: 28

சகாவுகளின் தேசம்: ஒரு நினைவுப்பாதைக்குறிப்பு

கேரள மாநிலத்திற்குள் நுழையப் பலவாசல்கள் உண்டு. எந்தவாசல் வழியாக நுழைந்தாலும் பச்சைப்பசேலெனத் தலையாட்டும் வகைவகையான மரங்களையும் சலசலத்து ஓடும் ஓடைகளையும் புழைகளையும் உள்ளோடித் திரும்பும் கடல் நீரையும், தூரத்தில் மிதக்கும் படகையும் பார்த்துவிட முடியும். கொஞ்சம் நடந்துபோனால் விரிந்தலையும் கூந்தலோடு கடந்து போகும் பெண்ணொருத்தியின் வாசத்தை நுகரும் நாசி நகரமுடியாமல் தவிக்கும், ஆரவாரமில்லாமல் ஒலிக்கும் ஸ்தோத்திரப் பாடலின் திசையில் செவிகொடுத்தால் உயர்ந்து நிற்கும் கொடிக்கம்புகளுக்குப் பின்னே ஒரு கோயில் சுவற்றின் வரிக்கோடுகள் அசையும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மலையாள தேசத்தைக் கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற பூமியென்று சொல்லித் திரிந்தவர்களுக்குப் புதிய அடையாளம் ஒன்றை உருவாக்கி இந்தத் தேசம் “சகாவுகளின் தேசம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தோழர்கள்.

செங்கொடிகள் பறக்கும் சாலையோரங்களைக் கடக்காமல் கேரளத்தின் எந்த வாசல் வழியாகவும் நுழைந்துவிட முடியாது. செவ்வரிசிச் சோறும் பொறிச்ச மீனும் சாப்பிட முடியுமென்றால் கேரளத்திற்குள் எத்தனை நாட்களும் திரியலாம். தென்னங்கள்ளும் கட்டன் சாயாவும் குடிக்க முடியுமென்றால் அலைந்து திரியும் அலுப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் அந்தந்த மாநில மக்களின் மொழியோடு பேசும் அளவுக்குக் கற்றுக்கொண்டு பயணம் செய்ய வேண்டுமென்ற ஆசையொன்று மாணவப்பருவத்தில் இருந்தது. அதற்காகக் கற்றுக்கொண்ட முதல்மொழி சேட்டன்களின் மலையாளம். கல்லூரிக்காலத்தில் நுழைந்த முதல் வாசல் தேனி வழியாக இடுக்கி மாவட்டம். நீர்த்தேக்கத்தைத் தாண்டி ஒற்றையடிப் பாதையில் நண்பர்களோடு போனபோது கண் சிமிட்டிக் கூப்பிட்ட பெதும்பையிடம் பேரம்பேச உதவியது.

கடவுளின் தேசத்திற்குள் நுழைந்தால் ஒரே நாளில் திரும்புவதை மனம் ஒப்புவதில்லை. இரவுகள் முடிந்து காலையில் காட்டுப் பாதையொன்றில் நடந்துவிட்டுக் கிளம்பும் வாய்ப்பைத் தவறவிடுவதில்லை. கம்பம் மெட்டு வழியாக பேருந்தில் போனதுபோலவே போடி மெட்டு வழியாக வாகனங்களிலும் நடந்தும் சென்று முதுவர்களைப் பார்த்துத் தோழியின் ஆய்வேட்டிற்கு உதவும்பொருட்டுத் தரவுகள் சேகரித்த நாட்கள் மேற்குத்தொடர்ச்சி மலையின் பச்சைப் பரப்பைக் கண்ணில் தேக்கிய நாட்கள். மூணாறு தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யப் போன எங்களூர்க்காரர்களின் வீடுகளில் தங்கி ஜூன் மாதச் சாரலில் வாரக்கணக்கில் நனைந்ததுண்டு

சகாவுகளின் அரசப்பாசத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தீவிர சகாவுகளுக்காக நாடகம் செய்துகொண்டு போய் திருச்சூர் கோயில் மைத்தானத்தில் உரத்து முழங்கினோம் ஒருமுறை. எங்கள் நாடகத்திற்குப் பின்னர் தான் மலையாளப் பெருங்கவி சச்சிதானந்தனின் கவியோடைப்பேச்சை முதன் முதலாகக் கேட்டோம். புரட்சி வந்துவிடுமென்று காத்திருந்து கழிந்த நாட்கள் முடிந்தபின்பும் திருச்சூர் நாடகப்பள்ளியில் நாடகவிழாக்களுக்காகப் போனதுண்டு. அதிகாலையில் நடந்துபோய் ஆமைக்கறியும் தென்னங்கள்ளும் குடித்து பிரெக்டையும் மேயர்ஹோல்டையும் திட்டித்தீர்த்தவர்களோடு சண்டைபோட்டோம். அவையெல்லாம் கழிந்து போன சூர்யப்புஸ்பங்களின் காலம்.
பேராசிரியர் ஆனபின்பு பல்கலைக்கழக வேலையாகப் பல தடவைக் கேரளத்திற்குள் நுழைந்துவிட்டேன். ஒருமுறை பாலக்காடு வழியாக ஆலப்புழையில் நுழைந்து பத்தனாம்திட்டையின் உச்சிமலையொன்றிலிருந்த கல்லூரி ஒன்றிற்குப் போனேன். தொலைதூரக்கல்விமுறைத் தேர்வைப் பார்த்து அறிக்கை அளிக்கவேண்டும். எட்டு மணிநேரப் பயணத்திற்குப் பின் தேர்வறைக்குள் நுழைந்தால் 5 பேர்தான் வந்திருந்தார்கள். இன்னொருமுறை செங்கோட்டை வழியாகக் கொல்லம் போய் கண்ணனூரில் இறங்கியபோது கொட்டிய மழையில் மாணவர்களுக்கான அறிவியல் நாடகவிழா தள்ளிப்போடப்பட்டது.

கோவளத்தின் கடற்கரையில் அதிகாலையில் நடப்பதும் தலைச்சேரி மணற்பரப்பில் முன்னிரவில் நடப்பதும் ரம்மியமானது. குருவாயூரப்பனும் அனந்தபுரத்துக் கண்ணனும் ஆத்துக்கால் பகவதியும் அங்கே அலைந்து திரிவார்கள். கேரளப் பல்கலைக் கழகத்துப் பாளையம் வளாகமும் காரியவட்ட வளாகமும் கூப்பிடும் தூரமல்ல. இலக்கணம் குறித்துக் காத்திறமான ஆய்வுகளைச் செய்த பேராசிரியர்கள் படித்த - பணியாற்றிய இடங்கள்; துறைகள்.

நாளை தொடங்கி 3 நாட்களுக்குக் கவிதையியல் குறித்து விவாதிக்க இருக்கிறது. ஒருநாள் முன்னதாகவே வந்தாயிற்று. நான் வரும்போது மழையும் கூடவே வந்திருக்கிறது. பல்கலைக்கழக வாசலில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் அகில இந்திய சம்மேளத்திற்கான பதாகை நிற்கிறது. எப்போதும் சிவப்பு வண்ணத்தில் மிளிரும் பதாகை இந்தமுறை நீலவண்ணத்திற்கு மாறியிருக்கிறது. சிவப்பும் நீலமும் கலக்கவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

Image may contain: Raja Sundararajan, close-up and outdoor


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை