: 71

தொகை நூல்கள் தரும் வாசிப்பு அனுபவம்

இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பொன்று செய்யப் போகிறேன். அதற்கு நீங்கள் ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட உடனேயே ஒத்துக்கொண்டேன். ஏனென்றால் தனியொரு எழுத்தாளரின் கதைகள் அடங்கிய தொகுப்புகளை வாசிக்கும் வேகத்தைவிடப் பலரின் கதைகள் அடங்கிய தொகைநூலில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும் விருப்பம் எப்போதும் உண்டு. அப்படியான தொகைநூல்களை வேகமாகவும் வாசித்துவிடுவேன்.  இப்போது காப்பு எனப் பொதுத் தலைப்பிட்டு ஈழவாணி தொகுத்துள்ள இப்பெருந்தொகுப்பை வாசித்த அனுபவத்தைத் தான் இங்கே முன்னுரையாக எழுதப் போகிறேன்.

தொகுப்பை முழுமையாகத் தொகுத்து முடித்தபின்  மொத்தமாக எனக்கு அனுப்பியதை வாசித்து எழுதும் அனுபவப்பகிர்வு அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை எழுதியவர்களிடமிருந்து வாங்கித் தட்டச்சு செய்து அவ்வப்போது அனுப்பிக்கொண்டே இருந்தார்.  அனுப்ப அனுப்ப நானும் வாசித்துக் குறிப்புகளை எடுத்துக்கொண்டே இருந்தேன். வாசித்து முடித்தபின்பு பல கதைகளை முன்பே வாசித்திருக்கிறோம் என்றும் தோன்றியதுண்டு. தமிழினி ஜெயக்குமரனின் கதைகள் இரண்டையும் அச்சாவதற்கு முன்பே வாசித்திருக்கிறேன். தமிழ்நதி, தாமரைச்செல்வி, ஈழவாணி, யாழ்தர்மினி, சுமதிரூபன் கதைகளும் முன்பே வாசித்த கதைகள்.  இப்போது திரும்பவும் வாசிக்கும் வாய்ப்பு கூடுதலாகக் கிடைத்தது. சந்திரா இரவீந்திரனின் கதை அண்மையில் காலச்சுவடில் வந்தபோது வாசித்தேன்.  இவர்களின் கதைகளின் கதைகள் அல்லாமல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் இதே கதைகளை வாசித்திருக்கவில்லை என்றாலும் வேறுகதைகளை வாசித்த நினைவுகள் உண்டு.  இவர்களின் கதைகளின் கதைகள் அல்லாமல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் இதே கதைகளை வாசித்திருக்கவில்லை என்றாலும் வேறுகதைகளை வாசித்த நினைவுகள் உண்டு.  இந்தக் கதைகளின் வெளிகளும் அதற்குள் ஊடாடித்திரியும் மனிதர்களும் அவர்களின் வினைகளும் வினையாற்றும்போது வெளிப்பட்ட உணர்வுகளும் ஏற்கெனவே எழுத்துப்பிரதிகளின் வழியாக எனக்குள் இருப்பவைதான். கடந்த நான்கு பத்தாண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட வாழ்வின் அவலங்களால் தமிழ் இலக்கியத்திற்கு -தமிழ் மொழியில் எழுதப்படும் பனுவல்களுக்கு நேர்மறை விளைவு ஒன்று உருவாகியிருக்கிறது. அதன் பரப்பும் வெளிப்பாட்டு முறைகளும் உலகத்தன்மைக்குள் நகர்ந்திருக்கிறது என்று நம்புபவன் நான். அதனைத் தேடுவதற்காகத் தமிழ்நாட்டுக்கதைகளை மட்டுமல்லாமல் இணையம் வழியாகவும் அச்சுநூல்கள் வழியாகவும் எனக்கு வந்துசேரும் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அதன் போக்கைக் கணித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த ஆசையின் ஒரு பகுதியாகவே இந்தத் தொகைநூலின் கதைகளையும் வாசித்திருக்கிறேன்.

தமிழின் பதிப்பின் வரலாறே தொகைநூல்களின் கிளைகளால் நிரப்பியிருக்கும் தோப்புதான். எல்லா மொழியிலும் தொகைப்படுத்துதலின் பின்னணியில் பொதுநிலையிலான ஒரு காரணமும் சிறப்புநிலையிலும் சில காரணங்களும் செயல்படுகின்றன. பொதுவான காரணமாக இருப்பது ஆவணப்படுத்துதல். குறிப்பிட்ட காலகட்டத்து எழுத்துகளைத் தொகுத்துப் பின்னர்வரும் சந்ததியினருக்குத் தரவேண்டும் என்னும் நோக்கத்தில் தொகைநூல்களைச் செய்திருக்கிறார்கள். அவற்றில் கிடைப்பனவெல்லாம் சேர்க்கப்படும் என்ற போக்கு இருக்கும். அதே நேரத்தில்   அவ்வகைத் தொகைநூல்களுக்குள் சில நுட்பங்களும் செயல்பட்டிருக்கின்றன என்பதையும் தொகைநூல் வரலாறு நமக்குச் சொல்கிறது.

அகம், புறம் எனப் பாடுபொருள் அடிப்படையிலும் அதற்குள் அடையாளப்படும்  உரிப்பொருள் அடிப்படையிலும் செய்யப்பட்ட தொகைநூல்களே தமிழ்ச் செவ்வியல் கவிதைகள். அடிவரையறைகளும் (ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு) கவிதை நுட்பங்களும் (அகநானூற்றின் களிற்றுயானை நிரை, மணிமிடைப்பவளம்,  நித்திலக்கோவை)  நிலவியல் அடையாளங்களும் (குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி,பாலைக்கலி)  உட்பிரிவுகளுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் பத்து அல்லது நூறின் மடங்குகளின் (100, 150, 400, 500)   அடிப்படையில் செவ்வியல் கவிதைகளும் அறநெறிக் கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பக்திக்கவிதைகளில் அவை ஆயிரங்களாகியிருக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியை இக்கால இலக்கியத்தின்  ஆரம்பக்காலத்திலும் பார்க்க முடிகிறது. எழுத்துக் கவிதைகள் புதுக்குரல்களாகத் தொகுக்கப்பட்டதும் வானம்பாடிக் கவிதைகள் வெளிச்சங்கள் எனத் தொகுக்கப்பட்டதையும் அறிவோம். ஈழத்தமிழ்க் கவிதை வரலாற்றில் பதினொரு ஈழத்துக்கவிஞர்கள் தொகுப்பும், மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி போன்ற தொகுப்புகளும் முன்னோடித்தொகை நூல்கள். 35 ஆண்டுகாலப் போரின் உடன் விளைவான இடப்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் பல்வேறு வகையான தொகைநூல்களைத் தமிழ் நூல்பரப்பில் வாசிப்புவெளியிலும் விரித்து வைத்திருக்கின்றன. லண்டனிலிருந்தும் பிரான்சிலிருந்தும் கனடாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் தொகுக்கப்பட்ட பல தொகைநூல்களில் ஈழப்போரையும் புலப்பெயர்வையும் விவரிக்கும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், தன்வரலாறுகள், நினைவுப்பதிவுகள், நாட்குறிப்புகள் என அனைத்து வகைமையான எழுத்துப் பனுவல்களும் வாசிக்கக் கிடைத்தன; கிடைக்கின்றன. சில தொகைநூல்களில் எழுத்தல்லாத ஓவியங்கள், நிழற்படங்கள் கூடத் தொகைப்படுத்தப்பட்டிருப்பதை வாசித்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.

எல்லாவற்றையும் ஆவணப்படுத்துதல் என்னும் பொதுமை நோக்கத்திலிருந்து  நகரும்போது சிறப்பான கவனக்குவிப்புகள் தொகை நூல்களின் பின்னணிக் காரணங்களாகி விடுவது தவிர்க்கமுடியாதவை. இலங்கையின் போர்ப்பின்னணியில் கவிதைகளும் சிறுகதைகளும் அப்படியான கவனக் குவிப்போடு தொகுதியாக்கப்பட்டு வாசிக்கக் கிடைத்தன. கவனக் குவிப்பில் போர்க்காலம், புலம்பெயர்வு போன்ற நிகழ்வுகள் காரணங்களாக இருந்தது போலவே பெண்களின் பனுவல்களைத் தனியாகத் தொகைப்படுத்திக் காட்டும் போக்கிற்கும் வரலாறு இருக்கிறது.   சொல்லாத சேதிகள் என்ற தலைப்பில் ஈழத்துப் பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பெற்று  அச்சில் வந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆகின்றது. அதற்குப் பின்னும் இலங்கைப்  பெண்களின் கவிதைகளும் இந்திய இலங்கைப் பெண்களின் கவிதைகளும்  தொகுக்கப்பெற்றுள்ளன. பெண்கள் எழுதிய சிறுகதைகளும் நிகழ்வுகளை மையப்படுத்தித் தொகுக்கப் பெற்றுள்ளன. யுத்தகாலத்தைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகள் தொகுதியொன்றையும், அதிலும் பெண்களின் அனுபவங்களை மட்டும் சொல்லும் சிறுகதைத் தொகுதியொன்றும் வாசித்திருக்கிறேன்.

*************

காப்பு  இலங்கைப் பெண் சிறுகதைகள்  - எனத் தலைப்பிட்டு ஈழவாணி தொகுத்துள்ள இப்பெருந்தொகுப்பு இரண்டு கவனக்குவிப்பை வாசிப்பவர்களிடம் கோரும் நோக்கம் கொண்டது.  முதன்மையான கவன ஈர்ப்பு இந்தக் கதைகள் பெண்கள் எழுதிய கதைகள் என்பது. இரண்டாவது  இலங்கையின் / ஈழத்தின் பெண்கள் எழுதிய கதைகள் என்பது. எழுத்தாளர்களின் எழுத்து என்ற பால்ப் பொதுமையிலிருந்து பெண்களின் எழுத்து என்ற பாலடையாளத்தை நோக்கி நகரும்போது, பெண் நோக்கு வாசிப்பைக் கோரும் முன்வைப்பை – முனைப்பை அந்தப் பனுவல்கள் கோருகின்றன என்பதை முதலில் வாசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் குரலான பெண்ணியம் என்னும் கருத்துநிலை உலகம் முழுவதும் வாழும் மனித உயிரிகளில் பெண்கள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுகிறார்கள் என்ற அடித்தளத்தின் மேல் எல்லாவற்றையும் கட்டமைத்திருக்கிறது. எப்போதும் கட்டமைப்புகள் ஒன்றைத் தன்மை இடத்தில் -சொல்பவரின் இடத்தில் நிறுத்திக்கொண்டு முன்னிலையாகவும் படர்க்கையிலும் மற்றமைகளை நிறுத்திப் பேசும் வெளிப்பாட்டுத் தன்மை உடையன. பெண்ணியம், ஆண்களைப் பெண்களின் மற்றமையாக ஆக்கிச் சொல்லாடல்களை முன்வைக்கிறது. இரண்டாம் பாலினமான பெண்களாகிய நாங்கள், முதலாம் பாலினத்தவர்களான ஆண்களால் கீழானவர்களாகக் கருதப்படுகிறாறோம். மேல்-கீழ் என்னும் அடுக்குவரிசையின் பின்னணியில் எங்களின் இருப்பும் விருப்பங்களும் ஆணைச் சார்ந்ததாக இருக்கின்றன. சார்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தங்களினால் ஒடுக்குதலுக்கு ஆளாகிறோம் என்ற குற்றச்சாட்டு முதன்மையான வெளிப்பாடுகளாகப் பெண்களின் எல்லாவகைப் பனுவல்களிலும் முன் வைக்கப்படுகிறது.  இந்தத் தொகுப்பிலும் அந்தக்குரல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  குடும்பவெளி, பணியிட வெளி எனக் கட்டாயமாக ஆணும் பெண்ணும் சேர்ந்தியங்க வேண்டிய வெளிகளில் ஆண்கள் என்னும் மற்றமைகள் அப்பாக்களாக- கணவன்களாக – காதலர்களாக – அதிகாரிகளாக – உடன் பணியாற்றும் சக ஊழியர்களாக – பணி வாய்ப்பு வழங்கும் முதலாளிகளாக உருவாக்கப்பட்டுப் பெண்களைப் பலவகையான ஒடுக்குதல்களுக்குள் நகர்த்தும் விதங்களைக் கதைகள் விவரிக்கின்றன. ஒடுக்குதல் நிகழும் வெளியாகப் பெண்ணுடல்கள் இருக்கின்றன என்பதை வெளிப்படையாகவே பேசுகிறார்கள் சுமதிரூபன், யாழ்தர்மினி, பிரமிளா ப்ரதீபன், வெற்றிச் செல்வி போன்றவர்கள். பெண்ணுடலுக்குள் பாலியல் இன்பம் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற நீண்ட கால நம்பிக்கையின் மேல் ஆண்களின் நுகர்வும் மீறலும் குடும்பம் என்னும் அமைப்பின் கட்டுப்பாடுகளோடும், கட்டுப்பாடுகள் இல்லாமலு நடக்கின்றன என்பதை இத்தொகுப்பில் இருக்கும் பெண்ணியச் சொல்லாடல் கதைகள் சொல்கின்றன. பெண்கள் எழுதிய கதைகளின் தொகை நூல் இது என்பதால் இவ்வகைக் கதைகளே அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால் இத்தொகுப்பை வாசித்து முடித்தபின் அப்படிச் சொல்லமுடியவில்லை.

பெண்கள் எழுதியன என்பதைத் தாண்டி, இலங்கைப் பெண்கள் எழுதிய கதைகள் என்பதால் வாசிப்பவர்கள் இன்னொரு கவனக்குவிப்பையும் ஏற்படுத்திக்கொண்டு வாசிக்க வேண்டும். போர்க்கால வரலாற்றை  அண்மைக்கால வரலாறாகக் கொண்ட இலங்கையின் யாழ்குடா நாடு, மட்டக்களப்பு, மலையகம், தலைநகர் கொழும்பு என்பதான நிலவியல் வேறுபாடுகளையும், சிங்களம், தமிழ் என்ற மொழிசார் பண்பாட்டையாளங்களையும் சைவம், இசுலாம், பௌத்தம், கிறித்தவம் என்பதான சமயப்பண்பாட்டு வேறுபாடுகளையும் உள்வாங்கிக் கொண்டே இக்கதைகளை வாசிக்க வேண்டும்.

இத்தொகை நூலுக்குள் ஐம்பதாண்டுகால இலங்கைத் தமிழ்ச் சமூக வாழ்வின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகப் புனைகதைகள் நேரடிக் காட்சிகளிலிருந்து பழைய காலத்திற்குள் நினைவுகளாகப் போய்த்திரும்பும் உத்தியைக் கடைப்பிடிப்பன.  இத்தொகுப்பின் பல கதைகளும் அவ்வுத்தியிலேயே நகர்கின்றன.   இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்காத காலகட்டத்தைக் காட்டும் பதிவுகளைப் பாலேஸ்வரி, குறமகள் போன்றவர்கள் நேரடியாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலரிடம் நினைவுகளாகப் பதிவுகளாகியுள்ளன. கதைகளில் இடம்பெறும் கதைசொல்லிகளின் இருப்பைக் கொண்டு இக்கதைகளில் மூன்றுவகையான காலகட்டங்களும் கதைவெளிகளும் துல்லியமாகப் பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 

 போர்க்கால நிகழ்வுகள் பற்றிய கதைகள், போருக்குப் பின்னர் அங்கேயே உருவாக்கப்பட்ட புனர் வாழ்வு முகாம்களிலும் வாழ நேர்ந்தவர்களின் கதைகள், புலம்பெயர் வாழ்வின் இன்பதுன்பங்களைப் பேசும் கதைகள் எனக் கால அடிப்படையில் பிரித்துப் பார்க்கமுடிகிறது. இம்மூன்று காலகட்ட த்திற்கும் தரவேண்டிய அளவை ஈழவாணி ஓரளவு சரியாகவே தந்துள்ளார். அண்மைக்காலக் கவனக் குவிப்பு போருக்குப் பிந்திய வாழ்க்கை என்பதால் அதுசார்ந்த கதைகள் அதிகமாகவே இருக்கின்றன. இந்தியா போன்ற  அகதிகளை மதிக்காத நாட்டில் ஈழ அகதிகளாக இருப்பதின் கீற்றுகளைச் சில கதைகள் சொல்கின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற தூரதேசத்து நாடுகளுக்கும் சென்று  உடல் உழைப்புக்கான பணிகளை எடுத்து ஓரளவு வசதியோடு வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களையும் இத்தொகுப்பின் கதைகளில் வாசிக்கமுடிகிறது. 

இலங்கைப் பெண்களின் கதைகள் என்ற நிலவெளியையும் கவனப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அதாவது கதைவெளிகள் ஈழத்துப் பின்னணியையும் ஈழத்திலிருந்து பலநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் புலம்பெயர்ந்த தேசங்களின் பின்னணியையுமே கொண்டிருக்கின்றன.  நீண்ட நெடிய உள்நாட்டுப் போரைச் சந்தித்த வாழ்வெளிகளும் புலம்பெயர்வுகளும் கதைகளின் வெளிகளாக மாறுவது தவிர்க்கமுடியாதது. அதே நேரத்தில் தொகுப்பாளர் ஈழவாணி இலங்கையின் பல்லின, பல்மொழி, பிரதேச வேறுபாடுகளையும் உணர்ந்தவராய்க் கதைகளைத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருக்கிறார். மலையகப் பெண் எழுத்தாளர்கள், மட்டக்களப்புப் பெண் எழுத்தாளர்கள், கொழும்பில் வாழும் பெண் எழுத்தாளர்கள் எனப் பிரதேசவாரியாக இடம் அளித்துள்ளதோடு, இசுலாமியப் பெண்களின் கதைகளும் இடம்பெற வேண்டுமென அவர்களின் கதைகளையும் இடம்பெறச் செய்துள்ளார். இவற்றோடு தமிழர் வாழ்வுகுறித்த சிங்களக் கதைகளையும் தேர்வுசெய்துள்ளார். அவை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சான  சிங்களக் கதைகள் எனத் தெரிகிறது. 

நிலவெளி சார்ந்தும் மொழிப்பிரிவுகள் சார்ந்தும் சமயப்பிரிவுகள் சார்ந்தும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பின் கதைகளை வாசிக்கும்போது இலங்கையின் அண்மைக்காலப் பெருநிகழ்வான உள்நாட்டுப் போரின் தீவிரத்தையும் அதனால் பெருந்திரளான மக்கள் இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் வாழ நேர்ந்துள்ளதைப் பெண்கள் கவனத்துடன் ஆண்களின் எழுத்துப் பதிவுகளுக்கு இணை சொல்லும்படியாகப் பதிவு செய்திருப்பது புரிகிறது. குடும்ப எல்லைக்குள் முடங்கிப் போன சமூகமாக இலங்கைத் தமிழ்ப் பெண்களின் நடவடிக்கைகள் இல்லையென்பதோடு, போரில் நேரடியாக ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளாகப் பெண்களே பதிவுசெய்து தந்திருக்கிறார். அப்பதிவுகள் எதிர்காலச் சந்ததியினருக்குப் பெரும் விழிப்புணர்வைத் தரும்.

மொத்தக்கதைகளையும் வாசிக்கும்போது சிறுகதையின் எளிய வடிவங்களும் நுட்பமான கதைத் திறன் வெளிப்படும் கதைகள் கொண்ட தொகுதி இது என்பதை உணரமுடிகிறது. ஒற்றை நிகழ்வுக்குள்ளேயே ஒரு உச்சநிலையைக் காட்டி முடித்துவிடும் கதைகளாகப் பெரும்பாலும் போர்ப்பின்னணிக்கதைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் தமிழ்நதி, தாமரைச்செல்வி, சுமதிரூபன், சந்திரா இரவீந்திரன், தமிழினி, ஈழவாணி, வினோதினி போன்றவர்கள் தொடர்ச்சியாக எழுதியெழுதிச் சிறுகதை வடிவத்தைக் கைவசப்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழ் இலக்கியப்பரப்பைத் தொடர்ந்து கவனித்துப் படிப்பவன் என்ற வகையில் ஈழவாணியின் இந்தத் தொகுப்புக்கும் உலகத்தமிழ் இலக்கிய வரைபட உருவாக்கத்தில் முக்கியமான ஓரிடம் உண்டு என்பதை உறுதியாகச் சொல்வேன்.முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை