: 73

ரஜினியின் மூன்று முகங்கள்.

பாட்ஷா படத்தில் உச்சத்தை அடைந்த ரஜினியின் நட்சத்திர அந்தஸ்து பாபா படத்தின் மூலமாகச் சறுக்கலைச் சந்தித்தபோது அவர் அப்படியே சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு திரைப்படத்துறையினரிடமிருந்து வந்தது என்பதைவிட அதற்கு வெளியே இருந்தவர்களிடமிருந்தே வந்தது. அவரால் மட்டுமல்ல; தனது வாழ்க்கையின் சரிபாதிக்காலத்தை ஒரு துறைக்கு ஒப்புக்கொடுத்த யாராலும் அந்தத் துறையைவிட்டு ஒதுங்கிவிட முடியாது.

மூன்றுமுகம் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த வெற்றிப்படம். இன்றைய ரஜினி தனது சொந்த வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக்கொண்ட மூன்று முகங்கள் அதிலிருந்து வேறுபட்டவை. ஆன்மீகம், அரசியல், நடிகன் ஆகியவைதான் அந்த முகங்கள்.ஆன்மீக முகம் அந்தரங்கமானது. தனிமனிதர்களின் வாழ்க்கையில் அடியோட்டமாக இருக்கும் அந்த அடையாளம் எப்படிப்பட்டது என்பதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டிய அவசியம் இல்லாதது. ஆனால், அரசியல் முகம் அப்படிப்பட்டதில்லை. பெருந்திரளை ஒன்று திரட்டுவதையும், வழிநடத்துவதையும் பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டியது. அந்தரங்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பது நடிகன் என்ற அடையாளம். ரஜினியைப் பொறுத்தவரையில் நடிகன் என்பது அடையாளமே அல்ல. அன்றாட நிகழ்வு; தொழில்; வாழ்க்கை. இப்படியான இன்னும்பல. அந்தப்புரிதல் தான் பாபா என்ற சறுக்கலை அடுத்துச் சந்திரமுகி என்ற உச்சத்தைச் சாதித்தது.

திரைப்படத்துறை எப்பொழுதும் லாபம் ஈட்டக்கூடிய வணிகத்தின் கூறுகளோடுதான் இருந்துவருகிறது. என்றாலும் அதன்வழியாகப் பார்வையாளர்களிடம் கருத்துகளை உற்பத்திசெய்ய முடியும் என்பதும், விவாதங்களை ஏற்படுத்தமுடியும் என்பதும், மாற்றங்களை முன்னெடுக்க முடியும் என்பதும் அதன் கூடுதல் பலன்கள். இந்தப்பலன்கள்தான் சினிமாவைக் கலையாகவும் வெகுமக்களுக்கான ஊடகமாகவும் கணிக்க வைக்கிறது.  பேசவேண்டியது. லாபம், அதிக லாபம், மேலும் லாபம் என அது ஒன்றுமட்டுமே நோக்கமாக ஆகும்போதுதான் சினிமா, கலை என்ற நுட்பக் குணத்தையும் ஊடகம் என்ற புறவடிவக்கூறுகளையும் ஒதுக்கித் தள்ளுகிறது. ரஜினி போன்ற அனுபவம் மிக்க நடிகர்களுக்கு இந்த வேறுபாடுகள் தெரிந்தேதான் இருக்கிறது.

நடிகர் ரஜினி நடிகராக நுழைந்தபோது இந்த வேறுபாடுகளையெல்லாம் தெரிந்து கொண்டே நுழைந்தார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவரை இயக்கிய இயக்குநர்கள் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்கள். அறிமுகப்படுத்திய பாலச்சந்தரும் அவருக்குள் இருந்த நடிப்பின் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்ட மகேந்திரனும் ரஜினியின் உருமாற்றங்களைச் சரியாகக் கணிக்காமல் தொடக்க வெற்றியையும் பிந்தைய தோல்வியையும் அடைந்த பாரதிராஜாவும் சினிமாவின் குணாம்சங்களை முழுமையாக அறிந்தவர்கள். கலையாகவும் தொடர்புச்சாதனமாகவும் புரிந்துகொண்டதால் இரண்டிற்கும் இடையில் நின்று சாகசங்கள் புரியமுடியும் என்று நம்பியவர்கள். ஆனால், ரஜினியை நட்சத்திர நாயகனாக ஆக்கிய எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம். பட நிறுவனம் போன்றவர்கள் அத்தகைய நம்பிக்கையிலிருந்து மாறுபட்டவர்கள். தொடர்புசாதன வடிவத்தை வணிகத்தின் விதிகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க முயன்றவர்கள்.

ரஜினி நடித்து வெளிவந்த முதல் படம் கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் படத்தில் அவர் இருப்பதைப் பலரிடமும் சொல்லிக் கொள்ளும்விதமாக நடித்த படம். ஆனால், அடுத்த ஆண்டு அவர் நடித்த படம் மூன்றுமுடிச்சு அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. ஏறத்தாழ படத்தின் வில்லன் அவர்தான்.  முதல் இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்கள். இரண்டு படங்களையும் இயக்கிய பாலச்சந்தரே மூன்றாவது படத்திலும் வாய்ப்புக் கொடுத்தபோது அவருக்குள் இருந்த நடிகன், அவனுக்கான வடிவத்தைத் தேடிக்கொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். நடிப்புக்கலைக்கு அதிகம் பயன்படும் உடல் உறுப்புக்களான கைகளையும் கால்களையும் தனக்கேயான பாணியில் பயன்படுத்தும் விதத்தையும் ஏற்ற பாத்திரங்களுக்கான முரட்டுத் தனத்தை கண்களின் வழியாக வெளிப்படுத்தும் நுட்பத்தையும் உறுதியாகப் பற்றிக்கொண்டதை அடுத்தடுத்து வந்த படங்களில் காணமுடிந்தது.

பாலச்சந்தரின் இயக்கத்தில் நடித்த மூன்றாவது படம் அவர்கள். வெளிவந்த ஆண்டு 1977. அந்த வருடத்தில் மட்டும் ரஜினி நடித்து 15 படங்கள் வெளிவந்தன. தமிழ்ப்படங்கள் 8. கன்னடப்படங்கள் 4.தெலுங்கு 3. மூன்றாவது ஆண்டிலிருந்து அதிகரிக்கத் தொடங்கிய படங்களின் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளுக்குக் குறையவே இல்லை. பதினோராவது ஆண்டின் முடிவில், அதாவது 1986 ல் சராசரியாக ஆண்டுக்குப் பத்து என்ற கணக்கில் 110 படங்களை நடித்து முடித்திருக்கிறார். 1987 இல் தொடங்கி 1996 முடிய அடுத்த பத்தாண்டுகளில் 38 படங்கள். மூன்றாவது பத்தாண்டுகளில் (1997-2007) மொத்தம் ஐந்தே படங்கள். சிவாஜி படத்தையும் சேர்த்து ரஜினி நடித்த படங்களின் எண்ணிக்கை 153. ரஜினியின் தமிழ்ப் படங்களில் சிவாஜி 100 வது படம் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அவரது தாய்மொழியான கன்னடத்தில் 11 மட்டுமல்லாமல், மலையாளம் 2, தெலுங்கு 16, ஹிந்தி 22 எனப் பிற மொழிகளிலும் அவர் நடித்த படங்கள் வெளியாகியுள்ளன. அவரது பெரும்பாலான படங்கள் தமிழ்ப்படங்களே. பிறமொழிகளில் வந்தவை தமிழ்ப்படங்களின் மொழிமாற்றுப்படங்களாகவும் தழுவல்களாகவும்தான் உள்ளன. முதல் பத்தாண்டுகளில் நடிகனாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமும் நட்சத்திர அந்தஸ்தை நோக்கிய நகர்வும் இருந்தன. இரண்டாவது பத்தாண்டுகளில் நட்சத்திர அந்தஸ்திலிருந்து உச்சநட்சத்திர நிலையை நோக்கிய வேகம், மூன்றாவது பத்தாண்டுகளில் அசைக்க முடியாத ஆசனத்தில் உச்சத்தில் மிதப்பு.

தொடக்கப்படங்களைத் தாண்டிப் பாலசந்தரிடம் ரஜினி நடித்த படங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய படம் தப்புத்தாளங்கள். சமூகத்தின் பொது நியதிகளைப் பின்பற்ற முடியாத வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு திருடனை (ரஜினி)யும் பாலியல் தொழிலாளி(சரிதா)யையும் மையப்பாத்திரங்களாக்கியிருந்த அந்தப் படம், அந்தக் காலகட்டத்தில் வந்த முக்கியமான படமும்கூட. அந்தப் படத்தைத் தவிர, ரஜினி நடித்த மற்ற படங்கள் எல்லாம் பாலச்சந்தரிடம் நடிப்பு கற்றுக் கொண்ட படங்கள் என்றே சொல்லலாம் . நினைத்தாலே இனிக்கும் படத்தில் அவ்வப்போது வெளிப்பட்ட நகைச்சுவை நடிப்பு பாலச்சந்தர் இயக்கிய தில்லுமுல்லு படத்தில் முழுமையான நகைச்சுவையின் பேச்சுமொழி மற்றும் உடல் மொழியுடன் வெளிப்பட்டது

தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனிடம் ரஜினி வெளிப்பட்ட  விதத்தைக் குறிப்பிட சரியான சொல் எது? என்று கேட்டால் இயக்குனர் நடிகர் என்ற சொல்லை தான் கூறவேண்டும் முள்ளும் மரும், ஜானி கை கொடுக்கும் கை ஆகிய படங்களில் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்தார் ரஜினிகாந்த். உமாச்சந்திரனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முள்ளும் மலரும் படத்தில் ஏற்ற அந்தப் பாத்திரத்தின் கொந்தளிப்பு மனநிலையை துல்லியமாக மகேந்திரன் கொண்டு வந்திருந்தார் அதை அடுத்து மனித உறவுகளில் வினோத மனநிலையை ஜானியில் வெளிப்படுத்தினார் என்று சொல்லலாம்

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் அதுவரை தமிழ் சினிமா சந்தித்திராத வில்லனாக வெளிப்பட்டார் ரஜினி. நாயக மையம் என்பதை ஓரளவு தவிர்த்துவிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை முக்கிய பாத்திரங்களாக்கிய மணிரத்தினத்தின் தளபதி படத்தில் ரஜினியும் ஒரு முக்கிய கதாபாத்திரம். குழந்தைகளிடம் அன்பு காட்டும் ஒரு மனிதனாகவும்  ஒரு நடிகனாகவும் தோன்றி குழந்தைகளிடமும் அவரது ரசிகர் வட்டாரத்தை விரிக்க காரணமாக இருந்த அன்புள்ள ரஜினிகாந்தையும் சேர்த்து நினைக்கும்போது ரஜினிகாந்த் என்ற நடிகனின் பயணம் கலைக்கும் தொடர்பு ஊடகம் என்ற வெகுமக்கள் சாதனத்திற்கும் இடையில் ஆரவாரமின்றி தொடர்ந்து கொண்டிருந்ததைப் புரிந்து கொள்ளலாம்

இந்த பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் இதுதான் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவ்வகைப்படங்களின் குணங்கள் இவை எனச் சொல்லலாம். குடும்பப் பொறுப்புகளை ஏற்று வழிநடத்த வேண்டிய தந்தை இல்லாத ஒரு குடும்பத்தில் மூத்த மகன் ஒருவனின் கதையை படமாக எடுப்பதாக வைத்துக்கொள்ளலாம் அப்போது படத்தில் காட்சிகள் அவனின் குடும்ப பொறுப்பு, உறவு, பாசம், பெரியவர்களுக்கு காட்டும் மரியாதை, காதல் வாழ்க்கை எதிரிகளின் சதி, அதிலிருந்து விடுபட்டு அடையும் வெற்றி என பிள்ளைகளாக போட்டு நிகழ்வுகளை உருவாக்குகிறது. இந்த நிகழ்வுகள் கிராமம் சார்ந்து அமையும் எனில் அதற்கு ஏற்ற உணர்வுகளையும் மொழியையும் பயன்படுத்தினால் போதும் ஜனரஞ்சக படமாக ஆகிவிடும். அத்தோடு பார்வையாளர்களுக்கு தற்காலிக விடுவிப்பு சுகத்தை தரும் பாடல்களையும் அவற்றிற்கான ஆட்டங்களையும் உருவாக்கிவிட்டால் அனேகமாக வெற்றி பட பார்முலா தாயார். கிராமப் பின்னணியில் டுக்கப்பட்டால் முரட்டுக்காளையாகவும் நகரப் பின்னணியில் எடுக்கப்பட்டால் அண்ணாமலையாகவும் ஆகிவிடும் இயல்புடையது இந்த பார்முலா

இப்படியான வெற்றி ஃபார்முலாவில் தமிழில் எல்லா நடிகர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிக்கத் தான் செய்திருக்கிறார்கள். அவற்றைத் தமிழர்கள் சளைக்காமல் பார்க்கவும் செய்கிறார்கள். ஆனால் எல்லாப் படங்களுமே ஏவிஎம் தயாரித்த முரட்டுக்காளை போல வெற்றி பெற்றதில்லை. அந்தப் படத்தில் நடித்த ரஜினியைப் போல நாயக நிலையில் உச்சத்திற்கு போனதுமில்லை. முரட்டுக்காளை வந்த அதே காலகட்டத்தில் வந்த ஏ.வி.எம்.மின் இன்னொரு படம் சகலகலா வல்லவன். அந்தப் படத்தில் மைய கதாபாத்திரத்தில் நடித்தவர் கமல்ஹாசன். இந்த இரண்டு படங்களின் பெயர்கள் படக்கதையில் பெயர்களாக மட்டும் நிற்காமல் அந்த படங்களின் மையப் பாத்திரங்களை ஏற்ற நடிகர்களின் அடையாளங்களாகவும் வளமையுடன் இருந்தன என்பதுதான் இவற்றில் சிறப்பு

முரட்டுக்காளை என்ற பெயரும் படமும் நடிகர் ரஜினியின் அடையாள உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த படம் அந்தப் படம் வருவதற்கு முன்பே ரஜினியின்  முக்கிய அடையாளமாக முரட்டுத்தனம் உருவாக்கப்பட்டிருந்தது. குப்பத்து ராஜா, காளி, பில்லா, நான் போட்ட சவால், தர்மயுத்தம், பொல்லாதவன் போன்ற படங்களின் வழி உருவாக்கப்பட்ட அந்த அடையாளம் முரட்டுக்காளையில் வேறுசில அடையாளங்களோடு சேர்த்து தரப்பட்டது. அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த காளையன் பாத்திரத்தில் பல்வேறு கூறுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ரஜினியின் தனிப்போக்குகளாக உறுதி செய்யப்பட்டன. அதே நேரத்தில் முரட்டுத்தனம்  என்ற குணத்தை வெளிப்படுத்தும் படங்களாக கழுகு, தீ, தனிக்காட்டுராஜா, போக்கிரி, ரங்கா, துடிக்கும் கரங்கள், சிவப்பு சூரியன், நான் மகான் அல்ல, நான் சிகப்பு மனிதன்  என்ற பெயர்களில் பின்னரும் தொடரத்தான் செய்தன. பொது ஒழுங்கு x தனிமனித நியாயங்கள் என்ற எதிர்வுக்குள் செயல்படும் கதைப்பின்னல்கள் கொண்ட இந்தப் படங்கள் பெரும்பாலும்  தனிமனிதனின் செயல்பாடுகளைச் சரி என வாதிட்ட படங்கள். எதிர்மறையாக நாயகப் பாத்திரத்தை முன்மொழிந்த இந்தப் படங்கள் கேள்விகளற்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.


பாசம், பொறுப்பு ஆகியவற்றுடன் தியாகம், கடும் உழைப்பு ஆகிய குணங்களையும் தாங்கிய ரஜினியை முன்னிறுத்தும் படங்களாக ராணுவ வீரன், உன் கண்ணில் நீர் வடிந்தால் படிக்காதவன், ஊர்க்காவலன், பணக்காரன், தர்மதுரை, எஜமான், பாபா என பல படங்களாக வந்தன, குடும்ப வெளிககுள் தனிமனிதன் சந்திக்கும் சிக்கல்களை மிகையுணர்ச்சி ததும்பக் காட்டிய இந்த படங்களின் சாரம், நடிகர் ரஜினிக்கு தந்த அடையாளங்கள் அவரது ரசிகப் பரப்பை பரவலாக்கிய அடையாளங்கள் என்று கூடச் சொல்லலாம். கோபக்கார இளைஞன் என்ற அடையாளம்  நோக்கிவந்த இளைஞர்கள் ரசிகர்களாக வந்தது போல இந்தப் படங்களின் வழியாகக் குடும்ப அமைப்பிற்குள் தங்கையாக, மனைவியாக மனைவியாக இருக்கும் பெண்களும் அவர்களின் வழிநடத்தலில் சினிமாவின் பார்வையாளர்களாகச்  செல்லும் குழந்தைகளும் ரஜினியின் ரசிக எல்லைக்குள் வந்தனர்


தமிழில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதிவரை பொதுநிலை பார்வையாளர்களை  நோக்கிப் படம் எடுப்பதே முக்கியமான பாணியாக இருந்தது. 1990 களில் ஏறத்தா அந்தப் பாணி மிகச்சிறிய அளவிலேயே இருந்தது.  பொதுநிலை பார்வையாளர்களைக் கைவிட்டு இலக்குகளை நோக்கி நகரத் தொடங்கிய காலகட்டத்தில்தான் ரஜினியின் திரைப்பிரவேசம்  இருந்தது என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

நடிகர் ரஜனி, நட்சத்திர நடிகராக ஆவதற்கு உதவியவர்கள் எல்லாவகைப்  பார்வையாளர்களும் அல்ல. வயதில் இளையோர்களாகவும்  பணியாற்றும் நிலையில் உதிரி தொழிலாளிகளாகவும் சமூக அடையாளத்தில் தலித் மற்றும் பிற்பட்ட சாதி குழுக்களாகவும் இருந்த இலக்கு பார்வையாளர்களே அவரை நட்சத்திர நடிகர் என்ற நிலைக்கு உயர்த்தியவர்கள். மொத்தத் தமிழ்ச் சமூகத்தில் இத்திரள் குறிப்பிட தக்க பெருந்திரள்;கூட்டம். பெருந்திரளான கூட்டம் ஏற்றுக்கொள்ளும் கலைஞர்களையும் அரசியல்வாதிகளையும் மற்ற குழுக்களும் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளத் தொடங்கும் என்பது சமூக உளவியலில் ஒரு கூறு. ரஜினி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஈர்ப்புக்கும் உரியவராக ஆனதில் பின்னணியில் அந்த உளவியல் செயல்பட்டது என்பதை வலியுறுத்திச் சொல்லவேண்டியதில்லை. அதை உணர்ந்த நிலையில் தான் ரஜினி பொதுநிலைப் பார்வையாளர்களை நோக்கி படம் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார்.

 
1990- களுக்குப் பின்னர் நிறைய படங்களில் அவர் நடிக்கவில்லை 2016 வரை ஆண்டுக்கு ஒன்று வீதம் 16 படங்களில் நடித்துள்ளார் இந்தப்படங்களில் பெரும்பாலானவை இலக்கு பார்வையாளர்களை  தவிர்த்து விட்டு பொதுநிலை பார்வையாளர்களை குறிவைத்தன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று நாட்டுக்கொரு நல்லவன்/1991, மன்னன், அண்ணாமலை/1992, எஜமான்,உழைப்பாளி
1993 வீரா /1994 பாட்ஷா, முத்து/ 1995, அருணாச்சலம்/ 1997 படையப்பா/ 1999 எனப் பெயரிட்டு கொண்டுவந்த இந்தப்படங்களில் ரஜினி ஏற்ற பாத்திரங்களின் பெரிய அளவில் மாற்றம் பெற்றன. எதிர்மறை நாயகன் என்ற அடையாளம் மெல்ல மெல்ல மறையும்படி உருவாக்கப்பட்டன. இந்த மாற்றத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஏற்பு கிடைத்துவிட்டதாக நம்பியபோது தான் அவருக்குள் தமிழ்ச் சமூகத்திற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வும், வழிகாட்ட வேண்டும் என்ற உந்துதலும் கூட உண்டாயிற்று எனலாம். ஆனால் எவ்வாறு நன்றி செலுத்துவது? எந்த வழியை காட்டுவது? இதற்கான முடிவை திரைப்படக் கதை உருவாக்கத்தில் எடுப்பதுபோல எளிதாக எடுத்துவிட முடியாது. அந்த உண்மையை பாபா படத்தின் சறுக்கலும் சந்திரமுகி படத்தின் உச்சபட்ச வெற்றியும் திரும்பவும் உணர்த்திக்காட்டின.  

 

 

 

 

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை