: 29

விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்

96 : ஓர்மைகள் கூடி நிற்கும் சினிமா
============================== ===
பார்க்கும் சினிமா ஒவ்வொன்றையும் அதற்குள் பேசப்படும் கருத்தியல் சார்ந்த விவாதப் புள்ளிகளைக் கண்டறிந்து - அதன் எதிர்மறை X உடன்பாட்டுநிலைகளை முன்வைத்துப் பேசபவனாக மாறிப்போனேன். அதனால் கருத்தியல்களைத் தாங்கும் காட்சிகள், வசனங்கள், பின்னணியின் இசைக்கோலங்கள், வண்ணங்கள், நகர்வுகள், காட்சிப்படுத்தப்படும் தூரம், நெருக்கம் எனத் திரைமொழியின் கூறுகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் வழியாக உருவாக்கப்படும் முன்வைப்புகள் என்னென்ன நோக்கங்கள் கொண்டன; பார்வையாளத்திரளை எந்தப் பக்கம் திருப்பும் வல்லமைகொண்டன எனப் பேசிப்பேசி எனது சினிமா குறித்த பதிவுகளுக்கொரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அச்சொல்லாடல்களுக்கு வலுச்சேர்ப்பதற்காகச் சில படங்களின் நிகழ்வெளியை முதன்மாக முன்வைத்து விவாதிப்பதுண்டு. சில படங்களின் காலப்பிண்ணனித் தகவல்களைத் திரட்டி விவாதித்ததுண்டு. சில படங்களின் இயக்குநர்களின் -நடிகர்களின் - தயாரிப்பு நிறுவனங்களின் புறத்தகவல்களின் வழியாகவும் விவாதித்ததுண்டு. இப்படி விவாதிப்பது சினிமாவைப் பார்ப்பதற்கான - திரள்மக்களின் நோக்கிலிருந்து பார்ப்பதற்கான ஒரு கோணம் என்று புரிந்து வைத்திருக்கிறேன்.

இந்தப் படம்-96-கொண்டிருக்கும் ஓர்மைகள் இதையெல்லாம் தேடவிடாமல் தடை போட்டுவிட்டன. சினிமாவின் அடிப்படைகளான சொல்முறைகள், பாத்திர உருவாக்கம், அவ்வுருவாக்கத்திற்கேற்ப அவை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகளின் அளவு, அதற்குத்தேவையான மன, உடல், குரல்கள் இணையும் நடிப்புப்பாணி, நடிப்போடு இணையும் நிலக்காட்சிகள், ஒளிப்பதிவுத்துண்டுகள் என எங்கும் பிசிறு தட்டாமல் ஓர்மைகளோடு நகர்ந்து முடிந்தது படம்.

கடந்த காலத்துக் காதலின் அலைவுகள்
====================================
நேற்றைய இரண்டாம் ஆட்ட நேரத்தில் 96 பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வெறும் சினிமா பார்வையாளனாக இருந்த காலத்திற்குப் போக வேண்டியதாகிவிட்டது. திருநெல்வேலி பாம்பே அரங்கில் இணை இணைகளாகத் திரண்டு அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் போனவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடந்த காலத்திற்குள் பயணம் செய்திருப்பார்கள். இப்போது நாற்பதுகளில் இருப்பவர்கள் 90 களுக்குப் போய்வந்திருப்பார்கள். ராமச்சந்திரனைப்போல ஜானகியை மட்டும் காதலித்துக் கசிந்துருகிக்கொண்டிருந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் அலைதல் விரும்பமானதல்ல. என்னைப்போல 60 ஐ, நெருங்குபவர்கள் 70 களுக்கும் 80 -களுக்கும் 90 களுக்கும் போய்த் திரும்பவும் தூண்டும் பின்னோக்கிய பயணங்களைச் சொல்லும் படம் 96.

சினிமா ஒருவிதமான நினைவலைகளின் கோணங்கள். இரண்டு நபர்களின் சந்திப்புகள் நட்பு எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. சந்தித்துக்கொண்ட இரண்டுபேரில் ஒருவர் ஆணாகவும் இன்னொருவர் பெண்ணாகவும் இருந்துவிடும் நிலையில் நட்பு காதலாக மாறும் வாய்ப்புகளே அதிகம். அந்தச் சந்திப்புக்காலம் அவர்களின் பதின்பருவவயதுக் காலமாக இருக்கும் நிலையில் காதல் - காமமாக அறியப்படுகிறது. காமத்தின் வெளிப்பாடு உடல்சார்ந்த உறவுகளைக் கோரும் வினை. அவ்வினை மனிதர்களின் வயிற்றுப்பசியைப் போல இன்னொரு தேவை. அவ்வினையைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காகச் சமூகம் உருவாக்கிக்கொண்ட அமைப்பு குடும்பம்.

இந்த நகர்வின் தொடக்கமாக இருக்கும் நட்பும் காதலும் திரும்பத்திரும்ப மனிதர்களால் நினைத்துக்கொள்ளப்படுகிறது.

என்னருகில் என் மனைவி இருக்கும்போதே, பள்ளிக்காலத்து கலையும் கல்லூரிக்காலத்து நந்தினியும் கல்யாணத்திற்குப் பின்னர் காதலைச் சொன்ன உஷையும் இசையும் வந்து சிரித்துவிட்டுப் போனார்கள். யாருக்குத்தான் கடந்த காலத்துக் காதல் -தோல்வியடைந்த காதல் இல்லாமல் இருக்கும்..
Image may contain: 2 people, people smiling, people sitting

பரியேறும் பெருமாள்: சமூகநடப்பியல் சினிமா
====================== ========================
அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் - என்ற முன்வைப்புடன் அரசதிகாரத்தின் கைகளில் தரப்பட்ட நிர்வாகமுறைமை சாதீயத்தின் இயங்குநிலையில் எந்த மாற்றமும் செய்துவிடவில்லை; அதன் இருப்பு பல நூற்றாண்டுகளாக இருக்கும் அதே நிலையோடு -
அச்சடுக்கு மாறாமல் இன்னும் இருக்கிறது என்ற குரல்கள் மாற்றத்தை - இந்திய சமூகத்தைச் சமநிலையை ஏற்கும் -உள்வாங்கும் சமூகமாக மாற்றும் குரல்கள்.

இத்தகைய குரல்களை -விமரிசனத்தை- மறுத்துப் பேசும் குரல்கள் ஒருவிதத்தில் பழைமையின் ஆதரவாளர்கள். பிற்போக்குத்தனமானது என்றாலும் இந்தியப் பண்பாட்டின் பெருமையென சாதீயத்தை நினைக்கின்றன. அதற்காக அவை வெளிப்படையாக ஓங்கி ஒலிக்கின்றன. அக்குரல்கள் சாதீயம் தளர்ந்துவிட்டது; ஆதிக்க அடுக்குகள் விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டன என வாதிடுகின்றன. 
அவர்கள் நிகழ்காலத்தில் அரசதிகாரத்தைக் கைப்பற்றும் வகையறிந்து நகர்கிறார்கள். அரசதிகாரம் அவர்களின் ஆதரவு நிலையோடு இருக்கிறது. அதனால் இத்தகைய சொல்லாடல்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் அத்தகைய குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

இவ்விருவகைச் சொல்லாடல்களில் முன்னதின் பக்கம் நிற்கும் கலையாக - சினிமாவாக - மாரி.செல்வராஜின் - பரியேறும் பெருமாள் பிஏபிஎல் , மேலே ஒரு கோடு வந்துள்ளது. அசலான சினிமா என்பதைவிட - சமூகநடப்பியலை உள்வாங்கிய அரசியல் சினிமாவாக வெளிப்பட்டுள்ள படத்தை இன்னொருமுறை பார்த்துவிட்டு விரிவாக அதன் கலையியலையும் சமூகப்பொறுப்புணர்வையும் எழுதவேண்டும். இப்போதைக்கு இந்தக் குறிப்பே பலரையும் பார்க்கத்தூண்டுமென நினைக்கிறேன்.

Image may contain: one or more people, outdoor and nature


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை