: 193

மேற்குத் தொடர்ச்சி மலை:புதிய களம்- புதிய மொழி

Image missing

=

முன்குறிப்பு:

·         சினிமா பார்ப்பதில் எனது விருப்பமான காட்சிநேரம் எப்போதும் இரண்டாம் ஆட்ட நேரம்தான். எனது இரண்டாம் ஆட்டம் என்பது நகரவாசிகளின் இரண்டாம் ஆட்டமல்ல. கிராமத்துக் கீற்றுக்கொட்டகையின் இரண்டாம் ஆட்டம். இரவு 10 மணிக்குத் தொடங்கி நடு இரவுக்குப் பின் முடியும் காட்சி. படிப்புக் காலத்தில் விடுதிக்காப்பாளர்களுக்குத் தெரியாமல் மதில் தாண்டிப் பார்த்த சினிமாக்காட்சிகளின் நேரம் அது. இப்போதும் அது தொடர்கிறது.

·         கூட்டம் அலைமோதாது; நிதானமானவர்கள்தான் வருவார்கள் என்று தெரிந்து கொண்டே படத்தை வாங்கி வெளியீடு செய்யும் திரையரங்கு என அடையாளப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு நகரிலும் ஓர் அரங்கம் இருக்கும் என நினைக்கிறேன். மாற்றுச் சினிமா, தீவிரமான சினிமா, கலைப்படம் எனச் சொல்லப்பட்ட பல படங்களை நான் வசித்த மதுரையில் ரீகல் அரங்கிலும்  பாண்டிச்சேரியில் முருகா தியேட்டரிலும் பார்த்திருக்கிறேன். இப்போதிருக்கும்  நெல்லையில் அப்படிப்பட்ட திரையரங்கம் அருணகிரி. தாமிரபரணிக்கரையில் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் அங்கு சினிமா பார்க்கப்போவதும், காத்திருப்பதும் தனியான ரகம்.  படம் பார்க்கப் போய் ஆட்கள் சேராததால் படம் இல்லை என்று தட்டியைத் தொங்கவிட்ட அனுபவங்கள்  இரண்டு தடவை நேர்ந்ததுண்டு. கூட்டம் என்பது அவர்களைப் பொறுத்தவரை இரட்டை இலக்க எண்ணிக்கைதான். அது போதும் படம் போடத் தயங்கமாட்டார்கள். மாற்றுச் சினிமாவாக முன்னிறுத்தப்பெற்ற மேற்குத்தொடர்ச்சி மலை படத்தை அருணகிரியில்தான் பார்த்தேன். வெளியான நாளிலிருந்து ஒருவாரத்திற்குப் பின்பொரு பின்னிரவுக் காட்சியாக நானும் மனைவியும்போனபோது எங்களோடு  சேர்ந்து அந்தக் காட்சியில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை 20 -க்குள் தான். இடைவேளைக்குப் பின்பு 3 பேர் குறைந்துபோனார்கள்.

***********

படம் பார்க்கப்போகிறவர்களுக்கு மேற்குத்தொடர்ச்சிமலை என்னும் பெயரிலேயே ஒரு குறிப்பு இருக்கிறது. இது ஒரு வெளியைப் பற்றிய படம் என்பது அந்தக் குறிப்பு. இந்த வெளி இந்திய நாட்டு நிலவியல் பின்னணியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும்பரப்பு. அந்த நினைப்போடு படம் பார்க்கப்போகிறவர்களுக்கு இயக்குநர் எதையும் தரவில்லை. அப்படியொரு விவாதங்களுக்குள் படத்தின் காட்சிகளும் உரையாடல்களும் நுழையவில்லை. முன்முடிவுகளோடு படம்  பார்க்கச் செல்பவர்கள்  ஒருவித அரசியலறிவு பெற்ற பார்வையாளர்கள். தலைப்பு, வெளியிடப்படும் தகவல் குறிப்புகள், படத்துணுக்கு, ஒரு படத்தோடு தொடர்புடையவர்களின்  தரும் நேர்காணல்கள் போன்றன பார்வையாளர்களுக்கான முன்முடிவுகளை உருவாக்குகின்றன. படத்திற்கு வைக்கப்பட்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை என்னும் பெயர்  ஒருவிதமான முன்முடிவோடு வரும்படி தூண்டுவதை யாரும் மறுக்கமுடியாது. புரிதலோடு கூடிய பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் முன்முடிவோடுதான் திரையரங்கிற்குச் செல்கிறார்கள். இத்தகைய புரிதல் இல்லாத பார்வையாளர்களுக்கு ஒரு திரைப்படத்தின் விளம்பரங்கள் முன்முடிவுகளுக்கான மனநிலையை அளிக்கின்றன. அவர்கள் விரும்பும் பத்திரிகைகளின்/ தொலைக்காட்சிகளின் விமரிசனக்குறிப்புகள் முன்முடிவுகளை உண்டாக்குகின்றன. சுவரொட்டிகளில்  இடம்பெறும் படங்களும்  வாசகங்களும்கூட முன்முடிவுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தவே செய்கின்றன. 

தேசியப்பரப்பைத் தாண்டி இந்தப் பெயர்-மேற்குத் தொடர்ச்சிமலை என்னும் பெயர்-  வேறொரு களத்திற்குள் பார்வையாளர்களை – தமிழ்ப்பார்வையாளர்களை முன் நினைவுகளோடு வரும்படி செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. பெரும்பயனளிக்கும் காடுகளையும் வனாந்தரங்களையும் கொண்ட மலைத் தொடர்களுக்குள் தேயிலை, காபி, ஏலம், போன்றன பணப்பயிர்கள் விளையும் தோட்டங்கள் உள்ளன என்பது இன்னொரு தகவல். அவ்வகையான தோட்டங்களைக் கொண்ட அந்த மலைத்தொடர் தமிழ்நாடு, கேரளம் என்னும் இருமாநிலங்களுக்கு இடையே எல்லைக்கோடுபோல நீள்கின்றன என்ற நினைப்போடு படம் பார்க்கப் போகிறவர்களுக்கான தகவல்களைத் தந்துள்ளார் இயக்குநர். தமிழ்பேசும் மனிதர்கள் மலையாளம் பேசுபவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பரப்பில் தோட்டத் தொழிலாளர்களாக – ஏலத்தோட்டத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்சிகளாகவும் உரையாடல்களாகவும் தந்துள்ளார். அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் மலையாளம் பேசும் கங்காணிகளால் வேலை வாங்கப்படுகிறார்கள் என்று படம் காட்டுகிறது. கங்காணிகளால் வேலை வாங்கப்படும் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக- சம்பளம், வேலையுரிமை போன்றவற்றுக்குக் குரல் கொடுக்க ஒரு சங்கம் இருக்கிறது. அதன் பொறுப்பாளராக இருப்பவர் மலையாளம் பேசும் நபர். அவர் சார்ந்த கட்சி அங்கு அதிகாரம் உள்ளதாக – பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அதிகாரம் உள்ளதாக இருக்கிறது என்ற குறிப்புகளும் படத்தில் நிரவலாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளின் அளவுகளும் அடுக்கப்படும் நிரவலும் ஒவ்வொரு நாளும் எப்படி  நடக்குமோ அதன் அளவில்  - அந்தந்த வரிசையில் -பெரிதும் கூடுதல் குறைவில்லாமல் இயக்குநரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் இந்தப் படம் ஏலத் தோட்டங்களில் உழைக்கும் மனிதர்களின் துயரமான வாழ்க்கையை- வேலைத்தளச் சிக்கலையும் பாடுகளையும் சுரண்டப்படும் விதத்தையும் அப்படியே காட்டும் ஆவணத்தன்மையோடு இருக்கிறது. நடப்பதை – இருப்பை- இயல்பு மாறாமல் காட்டும் இயற்பண்புநிலை ஆவணப்படங்களின் வெளிப்பாட்டு மொழி. இதுதான் இயக்குநரின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்குமா என்பது பார்வையாளர்களுக்குத் தோன்றும் ஒரு கேள்வி. படத்தின் சொல்முறையோடு இணைந்து பயணம் செய்யும் பார்வையாளர்களுக்கு அவ்வப்போது கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும்படி  திரைப்படமொழியின் அடிப்படைக்கூறுகளை அமைப்பது நவீன சினிமாவின் ஒரு கூறு. அப்படி அடுக்குதலில் இடைவெளிகளும்   இடையீடுகளும் இருக்கின்றன; இருக்கவேண்டும். அதுவும் நவீன சினிமாவின் மொழியே.அந்த இடையீடுகளின் காட்சிப்படுத்தலில் வேறொரு கதை சொல்லப்படுகிறது. அந்தக் கதை இது ஆவணப்படமல்ல; ஒரு மனிதனின் வாழ்க்கைக் கதை என்பதாகப் பார்வையாளர்களைச் சிந்திக்கும்படி தூண்டுகிறது. ரெங்கசாமி என்னும் இளைஞனின் நிறைவேறாத ஆசையைச் சொல்லும் கதையைத்தான் இயக்குநர் படமாக்கியுள்ளார் என்பதற்கான வாய்ப்புகளை அதன்வழி கூடுதலாகவே தருகிறார் இயக்குநர்.

படத்தின் தொடக்கக் காட்சியே இந்த நோக்கத்தோடுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ரெங்காவைத் தூக்கத்திலிருந்து எழுப்பி அவனது அன்றாட வேலையான சுமை தூக்கும் வாழ்க்கைப் பயணத்திற்குள் தள்ளிவிடுவதுதான் அந்தக்காட்சி. தள்ளிவிடுவது எனச் சொல்வதுகூட அதிகமான சொல். ஏனென்றால் அவனுக்கு விருப்பமான வேலை அது. ஒவ்வொரு நாளும் மலைமேல் வாழ்பவர்களுக்கான கடைச்சரக்குகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதில் அலுப்போ சலிப்போ காட்டாதவன்.  கீழிருந்து மேலே போகும் அவன் புதிதாக மலையேறும் சமவெளி மனிதர்களுக்கு வழிகாட்டி. மலையின் கதைகளை அறிந்தவன். மலை வாழ்க்கையால் வஞ்சிக்கப்பெற்ற மனிதர்களின் கதைகளையும் அறிந்தவன். ஆனால் அவற்றிலெல்லாம் பெரிதான ஈடுபாடு காட்டாமல் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து எதிர்கால வாழ்க்கை லட்சியத்திற்காகப் பணம் சேர்ப்பவன். கடுமையான உழைப்பைத் தந்து கிடைக்கும் பணத்தில் ஒரு நிலம் வாங்கிச் சொந்தமாகத் தோட்டம் போட்டுச் சிறிய விவசாயியாக மாற வேண்டும் என்பது அவனது லட்சியம்.  நிலம் வாங்க வேண்டும் என்பதற்காகத் திருமண வாழ்க்கையைக் கூடத் தள்ளிப்போடும் விருப்பம் கொண்டவன். அவனது நலம் விரும்பிகளும் உறவினர்களும் காட்டும் அக்கறையில் திருமணம் முடித்துக் குழந்தை பெற்று வாழ்க்கையே அமைக்கிறான். அவனது இலட்சியம் நிறைவேறுவதில் அவனது உழைப்பும் அதன் வழியாகக் கிடைக்கும் வருமானமும் போதாது என்ற நிலையில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.  வாங்கிய கடன் அவனது இலட்சியத்தை – தோட்டம் போட்டுச் சிறுவிவசாயியாக மாறவேண்டும் என்ற லட்சியத்தைச் சிதைக்கிறது என்பது மேற்குத்தொடர்ச்சி மலை படத்திற்குள் சொல்லப்படும் ஒரு புனைவுக்கதை. இந்தப் புனைவுக்கதையையும்கூட இயக்குநர் கூடுதல் குறைவு வராமல் இயல்பாகச் சொல்லவேண்டும் என்றே நினைத்துள்ளார். அதனாலேயே மேற்குத்தொடர்ச்சி மலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கண்டு அவர்களைப்போன்றதொரு தொழிலாளியாக ஆசைப்படும் மனிதனாகவோ, அவர்களின் துயரமான வாழ்க்கையைக் கண்டு அச்சம்படும் மனிதனாகவோ காட்டவில்லை. தனது இலட்சியம் சிறுவிவசாயி என்ற நேர்கோட்டில் பயணிக்கும் ஒருவனாகவே காட்டியிருக்கிறார்.

மேற்குத்தொடர்ச்சிமலை வாழ்க்கை ரெங்கசாமியைப் பொருத்தவரையில் அந்நியமான வாழ்க்கையே. அவனுக்கும் அந்த மலை வாழ்க்கைக்கும் நேரடி உறவு கிடையாது. அவன் தனது எதிர்கால வாழ்க்கையை -சிறுவிவசாயியாகத் தொடரும் வாழ்க்கை சமவெளி வாழ்க்கை. அந்தக்  லட்சியக் கனவிலிருந்து பிரித்தெரிந்தது அம்மலையில் இருக்கும் தரகு முதலாளித்துவம். வட்டிக்கடைக்காரராக வருபவரைக் கூட வில்லத்தனம் கொண்ட எதிர்மறைக்குறைக் குணங்களோடு காட்டாமல், தேவையறிந்து கடன் தரும் நபராகவே காட்டியிருக்கிறார். இனி இவனால் கடன் கட்டமுடியாது என்ற நிலையில் தான் அவனது நிலத்தைக் காற்றாழை முதலாளிக்கு வாங்கித் தருகிறார். இந்த நகர்வும்கூட மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்களான மதுரை, தேனி மாவட்டங்களின் கடந்த 15 ஆண்டுகால நகர்வுகள் தான்.   

 தன்னை வெளிப்படுத்துவதற்காகத் தேர்வுசெய்யும் கலைவடிவம் கற்றுக்கொண்ட அறிவின் வழியாகவும் வெளிப்பாட்டின் நோக்கம் சார்ந்ததாகவும் இருக்கிறது. இவ்விரண்டில் எது முந்தியது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தனது வெளிப்பாடு ஒரே நேரத்தில் அதிகம்பேரைச் சென்றடையவேண்டும் என நினைக்கும் ஒரு கலைஞன் அதற்கான வடிவமாக, சினிமாவைத் தேர்வுசெய்வது உலகம் முழுவதும் இருக்கும் ஒரு நடைமுறை. அதிகம்பேரைச் சென்றடைய வேண்டுமென்பதின் தொடர்ச்சியாக அதிக லாபமும் வருமானமும் கிடைக்கவேண்டுமென எதிர்பார்க்கும் அதன் மறுபக்கமும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஆகப் பெருந்திரளைச் சந்திக்கும் வாய்ப்பையளிக்கும் சினிமா ஆகப்பெரும் லாபத்தையோ நஷ்டத்தையோ தரும் வணிகச்சரக்காகவும் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயக்குநர் லெனின்பாரதிக்குச் சினிமா கற்றுத் தெரிந்த கலைவடிவம். அவருக்குள் இருப்பது கலையில் கூடுதல் குறைவில்லாமல் வாழ்க்கையைச் சொல்லவேண்டும் என்ற கலைப்பார்வை. அதிகப்படியான புனைவு கலையாக மாறாமல் வணிகமாகிவிடும் என்ற அச்சத்தோடு கூடிய பார்வை அவருக்குள் இருந்திருக்கிறது. அந்தப் பார்வையே இயற்பண்பியல் தன்மையோடுகூடிய மேற்குத்தொடர்ச்சி மலை என்னும் சினிமாவை – பெரும் லாபத்தைக் கருதாத மாற்றுச் சினிமாவை எடுக்கத்தூண்டியிருக்கிறது.

நடந்ததை அப்படியே எழுதுகிறேன்/ காட்டுகிறேன் என்ற கலைக்கோட்பாட்டின் தொடக்கம் இயற்பண்பியல்வாதம் (Naturalism) அதன் பிடிவாதத் தன்மையால் ஏற்படும் பார்வையாளர் பங்கேற்பு ஒருவிதமான விலகல் நிலை. அந்த விலகல் நிலை எல்லோருக்கும் ஏற்படும் என்று சொல்லமுடியாது. இயற்பண்புவாதக் கலை முன்மொழியும் பாத்திரங்கள் அல்லது காலம் அல்லது வெளி போன்றவற்றைத் தனது சொந்தவாழ்வின் பகுதியாக-அனுபவமாகக் கொண்டவர்களுக்கு அந்தக் கலை மறு அனுபவமாக ஆகிவிடும்.

மேற்குத்தொடர்ச்சி மலை என்ற பெயரில் பார்க்கக் கிடைத்த சினிமா எனக்கு அப்படியொரு மறு அனுபவமாகவே இருந்தது.எனது பால்ய நினைவுகளைத் திருப்பித் தந்த ஒன்றாக விரிந்தது. எனதுகிராமம் அந்தத் தொடர்மலைக்கூட்டத்தின் அடிவாரத்தில் இருக்கும் கிராமம். அந்த மலைத்தொடர்களின் பல குன்றுகளில் நின்று நிலப்பரப்பில் விரியும் புஞ்சைக்காடுகளையும் தோட்டங்களையும் பார்த்திருக்கிறேன். குறிஞ்சிமார் பிடுங்கவும் கலாக்காய் பறிக்கவும் மலைக்குள் போகும் ஒத்தையடிப் பாதைகளில் ஏறி இறங்கியிருக்கிறேன்.தேநீர்க்கடைகளில் உட்கார்ந்து எழுந்திருக்கிறேன். அவையெல்லாம் எனது பதின்வயது அனுபவங்கள்.

கால்காணியாவது சொந்த நிலம் வாங்கவேண்டும் என்ற நிலைபாடுகொண்ட ஒருவனின் கனவு அவன் மீது அவனே தூக்கிப் போட்டுக்கொள்ளும் பெரும்பாறை என்ற ஒற்றைவரிக்குள் அந்தப் பரப்பின் ஒட்டுமொத்த மனிதர்களின் வாழ்க்கையின் இயங்குநிலையைச் சொல்லிவிட நினைத்திருக்கிறார் இயக்குநர் லெனின்பாரதி. சொல்லப்படும் கலையின் வெளிப்பாடு பார்வையாளர்களைத் தொந்தரவு செய்யவேண்டும் என்ற நினைப்பில் கூடுதல் குறைவில்லாமல் காட்டிவிட வேண்டுமெனவும் நினைத்திருக்கிறார். ஆனால் அப்படிக் காட்ட நினைக்கும் இயற்பண்புவாதக் கலையே போதாமைகள் நிரம்பிய ஒன்று. அப்போதாமையினாலே அங்கிருந்து நகர்ந்து நடப்பியல்வாதக் கலை (Realistic Art) உருவாயிற்று. இந்தப் படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் எல்லாம் இயற்பண்புநிலையைக் கைவிட்டுவிட்டு நடப்பியல்வாதத்தைக் கைக்கொண்ட காட்சிகளாகவும் சில இடங்களில் குறியீட்டுத்தளத்தில் அர்த்தமாகும் காட்சிகளாகவும் இருக்கின்றன.

ரெங்கசாமியின் திருமணம் பற்றிய பேச்சுக்குப் பின்னான காட்சிகள் இயற்பண்பியல் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன. கிராமிய வாழ்விலிருந்து பிரித்தெறியப்பட்டு நகரவாசிகளாகிவிட்ட என்னைப் போன்றவர்களுக்குப் பெருங்குற்ற உணர்வை உண்டாக்கும் வெளிப்பாட்டுத் தன்மையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை. தமிழில் அவ்வப்போது முயற்சித்துப்பார்த்த இயற்பண்பியல் வாத சினிமாவின் ஓர் அடையாளம். அது தேர்வுசெய்துகொண்டுள்ள வெளியால் கவனத்துக்குரிய சினிமாவாக ஆகியிருக்கிறது.

படத்தின் கடைசிக்காட்சிகள் பொருளியல் தத்துவம் பேசும் ஒரு கோட்பாட்டைக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேச வேண்டும். அந்நியமாதல் என்னும் பொருளியல் கோட்பாட்டை விளக்கும் கார்ல் மார்க்ஸ், அந்நியமாதல், முதலாளியமும் பெருமுதலாளியமும் தன்னுணர்வுடன் செயல்பட்டுத் தொழிலாளர்களை அவர்களது உற்பத்திப் பொருள்களிலிருந்து பிரித்துத் தூரப்படுத்துகின்றன; அந்நியமாக்குகின்றன என்பார். தனது மேற்பார்வையில் – தனது கரங்களால் செதுக்கு உருவாக்கப்பட்ட ஒரு வீட்டுபயோகப் பொருளை வாங்கி உபயோகிக்கும் திறன் இல்லாதவர்களாகத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கட்டமைப்பது முதலாளியத்தின் ஆகப்பெரும் துரோகம் என்பது அவர் விளக்கும் ஒரு காட்சி. கோட்பாடாக அவர் விளக்கிய சொல்லாடலை இயக்குநர் லெனின்பாரதியும் அவரது படப்பிடிப்பாளர் ஈஸ்வரும் துயரமிக்க கவிதைபோலக் காட்சியாக்கியுள்ளனர். நிலத்தை வாங்கிச் சிறுவிவசாயியாக ஆகிவிடும் அந்த ஆசையில் மண்ணைப் போடுகிறது  காற்றாலை எந்திரம். வழக்கமான அழுக்கு உடைகளுக்குப் பதிலாக காவல்காரனுக்குரிய சுத்தமான ஆடைகளையும் தொப்பியையும் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்திறங்குகிறான். எப்போதும் நடந்துகொண்டே இருந்த ரெங்கசாமி காணாமல் போகிறான். காற்றாலை எந்திரத்திற்கு பக்கத்தில் வந்து நிற்கும்போது இருந்த அவனது உயரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காற்றாலை விசிறிகளின் சுழற்சியால் சிறுபுள்ளியாகிப் போகிறான். அந்த நிலம் சில காலத்திற்கு முன்பு வரை அவனது சொந்த நிலம். இப்போது அந்நியநிலம். அதனைச் சாதித்தது முதலாளியம். அதன் மூலதனம். அதன் வெளிப்பாடாக இருக்கும் தொழில்நுட்பம். எல்லாவற்றையும் குறியீடாகக் காட்சிப்படுத்திய மேற்குத்தொடர்ச்சி மலை இன்னொரு இடத்திலும் அற்புதமான காட்சிப்படிமத்தின் வழி எதிர்பாராத துயரத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் ஒரு மூட்டை ஏலக்காயை வாங்கித் தானே சுமந்துபோய் விற்றுக்கிடைக்கும் லாபத்தைப் பற்றிய கனவோடு இறக்கி வைத்த மூடை சரிந்து மலைப்பாறைகளில் மோதிச் சிதறிப்பள்ளத்தாக்குக்குள் விழும் காட்சி தமிழ்ச் சினிமாவில் இதுவரை இடம்பெறாததொரு குறியீட்டுக்காட்சி. நேர்கோட்டில் எதிரிணைகளை உருவாக்கிக் கதைசொல்லாமல் புனைவுக்காட்சிகளையும் ஆவணத்தன்மைகொண்ட காட்சிகளையும் சமதளப்பரப்பில் விரவித்தரும் சொல்முறையில் எடுக்கப்பட்டுள்ளன மேற்குத்தொடர்ச்சி மலை கொண்டாடப்பட வேண்டிய தமிழ்ச்சினிமா.

பின்குறிப்பு:

மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற படங்களின் பார்வையாளர்களாக – இலக்குப் பார்வையாளர்களாக இருக்க வேண்டிய திரள் எது என்பதும், அவர்களை நோக்கிக் கொண்டு போவதில் என்னவகையான சிக்கல் இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே படம் எடுப்பவர்களும் யோசிக்கவில்லை. படம் வந்து 10 நாளில் தூக்கப்பட்டுவிடும் என்பதைத் தெரிந்துகொண்டு அவசரமாகப் பார்த்துவிட்டுக் கொண்டாட்ட மனநிலையோடு கூட்டம்போட்டுப் பாராட்டுபவர்களும் யோசித்ததாகத் தெரியவில்லை. இத்தகைய படங்களை எடுப்பதற்குப் போடப்படும் மூலதனத்திற்குப் படவிழாக்களில் பாராட்டப்படுவதும் அதன் வழியாகக் கிடைக்கும் வியாபாரமும் கேடயங்களும் போதுமா? அதன் வழியாக உருவாகும் தொலைக்காட்சி விற்பனையில் கிட்டும் லாபமும் அடுத்த பட வாய்ப்புகளுமே  போதுமென நினைக்கிறார்களா? என்பதான ஐயங்களைப் பலரும் எழுப்புகிறார்கள். எனக்கும் அந்த ஐயம் உண்டு. அப்படி நினைத்தால் இந்தப் படத்தில் ரெங்கசாமி அவனது நிலத்திலிருந்து அந்நியமானது போல இதுபோன்ற படங்களும் அந்நியமாகும் கலையாகவே கருதப்படும். ஒவ்வொன்றின் இலக்குப் பார்வையாளர்களிடம் போய்ச்சேராமல் , அதன் எதிர்மனநிலைப் பார்வையாளர்களுக்குரிய ரசனைப்பொருளாக ஆதல் தான் ஆகக் கூடிய அந்நியமாதல். கலையின் அந்நியமாதல் பற்றி விரிவாக இன்னொருமுறை பேச வேண்டும். அந்த வாய்ப்பைத் தரும் இன்னொரு படத்திற்காகக் காத்திருக்கவேண்டும்.

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை