: 71

சாதி இருப்பைத் தக்கவைக்கும் முயற்சி

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி முன்வைத்தபோது அறிஞர் பி.ஆ.அம்பேத்கர் இட ஒதுக்கீடு தேவை என்று வாதாடினார். அந்த வாதத்தில் இந்த இட ஒதுக்கீடு இந்தியாவிலிருக்கும் சாதீயப்படிநிலைகளை ஒழித்துக்கட்டிவிடும் என்று சொன்னதாகக் குறிப்புகள் இல்லை.

இட ஒதுக்கீடு அறியப்படாத வெளிகளையும் கிடைக்கவே கிடைக்காது என்ற உரிமைகளையும் அறியத்தரும் - பெற்றுத்தரும் ஒன்று. அதன் நிகழ்வு தொடரவேண்டுமானால் சாதியின் இருப்பு அவசியம் என்றே பலரும் நினைப்பார்கள். இட ஒதுக்கீடு இருக்கிறது என்றாலே சாதியும் இருக்கிறது என்றுதான் பொருள். இருப்பதை நீட்டித்துக்கொண்டே இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று நினைப்பது மாய நடப்பு.
அந்த மாய நடப்பைக் கைவிட வேண்டும் என வாதிட்டவர்களும் அதே வலையத்திற்குள் வரப்போகிறார்கள். அதற்கான விதைதான் இந்தப் பத்துசதவீத இட ஒதுக்கீடு. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கெதிராகப் பேசியவர்கள் இப்போது அதே அடிப்படையில் தங்களுக்கான இடங்களைப் பெற முயற்சிக்கின்றனர். முன்வைக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடு உயர்சாதியினருக்கே உரிய இடத்தில் 10 சதவீதத்தைத் தனியாக ஒதுக்கிப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருப்பவர்களுக்கு ஒதுக்கித் தருவதுபோலத் தோன்றலாம். ஆனால் சட்டம் நிறைவேற்றப்பட்டால் நடைமுறைப்படுத்தும்போது உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்குத் தனியாக 10 சதவீதத்தைத் தந்துவிடும். அதன்மூலம் அனைவரும் போட்டியிட்டுப் பெற்றுக் கொண்டிருக்கும் பொதுப்பட்டியலின் இடம் குறைந்து விடும்.

இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறைமையில் அனைவருக்குமான பங்காக இருப்பது ஒதுக்கப்படாத - பொதுப்பட்டியல் இடங்கள். அந்தப் பட்டியலுக்குள்ளும் அனைத்துச் சாதிப்பிரிவினரும் இடம்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுப் பட்டியலில் இடம்பிடிக்கும் அருந்ததியர் இன மாணாக்கர்கள் கூட உண்டு என்பதைக் கடந்த சில ஆண்டுகளில் நானே நேரடி அனுபவமாக அறிந்திருக்கிறேன்.கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள், சேர்க்கைகள் போன்றவற்றில் எனது பதவிகாரணமாக அமரும்போது பொதுப்பட்டியல் என்பது அனைவருக்குமானது; உயர்சாதியினருக்கானதல்ல என்பதைப் புரியவைக்கவே பெரும்பாடு படவேண்டியதிருக்கும். பல நேரங்களில் அந்த இடங்கள் -பொதுப்பட்டியல் உயர்வகுப்பாருக்கான ஒதுக்கீடு என்று கருதியே பட்டியல்கள் தயாராகி எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படும். அதனைக் களைவதற்காகவே தமிழக அரசு தனியான ஆணைகளையும் 200 சதவீத இட ஒதுக்கீட்டுச் சூத்திரங்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுச் செயல்பாடுகள் எப்போதும் மூடுமந்திரச் செயல்பாடுகளாகவே அமைவதையும் பார்க்கமுடியும்.

பொதுப்பட்டியல் என்பது கூடுதல் மதிப்பெண்கள் கொண்ட அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் பட்டியல். இதில் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கே சாதி அடிப்படையிலான தரவரிசையில் இடம் கிடைக்கும். இப்போதுள்ள நடைமுறைப்படி ஒன்றிய அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டு விகிதத்தில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடற்ற பொதுப்பட்டியலில் இருக்கின்றன. மாநில அரசு கடைப்பிடிக்கும் இட ஒதுக்கீட்டு விகிதத்தில் 31 சதவீத இடங்கள் ஒதுக்கீடற்ற பொதுப்பட்டியலில் இருக்கின்றன.

இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டால் பொதுப்பட்டியல் இடங்கள் ஒன்றிய அரசாங்கக் கணக்கில் 40 சதவீதமாக மாறிவிடும். மாநில அரசில் 21 சதவீதமாக மாறிவிடும். இதனால் நிச்சயமாகப் பத்துசதவீத இடங்கள் உயர்சாதியினருக்குப் போய்விடும். மீதமுள்ள பொதுப்பட்டியல் இடங்களுக்கு அனைவரும் போட்டிபோட வேண்டும். பொதுப்பட்டியலுக்குள் கிடைத்த வாய்ப்புகள் பட்டியல் சாதிகள், பிற்பட்ட சாதிகள், மற்ற பிற்பட்டோர் அல்லது மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகையினருக்குக் குறைந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். இந்தச் சட்டம் மூலம் உறுதியாக உயர்சாதியினர் இட ஒதுக்கீடு பெறும் உரிமையைப் பெறுகிறார்கள். இன்னும் சில பத்தாண்டுகளுக்குச் சாதி இருப்பைக் குலைக்க முடியாது.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை