: 56

வெண்மணி நினைவுநாள்- சில குறிப்புகள்

அறுபத்தியெட்டில கீழவெண்மணியில் நடந்த அக்கிரமம்; 
நாம கண்ணுங்காதும் வாயும்பொத்தி இருந்த அக்கிரமம். 
இந்தமாதிரி கொடுமைகள் இங்கு எங்குமே நடக்கிறது
இந்தியாவில் எங்குமே நடக்கிறது.

1980 -களில் தீவிரமாக இயங்கிய பல தெருநாடகக் குழுக்கள் இப்படித் தொடங்கி நடத்திய நாடகத்தின் தலைப்பு: நியாயங்கள். மதுரை நிஜநாடக இயக்கம் 50 -க்கும் மேற்பட்ட மதுரை மாவட்டத் தெருக்களில் நடத்தியிருக்கிறது. அதில் நடிகனாக இருந்த நான் பாண்டிச்சேரிக்குப் போனபின்பு கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் வழியாகப் புதுச்சேரி, கடலூர், தஞ்சாவூர், கல்பாக்கம், பகுதிகளிலும் நடத்தியிருக்கிறோம். அப்போது வெண்மணி முதல் சுண்டூர் வரை எனப் பெயரை மாற்றியிருந்தோம். சில நிகழ்வுகள் டிசம்பர் 25 அன்று வெண்மணி நினைவுக்காகவும் நடத்தப்பெற்றது.

1968, டிசம்பர் 25 இல் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்படுவதற்கு முன்பு காவல் துறையின் துணையோடு நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாள்படை  துப்பாக்கியோடு விவசாயக் கூலிகளைச் சுட்டும் உடல்களைச் சிதைத்தும் நெருப்பில் வீசியெறிந்து கொன்றது. வெண்மணிக் கொலை நிகழ்வு நடக்கக் காரணம் யார்? என்பதைச் சுட்டிக்காட்டுவதிலோ, அந்நிகழ்வுக்குக் காரணமான கருத்தியலும் அமைப்புகளும் இல்லாமல் ஆக்கப்படுவதற்கான பணிகளைச் செய்திருக்கிறோம் என்பதிலோ சண்டையும் உரிமை கோரலும் நடக்குமென்றால் வரவேற்கலாம். அதற்குப் பதிலாக எந்த இயக்கம் உழைக்கும் கூட்டத்தைத் திரட்டியதால்- போராட்டக்களத்தை அமைத்துத் தந்ததால்- வன்கொலைக்கு ஆளானார்கள் என்பதை அடையாளப் படுத்தி உரிமை கோருவதில் என்ன பெருமை இருக்கமுடியும் என்று தெரியவில்லை. கூலி உயர்வு கேட்ட காரணம் பின்னணியில் இருந்தது. கேட்டுப் போராடத் தூண்டியது இடதுசாரிக் கட்சியின் விவசாயத்தொழிலாளர்களின் சங்கம். எரிக்கப்பட்ட இடம் ராமையாவின் குடிசை. எரிக்கப்பட்ட அனைவரும் தலித்துகள்.

நிலப்பிரபுத்துவத்திற்கெதிராக - வர்க்கமாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களை உழைக்கும் வர்க்கமாகப் பார்க்கத் தயாரில்லை ஆளும் வர்க்கம். இந்தியாவில் - தமிழ்நாட்டில் இருப்பது வர்க்கவேறுபாடல்ல; சாதி ஆதிக்கம் மட்டுமே என்பது ஆதிக்கசாதி நிலக்கிழார்களின் கருத்தியல். சாதிப்பிரிவினை தீண்டாமையை ஏற்கிறது. தீண்டாமையைக் காரணம்காட்டி எல்லாவகையான உரிமைகளையும் மறுக்கிறது. அதனை மீறுபவர்களைக் கொல்லவும் அதிகாரம் இருப்பதாக நினைக்கிறது சாதி ஆதிக்கம். நினைத்ததை நடத்திக்காட்டிய நிகழ்வு கீழ்வெண்மணி. நடத்தியபின் அந்த நிலக்கிழார் செய்த பரப்புரைகள் அதையே உறுதிசெய்தன.

இப்போது வெண்மணி நினைவு நாளுக்குச் சொந்தம் கொண்டாடுவதில் நடக்கும் சண்டை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 50 வது நினைவு ஆண்டில் அச்சண்டை கூச்சலாக மாறி முகநூல் எங்கும் கேட்கிறது.தொலைக்காட்சிப் பெருக்கத்தால் நேரலைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றன. நினைவுநாள் அஞ்சலிகளில் கொண்டாட்ட மனநிலை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதை அமைப்புகள் உணரவேண்டும்.

வெண்மணிப் படுகொலைநாள் எப்படி நினைக்கப்படவேண்டும்?. சாதிச் சங்கத் தலைவர்களின் ஜெயந்திகளைப் போலவா? கோயில் கொடை போலவா? என்பதைப் போட்டிபோடும் அமைப்புகள் யோசிக்க வேண்டும். உள்ளடக்கத்தைவிடவும் வடிவத்திற்கு முதன்மை அளிக்கவேண்டிய காலகட்டத்தில் -ஊடகப் பெருக்கக் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .

Image may contain: sky, tree, plant and outdoor


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை