்பிரமணியன் முழுமையான மொழியியல் பேராசிரியர். இதற்கு முன்பு துணைவேந்தராக இருந்த முனைவர் பாஸ்கரன் இவ்விரு துறைகளையும் சேர்ந்தவர் அல்ல. தத்துவப் பேராசிரியர். யாருடைய காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறப்பாக அதன் பணிகளைச் செய்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் மொழியியலாளர்கள் தமிழ்மொழி சார்ந்த உணர்வுகளுக்கும் இலக்கிய பெருமதிகளுக்கும் எப்போதும் மதிப்பளிப்பதில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

மற்ற பல்கலைக்கழகங்களின் துணவேந்தர்கள் தரவேண்டியது நல்லதொரு நிர்வாகம் மட்டுமே. ஆனால் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு நிர்வாகப் பணியோடு தமிழின் வளர்ச்சியையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. அதனை நன்குணர்ந்தவனாக நான் தெரிவுக்குழுவின் முன்னால் என்னை முன்வைத்தேன்.

தெரிவுக்குழுவின் முன்னால் உரையாடல் செய்வதற்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் அனுப்பிய சிறு குறிப்பை இங்கே பதிவிடுகிறேன். முதலில் இருப்பது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானால் என்னென்ன செய்வேன் என்ற எனது முன்மொழிவு. இரண்டாவதாக இருப்பது அந்தக் கனவை நிறைவேற்ற நினைத்த எனது தகுதிகளும் திறமையும். இப்போது துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டிருப்பவரைவிட என்னுடையவை குறைவான தகுதிதானா என்பதை நீங்களே படித்துப்பார்த்து முடிவுசெய்துகொள்ளுங்கள்.

=========================================

தமிழ்ப் பல்கலைக்கழகம் செல்லவேண்டிய திசை

·     தமிழ்ப் பல்கலைக்கழகம் தனித்தன்மையும் தன்னாட்சித் தன்மையும்கொண்ட ஆய்வுப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ஒன்றுஅதனால், தமிழியல்சார்ந்த மற்ற நிறுவனங்களோடு ஒருங்கிணைப்பின்றித் தனியாக இயங்கியது. காலச் சூழலுக்கேற்ப அந்நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுதமிழின் மொழி,இலக்கிய, பண்பாட்டுப் போக்குகளைக் குறித்த கடந்த காலஎதிர்காலச்சொல்லாடல்களையும் கருத்தோட்டங்களையும் விவாதிக்கும் ஒரு நிறுவனமாக இயங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த விவாதங்கள் தமிழ் நாட்டு எல்லைக்குள் நின்றுவிடாமல் இந்தியப்பார்வையையும் உலகப்பார்வையும் கொண்டதாக அமையும்.  அப்படிப்பட்ட பார்வையை முன்வைக்கும் பாடத் திட்டங்களை உருவாக்கித் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் ஆய்வுத் துறைகளையும் கற்பிக்கும் நிறுவங்களையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்ய முயற்சிக்கும்.இதற்காகத் தமிழாய்வு அமைப்புகளோடும் தமிழ் கற்பிக்கும் நிறுவனங்களோடும் கற்பித்தல்ஆய்வுத் திட்டம், தமிழை இற்றைப் படுத்துதல் என்ற நிலைகளில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும்.

·     தமிழின் திறமான வளர்ச்சிக்காக அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் இந்தியவியல் துறைகளைப் போன்ற அமைப்புடைய – நோக்கங்கள் கொண்ட- ஒரு துறை தொடங்கப்படும். அயல்தேசங்களில் இருக்கும் இந்தியவியல் துறைகள் பெரும்பாலும் தென்னாசியவில் படிப்பு (SOUTH ASIAN STUDIES) அல்லது தென்கிழக்காசியவியல் படிப்பு (SOUTH EAST ASIAN STUDIES) என்ற பிரிவின் கீழ் செயல்படுகின்றன. இந்தியவியல் துறையில் சேரும் ஒரு மாணவிக்கு அல்லது மாணவனுக்கு இந்தியப் பொதுமனத்தைப் புரிந்து கொள்ள உதவும் அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாறுகள் அடங்கிய இந்திய வரலாற்றைக் கற்றுத்தருகிறார்கள். அதே போல் இந்திய மதங்களைப் பற்றியும் இந்திய தத்துவ மரபு பற்றியும் தாள்கள் உள்ளன. அதே நோக்கத்தோடு கூடிய படிப்புகளை இங்கே தொடங்க வேண்டும். அதற்காக உலகம் முழுவதுமுள்ள இந்தியவியல் துறைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும்.இந்தியவியல் துறைகளில் பணியாற்றத் தேவையான ஆசிரியர்களை உலகெங்கும் உள்ள இந்தியவியல் துறைகளிலிருந்து நிரந்தரமாகவும் குறுகிய காலத்திற்கும் ஆசிரியர்களைக் கடன் பெற்றே அந்த மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் வழியாகத் தமிழ்மொழியோடு தொடர்புடைய மொழிகளைக் கற்று அதற்குள் தமிழ் இலக்கியம்பண்பாடு போன்றவற்றைக் கடத்த வேண்டும்.

·     நமக்கு ஏராளமான அயல்படிப்புத்துறைகள் தேவைப் படுகின்றன. தமிழ்-இந்திய மொழிகளுக்குள் மட்டும் போதாது என நினைக்கும் போது இயல்பாகவே ஆசியவியல் துறைகளையும், ஐரோப்பிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளுக்கான படிப்புகளையும் தொடங்க வேண்டும் என்ற தேவை உருவாகும். ஏனென்றால் உலகமயமாகி விட்ட இன்றைய சூழலில் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும். அப்போது தான் தமிழர்கள் வெறும் சேவைப் பணியாளர்களாக இல்லாமல், மூலதன உற்பத்தியைக் கையாள்பவர்களாகச் சீனத்துக்கும், ஜப்பானுக்கும் பிரேசிலுக்கும், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் போக முடியும். தமிழின் தனித்துவத்தை –தமிழர்களின் ஆளுமையை உலகிற்குச் சொல்ல முதலில் தேவை அந்தந்த நாடுகளையும் பண்பாட்டையும் நமது மொழியில் சொல்ல நூல்கள் வேண்டும். அதே நேரத்தில் நமது பண்பாட்டையும் இலக்கியத்தையும் பிறமொழிகளில் சொல்லவும் நூல்கள் வேண்டும்.அதைத் தூண்டும் வேலைகளைப் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும். ஐரோப்பிய மொழிகளில் சொல்வதற்கான முயற்சிகளுக்கு இணையாக இந்திய மொழிகளிலும் சொல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தியப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் மொழி, இலக்கியத் துறைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட முயற்சி எடுக்கப்படும்

·     தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில ஆய்விதழ்கள் வெளியிடப்படும். பொதுவான ஆய்விதழ்களோடு தனித்துறைகளுக்கான ஆய்விதழ்கள் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்படும்அச்சிதழாக அல்லாமல்காலம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு இணைய இதழ்களாக இவை வெளியிடப்படும்ஆண்டொன்றுக்கு உலக அளவிலான ஆய்வுக் கருத்தரங்கமும் கலைபண்பாட்டு விழாவும் நடத்தப்படும்.உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தும் அமைப்போடு தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடர்பங்காளராக ஆகும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

·     உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் பங்களிப்புடன் உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்னும் திட்டம் நிறைவேற்றப்படும்.  அதன் துணைவிளைவாக பரப்பியல் படிப்புகள் வளரத் தூண்டப்படும்.இணையத்தில் தகவல்களைத் தரும் விக்கிபீடியாவிக்கி டிக்சனரி,அகரமுதலிகள் போன்றவற்றின் செயல்பாடுகளில் பல்கலைக்கழகம் ஆலோசனை அளவிலும் கருத்துரு நிலையிலும் பங்களிப்பு செய்யும்தமிழ்மொழிஇலக்கியம்பண்பாட்டு ஆளுமைகளைப் பற்றிய கையேடுகள் உருவாக்கம் போன்ற பணிகளைக் குறுகியகாலப் பணித்திட்டங்களாக அறிவித்து ஆய்வுமாணவர்களுக்கும் முதுகலை மாணவர்களுக்கும் பகிர்ந்தளித்து முடிக்கப்படும்

·     பல்கலைக்கழக வளாகத்தில் நிலையான பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்அக்காட்சியகம் தமிழின் திணைக் கோட்பாட்டு அடிப்படையில் உருவாக்கப்படும்.  வட்டாரப் பண்பாட்டை நிறுவும் விதமாகப் புழங்கு பொருட்கள்,  கலைப்பொருட்கள்தொன்மைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுத் தமிழின் பண்பாட்டுச் சுற்றுலா மையமாக மாற்றப்படும்பரந்துபட்ட தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தைத் தமிழகச் சுற்றுலா வரைபடத்தில் ஒன்றாக மாற்றும் நோக்கத்தோடு பயன்படுசெடிகளோடும் பயிர்களோடும் கூடைய நீர்வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படும்.

·     தேசிய தரமதிப்பீட்டில் (NAAC)உயர்வான புள்ளிகளைப் பெறுவதின் வழியாக பல்கலைக்கழக மானியக்குழுவின் துணையமைப்பான ரூஸா(RUSA)விடமிருந்து நிதியைப் பெறமுடியும். தமிழக அரசிடமிருந்து மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கு இணையாக நிதிபெறும் நோக்கத்தில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக் கோரிக்கைகள் வைக்கப்படும்.  அத்தோடு மைய அரசின் மனித வளமேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சாகித்திய அகாடெமி, சங்கீத் நாடக அகாடெமி, லலித்கலா அகாடெமி போன்றவற்றிடமிருந்து நிதிபெறும் வகையில் திட்டங்கள் அளிக்கப்படும். ஆய்வுத் திட்டங்களுக்காகவும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் மாநில அரசின் தமிழ் வளர்ச்சித்துறைஇந்தியவியல் நிறுவனம்புதுவை,தஞ்சையில் இயங்கும் தென்னகப் பண்பாட்டு மையம்பெங்களூரில் செயல்படும் கலைகளுக்கான இந்திய நிறுவனம்பெங்களூரில் செயல்படும் மொழிபெயர்ப்பு நிறுவனம் போன்றவற்றோடு தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.

·     உலகமயத்திற்குப் பிறகு தனியார் நிறுவனங்கள் கலை பண்பாட்டுத்துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வதைத் தங்களின் சமூகப்பொறுப்பாக நினைக்கின்றன. அந்நினைப்பைத் தூண்டும்விதமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்களுக்கான பணிகளையும் செய்துகொடுத்து நிதிபெற முயற்சி செய்யப்படும். குறிப்பாகத் தமிழ்நாட்டின் நிதிநல்கையாளர்கள் பலரும் பல்கலைக்கழக வளர்ச்சியில் பங்கேற்கும்படி தூண்டப்படுவர். 

                              =========================================

துணைவேந்தராக எனக்குரிய தகுதிகள்

எப்போதும் ஒரே இடத்தில் தங்கிவிடுவதில் விருப்பம் இல்லாமல் தொடர்ச்சியாகப் பயணங்களால் ஆன வாழ்க்கையை விரும்பியவனாக இருந்துள்ளேன். எனது கடந்தகால வாழ்க்கை தொடர்ச்சியான பயணங்களால் ஆனது. பயணங்களை இடங்களையும் நாடுகளையும் சுற்றிப்பார்க்கும் பயணம் என்ற அளவில் மட்டும் நான் கருதியதில்லை. தேடலும் திரட்டலும் பயன்பாட்டு நோக்கில் இருக்கவேண்டும் என்ற நிலைபாட்டில் எனது திட்டமிட்டவன். எனது 30 ஆண்டுக்கால ஆசிரியப்பணியையே இதற்கான எடுத்துக் காட்டாகச் சொல்வேன்.

கல்வியாளனாக ….

நான் பயின்ற அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு கல்வியாண்டுகள் தற்காலிகப் பணியில் இருந்துவிட்டுப் புதுவைப்பல்கலைக்கழகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் 1989 இல் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். கல்லூரிப்படிப்புக் காலத்திலேயே இக்கால இலக்கியங்களைத் தொடர்ச்சியாக வாசிக்கும் விருப்பம் இருந்தது. கவிதை எழுதுதல், கதை எழுதுதல் என்ற ஆர்வங்களும் இருந்தன. அதுபோன்றதொரு தன்னீடுபாடு காரணமாகவே மதுரையில் செயல்பட்ட நிஜநாடக இயக்கத்திலும் சேர்ந்து செயல்பட்டேன். அந்த ஈடுபாடேபுதுவைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவி கிடைக்கக் காரணமாக அமைந்தது.

 சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின்  செயல்பாடுகளும் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராக விரும்பினேன். அதன் விளைவாகவே புதிதாகத் தொடங்கப்பட்ட மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் ஆசிரியராகச் சேர்ந்தேன். புதுச்சேரிப் பல்கலைக்கழகம் மையப்பல்கலைக்கழகம் என்ற போதிலும் அங்கிருந்து வெளியேறிய என் முடிவு எல்லா வகையிலும் எனக்குப் பெருந்திறப்பாக அமைந்தது. ஆய்வுசெய்தல், நெறிப்படுத்துதல், பாடத் திட்டங்கள் உருவாக்குதல், புதிய தாள்களை அறிமுகம் செய்தல், புதியவகைப்படிப்பு முறைகளைச் சோதித்துப் பார்த்தல். கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், மாநாடுகள் போன்றவற்றை நடத்தும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. செம்மொழி நிறுவனத்தின் உதவியோடு ஒரு பெரும் கருத்தரங்கையும் ஒரு பயிலரங்கையும் நடத்தியுள்ளேன். தமிழக அரசின் உயர்கல்வி நிறுவன நிதியுதவியுடன் பாடத்திட்ட உருவாக்கம் குறித்த பயிலரங்கையும் நடத்தியுள்ளேன். துறையில் இயங்கும் 10 அறக்கட்டளைகள் நிகழ்வுகள், பல்கலைக்கழக நிதியுதவியில் கருத்தரங்குகள், தொடர்சொற்பொழிவுகள் என்பன வருடாந்திர நிகழ்வுப்பட்டியலில் உள்ளன.

எமது பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகவும் ஆசிரியராகவும் ஏற்பாடுசெய்து கல்விப்புலச் செயல்பாடுகளை மேற்கொண்டதோடு பிற பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆண்டுக்குக் குறைந்தது 5 என்ற எண்ணிக்கையில் பிற பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகள், பயிலரங்குகள், சிறப்புச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாடியிருக்கிறேன். இதுவரை 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அங்கு வழங்கியுள்ளேன்.

எமது பல்கலைக்கழகப் பாத்திட்டத்தை உருவாக்கியதோடு 6 பல்கலைக் கழகங்களின் (மதுரை, திருவள்ளுவர், பாண்டிச்சேரி, காந்திகிராமம், அவினாசிலிங்கம், கேரளம்) பாடத் திட்டங்களில் பங்கேற்றுப் பங்களிப்பு செய்துள்ளேன். பல்கலைக்கழக எல்லைக்குள் இயங்கும் 3 தன்னாட்சிக் கல்லூரிகளின் பாட த்திட்டங்களை உருவாக்கும் குழுவிலும் இருந்துள்ளேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய அளவுத் தேர்வுக்கான பாடத் திட்டத்தையும் வரையறை செய்து தந்துள்ளேன். தமிழக அரசின் தமிழ் இணையக்கல்விக்கழகம், பள்ளிப்பாடத் திட்டக்குழு போன்றவற்றிலும் எனது காத்திரமான பங்களிப்பு இருந்துள்ளது. எனது நூல்களில் சில பட்டப்படிப்பு நிலையிலும் முதுகலை நிலையிலும் பாடங்களாக இருந்துள்ளன; இருக்கின்றன. தனிநூலாகவும் தொகுப்பு நூல்களாகவும் பாட நூல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளேன்.

ஆய்வு நெறியாளராக 15 முனைவர் பட்டங்களுக்கும் 50 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களுக்கும் வழிகாட்டியிருக்கிறேன். சிறு,பெரும் ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கு ஆய்வு நெறிமுறை (மதுரை, கேரளம், பாரதியார்), புத்தொளிப்பயிற்சி வகுப்புகள் (மதுரை, கேரளம், பாரதியார். புதுச்சேரி, பாரதிதாசன்) முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வுகள் எனப் பல்வேறு கல்விப்பணிக்காகச் சென்றுள்ளேன்.

பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு வினாக்குறிப்பாளனாக இருப்பதோடு ஆசிரியப்பணித் தேர்வு, ஆய்வுப்பணித் தேர்வு, குடிமையியல் பணித் தேர்வு போன்ற உயர்நிலைத் தேர்வுகளின் வினா அமைப்பாளராகப் பணியாற்றுகிறேன். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமல்லாமல் மலேசியப் பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்டங்களுக்கும் புறநிலைத் தேர்வாளராகப் பணியாற்றிவருகிறேன். பல்கலைக்கழக நேர்காணல்கள் (பாரதியார், திருவள்ளுவர், இலங்கைப் பேராதனை) கல்லூரி நேர்காணல்கள் பலவற்றிலும் பங்கேற்று ஆசிரியர்களைத் தேர்வுசெய்த அனுபவங்களும் உண்டு

இந்திய அரசின் மனிதவள அமைச்சக ஒப்பந்தப்படி இயங்கும் போலந்து வார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் பேராசிரியராக இரண்டு கல்வியாண்டுகள் (2011-13) அனுப்பப்பட்டுப் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்த பணி முக்கியமான பணியாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று.  கருத்தரங்குகளில் கட்டுரைகள் வாசிப்பதற்காக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். சுற்றுலாப்பயணியாகப் போலந்தில் இருந்தபோது ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைப் பார்த்துள்ளேன். பயண நூலும் எழுதியுள்ளேன்.

நிர்வாகப்பணியாளனாக நான்.

பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப் பணித்திட்டம், பதிப்புத்துறை, நூலகப் பொறுப்பு, ஆய்வுப்பிரிவு ஒருங்கிணைப்பாளர், பல்கலைக்கழகக் கல்லூரிகளின் ஒருங்கிணைபாளர் என நிர்வாகப்பொறுப்புகளில் சிறப்பாகப் பங்கேற்றுள்ளேன். பல்கலைக்கழக வளாகப் பண்பாட்டு நிகழ்வுகள் பலவற்றைப் பொறுப்பேற்று (மனோ திருவிழாகள், நூலக விழாக்கள், போட்டிகள்) நட த்திய அனுபவங்களும் உண்டு. மாநிலங்களுக் கிடையே நடக்கும் நாடக விழாக்களின் நடுவராகவும் இருந்துள்ளேன்.

எழுத்தாளராக நான்

கல்வியாளனாகத் தொடர்ந்து செயல்படுவதோடு எனது மாணவப்பருவம் தொட்டே கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எனப் படைப்பிலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளேன். தமிழகத்தில் இலக்கியம், பண்பாடு சார்ந்து வெளியாகும் தாமரை, ஆராய்ச்சி, கணையாழி, காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, தீராநதி, தலித், மணற்கேணி, ஆய்வு, புதிய நம்பிக்கை, சுபமங்களா,களம்புதிது, கோடு, நிறப்பிரிகை போன்ற இதழ்களில் தனிக்கட்டுரைகளையும் தொடர் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளேன். தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் அச்சு இதழ்களும் இணைய இதழ்களும் எனது கட்டுரைகளையும் படைப்புகளையும் பெற்று வெளியிட்டுள்ளன. இதுவரை 23 நூல்கள் ஆசிரிய நிலையிலும் 7 நூல்கள் பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர் நிலையிலும் வெளிவந்துள்ளன. நான் எழுதிய கட்டுரைகள் (15-க்கும் மேல்) பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.

பள்ளிப்படிப்புக் காலத்திலேயே அரசின் சிறப்பு உதவித்தொகையைப் பெற்றுப் படித்த நான், எனது பட்டப்படிப்பை மதுரை மாநகரின் பெருமைமிகு அமெரிக்கன் கல்லூரியிலும் முதுகலைப்படிப்பை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்தேன். இவ்விரு பட்டங்களிலுமே தமிழ் இலக்கியத்தையே முதன்மைப் பாடமாகப் பயின்றவன். நான் பயின்ற காலத்தில் பெருமைமிகு பேராசிரியர்கள் அங்கே இருந்தார்கள். தமிழின் அனைத்துப்புலங்களையும் கற்பிக்கவல்ல – நெறிப்படுத்தக் கூடிய பேராசிரியர்கள் அவர்கள். அதனால் அங்கேயே முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட கால இலக்கியங்கள் அக்கால கட்டத்து சமூக வரலாற்றுத் தரவுகளையும் கருத்தியல் போக்குகளையும் கொண்டனவாக இருக்கும் என்ற திறனாய்வுப்பார்வையைக் கருதுகோளாகக் கொண்ட எனது ஆய்வின் நெறியாளர் பேரா.தி.சு.நடராசன். தமிழ்க் கல்விப்புலங்கள் முழுவதும் அறியப்பெற்ற திறனாய்வுப்பேராசிரியர். குறிப்பிட்ட கால கட்டம் என்பதற்காக அதுவரை ஆய்வுக்குட்படுத்தப்படாமல் இருந்த பின்னிடைக்காலமான நாயக்கர் காலத்துத் தமிழ் இலக்கியங்களை ஆய்வுத் தரவுகளாகக் கொண்டேன்.

திறனாய்வை மையமிட்ட எனது விருப்பத்துறை இக்கால இலக்கியம், நாடகங்களும் ஊடகங்களும், பண்பாட்டியல் ஆய்வுகள் என விரிந்துள்ளது. மொழிக்கல்வியிலும் பயிற்சிபெற்ற பல தளப்பார்வை கொண்ட ஒரு பேராசிரியர் நான். கல்லூரி, பல்கலைக் கழகங்கள் (புதுவை, மனோன்மணியம், வார்சா பல்கலைக்கழகம்) எனப் பலநிலைக் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளையும் கல்விப் பணிகளையும் நிர்வாகப் பணிகளையும் அறிந்த ஒரு பேராசிரியர் நான். எனது பொறுப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் புதிய திசையில் மரபும் புதுமையும் வெளிப்படும் ஒரு பல்கலைக்கழகமாக வளர்ச்சிபெறும் என உறுதியாகச் செல்வேன்.

மற்ற பல்கலைக்கழகங்களின் துணவேந்தர்கள் தரவேண்டியது நல்லதொரு நிர்வாகம் மட்டுமே. ஆனால் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு நிர்வாகப் பணியோடு தமிழின் வளர்ச்சியையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. அதனை உணர்ந்தே செயல்படுவேன்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை