: 35

அதிகாரப்பரவல் அல்ல; இயலாமை

கடும்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க ஆட்சித்தலைமைகள் போகவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தாங்கள் போகாமல் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களை அனுப்பிவிட்டுத் துறைசார் நடவடிக்கைகளை முடிக்கிவிட்டால் போதும் என்ற எண்ணம் முதல்வருக்கும் துணைமுதல்வருக்கும் இருப்பது தெரிகிறது. இந்த எண்ணம் உருவாவது ஒருவிதத்தில்சரி. ஜெ.ஜெயலலிதா என்ற தனிநபர் தலைமைப் போக்கு சரியத் தொடங்கியதின் பின் விளைவு இது.

மாநிலமுழுவதும் அறிமுகமான தலைமை; அவர்களால் பிரித்தளிக்கப்படும் அதிகாரம். அதன் வழியாக வட்டாரத்தலைவர்கள் மாநிலத் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் கப்பம் கட்டும் பழைய பாளையக்காரர்களின் போக்கு என்பதற்கு மாற்றாக, அந்தந்த வட்டாரத்தலைவர்கள் மேலெழும்பும் நபர்களாகக் கட்சிகளில் அறியப்படுவார்கள். இந்த மாற்றம் இயல்பாக - அதிகாரப்பரவலை உள்வாங்கி - நடக்கிறதென்றால் வரவேற்கலாம்.

தமிழகத்தின் முதல்வரும் துணை முதல்வரும் புயல் பாதிப்புகளைப் பற்றிக் கவலையில்லாமல் அவரவர் தொகுதிகளில் அரசுத்திட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் அவர்களது வெற்றியில் - எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள். தாங்கள் போட்டியிடும் மாவட்ட நலனின் அக்கறையோடும், தங்கள் தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலைபாட்டோடும் இருக்கிறார்கள் . இந்த நிலைப்பாடு அவர்கள் தங்களைத் தமிழகத்தின் தலைவர்களாகக் கருதவில்லை என்பதை உறுதிசெய்கிறது. தங்கள் வட்டாரத்தில் முதன்மையான அரசியல்வாதியாக நிலைநிறுத்திக்கொண்டு தங்களின் பின்னணியில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற கணக்கும் இதில் இருக்கக் கூடும். அதே நேரத்தில் வட்டாரத் தலைவர்களாக அறியப்படுவதில் இருக்கும் பின்னடைவைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஒரு மாவட்டத்தின் - அந்த வட்டாரத்தின் தலைவர் என்பது ஒருவிதத்தில் ஒருசாதியின் தலைவராக அறியப்படும் வாய்ப்புகளையே உருவாக்கும். ஒருவேளை இதுதான் அவர்களின் நோக்கமாகவும் இருக்கக் கூடும்.

இந்த நிலைப்பாடும் கணக்குகளும் நிகழ்கால அரசியலில் வெற்றிச்சூத்திரமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தச் சூத்திரமும் கணக்குகளும் சொந்தத் தொகுதிகளிலேயேகூடத் தோல்விக்கான காரணங்களாக மாறவும் வாய்ப்புண்டு. தேசத்தின் முதன்மை அமைச்சரே தன்னை ஒரு மாநிலத்தின் மகனாகக் காட்டிக் கொள்ளும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வரும் துணைமுதல்வரும் அவரவர் தொகுதியின் பிள்ளைகளாகக் காட்டிக்கொள்வது ஆச்சரியமூட்டும் செய்தியாக இருக்கப்போவதில்லை.

Image may contain: plant


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை