: 43

கையாளுதலின் வீழ்ச்சி

ஒரு பொருளை அல்லது அமைப்பைக் கையாளுவதைத் திறன் என்ற சொல்லாலும் குறிக்கலாம்; கலை என்ற சொல்லாலும் குறிப்பிடலாம்.

கையாளப்படுவதின் வழியாகக் கருத்துகளும் உணர்வுகளும் உருவாக்கப்படும்போது கலையாக அறியப்படும். கலையாகக் கருதப்படுவதற்குக் காரணமான கையாளுதலுக்கு வெற்றி அல்லது தோல்வி முதன்மையாக எதிர்பார்க்கப் படுவதில்லை. ஆனால் அரசியலிலோ, பொருளியல் துறையிலோ கையாளுதலின் வெளிப்பாட்டைத் திறன் என்றே சொல்வார்கள்.
முதலீட்டையும் கச்சாப்பொருட்களையும் தொழிலாளர்களையும் சரியாகக் கையாளுவதில் வெளிப்படுவது மேலாண்மைத் திறன். மேலாண்மைத் திறனற்ற நிர்வாகியால் ஏற்படுவது நட்டம். நட்டம் ஏற்படப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து மேலாண்மை செய்யும் அதிகாரி அல்லது நிர்வாகக் குழு விலகிக் கொண்டால் வீழ்ச்சியைத் தடுக்க முடியும். பொருளியல் சார்ந்த இந்தப் பருன்மையான நிலையை அப்படியே அரசியலில் செயல்படுத்த முடியாது. காரணம் அரசியல் அதுவும் நிகழ்கால மக்களாட்சி அரசியல் பெரும் முதலீடு கூடிய பொருளியலாகவும் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைக் குவிக்கும் கலையாகவும் இருக்கிறது.

நிகழ்கால மத்திய அரசைக் கையாளும் வேலையைச் செய்துகொண்டிருப்பது ராஷ்ட்ரீய ச்வ்யம் சேவக் என்னும் அமைப்பு. தனது கையாளுதலின் வழியாகவே கடந்த தேர்தலின் வெற்றிக்காக திரு நரேந்திரமோடி என்னும் பிம்பத்தை உருவாக்கிப் பலனையும் அனுபவத்தது. அந்தப் பிம்பம் தொடர்ச்சியான வெற்றியைத் தராது என்ற நிலையை பஞ்சாப், சட்டீஸ்கர்,ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தேர்தல் தோல்விகள் உறுதிசெய்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களும்கூட அதையே காட்டுகின்றன. இந்த நிலையில் தனது கையாளும் உத்தியை மாற்ற நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதற்கான திட்டமிடல் கூட்டம் தமிழகத்தில் நடக்கப்போவதாகச் செய்திகள் கூறுகின்றன. அச்செய்தி பெரும்பாலும் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அதன் கருத்துருவாக்கிகளில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாறு. அதன் தோற்றம் தொடங்கித் தமிழ்நாட்டுக் கருத்துருவாக்கிகளின் செல்வாக்கைத் தனதாக்கி வளர்ந்தது ஆர்,எஸ்,எஸ்,

தமிழ்நாட்டுக் கருத்துருவாக்கிகள் இந்தியப் பண்பாடு, இந்திய வரலாறு, இந்தியாவின் ஞானம் என்று பேசும்போது எப்போதும் தமிழ்நாட்டின் தனித்துவம் குறித்துக் கண்டுகொள்ள விரும்பாமல் பட்டையைக் கட்டிக்கொண்டு திசைமாறியே யோசிப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழ் மொழியும் அதில் உருவாக்கப்பட்டுத் திரண்ட கருத்துகளும் அவற்றை வெளிப்படுத்திய கவிதையியலும் வாழ்க்கை முறையும் இந்தியப் பரப்பில் வேறுபாடுகள் கொண்டவை என்பதை ஏற்க மறுப்பவர்கள். இந்துமதத்தின் உட்பிரிவுகளாகச் சித்திரிக்கப்படும் சைவம் வைணவம் என்னும் சமய வாழ்க்கை முறைகளும்கூட இந்தியச் சைவத்திலிருந்தும் வைணவத்திலிருந்தும் வேறுபாடுகள் கொண்டவை ஏற்க மாட்டார்கள். வைதீக இந்துமதமே இந்தியா முழுக்கப் பண்பாட்டு வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒற்றைச் சக்தி எனப் பேசும் அவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு எதிரான மிகச் சிறுபான்மையினர் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு அது புரிந்தே இருக்கிறது.

மைய அரசில் திரு. நரேந்திர மோடியைக் கையாண்ட ஆர் எஸ் எஸ், அவரின் வழியாகத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியையும் அதன் அரசையும் கையாளுகிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் இருக்கலாம், வாக்களிக்க இருக்கும் மக்கள் தினந்தோறும் தெருக்களில் தேநீர்க்கடைகளில் பேருந்துப் பயணங்களில் பேசிச் சிரிக்கிறார்கள். கையாளப்படுபவர்களின் இயலாமையைவிடவும் கையாளும் சிறுகூட்டத்தின் திறனைக் கேலியும் பகடியும் செய்யும் எழுத்துகளும் படங்களும் சமூக ஊடகங்களின் தீனியாக இருக்கின்றன.

தமிழக அரசைக் கையாளும் கூட்டத்தின் வெளிப்பாட்டு ஆளுமைகள் தொலைக்காட்சி அலை வரிசைகளில் விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். கடந்தகாலத் தமிழக ஆட்சிகளின் ஊழல்களையும் அதிகார மீறல்களையும் நிர்வாகச்சீர்கேடுகளையும் விரிவாகப் பேசும் திறன்கொண்டவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தமிழக அரசைக் கையாளும் நிலையை ஒத்துக்கொள்ளாமல் விலகலையும் காட்டுகிறார்கள். அந்த விலகலும் சொற்களும் போலியானவை என்பதை ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் உணர்ந்திருந்த போதிலும் அம்பலமாக்கும் கேள்விகளை நேரடியாகக் கேட்பதில்லை. ஆனால் சிலர் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதிலிருந்து பின்வாங்குவதே இல்லை.

இந்தியப்பண்பாடு, இந்திய ஞானம், இந்தியத் தன்னிலை என அவர்கள் நம்பும் கருத்தியலில் உண்மையிலேயே இவர்களுக்கு ஈடுபாடும் ஏற்புடைமையும் இருந்தால், தமிழக அரசை மத்திய அரசின் வழியாக ஆர் எஸ் எஸ் கையாள்வதை ஒத்துக்கொள்ளவே செய்வார்கள். இந்தக் கையாளுகை தோல்வியைத் தரும் என்பதை உணரவும் செய்வார்கள். ஏனென்றால் தமிழக வாக்காளர்கள் மறைமுகமாக அதிகாரம் செய்யும் நபர்களை எந்த நிலையிலும் ஏற்க மாட்டார்கள் என்பது வரலாற்றுண்மை. நிகழ்கால நிரூபணமும் கூட. சத்திரியராகக் காட்டிக்கொள்ளும் நபர்களின் திறனைக்கூட மதிப்பார்கள், ஏமாற்றுக்காரர்களாக அறியப்படும் புத்திசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதில்லை.
வரப்போகும் பொதுத்தேர்தலில் கையாளும் அரசியலின் வீழ்ச்சியைக் கண்கூடாகப் பார்க்கப்போகிறோம்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை