: 27

இணைப்பிரதியாக்கம்: தலைக்குமேலே மூன்று மின்விசிறிகள்


கவிதை உருவாக்கும் இணைப்பிரதிகள் முழுமையானதல்ல.மேற்பரப்பில் வாசிக்கக்கிடைக்கும் பிரதிக்குள் உள்ளோடும் ஒன்றாக உருவகம் அல்லது படிமம் என்ற நிலையில் கவிதைக்குள் இணைப்பிரதி உருவாக்கப்படுவதுண்டு, வாசிப்பவர் அதனோடு கொண்டுள்ள உறவு - அறிதல் மற்றும் புரிதல் தளத்தின் அளவிற்கேற்ப அந்த இணைப்பிரதிக்குள் பயணம் செய்யலாம். கவிதை உண்டாக்க நினைக்கும் உணர்வுகளைப் பெறலாம்.

கவிதைக்குள் ஒரு உத்தியாகச் செயல்படும் இணைப்பிரதியாக்கம் புனைகதைகளில் இரண்டு அடுக்காக விரிந்துகொண்டே இருக்கும். அவ்வாறு விரிவதற்குக் கதைசொல்லி இணையான சொல்முறை ஒன்றைக்கையாள வேண்டும். நினைவில் ஒன்றும் நனவில் ஒன்றுமாக இரண்டு சொல்முறைச் செயலைக்கையாளத் தெரிந்தவர்கள் அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளார்கள். லா.ச.ரா. சி.சு.செல்லப்பா, மௌனி, நகுலன் போன்றவர்களின் புனைகதைகளுக்குள் நனவோடை அல்லது நினைவோடை உத்தியாக அவை விவாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் தனிமனித அகம் சார்ந்த கதையாடல்களுக்கு வலுச்சேர்க்கும்விதமாக கையாளப்பட்ட சொல்முறைகள் அவை. கரன்கார்க்கி அச்சொல்முறையை -இணைப் பிரதியாக்கத்தைப் புறநிலை நடப்பைச் சொல்லப் பயன்படுத்திச் சோதனை செய்திருக்கிறார்.
நவம்பர் மாத உயிர்மையில் வந்துள்ள “ தலைக்குமேலே மூன்று மின்விசிறிகள்” கதையில் அந்தச் சோதனையை இப்படிச்செய்கிறார். தொடக்கத்தில் விரிவான விவரிப்புகள் வழியாக முன்பதிவு செய்யாத ரயில்பயணக் காட்சிகளின் நெருக்கடியும் ஆவேசங்களும் தன் முனைப்புகளும் நீள்கின்றன. பலதரப்பட்ட மனிதர்களின் தன்னிருப்புக்கான போராட்டங்களம்போல விவரிக்கப்படும் ரயில்பெட்டி, புயல் வீசி முடிந்த நிலப்பரப்புபோலப் பயணிகளின் உடல்களால் தாறுமாறான காட்சிகளில்அசைகின்றது. அதற்குள் ஹோமரின் ஒதிஸ்யஸ் காவியத்தின் கடைசிப்பக்கங்களை வாசிக்கிறான் ஒருவன். காதல், காமம்,போர்க்களம் எனக் காவியத்தின் காட்சிகளும் தாறுமாறாக அசைகின்றன. அதன் நாயகி பெனிலோப், அவளுக்காக 
மதிப்புமிக்க ரோசாவைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒதிஸியஸ், தொடர்ச்சியாகப் போர் எனக் காட்சிகள் அசைகின்றன புத்தக வெளியில்.

இவ்விரு அசைவுகளையும் இணையாக நகர்த்தாமல் ஒன்றின் முடிவில் இன்னொன்று என்பதாக வைப்பட்ட நிலையில் கரன் கார்க்கியின் கதை இணைப்பிரதியாக்கத்தை முழுமையாக்காமல் நிற்கிறது. அத்தோடு இரண்டும் பொருத்தமான அசைவுகளாக நகர்ந்துள்ளனவா என்பதும் கேள்வியாக எஞ்சுகிறது. எப்போதும் சோதனை வகைப்பட்ட எழுத்துகள் -கதைசொல் முறைகளில் இவ்வகைக் கேள்விகள் எழவே செய்யும். அதற்காகச் சோதனைகளை நிறுத்த வேண்டியதில்லை. கரன்கார்க்கிப் பலவிதமான சோதனைகளைச் செய்யும் புனைகதைக்காரராக வெளிப்படுகிறார்.முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை