சினிமாவில் தொடர்ச்சியான வெற்றிப்படங்கள்
ஒரு நடிகருக்கு உச்ச நட்சத்திர நிலையைத் தருகிறது. உச்ச நட்சத்திர
நடிகருக்குத் தேவை சாகச சினிமா. நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திர நடிகர் நிலையை
அடைந்து கால் நூற்றுக்கும் மேலாகிவிட்டது. 1996 இல் பாட்ஷா வெளிவந்த போது தமிழ்ச் சினிமாவின் உச்ச நடிகர் அவர்தான்.
கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருந்தது அப்போது. இப்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகும் தானே தமிழ்ச்சினிமாவின் உச்சநடிகர் என்று நம்புகிறார்.
தமிழ்ச்சினிமாவின் வணிகப்பரப்பும் நம்புகிறது. அந்த நம்பிக்கையைத் தக்க
வைக்க அவர் தொடர்ந்து தனது உடலைப் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது. அவரது முதன்மை
மூலதனம் கரிய நிறமும் வலிமையான எலும்புகளும் கொண்ட உடல்தான். வலிமையான எலும்புகளை - அதன் இணைப்புகளை வேகத்துடன் வளைத்துத் திருப்பும் வேகமே அவரது
உடல் மொழியின் வெளிப்பாட்டுக்கூறு. வேகத்துடன்
விசிறியடிக்கும் கைகளோடும் கால்களோடும் இணையும் குரலும் அவரது நடிப்பு
மொழி. அந்த நடிப்பு மொழிக்குச் சில கருத்தியல் சாத்தியங்கள் உண்டு என்கிறார் மேயர்ஹோல்டு.
உளவியல் கோட்பாட்டாளர் சிக்மண்ட் ப்ராய்டின் மாணவர் கார்ல் யுங்கும்
உளவியலை வளர்த்தெடுத்த கோட்பாட்டாளர். யுங்கைப்போலவே ஆசானை மறுத்த
நடிப்புக்கோட்பாளர் மேயர்ஹோல்ட். உலகெங்கும் நடிப்புக்கான பயிற்சிக்கோட்பாடாக
அறியப்படும் முறைமையான நடிப்புக் கோட்பாட்டை (Method Acting) உருவாக்கிய ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மாணவரான மேயர்ஹோல்ட் தனது
நடிப்புக்கோட்பாட்டிற்கு உயிரி – உடலியக்கக் வெளிப்பாட்டு நடிப்புமுறை (Bio- Mechanisam Acting) எனப் பெயரிட்டு வளர்த்தெடுத்துள்ளார். அந்த
நடிப்புமுறைமை ரஜினிகாந்தின் நடிப்புப்பாணியோடு நெருங்கிய உறவுடையது. அவரது
அரசியல் வெளிப்பாட்டுக் கருத்துகளுக்கு உதவக்கூடியது. அதனைப் பின் குறிப்புகளாகத்
தரலாம். இப்போது காலா என்ற கரிகாலன்
என்னும் சாகசப்படம் பற்றிப் பேசலாம்.
முதல் நாள் முதல் காட்சியின் இடைவேளையிலேயே விமரிசனக்குறிப்புகளை எழுது
உலகத்திற்கே சொல்லிவிடும் வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகங்களின் காலத்தில்
வாழ்கிறோம். உடனடி விளைவுகளை ஏற்படுத்தும் சமூக ஊடகங்களின் வருகைக்குப்
பின்பு உயிர்மை போன்ற மாத இதழொன்றில்
சினிமாவைப் பற்றி எழுதும் விமரிசனக் கட்டுரைகள், ஒன்றைத்தொட்டு இன்னொன்றிற்குள் நுழையும் ஆய்வுக் கட்டுரையாக
விரிவடைவது தவிர்க்க முடியாது.
காலா: மறுவரவான
திரைக்கதையாக்கம்
திரைக்கதைக்குள் பரபரப்பு கதைசார்ந்ததாகவும் கதைக்களம் சார்ந்ததாகவும்
மட்டும் இருந்தால் வணிகவெற்றிப்படம் என்பதாக
மட்டுமே முடிந்து போய்விடும்.
தமிழில் இதற்கு நல்லதொரு உதாரணம் மணிரத்னத்தின் நாயகன். கமல்ஹாசனுக்குச் சிறந்த நடிகர் பட்டம்
பெற்றுத்தந்த படங்களுள் ஒன்று.
பரபரப்பான திரைக்கதையின் வழியாக
வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் முதன்மையான வெற்றிப்படம் பாட்ஷா. அப்படத்தின் நிகழ்களத்தின் பாதி மும்பை; இன்னொரு பாதி சென்னை. காலா
படத்தின் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நாயகனையும் பாட்சாவையும் பல
தடவை பார்த்த எனக்கு அப்படங்களின் காட்சிகள்
வந்துபோய்க் கொண்டே இருந்தன. இரண்டு
படங்களையும் நினைவில் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வந்துபோவது தவிர்க்க
இயலாதது.
பாட்சாவில் மும்பையின் தாராவி என்ற
அடையாளம் காட்டப்படாவிட்டாலும் அதன் வெளிப்பாட்டுத்தன்மையும் அதற்குப் பின்
ரஜினிகாந்திற்குக் கிடைத்த அடையாளமும் வெறும் சினிமா அடையாளம் மட்டுமல்ல. உச்ச
நடிகர் அடையாளத்தோடு, மக்களின் மனதைத் திசைமாற்றும் வல்லமைகொண்ட சொற்களுக்குச்
சொந்தக்கார அரசியல்வாதி அடையாளமும் என்ற அடையாளமும் கிடைத்தது. .1996 இல் வந்த பாட்சா தந்த அரசியல் அடையாளத்தோடும் உச்சநடிகர் அடையாளத்தோடும்
இப்போதும் இருக்க விரும்புகிறார் ரஜினிகாந்த். அந்தப் பரபரப்பு அவரது சினிமா
வெற்றிக்குத் தொடர்ச்சியாகத் தேவை.
சினிமாவின் தொடர்ச்சியாக அவர் நுழைய விரும்பும் அரசியலுக்கு
அதைவிடக்கூடுதலாகத் தேவை.
பரப்புரையும் சாகசமும் கலந்த கலவை.
பரபரப்பான நகர்வுகள் வெகுமக்கள் சினிமாவுக்கான அடிப்படைத்தேவை. திரைக்கதை அமைப்பின் கட்டமைப்பில் காட்டப்படும்
நிகழ்வுகள் அடுக்கப்படுவதின் வழியாக உண்டாக்கப்படும் வேகத்தோடு, நாயகப்பாத்திரமேற்கும் நடிகரின் அறிமுகம் தொடங்கி
ஒவ்வொரு காட்சியும் திட்டமான அமைப்புக்குள் நிகழும். நாயகப்பாத்திர அறிமுகத்தைப்
போலவே எதிர்க்கதாபாத்திரத்தை ஏற்கும் வில்லன் நடிகரின் அறிமுகக் காட்சியையும்கூடப்
பரபரப்பாகவே முன்வைக்கப்படும். காலா
படத்தில் வில்லனாக நடிக்கும் நானா படேகரின் முதல் தோற்றமே படத்தின் பிற்பாதியில்
தான் நிகழ்கிறது.இந்திய அளவில் அறியப்பட்ட நடிகர் என்பதோடு தேர்ந்த பாவங்களை
வெளிப்படுத்தும் சிறந்த இந்திய நடிகர்களில் ஒருவர். அவருக்கிணையாகவும் அவரை
வெல்பவராகவும் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்ற பேச்சை உருவாக்குவது வணிக
சினிமாவின் முக்கிய உத்திகளில் ஒன்று. அதேபோல் கரிய நிறம் கொண்ட தோலில் -கையில் –
‘சரினா’ என்ற பெயரை எழுதி வைத்திருக்கிறார் எனக் காட்டப்படும் அசைவுக்கு உரியவராக
அசைந்துவரும் ஈஸ்வரி அய்யரின் நிறமும் உடல் அசைவுகளும் ரஜினியின் வேகத்திற்கெதிரான
நிலையில் மிதமானதாக – மென்மையாகத் திட்டமிடப்பட்டுள்ளது. கருப்பு, வெண்மை, ராமன், ராவணன், நல்லவன், கெட்டவன் போன்ற சொல்சார்ந்த எதிர்வுகளைத் தாண்டி நிறம்
சார்ந்த, தொல்மனம் சார்ந்த, ஆடப்படும் நடனங்கள் சார்ந்த
எதிர்வுகளையும் அடுக்கிவைத்துப் படமாக்குவதன் மூலம் தனது சினிமா ஒரு
பரப்புரை சினிமா என நிறுவ முயன்றுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். அதில் வெற்றியும்
பெற்றுள்ளார். முழுமையாக வெளிப்புறப்படப்பிடிப்பைத் தவிர்த்து கட்டமைப்பு
வடிவங்களைப் பொருட்களாக உருவாக்கித் திட்டவட்டமான உரையாடல்களின் வழி இயக்குநரின்
பரப்புரை நோக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பரப்புரைப் படத்தில் ரஜினிகாந்த்
போன்ற உச்சநடிகர் நடிக்கும்போது பரப்புரைத் தன்மை குறைந்து சாகசப்பட த்தின் இயல்புகள் அதிகமாகிவிடும். காலாவில் அதுவும்
நிகழ்ந்துள்ளது.
பரபரப்புகளின் நேர்மறைகளும் எதிர்மறைகளும்
காலா கரிகாலன் சாகச சினிமாவின் அனைத்துக்கூறுகளும் கொண்ட படம். சாகச சினிமாவில் ஈடுபடுபவர்கள் கலை ஆக்கங்களின்
பொது அடித்தளங்களை அறிந்தே மீறுபவர்கள். அறிந்து மீறுவதன் மூலமே வணிக சினிமாவை
வெற்றிப்படமாக ஆக்கமுடியும். அறியாமல்
செய்யப்படும் குறைப்பிரசவக் குழந்தைகளாக நின்றுபோகும். கலை என்னும் எல்லைக்குள் தன்னை நிறுத்திக்கொள்ள
விரும்பும் ஒரு பிரதி/ சினிமா காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றின் வழியாக வடிவம் கொள்கிறது.
தனது பிரதியின் ஆக்கத்திற்குச் செம்மையான அல்லது நம்பகத் தன்மையுடைய பிரதி என்ற
அடையாளத்தைத் தர விரும்பும் ஆசிரியர் -இங்கே இயக்குநர் அம்மூன்றையும் அதனதன்
அளவில் நம்பத் தகுந்ததாக தர முயல்வார். ஆனால் சாகச சினிமா என்னும் வணிகப் பண்டம், அல்லது வணிக எழுத்து அப்படியான நம்பகத்தன்மையை ஏற்படுத்தவேண்டுமென
நினைப்பதில்லை. சாகச சினிமாவுக்குத் தேவை மற்ற மனிதர்களிடம் இல்லாத மிகைத்தன்மைக்
குணங்கள் கொண்ட ஒருவர் மட்டுமே.
மிகைக்குணங்கள் கொண்ட
மையப்பாத்திரத்தை மட்டும் நம்பி எடுக்கப்படும் இத்தகைய படங்கள் நடிகர்
ரஜினிக்குப் புதிதல்ல; இத்தகைய படங்கள் தமிழ் சினிமாவுக்கும் புதிதல்ல. சாகசப்
படங்களின் நடிகராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், ஏழைகள்
வேதனைப் படமாட்டார்’ எனப் பாடியதின் வழியாக எம்ஜிஆர் தொடங்கி வைத்த அந்தப்
போக்குதான் தமிழ்ச் சினிமாவின் முதன்மை அடையாளம்.
தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் சினிமாவை வணிகக் கலையாக மட்டுமே
கொண்டாடும் ஒவ்வொரு தேசத்து சினிமாவும்- ஒவ்வொரு மொழியின் சினிமாவும் - மிகையான வீரம், மிகையான அன்பு, மிகையான பாசம், மிகையான
தியாகம், மிகையான காதல் என மிகைத்தன்மைகளின் வழியே மிகை
உணர்வுகளின் கலவையே தயாரிக்கின்றன. தமிழ்ச் சினிமாவுக்குள் வந்து இரண்டு படங்களில்
நாயகப் பாத்திரத்தில் நடித்துவிடும் ஒவ்வொரு நடிகரும் மூன்றாவது படமாகச் சாகசத்தை
முன்வைக்கும் மையப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவே ஆசைப்படுகின்றனர். இந்த ஆசையில்
இன்னொன்றும் சேர்ந்துகொள்வது தமிழ்ச் சினிமா உருவாக்கித் தரும் பெருந்துயரம். வணிக
வெற்றியைத் தரும் உச்ச நடிகர்
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் ஆகமுடியும் என்று நினைக்கும் ஆகப்
பெருந்துயரம் அது.
இந்த நம்பிக்கையை மூர்க்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் ரஜினி.
அவருக்கு இயக்குநர் ரஞ்சித்தின் படம், எவ்வளவுதூரம்
உதவும் என்பதைப் படம் பார்த்தவர்கள் கேள்வியாக எழுப்புகிறார்கள். பார்த்தவுடன்
சமூக ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும்
விமரிசனக்குறிப்புகளை எழுதியவர்கள் விமரிசனமாக முன்வைக்கிறார்கள். அதன் மறுதலையாக இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பிம்பத்தின் வழியாகத் தலித் அரசியல் பேசுகிறார்; தலித் அரசியலில் தன்னை மையப்படுத்திப் புதுவகை அரசியலைக் கட்டமைக்க
நினைக்கிறார். அதற்கான வேலைகள் பலவற்றில் ஈடுபடுகிறார். அதற்கு ரஜினி என்ற
ஆகப்பெரும் பிம்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கிறார். ஆனால் அவரது விருப்பம்
நிறைவேறாது என்றும் கருத்துரைக்கின்றனர்.
ரஜினிகாந்த் + பா. ரஞ்சித் கூட்டில் யார் அதிகம் பயன்பெறுவார்கள்; யார் சமரசம் செய்துகொள்வார்கள்; யார் தனது
அரசியலைக் கைவிட்டுக் காணாமல் போவார்கள் என்ற கேள்விகளுக்குத் துல்லியமான விடைகளை
இப்போது சொல்லிவிட முடியாது. இரண்டுபேரும் தங்கள் அரசியலை வெளிப்படையாகச்
சொல்லிவிடாத நிலையில் அவைபற்றிப் பேசுவதேகூட அர்த்தமற்றவைதான். தொடர்ச்சியான சமூகப்
போராட்டங்களாலும், உடல், பொருள்
இழப்புகளாலும் திரட்சியாக்கப்பட்டுள்ள தலித்திரள் என்பது அரசியல் திரட்சியாக
ஆக்கப்படவேண்டுமா? தலித் சொல்லாடல்களை முன்வைக்கும் ஒரு வெகுமக்கள் சினிமாவின் – சாகசப்படத்தின்- திரள்பார்வையாளர்களாக ஆக்கப்படவேண்டுமா? என்பது முக்கியமான கேள்வி. அந்தக் கேள்வி தரும் அழுத்தம் காரணமாகவே காலா
கரிகாலன் என்ற படத்தின் மீதான
விமரிசனங்கள் படத்தையும் தாண்டி நீள்கின்றன.
அப்படி நீள வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ரஜினிகாந்த் , காலா பட த்தின் முதற்காட்சிக்கு முன்பே தூத்துக்குடிக்குச் சென்று படம் விவாதிக்கும்
ஒன்றுக்கு மாற்றான – தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் சொல்லாடல்களுக்கு மாற்றான
கருத்துகளை முன் வைக்க நினைத்திருக்கிறார் என்றும் சொல்லத் தோன்றுகிறது.
இரண்டாவது பரபரப்பு சினிமாவின் கட்டமைப்புக்குள் உருவாக்கப்படும் குறிப்பான
அடையாளங்கள். சாகச நாயகத்தனத்தை முன்வைக்கும் சினிமாக்கள் எப்போதும் குறிப்பான
வெளிக்குள் இயங்குபவை. அந்தக் குறிப்பான வெளிக்குள் இருக்கும் குறிப்பான
பிரச்சினையை விவாதப்பொருளாக்கி வெற்றியைத் தனதாக்குபவை. பொதுச் சட்டங்களை
மறுதலித்து விட்டுத் தாங்களே உருவாக்கிக்கொண்ட – தன்னை நம்பிய கூட்டத்தைக் காப்பதை
முதன்மையாகக் கொண்ட- நடைமுறைகளைத் தனது பகுதியில் செயல்படுத்துவது . தன்னை நம்பும்
மக்களுக்காகப் பொதுச்சட்டத்தை மீறுவதைத் தனிநபர் நியாயங்களால் எதிர்கொள்வது.
அப்படிச் செய்பவர்களைச் சட்டமும் பொதுச்சமூகமும் தாதா அல்லது ரௌடி எனச் சொல்லும்.