: 36

பொதுமனம் முன்வைக்கும் பெரும்பான்மைவாதம்


கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள், போக்குவரத்துக்கழகங்கள், வங்கிகள் போன்றன அரசு நடத்தும்போது சேவை நிறுவனங்களாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சமநிலைத் திறன் வளர்ச்சிகள் முன்வைக்கப் படுகின்றன. சமநிலைப்பார்வைகள் தேவை என்பதும் வலியுறுத்தப்படுகின்றன. இந்த எதிர்பார்ப்புகளும் வலியுறுத்தல்களும் தனியார் நிறுவனங்கள் பற்றிய பார்வைகளாக இல்லை. தனியாரும் தனியார் அறக்கட்டளைகளும் நடத்தும்போது சேவைக்குப் பதிலாக லாபம் அடைவதற்கான உரிமை இருப்பதாக ஏற்றுக்கொள்கிறது பொதுமனம். வேலை வாய்ப்புகள், அனுமதிகள், ஒப்பந்தங்கள் வழங்கும்போதும் தனியார் நிறுவனங்கள் பற்றிக் கண்டுகொள்ளாத பொதுமனம் அரசு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்திப் புகார்ப் பட்டியலை வாசிக்கின்றது. இருவேறுபட்ட பொதுமனப் பார்வையின் சிக்கல்களின் பின்னணிகள் அறியாமையின் வெளிப்பாடுகளே.

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் முழுமையும் தனியார் நிறுவனங்கள் அல்ல. அவை நிலமாக, மானியமாக, சம்பள உதவியாக, இலவசக் கருவிகள் வழங்கலாக என அரசிடமிருந்து பெறும் உதவிகள் பலவிதமானவை. இவைகளை வழங்கும் பொறுப்பில் உள்ள அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகக் கவனித்துக் கொடுக்கவேண்டியனவற்றைக் கொடுத்துப் பெற வேண்டியனவற்றைப் பெற்றுக்கொள்கின்றன. பார்க்கவேண்டியவர்களைப் பார்ப்பதற்கும் கவனிக்கவேண்டியவர்களைக் கவனிப்பதற்கும் கணக்கில் வராத -கணக்கில் காட்டாத செல்வத்தைப் பயன்படுத்துகின்றன. அதன் வழியாக உருவாகும் மதிப்பு மற்றும் செல்வாக்கு அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒருவிதத்தில் மரியாதையையும் இன்னொருவிதத்தில் அச்சத்தையும் உருவாக்குகிறது. மரியாதைக்காக நிர்வாகியிடம் பணிவுகாட்டி வேலை செய்கிறார்கள். அச்சம்கண்டு வேலை செய்பவர்களும் பணிந்து போகிறார்கள். விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகள் தனியார் நிர்வாகத்தின் திறமையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் நேரடியாகத் தலைமைப் பதவிகளில் அமர்த்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள் தங்கள் விருப்பம்போல விருதுகள் வழங்கமுடியும்; பணமுடிப்புகள் தரலாம்; சிலரைக் கண்டறிந்து அவர்களுக்குக் கூடுதல் சம்பளமும் வழங்கமுடியும்,

அரசுத்துறையின் உயர்பதவிக்கு வருபவர்கள் இவற்றிலிருந்து முற்றிலும் வேறானவர்கள். அவர்கள் பெரும்பாலும் பணி மூப்பு காரணமாக உயர்நிலைக்கு வரும் வாய்ப்புடையவர்கள். அவர்களுக்குப் பலவிதமான அதிகாரங்கள் இல்லை. குறிப்பாகச் சரியாக வேலை செய்யாத ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் கூட்டுத்தன்மை கொண்டது. தனியொருவராக நடவடிக்கைகளை எடுத்து விடமுடியாது. தனியார் நிறுவனங்களைப் போல கணக்கில் வராத செல்வம் - பணத் திரட்சியை உருவாக்குவது சாத்தியமில்லை. அதனால் கவனிக்கவேண்டியவர்களைக் கவனிக்கும் விதம் அறிந்திருந்தாலும் செய்ய இயலாதவராக இருப்பார். அதையும் தாண்டி ஒருவர் செய்தால் அது அவரது திறமையாகப் பார்க்கப்படாமல் அவரது ஊழலாகவும் விதிமீறலாகவும் கணிக்கப்படும். அப்படிப் பட்ட நிலையில் தனக்குக் கீழுள்ளவர்களைச் சிறந்த பணிகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கவும் முடியாது. தவறாக வேலை செய்பவர்களைத் தண்டிக்கவும் முடியாது.

இந்தச் சிக்கல்களைச் சரிசெய்வது பற்றிச் சிந்திக்காமல் அரசுத்துறைகளுக்குப் பதிலாகத் தனியார் துறை இங்கே பரிந்துரைக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளுக்குப் பின்னே சமுக நலன் சார்ந்த அடிப்படைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறைகள் இல்லை. மிகச் சிறுபான்மையினரால் அமைப்புகள் நிர்வாகம் செய்யப்படவேண்டும்; அவர்களின் கீழ் அனைவரும் பணிசெய்ய வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. கடைசியாக அது வல்லரசுக்கனவு; பிராமணிய அறிவு போன்றவற்றைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதை வலியுருத்தும். இட ஒதுக்கீட்டை ஒழிப்பது, உரிமைகள் கேட்பது - குறிப்பாகப் பெண்கள் சமநிலைக்காகக் குரல் கொடுப்பது தவறு போன்ற நிலைபாடுகள் கொண்டதாகவும் இருக்கும். வேறுபாடுகள் இல்லாத சமூக அமைப்பே கிடையாது என்று வாதம் செய்வதின் வழியாக இந்தியச் சாதிய அமைப்பான வர்ணாச்சிரம நிலைப்பாடுகளை ஏற்கும். இவை அடிப்படைவாத நிலைப்பாடுகள் என்று சொன்னால் தேச வளர்ச்சியும் நாட்டுப்பற்றும் அளவுகோல்களாக ஆக்கப்படும். இதுதான் இந்தியப்பொதுமனம்

கடந்த கால் நூற்றாண்டாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பொதுமனம், அடிப்படைவாதத்தின் அடையாளமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்கும் கூட்டத்திரட்சியாகப் கட்டமைந்து விட்டது. இங்கே இந்தப் பொதுமனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையறியாது தவிக்கின்றன மாற்று அமைப்புகள்.

Image may contain: 2 people


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை