: 29

திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட வேண்டும்

நேற்றைய நீயா? நானா? : 
===========================
ஞாயிறு இரவில் முன்னிரவுக்குப் பின் சரியாக 9 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியாக - தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக இருந்த விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா ஒளிபரப்பு நேரங்களில் மாற்றம் பெற்றுக்கொண்டே வந்தது. மாற்றங்களுக்குப் பின்னே பார்வையாளர்கள் குறைவு - தரவரிசையில் பின் தங்குவது அதனால் விளம்பரதாரர்களின் நெருக்கடி போன்றன இருக்கக் கூடும். வெகுமக்கள் ஊடகங்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னும் இந்த நெருக்கடிகள் இருக்கவே செய்யும். என்றாலும் நீண்ட காலமாக ஒரு தொலைக்காட்சியின் அடையாளமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா? நானா? அநேகமாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சி தொடர்கிறது. நானே ஏழெட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதன் நடத்துநராக கோபிநாத் இருந்துவருகிறார். ஆனால் அதன் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது நெல்லை ஆண்டனி.

இரவுக்குப் பதிலாகப் பிற்பகலில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியாக மாறிய பிறகு நீயா? நானா? வைப் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. வாரக் கடைசிகளில் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் அந்த நேரம் ஓய்வெடுக்கும் நேரமாக இருந்தது. நேரமாற்றம் காரணமாக என்னைப் போன்றவர்களின் - முதுமையை நோக்கி நகர்பவர்களின் கவனத்துக்குரியனவற்றை விட்டு விலகியனவாக நிகழ்ச்சிப்பொருண்மைகளும் மாறிவிட்டன. சமூக நடப்புகளையும் பண்பாட்டரசியலையும், வணிகப் போக்குகளையும் தனிநபர் உளவியலையும், மரபுக்கும் மாற்றத்துக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் விவாதிக்கும் தலைப்புகளைத் தேர்வுசெய்துவந்த அதன் தயாரிப்பாளர்கள் இளையோரின் விருப்பங்கள், ஆசைகள், அவர்களின் கவனம் பெறுபவை, பொழுதுபோக்கு, ஆடை, காதல், காமம், நாயகர்கள், நாயகிகள், குடும்ப அமைப்புக்குள் அவர்களின் இருப்பும் இன்மையுமென விலகிப் போய்க்கொண்டே இருந்ததை அவ்வப்போது கவனித்துவிட்டு நானும் விலகிவிட்டேன்.

பிற்பகல் நிகழ்ச்சி நண்பகல் நிகழ்ச்சியாக இப்போது மாறிவிட்டது. ஒளிபரப்பாகும் கால அளவுகூடக் குறைந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு பின் வீட்டில் இருந்தால் நீயா நானாவைப் பார்த்து விடுகிறேன். இடையில் மாறிய அந்தத் தடத்திலிருந்து பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சமகாலப் பரபரப்போடு இணையும் முயற்சிகளும் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டிய நிகழ்ச்சிகளும் மாறிமாறி வருவதாகத் தோன்றியது. அதிகமும் இளையவர்கள் என்பதை மாற்றி இளையவர்களும் நடுத்தர வயதினரும் என்பதான பங்கேற்பில் இப்போது கவனம் செலுத்துகிறது.

இந்த விலகல் எல்லாவற்றையும் தாண்டி நேற்று ஒளிபரப்பான நீயா? நானா? கண்பார்வைக் குறைவானவர்கள் அல்லது உடல் சவால்கள் கொண்ட மனிதர்களின் உலகத்திற்குள் பார்வையாளர்களைக் கொண்ட சென்ற நீயா? நானா? நீண்ட நாளைக்குப் பின் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பட்டது. தொகுத்துத் தரும் கோபியும் நிதானமாக அவர்களின் மனம், உடல், விருப்பம், அந்நிய மனிதர்களோடு அவர்கள் கொண்டுள்ள உறவு போன்றவற்றைக் கொண்டுவரும் தன்மையில் வினாக்களை எழுப்பிக் கவனப்படுத்தினார். பங்கேற்றவர்களின் 
நிதானமான பேச்சுகளில் தங்களின் சிக்கல்களையும் திறமைகளையும் எப்படி முன்வைக்க வேண்டுமென்ற நேர்த்தி வெளிப்பட்டது. உடல் சவால் கொண்ட மனிதர்களின் பாடலின் போதும் வெளிப்பாடுகளின் போதும் காமிரா அந்தக் குறைகள் இல்லாத மனிதர்களின் பக்கம் போய்ப் படம்பிடித்தபோது அவர்களின் முகச்சலனமும் கண்களின் விரிப்பும் மொத்த நிகழ்ச்சியில் அவர்களும் ஈடுபாட்டோடு இருந்தார்கள் என்று காட்டியது. விருந்தினர்களாக வந்தவர்களில் நகலிசைக்கலைஞரின் ஈடுபாடு நிகழ்ச்சியைத் தரம் மிக்கதாக – கொண்டாட்டம் மிக்கதாக ஆக்கியது . நீண்ட நாட்களுக்குப் பின் முழுமையாகப் பார்க்க முடிந்தது. வாழ்த்துகள் நீயா? நானா? அணியினருக்கு.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை