: 53

ஒரு நாவலின் வெற்றி : புதிரை வண்ணார்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.

கோவேறு கழுதைகளுக்கு வயது 25
================================
இமையத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் வெளிவந்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதற்கென விழா எடுக்கப்படுகிறது; திரும்பவும் விமரிசனக் கூட்டங்கள் நடக்கின்றன. இப்போக்கு வரவேற்கப்பட வேண்டியது.

ஒரு மொழியில் எழுதப்படும் புனைவுப்பிரதிகள் வாசகர்களாலும் விமரிசகர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலங்களில் கொண்டாடப்படுகின்றன. ஔவை கொண்டாடப் படுகிறாள்; கணியன் பூங்குன்றன் கவனிக்கப்படுகின்றான். இளங்கோ எப்போதும் நிமிர்ந்து நிற்கிறான். கம்பன் கவிதைகள் களிப்பூட்டுகின்றன. வள்ளுவரின் வாக்குகள் அதிகாரத்தோடு அலைகின்றன. இந்தக் கவனிப்புகளுக்கும் கொண்டாடப்படுதல்களுக்கும் காரணங்களாக இருப்பன அவ்வெழுத்துகள் எழுதப்பெற்ற காலத்தில் தந்த அர்த்தங்கள் மட்டுமே அல்ல. வெவ்வேறு காலங்களில் அவை தரும் அர்த்தங்களே முதன்மையான காரணங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவைதரும் அர்த்தங்களாலேயே காலங்கடந்து நிற்கும் இலக்கியங்கள் கண்டறியப்படுகின்றன. . பேசப்படுகின்றன. எல்லா மொழியிலும் திறனாய்வின் வேலையாக இருக்கின்றது இந்தப்பணி.

நமது காலத்தின் இலக்கிய வடிவமான புனைகதைகளிலும் அத்தகைய எழுத்துகள் இருக்கின்றன. புதுமைப்பித்தனின் பனுவல்களும் ஜெயகாந்தனின் எழுத்துகளும் நிற்பதற்கான காரணங்கள் சூழலில் தரும் புதுவகை அர்த்தங்கள்தான். கி.ராஜநாராயணனும் அசோகமித்திரனும் அப்படி அர்த்தங்களை உருவாக்குகிறார்கள். இந்த வரிசையில் இன்னும் பலரது பனுவல்கள் காலத்தில் புதுவகைப் பொருத்தப்பாடுகளை உருவாக்கப்பார்க்கின்றன. ் இமையத்தின் கோவேறு கழுதைகள் அப்படியான பனுவலாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவாய்ப்பில்லை.

கோவேறு கழுதைகளுக்காக இன்று விழா எடுக்கும் பலரும் அந்நாவல் வெளிவந்த நேரத்தில் எதிர்கொண்ட விதம் வேறானது. அந்த நேரத்தில் கொண்டாடியவர்கள் இப்போது கண்டு கொள்ளவில்லை. இப்போது ஏற்று விழா எடுப்பவர்கள் அப்போது எதிர்நிலை எடுத்து விவாதித்தார்கள்; நிராகரித்தார்கள். ஒரு மொழியில் எழுதப்பெற்ற பனுவல் வெவ்வேறு காலகட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என ஆய்வுகள் செய்யப்படவேண்டும். ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் இன்னொரு காலகட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்குமான காரணங்கள் குறித்து விவாதிப்பதும்கூடத் திறனாய்வின் ஒரு வகைதான்.

இந்தவகையான திறனாய்வுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நூல் க.கைலாசபதியின் அடியும்முடியும். அந்நூலில் இருக்கும் எல்லா கட்டுரைகளிலும் ஒரு பொருண்மையின் அடியைத் தேடும் - மூலத்தைத் தேடும் நோக்கமும், அதன் வளர்ச்சிக்கான - ஏற்பு மற்றும் விலக்கலுக்கான நிலைகளுக்கான காரணங்களை முன்வைக்கும் முறையியலும் இருக்கும். வெவ்வேறு காலகட்டத்தில் சிலப்பதிகாரம் ஏன் கொண்டாடப்பெற்றது எனச் சொல்லும் ‘சிலப்பதிகாரச்செய்திகள்’ என்றொரு கட்டுரை உண்டு. அதுபோல ஒருநாவல் வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொள்ளப்பட்ட விதம் குறித்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் எதிர்ப்பையும் ஏற்பையும் பெற்ற புனைகதை.

இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ அந்த வரிசையில் இருக்கும் பனுவல். அது வெளிவந்த காலத்தில் எதிர்க்கப்பட்டதற்கும் ஆதரிக்கப்பட்டதற்குமான காரணங்கள் என்னென்ன எனப் பார்க்கவேண்டும். கோவேறு கழுதைகள் நாவல் இலக்கியவெளிக்குள் மட்டுமல்லாமல் சமூக வெளிக்குள்ளும் தாக்கத்தை உண்டாக்கிய நாவல். தமிழக அரசு புதிரை வண்ணார் வாரியம் அமைக்க அந்த நாவலும் முதன்மையான காரணமாக இருந்தது என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். அதுகுறித்து அப்போது கட்டுரை ஒன்றை எழுதினேன். அதை இணைத்துக் காட்டுவதோடு இமையத்தின் கோவேறு கழுதைகள் காலங்கடந்து நிற்கும் பனுவல் எனச் சொல்லி முடிக்கிறேன்.


No automatic alt text available.

இந்தச் செய்தியை சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகள் தினசரிகளில் வாசித்திருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தீவிர இலக்கியவாதிகளாகக் கருதத் தொடங்கிய பின் சிறுபத்திரிகை எழுத்தாளனும், வாசகனும் அன்றாட நடப்புகளிலிருந்து தங்களை  விலக்கி வைத்துக் கொள்ளும் தீவிர’ மனநிலையை அடையத் தொடங்கி விடுகிறார்கள் என்பதைப் பலரோடு உரையாடும் போது உணர்ந்திருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். எனவே இந்தச் செய்தி அவர்களின் கவனத்துக்குரியதாக ஆகி இருக்கும் என்ற சொல்ல முடியவில்லை. ஒரு படைப்பாளியின் படைப்புக்கு அரசின் சாகித்திய அகாடெமி விருது போன்ற கவனிப்புகள் கிடைக்கும் போது அதனை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விவாதித்துக் கருத்துச் சொல்லும் தீவிர இலக்கியவாதிகள்  இந்தச் செய்தியை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.

புதிரை வண்ணார்களின் இருப்பைச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எடுத்துரைக்க அதனை ஏற்று அவர்களுக்கென ஒரு தனி வாரியத்தை முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் எடுத்துரைப்பதும் அமைச்சர்கள் ஏற்பது அல்லது நிராகரிப்பது அல்லது ’உரிய நடவடிக்கை எடுக்கப் படும்’ எனக் கூறித் தள்ளிப் போடுவதும் சட்டமன்ற நடவடிக்கை களில் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அண்மைக் காலத்தில் சில எடுத்துரைப்புகள் விதிவிலக்காக அமைகின்றன. அவை வழக்கமான சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு வராத எடுத்துரைப்புகள் .

இலக்கிய உலகம் சார்ந்து தீவிரமாக இயங்கிய ரவிக்குமாரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலுக்குள் இழுத்ததும், அவரைக் காட்டுமன்னார் கோவில் வாக்காளர்கள்  வெற்று பெறச் செய்ததும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்த ஆச்சரியங்களில் ஒன்று. காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற ரவிக்குமார் அந்தத் தொகுதிக்கான கோரிக்கைகளை முன் வைக்கும் அதே நேரத்தில் தான் ஒரு இலக்கியமும் சிந்தனையும் கலந்து செயல்பட்ட புலத்திலிருந்து வந்தவர் என்பதை மறக்காமல் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அவரது கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நியாயத்தையும் தேவையையும் புரிந்து கொள்ளும் முதல்வர் கருணாநிதி அதனை ஏற்று உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

500 புத்தகங்களுக்கும் குறைவாக வாங்கிக் கொண்டிருந்த நூலக ஆணைக்குழு 1000 புத்தகங்கள் வாங்க வேண்டும் என நேரடியாக இலக்கியத்தோடு தொடர்புடைய கோரிக்கையை முதல் கூட்டத்திலேயே முன் வைத்து ஏற்கச் செய்தார். அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களின் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் முன் வைக்காமல் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையில் முன் வைத்துக் கவனத்தை ஈர்த்தார்.திருநங்கைகளுக்கும் நரிக்குறவர்களுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை முன் வைத்த ரவிக்குமார் வீட்டு வேலைகளைச் செய்யும் பணிப்பெண்களுக்கு அரசின் கவனமும் உதவியும் கிடைக்கும் வகையில் தனது உரைகளை அமைத்துக் கவனப் படுத்தினார். தொழிலாளர் அமைச்சகம் அதைக் கவனத்தில் கொண்டு குழுவை அமைத்திருக்கிறது. விளிம்புநிலை-மையம் என்ற எதிர்வுகளை முன்னிறுத்தி விவாதம் செய்து கொண்டிருந்த  சிறுபத்திரிகைச் சூழலிருந்து சட்டமன்ற உறுப்பினரான ரவிக்குமாரால் விளிம்புநிலையை மையப்படுத்திக் கோரிக்கைகள் வைக்க முடிகிறது. அதனை ஏற்கும் மனப்பக்குவம் இலக்கியம் சார்ந்த ஒருவருக்குத் தான் முடியும் என்பதைக் கலைஞர் மு.கருணாநிதி உணர்த்திக் கொண்டிருக்கிறார். அப்படியான உணர்த்துதல் வரிசையில் தான் புதிரை வண்ணார் நல வாரியத்தையும் பார்க்க வேண்டும். புதிரை வண்ணார் நல வாரியம் என்னும் கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்  முன் வைத்ததில் அவரது கிராமம் சார்ந்த வாழ்க்கை அனுபவம் இருந்தது உண்மையென்றாலும், அதனை  இலக்கியப் பொருளாக்கி, வாசகர்களின் கவனத்தை ஈர்த்த இமையத்தின் பங்கும் உண்டு என்பதை ரவிக்குமார் மறுக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

 நாவலாசிரிய இமையம் தனது முதல் நாவலாகக் கோவேறு கழுதைகள் நாவலை வெளியிடாமல் இருந்தால் இந்தப் புதிரை வண்ணார் நல வாரியம் இல்லை என்றே நினைக்கிறேன். புதிரை வண்ணார் நலவாரியம் என்னும் அரசியல் சமூக வெளிப்பாட்டின் பின்னணியில் மூன்று இலக்கியவாதிகள் இருந்திருக்கிறார்கள். முதல்வர் மு.கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார். இன்னொருவர் இமையம். அம்மூவருக்கும் புதிரை வண்ணார் சமூகம் நன்றி சொல்லக்கூடும். அம்மூவரையும் எழுத்துலகம் கைதட்டிப் பாராட்ட வேண்டும். படைப்பின் வேலை- படைப்பாளியின் பணி- விமரிசனங்களையும்  கருத்துகளையும் உருவாக்குவதோடு முடிந்து விடுவதில்லை; நிகழ்வுகளைச் சாத்தியமாக்குவதில் தான்  முழுமை அடைகிறது. அந்த வகையில் இமையத்தின் கோவேறு கழுதைகள் தன் மீது வைக்கப்பட்ட விமரிசனங்களையும் எதிர்வினைகளையும் தாண்டி வெற்றி பெற்ற படைப்பாக ஆகி இருக்கிறது. இதற்காக இமையத்திற்குத் தனிப்பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவேறு கழுதைகள் நாவல் வெளி வந்து முதல் ஆதரவுக்குரலை மதிப்பிகுரிய சுந்தரராமசாமியிடமிருந்து பெற்றதன் மூலம் பெருங்கவனத்தைப் பெற்றது. தலித்துகள் ஒடுக்கப்படுவதைப் பேசிக்கொண்டிருக்கும் போது தலித்துகளே ஒடுக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை முன் வைக்கும் கோவேறு கழுதைகள் நாவல் தலித் விரோத நாவல் என முத்திரை குத்தப்பட்டது. இந்தக் காரணத்தினால் தான் காலச்சுவடின் ஆசிரியரான சுந்தரராமசாமி ஆதரிக்கிறார் எனப் பரபரப்பு ஊட்டப்பட்டது. அத்தகைய விமரிசனங்கள் வைக்கப்பட்ட கூட்டத்தின் பின்னணியில் நானும் இருந்திருக்கிறேன். எனக்கெல்லாம் வேறு விதமான கருத்துக்கள் இருந்த போதும் முன்னணிப்படையாகச் செயல்பட்டவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்வது சரியல்ல என்ற நியதியை ஏற்று வாய்மூடி இருந்ததை இப்போது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. 

கோவேறு கழுதை நாவலின் மையமாக இருக்கும் ஆரோக்கியம் புதிரை வண்ணார் என்னும் சமூகக் குழுவின் வகை மாதிரி. புதிரை வண்ணார்கள் இந்தியச் சாதி அடுக்கில் சேவைப் பணிகளைச் செய்த சிறுபான்மைக் குழுவினர். கருத்தியல் ரீதியாக நால்வருணம் பற்றிப் பேசும் இந்திய சாதிமுறை நடைமுறையில் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டது. வேளாண்மையை முழுமையாக நம்பியிருந்த பாரம்பரியமான ஒரு இந்தியக் கிராமத்தில் நிலவுடைமைச் சாதிகள், உழைப்பை மட்டும் தந்து கூலியைப் பெற்றுக் கொண்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தலித்துகள், வேளாண்மைக்கும், நிலவுடைமைச் சாதிகளுக்கும் அன்றாட வாழ்க்கையில் தேவையான சேவைகளைச் செய்த சேவை சாதிகள் என மூன்று அடுக்குகள் இருந்தன. நிலவுடையாளர்களான இடைநிலைச் சாதிகளின் அன்றாட வாழ்க்கையிலும் தொழில்சார் நிலையிலும் சேவைப் பணியாளர்களாக இருந்த வண்ணார், அம்பட்டையர், தச்சர், கொல்லர், செம்மான் , கருமான் போன்ற சாதிகள் இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம் வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். ஊர்வேலை செய்தல் என்ற பெயரில் ஒரு கிராமத்தின் மொத்தத் துணிகளைத் துவைத்தல், ஊர் ஆண்கள் அனைவருக்கும் சவரம் செய்தல், ஊருக்குத் தேவையான உழவு கருவிகளைச் செய்தல்,  ஊர் மக்களுக்குத் தேவையான செருப்புகளைத் தயாரித்துக் கொடுத்தல் போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த வருஷக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள்.

அனைத்துவிதமான உழைப்புக்குழுக்களின் இருப்பையும் உலகமயம் நெருக்கிக் கொண்டிருப்பது நிகழ்கால இந்திய சமூகத்தின் மையப் பிரச்சினை. இதன் காரணமாக அமைப்புக்குட்பட்ட உழைக்கும் வர்க்கமும், இந்திய வேளாண்மையும் திசை தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொழில் மயமும் நகர்மயமும் தொடங்கிய போது  இந்தியக் கிராம சமுதாயம் அடைந்த மாற்றத்தை- நெருக்கடியை- முதலில் உணர்ந்த உழைப்புக் குழுக்கள் பாரம்பரிய இந்தியாவின் சேவை சாதிகள் தான். அவர்கள் தான் பாரம்பரியமான வேளாண்மை ஆட்டம் கண்ட போது கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள்.

இந்தியக் கிராம சமுதாயம் பற்றிப் பேசிய சிந்தனையாளர்களும், அமைப்புகளும் தொழில் மயம் சாதிரீதியான சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வரும் என்று கருதினார்கள். அதனால் அதனை ஆதரிக்கவும் செய்தார்கள். ஆனால் படைப்பாளிகள் முழு மனதுடன் தொழில் மயத்தை ஆதரிக்கவில்லை. 1970 களிலும் எண்பதுகளிலும் வந்த வட்டார எழுத்துக்களை சிறுகதைகள், நாவல்களைத் தொடர்ந்து வாசித்தவர்கள் இதை உறுதி செய்வார்கள். அதற்குப் பின்னர் வந்த தலித் எழுத்துகள், கிராம சமுதாயத்தில் நிலவிய ஒதுக்குதல்- ஒதுங்குதல் என்னும் நிகழ்வைத் தீவிரமாக விவாதத்திற்கு வைத்தன.

பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தலித் சாதியினர் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்; வாழ்தலுக்கான ஆரம்ப கட்டத் தேவைகளும் உரிமைகளும் இல்லாமல் தடுக்கப்படுகிறார்கள் என்பதைத் தலித் இலக்கியம் பேசத் தொடங்கிய போது உள்முரண்பாடுகளும், ஒடுக்கப் படுதலின் பல பரிமாணங்களும் கதைகளாக கவிதைகளாக  வெளிவந்தன. தலித் எழுத்து என்பது தன்னை எழுதுவதில் முழுமை அடைவதாக நம்பியபோது தன்னைலையுரைத்தல் என்னும் வடிவத்தில் தங்கள் நிலையை எல்லா தலித் எழுத்தாளர்களும் எழுதினார்கள். 1990 களின் தமிழ் இலக்கியப் பரப்பை நிரப்பிய அவ்வகை எழுத்துக்களின் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனியொரு மாதிரியாக வந்த எழுத்து இமையத்தின் எழுத்து.

தான் சார்ந்த குழுவின் சார்பாய்ப் பேசுதல் என்பதற்கு மாறாக ஆதிக்கத்திற்கெதிராக ஒடுக்குதலுக்கெதிராக நிற்பது எழுத்தின் வேலை என்ற உலக இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதுபவர் இமையம். அந்த அடிப்படையில் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என முத்திரை குத்துவதைக் கூட அவர் மறுத்து வருகிறார்.  ஆதிக்கவாதிகளாக இருக்கும் சொந்த சாதியினரை அடையாளம் காட்டுதல்; ஒடுக்கப்படும் குரலற்றவர்களின் குரலாக இருப்பதும் தலித் இலக்கியத்தின் முதன்மையான நோக்கம் என்னும் அடிப்படையில் பார்க்கும் போது இமையத்தின் புனைகதைகளே முதன்மையான தலித் இலக்கியமாக இருக்கிறது என்பது எனது கணிப்பு. செவ்வியல் இலக்கியங்கள் உருவாக்கும் உணர்வுக் கொந்தளிப்பின் கலவையாக இருக்கும் அவரது மூன்று நாவல்களையும் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல் வாசிக்கும் ஒருவர் இதனை முழுமையாக ஏற்கக் கூடும்.

துயரத்தை வாழ்க்கையாகச் சுமக்கும் கோவேறு கழுதைகளின் ஆரோக்கியமும், ஆறுமுகத்தின் தனபாக்கியமும், செடலில் வரும் செடலும் நம் காலத்துக் காவிய நாயகிகள். இவர்களின் துயரம் கண்ணகி, சீதை, தமயந்தி, பாஞ்சாலி போன்ற காவியப் பாத்திரங்களின் துயரங்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. நவீன எழுத்து ஏற்படுத்தும் பம்மாத்துக்கள் ஏதுமின்றி தமிழ் வாழ்வின் நடப்பைக் கீறிப் பார்த்து எழுதும் இமையத்தின் எழுத்து நடப்பியலின் அற்புதம் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு நாவலை எழுதுவதற்குப் படைப்பாளி சுமக்கும் சுமைகளும், ஏற்கும் வலிகளும் பாரதூரமானவை என்பதை அவரோடு உரையாடிப் பார்த்து உணர்ந்திருக்கிறேன். 

புதிரை வண்ணார் நலவாரியம் இலக்கியத்தின் வெற்றி.

இலக்கியவாதிகள் இதனைக் கொண்டாட வேண்டும்

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை