: 36

போர்க்காலம் பற்றிய முக்கியமான கதை


சந்திரா இரவீந்திரன் எழுதியிருக்கும் இந்தக் கதை ( கலையரசி/காலச்சுவடு/நவம்பர்,18) சில காரணங்களுக்கு வாசிக்கப்பட வேண்டிய கதை எனப் பரிந்துரைக்கிறேன்.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் பிடிவாதத்தையும் அரசியல் தெளிவின்மையையும் மூர்க்கமான போர்விருப்பத்தையும் குறித்துப் பல கதைகளை வாசித்திருக்கிறேன். இந்தக் கதை அதிலிருந்து விலகியிருக்கிறது.

தங்களின் போர்க்கால நினைவுகளைக் குற்றவுணர்வில்லாமல் பகிர்ந்துகொள்ளும் முன்னாள் போராளிகளின் சந்திப்புதான் கதையின் நிகழ்வு. சந்திப்பின்போது அவர்களிடம் வெளிப்படும் அன்பும் பகிர்தலும் போர்க்கால வாழ்வின் நீட்சி-அவர்களை உருவாக்கிய தலைமையின் -அமைப்பின் வாழ்வியல் கோட்பாடு என்பதாக உணரவைத்திருக்கிறார் சந்திரா .

வெற்றிகரமான தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டு உயிர் இழைப்புகளையும் உடலின் பாகங்களை இழந்ததையும் பெரும் வலியாக நினைக்காமல் ஒரு தலைமையின் மீது கொண்ட பற்றுறுதியோடு தங்களுக்கான தாயகம் ஒன்றை அமைக்கும் போரில் - விடுதலைப்போரில்- ஈடுபட்டிருக்கிறோம் என்ற லட்சிய வேட்கையோடு வாழ்ந்த காலத்தை ஆண்களும் பெண்களுமாகக் கைகோர்த்துக் கடந்ததைச் சொல்கிறது. அப்படிச் சொல்வதின் வழியாகப் போரையும் போரில் ஈடுபட்டவர்களையும் நாயகர்களாகக் கட்டமைக்கும் தளத்திற்குள் நுழையாமல் விலகி இன்னொரு பக்கம் நகர்கிறது. பயிற்சி, ஆயுதம், தாக்குதல் எனப் படையணிக்குள் வாழ்ந்த - ஒருவிதக் காட்டுவாழ்க்கையை விவரிக்கும் கதை நகர்வு அவை இப்போது- புலப்பெயர்வுக்குப் பின்னர் தூங்கவிடாமல் செய்யும் கொடுங் கனவாகவும் மாறிவிட்டது என்பதற்குள் நகர்கிறது. கொடுங்கனவிலிருந்து விடுவிக்கும் மனச்சிதைவுக்கான மருத்துவம் தேவைப்படும் கலையரசியை முன்வைக்கும் கதை, போருக்குப் பின்னான போராளிகளின் இருப்பின் மீது -உளவியல் சார்ந்த இருப்பின் மீது- கவனத்தைக் கோருகிறது.

தேதியிட்டு உண்மை நிகழ்வுகளின் - மனிதர்களின்- மீது கட்டப்பட்டுள்ள கதையின் தொனிக்குள் பெருமிதத்தையும் கழிவிரக்கத்தையும் சம அளவில் கலந்து நகர்ந்துள்ளது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. கதாசிரியரின் இந்தக் கவனமான சமநிலை கதைக்குள் நிகழும் நிகழ்வுகள் நம்பகத்தன்மை கொண்டவை என்பதை உறுதிசெய்யும். கதைக்குள் வரும் பாத்திரங்களும் உண்மையானவர்கள் என்பதாக உணரப்படுவார்கள். அவர்களின் நிகழ்கால உண்மை வழியாகக் கடந்தகால வாழ்க்கையும் - போர்க்கால வாழ்க்கையும் -உண்மை என்பதாகவும், அவர்களின் போர்க்காலச் சூழலும் நம்பகத்தன்மை கொண்டது என்பதாகவும் மாறும். 
போருக்குப் பின்னர் போர்க்காலம் பற்றி எழுதப் பெற்றுள்ள பல கதைகளுள் இக்கதை முக்கியமான ஒன்று. வாசித்துப் பாருங்கள்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை