: 32

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள்: சுசி கணேசனின் கந்தசாமியை முன் வைத்து

இது கந்தசாமி படத்திற்கான விமரிசனம் அல்ல; தீராநதியில் விமரிசனம் எழுதும் அளவிற்குப் பொருட்படுத்த வேண்டிய படமும் அல்ல கந்தசாமி. திரைப்படத்தின் மொழியையும் ஆக்கத்தையும் அறிந்தவர்களாகவும், அதன் வழியே வெகுமக்களுக்குத் தீங்கிழைக்காத பொழுது போக்குப் படங்களைத்  தருவார்கள் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்களின்  தோல்வியும், திசைதவறிய பாதைகளும் கூடப் பொருட்படுத்திப் பேச வேண்டிய ஒன்று என்ற அளவில் கந்தசாமி படம் பற்றிப் பேச வேண்டியுள்ளது.

கந்தசாமி படத்தில் இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற தகுதியை பெற்ற விக்ரம் நடித்துள்ளார். எந்தக் கதாபாத்திரத்தையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துவார் என நம்பப்படும் நடிகர் அவர். அதற்காகப் பண வரவு பற்றிக் கவலைப் படாமல் காலத்தையும், தனது உடல் மற்றும் மன ரீதியான உழைப்பையும் தரக்கூடியவர். சுசி கணேசனும் பத்திரிகையாளர் என்ற முன் அனுபவத்தோடு இலக்கிய வாசிப்புடையவர் என்ற அடையாளத்தையும் வெளிப்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவில் வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநரிடம் திரைப்பட நுட்பங்களைக் கற்று இயக்குநராக மாறியவர். படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது படத்தை உருவாக்க ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்படாதவர். இம்மூவரும் இணைந்தும் இந்தப் படத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படமாக ஆக்கி, வணிக ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியாமல் போனதெப்படி? கந்தசாமி படம் பொது நிலைப்பட்ட பார்வையாளர் களுக்குப் பிடிக்காமல் போனது ஏன்?

பார்த்தவர்கள் எல்லோரும் படத்தில் கதை இல்லை என்று சொல்கிறார்கள். அந்தக் கூற்று உண்மை தானா? நிச்சயம் இயக்குநர் அதை மறுக்கவே செய்வார். கதை, வசனம், திரைக்கதை இயக்கம் எனத் தனித்தனியாக எழுத்துப் பலகைகளைக் காட்டிய சுசி. கணேசன் கதை இல்லை என்பதை எப்படி ஒத்துக் கொள்வார்? படத்தில் ஒரு கதை இருக்கிறது. தமிழில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற எல்லாச் சினிமாக்களிலும் இருப்பது போல நாயகனின் சாகசங்களைச் சொல்லும் கதை ஒன்று இருக்கவே செய்கிறது.  இந்தியாவில் ஏழை பணக்காரர்களிடம் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடாக ஆகி விட்டதை உணர்ந்த ஒரு இளைஞனின் கதை அது. இப்படியான வேறுபாடுகள் தோன்றக் காரணம் அரசியல்வாதிகள், தாதாக்கள், கள்ள மார்க்கெட் வியாபாரிகள் ஆகியோரிடையே உள்ள உறவும், அதனால் கிடைக்கும் பணத்தை வெளிநாடுகளில் உள்ள மறைமுக வங்கிகளில் பதுக்கி வைப்பதும் தான் என்பதை உணர்ந்த இளைஞனும் அவனது பள்ளிக்கூடத் தோழர்களும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் தான் கந்தசாமி படத்தின் கதை. மக்களின் சொந்தப் பிரச்சினை களையும் பொதுப் பிரச்சினைகளையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதித் திருப்போரூரிலுள்ள முருகன் கோயிலில் உள்ள மரத்தில்  கட்டி விட்டால் தீர்த்து வைக்கப்படும்.  முருகனாகிய  கந்தசாமி வந்து தீர்த்து வைக்கிறான் என்ற வதந்தியை உருவாக்கி மக்களை நம்ப வைத்து, கந்தசாமி என்கிற சிபிஐ அதிகாரியும், நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றும் அவனது வகுப்புத் தோழர்களுமே அதைச் செய்கிறார்கள் என்று கதை பின்னப் பட்டிருக்கிறது.

இந்தக் கதையைப் பார்வையாளன் மனம் ஏற்கும் விதமாகவும், அவனது நடப்பு வாழ்க்கையோடு ஓரளவுதொடர்புடையது  என மூளை நம்பும் விதமாகவும் சொல்லப் படவில்லை (முழுமையாக இருக்க வேண்டுமெனப் பார்வையாளர்கள் எதிர் பார்ப்பதில்லை) என்பது மட்டுமல்ல காரணம். இந்தப் படத்தின் கதையும் சரி , சொல்லப்பட்ட விதமும் சரி மிகச் சமீபத்தில் வந்து வெற்றி கரமாக ஓடிய சில படங்களின் கதையாகவும், கதை சொல்லும் முறையாகவும் இருக்கிறது என்பதும் கூடப் பார்வையாளர்களைக் கவராமல் போனதற்குரிய காரணங்களாக இருக்கலாம். 

கறுப்புப் பணம், ஹவாலா வழியாகப் பணப் பரிமாற்றம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குதலைப் பேசிய சிவாஜி படம் வந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதை இயக்கியவர் சங்கர் . கடமையைச் செய்யாமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்- கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும்- அதிகாரிகளையும், கள்ள மார்க்கெட்டில் ஈடுபடும் வியாபாரிகளையும், சுயநலத்தை மட்டுமே கொண்ட  உறவுக்கார மனிதர்களையும் அம்பி என்கிற அசட்டு வக்கீல் அந்நியன் என்ற அசகாய சூரனாக மாறிக் கொன்றழிக்கிறான் என்ற கதையையும் சங்கர் தான் இயக்கியிருந்தார். இவ்விரு படங்களையும் சுசி கணேசன் பார்க்காமலா இருந்திருப்பார்?  கந்தசாமி கதையோடு இன்னும் நெருக்கமான கதையைக் கொண்ட இன்னொரு படம் ரமணா. இதை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்காந்தின் நடிப்பில் கடைசியாக வெற்றிகரமாக  ஓடிய படம். அந்தப் படத்தின் கதை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை, காவல்துறை போன்றவற்றில் நடக்கும் ஊழல்களையும் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளையும் களைய ஒரு பேராசிரியர் தன் மாணவர்களைப் பயன்படுத்தினார்; சாகசங்கள் செய்தார் என்பதுதான். அந்தப் படம் வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றாலும் நமது தொலைக்காட்சிகள் திரும்பவும் போட்டுக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

பார்த்த படத்தைத் திரும்பவும் ‘புதிய படம்’ என்று பார்க்கும்  அளவுக்கு நமது பார்வையாளர்கள் ஏமாளிகள் அல்லவே. சுசி கணேசன் மட்டும் அல்ல; நமது நாயக நடிகர்களுக்காகக் கதை செய்யும் பல இயக்குநர்களும் பார்வையாளர்களை ஏமாளிகள் என்றே நினைக்கின்றனர். விஜய் வேகமாக நடனம் ஆடுகிறார் என்பதற்காக;  விசால் வித்தியாசமாய்ச்  சண்டை  போடுகிறார் என்பதற்காக; வன்மையான நெருக்கத்துடன் சிம்புவும் பரத்தும் தனுஷும் பெண்களின் உடலைக் கையாள்கிறார்கள் என்பதற்காக; வித்தியாசம் காட்டி விக்ரமும் சூர்யாவும் நடிப்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதற்காக - திரும்பத் திரும்பப் பணம் கொடுத்துப் பார்க்கப் பார்வையாளர்கள் தயாராக இருப்பார்கள் என்று இயக்குநர்கள் நம்புவது எப்படி என்பதுதான் புரியவில்லை. சொல்லப்பட்ட கதையை அதே முறையில் சொன்னால் அலுப்பும் சலிப்பும் உண்டாகும் என்பது ஒரே பாணியில் நடித்துப் பழகிப் போன நடிகர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஓர் இயக்குநருக்கும் அது புரியாது என்றால் அவர் வேறு தொழிலைப் பார்க்க வேண்டியதுதான். 

பார்வையாளனின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்காத படங்களைப் பார்க்கத் திரை அரங்கிற்கு வர, தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்கள் தயாராகவே உள்ளனர் என்பதற்குச் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வந்திருக்கும் நாடோடிகள் கடைசி உதாரணமாக இருக்கிறது. ‘நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே ’ என்ற ஒற்றை வரியின் மேல் எழுப்பப்பட்ட நாடோடிகள் கதை முழுமையும் நடக்கத்தக்க யதார்த்தக் கதை அல்ல. அதுவும் ஒரு சாகசக் கதை தான். பணபலம், அரசியல் பலம், சாதி வேறுபாடு என்ற தடைகளையெல்லாம் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல், காதலித்த நண்பனின் காதலை வெற்றி அடையச் செய்வது எனக் கிளம்பும் ஒரு இளைஞனின் சாகசம் மட்டும் அல்ல; செய்யப்போவது சாகசம் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் நண்பனோடு கிளம்பிப் போன இருவரின் வலிகளும் துயரங்களும் என நாடோடிகள் கதை பின்னப் பட்டுள்ளது. கதையை உருவாக்குவதன் அனைத்து அடிப்படைகளையும் ஓரளவுக்குச் சரியாகச் செய்துள்ள அந்தப் படம் வெற்றிப் படமாகத் திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமாவுக்குக் கதை உருவாக்கும் போது கவனிக்க வேண்டிய ஒன்று அந்தக் கதையில் பின்னப்படும் காட்சிகளின் நிகழ்தகவுகள் அல்லது சாத்தியப்பாடுகள் என்பன தான். இதை நடிகர்களுக்காகக் கதை உருவாக்கும் இயக்குநர்கள் மறந்து விடுகிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு சாகசக் கதையைச் சமுத்திரக் கனி, ‘இந்தக் கதையின் தொடக்கம் ராஜபாளையம் என்ற சிறு நகரம்’ என்று குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் தொடங்கி, நாமக்கல் என்ற இன்னொரு நகரத்திற்கு நகர்த்துவதன் மூலம் கதையை நம்ப வைக்கிறார். கிராமங்களில் கதை சொல்லிகளிடம் இது எப்படி? அது எப்படி? என்று குறுக்குக் கேள்விகள் கேட்டால் கதைக்குக் காலுண்டா? என்று சொல்லி விட்டுக் கதையை வளர்த்து கொண்டு போவார்கள். ஆனால் சினிமாக் கதைக்குக் கட்டாயம் கால் வேண்டும். அந்தக் கால் தான் கதையின் வெளி.

ராஜபாளையத்து விசைத்தறிகளும் குறுகலான தெருக்களும், அம்மன் கோயில் திருவிழாவும் மட்டுமே கதையை நம்பச் செய்தன என்பதில்லை. அதே போல் நாமக்கல்லின் கோழிப் பண்ணைகளும் புரோட்டாக் கடைகளும் மட்டும் நம்பகத்தன்மையை உண்டுபண்ணி விடும் என்று நினைக்க வேண்டியதில்லை.  அக்கதைவெளிகளில் வரும் பாத்திரங்களின் செயல்பாடு  களும் மன உணர்வுகளும் கூட ஏற்கத்தக்கதாக- நம்பத் தக்கதாக இருக்க வேண்டும்.சாகசங்கள் செய்யும் மூன்று இளைஞர்கள் அசட்டுத் தைரியசாலிகளாக இருந்தாலும், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என அனைவரும் தினசரி வாழ்வில் பார்வை யாளர்கள் சந்திக்கக் கூடியவர்கள்.‘அரசாங்க வேலைக்குப் போகிறவனுக்குத் தான் பெண்ணைக் கொடுப்பேன்’ என்று பிடிவாதமாக இருக்கும் அந்த மாமா கதாபாத்திரம் ஒன்று போதும் கதையை முழுமையாக நம்பத் தக்கதாக ஆக்க.

கந்தசாமி படத்தில் இப்படியான எந்தவொரு பாத்திரமும் இல்லை என்பதுதான் அதன் மிகப்பெரிய பலவீனம். வைகைப் புயல் வடிவேல் நடித்துள்ளார் என்றால் அவரது நகைச்சுவையைப் பார்க்கவாவது பார்வையாளர்கள் வருவார்கள் என்று காட்டுவதற்காகச் சேர்த்துள்ள ஒரேயொரு காட்சி மட்டுமே நம்பத் தக்கதாக இருக்கிறது. விளையாட்டுத் தனமாகச் சேவல் வேஷம் கட்டிப் போலீஸ்காரர்களின் வலையில் சிக்கிச் சித்திரவதைகளையும் வேடிக்கையாகவே எதிர் கொள்ளும் இந்தக் காட்சி நம்பத் தக்கது என்றாலும், வடிவேல் வேறுசில படங்களில்  திரும்பத் திரும்பச் செய்துவிட்ட- ‘கிலிஷே’- காட்சி என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது . 

கந்தசாமியின் இயக்குநரும் ‘திருப்போரூர்க் கந்தசாமிக் கோயில்’ என்ற குறிப்பான வெளியையும், ‘வேதாரண்யம் பள்ளியில் படித்தவன் நாயகன்’ என்று ஒரு தொடக்கத்தையும் தருகிறார் என்றாலும், அந்தக் காட்சிகளைத் தொகுத்த விதமும், பின்னணி இசையும் காட்சிகளின் மீது ஈடுபாட்டை-நம்பகத்தன்மையை-ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் பார்வையாளனைப் படத்திலிருந்து விலகிச் செல்லவே வைக்கின்றன. விக்ரமின் பள்ளிப் பருவம், அவரது நட்பு வட்டம், சின்ன வயதிலிருந்தே அறச்சீற்றம் கொண்டவர்களாக அந்த நண்பர்கள் இருந்தார்கள் என்பதைக் காட்ட அருமையான வாய்ப்பு இருந்தும் அத்தகைய காட்சிகளை உருவாக்காமல் விட்டது இயக்கம் என்பதில் இருக்கும் மிகப்பெரிய குறை.

கந்தசாமி படத்தின் மிகப் பெரிய பலவீனம் நடிகர்கள் தேர்வு. எந்த நடிகரையும் தேர்வு செய்து விட்டு அவர்களிடமிருந்து தேவையான நடிப்பைப் பெறும் திறமை இருந்தால் யாரையும் தேர்வு செய்யலாம். இயக்குநர் சுசி. கணேசன் விக்ரம் தவிர எந்த நடிகரிடமும் பொருத்தமான நடிப்பைப் பெறவில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. எழுதிக் கொடுத்த வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசினால் போதும் என்பதாகவே பலரது நடிப்பு இருக்கிறது.சில காட்சிகளில் விக்ரமின் நடிப்பே கூடப் பொருத்தமின்றியே இருக்கிறது. அத்தோடு இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரேயாவைத் தேர்வு செய்ததும் இயக்குநரின் பெருங்குறை என்று தான் சொல்ல வேண்டும்.  தனது உடலைக் காட்சிப் பொருளாக ஆக்கிக் காட்ட முழுவதும் சம்மதமாக இருக்கும் ஸ்ரேயா படத்தின் நாயகியாக முழுவதும் பொருந்திப் போகவில்லை என்பதை சாதாரணப் பார்வையாளனும் சொல்லி விடுவான். அவரது உடல் அசைவுகள் மட்டுமல்ல; முகச்சுளிப்பு, வசன உச்சரிப்புகளுக்கு அசைக்கும் வாய், அவரது உடல் வடிவத்திற்குப் பொருந்தாத உடைகள்   என எதுவுமே பொருத்தமாக இல்லை என்பதை விட, அவரது மொத்த உடலுமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொருத்தமற்ற உடல் என்பதை நமது இயக்குநர்கள் எப்போது உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

 களிப்பூட்டும் சினிமாவை எதிர்பார்த்துத் திரை அரங்கிற்குச் செல்லும் பார்வையாளன் முழுமையும் எதார்த்தமான-வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் உணர்வுகளையும் கொண்ட கதையை எதிர்பார்ப்பதில்லை என்பதற்குச் சமீபத்தில் வெற்றி அடைந்த படங்களே சாட்சிகளாக இருக்கின்றன. பருத்தி வீரன் தொடங்கி, சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிக் குழு, நாடோடிகள்  முதலான படங்களின் நாயகக் கதாபாத்திரங்கள் எதுவும் சாதாரணப் பார்வையாளர்களின் வாழ்க்கையில் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் பாத்திரங்கள் அல்ல. அக்கதாபாத்திரங்களை  வார்த்தெடுத்த கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடமிருந்து பார்வையாளன் போதனை எதையும் எதிர்பார்த்தும் வரவில்லை. பார்வையாளனுக்குத் தேவை ஓரளவுக்கு  நம்பகமான கதையும், அக்கதையில் வரும் பாத்திரங்களின் சாகசங்களும் களிப்பு மனநிலையும் தான். அதனூடே அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இன்பங்களும்  வலிகளும் அனுபவத்தார்கள் என்பதைப் பார்க்கவே திரையரங்கிற்கு வருகிறார்கள்.  அதைத் தராமல் வேறு எது எதையோ தரும் படத்தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் பார்வையாளர்கள் தயவு தாட்சண்யமின்றித் தண்டிக்கவே செய்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளவந்தான் என்ற படத்தில் பெற்ற தண்டனையை இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டார் என்பதுதான் ஆச்சரியம்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை