: 41

சென்னென்னும் இடது சினிமாக்காரர்

அவரது படங்களைப் பெரும்பாலும் ப்லிம்சொஷைடிகளில் தான் பார்த்திருக்கிறேன். சினிமா அறிவாளிகளை உருவாக்கிய யதார்த்தா ப்லிம் சொஷைடி 1980 களில் மிர்னாள் சென்னின் தொகுப்பாகச் சில குறும்படங்களையும் ஒக ஊரி கதா, பரஸுராம் போன்ற படங்களைத் திரையிட்ட நினைவு இருக்கிறது. அதேபோல் தொண்ணூறுகளில் ஒரு தொகுப்பாகப் பாண்டிச்சேரியில் இயங்கிய திரைப்படச்சங்கம் அங்கிருந்த முருகா தியேட்டரில் சென்னின் படங்களை வெளியிட்டது. சென்னை ப்லிம் சொஷைடியோடு இணைந்து கொண்டாடிய ஒரு திரைப்பட விழா என்பதாக நினைவு.

இந்திய இடதுசாரி சினிமாவின் வகைமாதிரிகள் ஒன்றின் முன்னோடி சென் என்பதை நான் பார்த்த அவரது படங்களும் அவர் எழுதிய கட்டுரைகளும் கற்றுத்தந்துள்ளன. கல்கத்தா நகரத்தை மையமிட்டு இந்திய நடுத்தரவர்க்கத்தைத் தனது படங்களில் காட்டிய சென்னின் சினிமாவிற்குள் இடதுசாரிக் கலைக்கோட்பாடுகளான வெளிப்பாட்டியம், விலகிப் பார்க்கும் ப்ரெக்டியக் காவியபாணிப் படப்பிடிப்பு போன்றனவற்றைக் கற்க முடியும். அந்தவிதத்தில் அவர் அறிவித்துக்கொண்ட இந்திய இடதுசாரி சினிமாக்காரர். அவரது பின்னோடிகளாக மலையாளத்தின் ஜான் ஆப்ரகாம்,அரவிந்தன் தெலுங்கின் நரசிங்கராவ், தமிழின் அருண்மொழி / ஏர்முனை, காணிநிலம் போன்றவர்களைக் கூறமுடியும். ஸ்ரீதர் ராஜனின் கண் சிவந்தால் மண் சிவக்கும் கூட சென்னின் தாக்கம் கொண்ட படமே. தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் படையெடுக்காத காலகட்டத்தில் சென், நேருவின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்களையும் தொலைக்காட்சிக்காக எடுத்தார். புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் கற்றுத்தேர்ந்த சிலரோடு பேசியபோது அவரது கற்பித்தல் முறைமைகள் குறித்து விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

திரும்பத்திரும்ப நான் வாசிக்கும் சினிமா பற்றிய நூல்கள் இரண்டு. முதலாவது நூல் காஸ்டன் ராபெர்ஜின் மாற்று சமூகத்திற்கான மற்றொரு சினிமா (Gaston Roberge/ Another Cinema for Another Society) இன்னொன்று மிர்னாள் சென்னின் கட்டுரைகளும் நேர்காணல்களும் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வந்த, சினிமா: ஒரு பார்வை. 
சென்னின் மறைவு நினைத்துக் கொள்ளவேண்டிய மறைவு.

Image may contain: 1 person


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை