: 72

சென்னைப் புத்தகக் காட்சி -2019: சில குறிப்புகள்

எப்போதும்போல இந்த ஆண்டும் சென்னைப் புத்தக காட்சியில் சில நாட்களைச் செலவழிக்க முடிந்தது. வாங்குபவர்களின் வருகை, விற்பனையின் போக்கு, புதிய நூல்களின் வருகையும் எதிர்கொள்ளப்படும் போக்கும் போன்றனவற்றை மனதில் இருத்திகொண்டு புத்தகக் காட்சியைச் சுற்றிவருபவன் நான். அப்படிச் சுற்றுவதன் பின்னணியில் நான் பணியாற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைசெய்யும் வேலை எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த வேலை இல்லை. அடுத்த ஆண்டுமுதல் இருக்கப்போவதில்லை.

நான் பணியாற்றிய புதுச்சேரி பல்கலைக்கழக நூலகத்திலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்திலும்  வாங்கி வைக்க வேண்டிய புத்தகங்களைப் பரிந்துரை செய்வதற்காகவும், என்னுடைய துறை நூலகத்தில் இடம்பெற வேண்டிய நூல்களைத் தெரிவு செய்யவுமே ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போய் வருவேன். 30000 –க்குக் குறையாமல் துறை நூலகத்திற்கு நிதி ஒதுக்கித்தருவார்கள். ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் தொடக்க நிலையில் அந்தப் பணம் சில லட்சங்களாகக்கூட இருந்ததுண்டு.  என்னென்ன நூல்களை வாங்க வேண்டும் என்ற பட்டியல் தயாரிப்பதும் அதை ஏற்றுப் பரிந்துரைப்பதும் கடந்த கால் நூற்றாண்டுகளாக நான் செய்துவரும் கல்விப்பணிகளில் விருப்பமான பணி. விருப்பமான இந்தப் பணியே சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கும்படியான நெருக்கடிக்குள்ளாக்கியது.

எனது சொந்த வாசிப்புப் பழக்கத்திற்குச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொன்னால் அது உண்மையில்லை. என்னுடைய வாசிப்புகள் பெரும்பாலும் நூலகங்கள் சார்ந்தே நடந்துவந்துள்ளது. பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கும் எனக்கு இந்த வசதி சாத்தியம்; மற்றவர்களுக்கு அது சாத்தியமில்லை. அதைவிடவும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்று எந்த புத்தகத்தையும் நான் நினைப்பதில்லை என்பதும்கூட உண்மையே. வாசித்தே ஆக வேண்டுமென்றால் அந்தப் புத்தகங்களைப் புத்தகக் கடைகள் வழியாகவோ, தபால் மூலமாகவே பெற்றே வாசித்துக் கொண்டிருக்கிறேன். பல நேரங்களில் எழுத்தாள நண்பர்கள் அவர்களது நூல்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் பார்வையாளனாகப் போய்க் கொண்டேயிருக்கிறேன்.

பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்கும் மானியக்குழு இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அச்சு நூல்கங்களை விட இணைய நூல்களுக்கு முன்னுரிமை வழங்குபடி சொல்லிவிட்டது. அதனால் நூல்களைத் தேர்வுசெய்வதும் பட்டியலிடுவதும் இந்த ஆண்டுக்கான வேலையாக இல்லை. இந்த ஆண்டுமட்டுமா? இனிவரும் ஆண்டுகளிலும் இருக்காது. அடுத்த ஆண்டில் நான் நிறுவனம் சார்ந்த வேலையிலிருந்து ஓய்வுபெறுகிறேன்.  என்றாலும் கண்காட்சியை வேடிக்கை பார்ப்பதற்காகவும் கண்காட்சியில் காணாமல் போவதற்காகவும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு போகவேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த ஆண்டு பொங்கலையொட்டி 9 நாட்கள் விடுமுறை. சென்னையில் 5 நாட்கள். புத்தகக் காட்சிக் கூட்டத்தில் சில நாட்கள் சுற்றிவரமுடிந்தது. ஒரு கல்வியாளனாக – அதிலும் ஒரு தமிழ்ப் பேராசிரியராகத்   தமிழில் நூல்கள் வெளியிடும் பதிப்பகங்களின் பக்கமே எனது கவனங்கள் இருக்கும். எனது வாசிப்புக்கான நூல்கள் சமகால இலக்கியங்களாகவும் கலைக்கோட்பாடுகளாகவும் இருந்தாலும் மரபு இலக்கியங்கள் சார்ந்து வரும் நவீனத்துவ ஆய்வுகளையும் கவனத்தில் கொள்வேன். அதற்காகத் தமிழியல் புலம்சார்ந்த நூல்கள் வெளியிடும் பதிப்பகங்களைத் தேடிச் செல்வதுண்டு. முன்பெல்லாம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் ஐந்திணை, மணிவாசகர் போன்றன எனது நேரத்தை எடுத்துக் கொள்ளும். இப்போது அவை என்னை இழுப்பதே இல்லை. புதியனவற்றை அவை நெருங்குவதே இல்லை; நானும் விலகிவந்துவிடுகிறேன். அதேபோல் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை நூல்களும் பழையனவாகவே இருக்கின்றன. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சில ஆண்டுகள் புதியனவற்றைக் கொண்டுவருகிறது. சில ஆண்டுகளில் பழையனவற்றையே காட்சிப்படுத்துகிறது. இந்த ஆண்டு பெரும்பாலும் பழையன மட்டுமே

தமிழியல் புலத்தின் தேவைக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்ற விருப்பமும் நோக்கமும் உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா, உயிரெழுத்து, க்ரியா போன்ற பதிப்பகங்களுக்கு இப்போது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு க்ரியாவும் காலச்சுவடும் அப்படியான திசைகளில் பயணம் செய்ததுண்டு.  இந்த ஆண்டு அப்படியொரு பதிப்பகமாக இருந்தது அடையாளம் பதிப்பகம் மட்டுமே. அதன்பிறகு அன்னம்-அகரம். மூன்றாவதாகக் காவ்யா. நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் வெளியீடுகளும் இந்நோக்கம் கொண்டன. ஆனால் அதைத் தாண்டிய நோக்கங்களுடனும் நூல்கள் வெளியிடுகிறது. பின்னிரண்டும்-அன்னமும் காவ்யாவும் புதிய முயற்சிகளில் இறங்காமல் பழையனவற்றைத் தொகுத்தல், விரித்தல், நீட்டல் என்ற அளவில் செயல்படுகின்றன. புதிய சிந்தனை முதலீடும் பணமுதலீடும் செய்யவேண்டுமென நினைப்பதாகத் தெரியவில்லை. ஆனால்  அடையாளம் பதிப்பகம் தமிழியலின் தேவைகளையும் பரப்பையும் உணர்ந்து இலக்கியம் தாண்டி மொழியியல், மானுடவியல், சமூகவியல், கலைக்கோட்பாடுகள், அகராதி ஆக்கம் எனக்கால்களையும் கைகளையும் அகலப் பரப்பி நூல்களை வெளியிடுகிறது. அதன் வெளியீடுகள் கல்விப்புலத்தில் தாக்கம் செலுத்தினால் தமிழியல் நவீனத்துவம் உள்வாங்கி மேலெழும்பிவிடும்.

சென்ற ஆண்டு புத்தகக் காட்சி முடிந்து நெல்லை திரும்பியபோது பெட்டி நிறைய எனது நூலகத்திற்கெனப் புதிய நூல்களை கொண்டுவந்தேன். அவற்றில் புனைகதைகளான சிறுகதைகளும் நாவல்களும் கணிசமாக இருந்தன. வெவ்வேறு வெளிகளுக்குள் வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு டஜன் நாவல்கள். அவற்றில் பாதி இன்னும் படிக்கப்படாமல் இருக்கின்றன. இந்தமுறை வாங்கும் நாவல்களும் சேர்ந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது. ஆனால் இந்தப் புத்தகக் காட்சியில் அந்த அளவுக்கு நாவல்கள் புதிதாக வரவில்லை. நாவல்கள் மட்டுமல்ல; சிறுகதைத் தொகுப்புகளும்கூடப் புதியதாகத் தொகுக்கப்படவில்லை.  

தமிழ்நாட்டுப் புனைகதையாளர்கள் ஓய்வெடுத்துக்கொண்டாலும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் இன்னும் புனைகதைப் பரப்பில் தீவிரமாக எழுத வேண்டுமென நினைத்து நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். நோயல் நடேசனின் கானல் தேசம்(காலச்சுவடு), குணா கவியழகனின் போருழல் காதை(அகல்), தீபச்செல்வனின் நடுகல் (டிஸ்கவரி புக்பேலஸ்) ஆகியன வாசிக்கப்படவேண்டியன. அதேபோல் பூவரசி பதிப்பகம் மூலம் ‘காப்பு’ என்னும் தொகைநூல் இந்த ஆண்டு கவனம் பெறும் நூல்களுள் ஒன்றாக ஆகியிருக்கிறது. இத்தொகை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் அதற்காக 46 எழுத்தாளர்களின் 59 கதைகளை வாசித்தேன். இவற்றில் 5 சிறுகதைகள் சிங்கள மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகள். அதே பதிப்பகம் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதியுள்ள பூகோளவாதம் புதியதேசியவாதம் என்றொரு நூலையும் வெளியிட்டுள்ளது. இந்தியப்பெருங்கடலில் இன்னொரு நாடு உருவாவதை இந்திய தேசியம் எப்படிப் பார்த்தது? இனியும் எப்படிப் பார்க்கும்? என்ற கேள்வியோடு வாசிக்கவேண்டிய நூல்

அதே நேரத்தில் எப்போதும்போலக் கவிகள், தொகுப்புகளை வெளியிட்டார்கள். உணர்ச்சியின் பிரவாகம் கவிச் சொற்கள் என்பதை கவிதைத் தொகுப்புகள் தொடர்ச்சியாக வந்து உறுதிப்படுத்துகின்றன. கவிஞர்களின் உற்சாகமான முகங்களையும் வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு நாளும் காணமுடிந்தது. ஆண்கவிகளும் பெண்கவிகளுமாக புத்தகக் காட்சி அரங்குகளில் அலைந்து கொண்டே இருந்தார்கள். தங்கள் தொகுப்புகளைத் தெரிந்தவர்களிடமும் மூத்த எழுத்தாளர்களிடம் தந்து படம் எடுத்து முகநூலில் சிரித்தார்கள். எப்போதும்போல மனுஷ்யபுத்திரனின் மூன்று புதுக் கவிதைத் தொகுப்புகள் காட்சியில் இருந்தன. சேரன், இந்திரன் போன்ற மூத்த கவிகளின் தொகுப்புகளும் கிடைத்தன. 


மரபிலக்கியங்களை வெளியிடும் பல தமிழ்ப்பதிப்பகங்கள் திருக்குறள் மூலம், திருக்குறள் மூலமும் அருஞ்சொற்பொருளும், பதவுரை, விளக்கவுரை போன்றவற்றிற்காக வள்ளுவனுக்கும் உரையாசிரியர்களுக்கும் தரவேண்டிய உரிமத்தொகைகளை(ராயல்டி) பொன்கலஞ்சுகளாகக் கணக்கிட்டுப் பல ஆண்டுகளாகக் காப்பறைகளில் பத்திரமாக வைத்திருக்கின்றன. அவ்வைப்பு நிதிகள் இவ்வாண்டும் வட்டியோடு சேர்ந்திருக்கும். அதே போல இக்கால எழுத்துக்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களும் மொழி பெயர்ப்பாளர்களும் மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மட்டுமல்லாமல் கலை இலக்கியக் கோட்பாட்டு நூல்களையும் மறுபதிப்புகள் செய்து உரிமத்தொகையைப் பத்திரமாக வைத்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். அந்த வரிசையில் இந்தியப் பேராசான்களான அம்பேத்கர், பெரியார், காந்தி ஆகியோரும் இருக்கிறார்கள். பதிப்பாளர்கள் ராயல்டி தரத் தேவையில்லாத – நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளை விதம்விதமாக வெளியிடுகிறார்கள். புதுமைப்பித்தன் எப்போதும் நல்ல சரக்குகளைத் தந்தவராக இருக்கிறார். அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, மௌனி, நகுலன் போன்றோரும் அந்த வரிசையில் இருக்கிறார்கள். இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர்களில் கி.ராஜநாராயணன் அளவுக்கு விற்கக் கூடியவர்களின் பட்டியலைப் போடமுடியவில்லை. அன்னம் பதிப்பகத்தில்  அவர்தான் ஜ்வலிக்கும் நட்சத்திரம். அதேபோல் க்ரியாவுக்கு இமையம்.

இந்தப் புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் சாரு நிவேதிதாவும் தேசாந்திரியில் எஸ்.ராமகிருஷ்ணனும் தினசரியும் காட்சி அளித்தார்கள். சாகித்திய அகாடெமி விருது கிடைத்த நிலையில் எஸ்.ரா.வின் தேசாந்திரி பதிப்பகம் களைகட்டியது. இல்லையென்றாலும் அவர் எழுத்துகள் வாசகப்பரப்பைக் கொண்ட எழுத்தாகக் கடந்த 10 ஆண்டுகளில் மாறியிருக்கிறது. சாருவின் நூல்கள் கிழக்குக்குப் போய்விட்டு இந்த ஆண்டு அவரை நட்சத்திரமாக்கும் நோக்கில் தொடங்கப்பெற்றுள்ள ஜீரோ டிகிரியில் மையம் கொண்டிருக்கின்றன. சாருவுக்கும் ஜீரோ டிகிரிக்கும் எழுத்தைத்தாண்டி வேறெந்தத் தொடர்பும் இல்லையென்று ஒவ்வொரு நாளும் சத்தியம் செய்துகொண்டிருக்கிறார். இன்னொரு நட்சத்திர எழுத்தாளரான ஜெயமோகனின் எழுத்துகள் கிழக்கிலும் நற்றிணையிலும் அலைந்துகொண்டிருக்கின்றன.

புதிதாக எழுதவரும் ஒருவரது எழுத்து கவனிக்கப்படும் வாய்ப்புகள் சிலபல காரணங்களால் ஏற்படுகின்றன. அவர் தனது எழுத்தின் வழியாக முன்வைப்பதற்குத் தேர்வுசெய்யும் நிகழ்வு, அதன்மீதான அவருடைய பார்வைக்கோணம், அதனைச் சொல்வதற்காகக் கையாளும் மொழிநடை, வாசிப்பவரின் மனத்திற்கும் செயல்பாடுகளுக்கும் தரும் வேலை ஆகியன அவற்றுள் சில. எப்போதும் புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்கும் உயிர்மை பதிப்பகம் இந்த ஆண்டும் புது எழுத்தாளர்களையும் புதுவகை எழுத்தையும் அடையாளம் காட்டியிருக்கிறது. ஷாலின் மரிய லாரன்ஸின் இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் – வடசென்னைக்காரி, ஜான்ஸி ஏன் குறைவாகப்பாடினார் என்பன கவனம் பெற்றன. அவரது எழுத்து ஒடுக்குதலைக் குற்றமனத்தோடு பார்க்காமல் கொண்டாட்ட மனநிலையோடு அணுகும் தமிழர்களின்/இந்தியர்களின் பொதுப்புத்தியைக் கேள்விக்குள்ளாக்கும் தன்மையோடு உள்ளன. சமகால நிகழ்வுகளின்மீது சமகாலச் சொல்லாடல்களான தலித்தியம், பெண்ணியம் எனச் செயல்பாட்டை முதன்மைப்படுத்தும் கோணங்களிலிருந்து விவாதிக்கிறார். இவ்விரண்டும் சேர்ந்து கவனிக்கப்படும் எழுத்தாக ஆக்கியிருக்கிறது. ஆனால் அவர் எழுதிய பத்திரிகைகளின் அளவு மற்றும் தேவைக்கேற்ப ஒற்றை முன்வைப்பு என்பதோடு உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்மொழியைக் கையாள்வதில் தேர்ச்சிக்குறைவும் வெளிப்படுகிறது. நூலாக்கும்போது திரும்பவும் வாசித்துத் திருத்தங்கள் செய்து வெளியிட்டிருக்க வேண்டிய எழுத்துகள் இவ்விரண்டு தொகுப்பிலும் உள்ள கட்டுரைகள். உயிர்மை வெளியிட்டுள்ள 96 படம் பற்றிய சரவண கார்த்திகேயனின் நூல் புதிய வகைமை நூல். உளவியல் மருத்துவர் சிவபாலன் இளங்கோவனின் உளவியல் சார்ந்த நூல்களும் கவனம் பெற்றதைப் பார்க்க முடிந்தது.

பேரரசியலைப் பின்னுக்கு வைத்துக்கொண்டு நுண்ணரசியலைப் பண்பாட்டுத் தளவெளிப்பாடாகப் பேசும் அமைப்புகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஊடகங்களைப் பரப்புரைக் கருவிகளாகப் பயன்படுத்தியிருக்கின்றன; இப்போதும் பயன்படுத்துகின்றன. நிகழ்காலத்தில் எண்ணிய ஊடகங்களின் வழிப் பரபரப்பாக இயங்கும் சமூக ஊடகங்கள் முதன்மையாக இருக்கின்றன. அதன் இயக்கம் கூட்டம் தவிர்த்து தனியுடல்களைக் கோருவது. ஆனால் அச்சு ஊடகங்கள் எப்போதும் கும்பலை உருவாக்குவன. அதனால் தீவிரமாக இயங்கும் வெளிகளாக அச்சு ஊடகங்கள் எப்போதும் இருக்கின்றன.

இந்தப் புத்தகக் காட்சியில் நிமிர்(மே.17 இயக்கம்) களம்( நாதக) நீலம் (இயக்குநர் பா.ரஞ்சித்) முன்னெடுப்பு ஆகியன அரங்குகளை அமைத்துள்ளன. முன்னிரண்டும் ஒற்றைச் சிறு அரங்கத்துடன் நிற்க, நீலம் இரண்டு அரங்குகளில் நூல்களோடு சிலைகள், சிற்பங்கள் எனப் பரப்பியிருக்கிறது. பிற பதிப்பகங்கள் வெளியிட்ட தலித் எழுத்துகளும் தலித் கருத்தியல் தொடர்பான நூல்களும் அடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் கிடைக்கும்படியான வெளிப்பாடு.

புத்தக விற்பனையின் எல்லைகளை அறிந்துகொண்ட அனுபவத்தோடு பதிப்பகப் பரப்பிற்குள் நுழைந்திருக்கும் வேடியப்பன் இந்த ஆண்டு சில புதிய நூல்களையும் பல பழைய பனுவல்களையும் அச்சிட்டு விற்பனைக்கு வைத்துள்ளார். அவரது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான சரவணன் சந்திரனின் சுபிட்ச முருகனும்  நவீனாவின் லிலித்தித்தும் ஆதாமும் நன்றாக விற்றுக்கொண்டிருந்தன. நவீனாவின் நூல் மின்னம்பலத்தில் தொடர்கட்டுரைகளாக வந்தது. மொத்தமாக வாசிக்கும்போது நெருங்கி வந்து பேசும் தொனியோடு கூடிய நடையாக பளிச்சென்று தோன்றுகிறது. பெண்ணிய விவாதங்கள் என்ற வரையறைக்குள் நின்றும் நழுவியும் விவாதங்களைப் பரப்பிவைததுள்ளார் நவீனா.

புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல பழைய எழுத்துகளை ஒவ்வொரு பதிப்பகமும் ஒவ்வொரு விதமாகப் பரப்பி வைக்கின்றன. டிஸ்கவரி வெளியிடும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்புகளின் நோக்கம் குறிப்பாக இல்லை. தேர்வுசெய்யப்பட்ட விதம், அதற்கான முன்னுரை போன்றவற்றின் மீது விமரிசனங்கள் எழக்கூடும். டிஸ்கவரி புக்பேலஸ் சிறிய தொகுதிகளைத் தருவதற்கு முன்பே நற்றிணை பதிப்பகமும் காலச்சுவடும் வேறுவிதமாகப் பழையனவற்றைப் பரப்பிவைப்பதைத் தொடங்கிவிட்டன. மொத்தத் தொகுதி, கிளாசிக்கல் வரிசை, ஆசிரியரின் முதல் தொகுதி எனப் பெயரிட்டுத் தரப்படும் எல்லாமும் பழைய கள் புதிய மொந்தைதான். அவ்வைப்புகளில் ஒரு விமரிசனப்பார்வை இல்லை; கல்விப்புலத் தேவையை நிறைவேற்றும் பார்வைகளும் இல்லை. அச்சுத்தொழில் வளர்ந்துள்ளதால் அச்சிட்டு வைக்கிறோம் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. அவற்றை வைத்துக் கொண்டு பதிப்பு வரலாறு, சமகாலத்தைப் பதிவுசெய்யும் போக்கைக் கணக்கும் ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் திண்டாடத்தான் செய்வார்கள்.  பெரும்பாலான நூல்களில் முந்திய பதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகக் காட்சியில் சினிமாவின் உள் நுட்பமான எடிட்டிங் பற்றிய நூலொன்றைக் காண முடிந்தது முன்பு சுஜாதா எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி பாணியைக் கொஞ்சம் விரிவுபடுத்தி, உதாரணங்களோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது பற்றிய நூல்கள் சிலவற்றைப் பார்க்கமுடிந்தது, சென்னையில் 10 -க்கும் மேற்பட்ட சினிமா கற்பிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் இருக்கின்றன. அவை எவையும் முறையான பாடத்திட்டங்களோடும் பார்வை நூல்களோடும் இயங்கவில்லை. பழைய பாய்ஸ் கம்பெனிகளின் கற்பித்தல் முறையில் தான் நடக்கின்றன. முறைசாராக் கல்வியை முறையான கல்வியாக மாற்ற பாட நூல்களும் பார்வை நூல்களும் வேண்டும். அத்தேவையை நிறைவேற்றும் நூல்களைச் சினிமாத் தொழிலுக்கு வெளியிலிருப்பவர்கள் எழுதுவதைவிட உள்ளே இருப்பவர்கள் எழுதுவதே சிறந்தது. அந்த நகர்வை நோக்கிய நூல்களைச் சில கடைகளில் பார்க்கமுடிந்தது. நிழல் திரைப்பட இயக்கத்தின் பின்னிருக்கும் திருநாவுக்கரசு, பேசா மொழி இதழின் பின்னிருக்கும் அருண், அயல் சினிமாவின் பின்னிருக்கும் ஜா. தீபா போன்றவர்கள் இந்தத் துறையில் பங்களிப்புச் செய்கிறார்கள் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நகர்வாக இதனைச் சுட்டிக்காட்டலாம். அம்ஷன் குமாரின் குறும்படம் பற்றிய நூலொன்று வந்துள்ளது. யமுனா ராஜேந்திரனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பும் அதில் அடங்கும். ஆனால் சினிமாவின் உள்ளிருந்த செயல்பட்டவர்களிடமிருந்து இத்தகைய நூல்கள் எழுதப்படவேண்டும்

இலக்கியத்திற்குள்ளிருந்து இலக்கியத்தை விவாதிப்பதுபோலவோ, கல்விப்புலத்திற் குள்ளிருந்து கல்விப்புலங்களை விமரிசனம் செய்வதுபோலவோ தமிழ் சினிமா, தமிழ் தொலைக்காட்சி போன்றவற்றைக் குறித்து உள்ளேயிருந்து விவாதிக்கும் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை; விவாதங்கள் நடத்தப் பெறுவதில்லை. அப்படிப் பேசும் அறிவும் நுட்பங்களும் பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் இருந்தாலும் அதன் உள்ளிருந்து பேசும் குரல்கள் எப்போதும் உண்மையாகப் பேசியதில்லை. அதே நேரத்தில் சினிமாக்காரர்கள் சினிமாவைத் தவிர்த்து மற்ற துறைகளைக் குறித்து ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் விவாதிக்கிறார்கள். ஒரு கலைத்துறை அல்லது அறிவுத்துறை வணிகத்தை மட்டும் முதன்மையாகக் கருதும்போது இப்படித்தான் நடக்கும். கலை வியாபாரமாக மாறுதலின் இயங்கியல் விளைவு இது.

2000 – த்தின் தொடக்க ஆண்டுகளின் திறனாய்வு நூல்களும் கோட்பாட்டு நூல்களும் அரசியல் விவாத நூல்களும் சென்னைப் புத்தகக் காட்சியின் பரபரப்புகளாக இருந்தன. இந்த ஆண்டு அப்படியான புதிய நூலொன்றுகூட வரவில்லை. பள்ளிப்பாடங்களைத் தாண்டி வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கவேண்டும் என நினைக்கும் தமிழ்ப்பெற்றோர்களின் பாடு திண்டாட்டம்தான். அதற்கான நூல்கள் தமிழில் எழுதப்படவில்லை. சிலம்பு, மணிமேகலை, சங்கச்செவ்வியல் கவிதைகளைக் கதைகளாகவும் சாரமாகவும் சிறார்களுக்கான வடிவில் தரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான மொழிநடை என்னிடம் இல்லை என்பதும் புரிகிறது. ஆனால் முயற்சி செய்யவேண்டும்

**********

சென்னை மாநகரின் ஆண்டுப் பெருநிகழ்வுகளின் ஒன்றாகிவிட்ட சென்னைப் புத்தக்காட்சி இந்த ஆண்டும் நடந்து முடிந்துவிட்டது. இந்த ஆண்டு கண்காட்சி நடந்த நந்தனம் ஒய் எம் சி ஏ. மைதானம் புத்தகக் காட்சிக்குப் புதிய இடம் அல்ல. அங்கிருக்கும் மைதானங்களில் சிலவற்றில் இப்போது நடந்த விளையாட்டுக் கல்லூரி மைதானம் ஒரு மாற்று இடம். இதற்கு முன்பு இதே வளாகத்தில் வேறொரு இடத்தில் நடந்தது. சென்ற ஆண்டும் அதற்கு முன்பு சில ஆண்டுகளிலும் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் பள்ளியொன்றின் மைதானத்தில் நடந்த புத்தகக் காட்சி பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்தபோதும் நான் போயிருக்கிறேன். தீவுத்திடலில் நடந்து தீப்பற்றிச் சோகநிகழ்வான ஆண்டொன்றில் நான் போனதில்லை.

 42 ஆண்டுகளாக நடக்கும் சென்னை புத்த காட்சி, 60 வயதாகிவிட்ட எனது வாழ்வின் ஆண்டுப் பங்கேற்றலில் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நான் புத்தகங்களோடு இருக்கும் கல்வியாளனாக இருக்கிறேன்; புத்தகங்களை எழுதுபவனாக இருக்கிறேன்; புத்தகங்களை நுகர்ந்து தடவிக் களிக்கும் வாசகனாக இருக்கிறேன். என்னையும் என்னைப் போன்றவர்களையும் ஒவ்வொரு வருடமும் வேறுவேறு இடத்திற்கு வரும்படி அழைக்கும் பதிப்பாளர்களின் கூட்டமைப்பான பபாசியால் நிரந்தரமான நிகழ்விடம் ஒன்றை உறுதிசெய்ய முடியாதது வருத்தமான ஒன்றுதான்.

புத்தகக் காட்சி என்ற ஒன்று சென்னை போன்ற ஒரு பெருநகருக்கு உருவாக்குகித் தரும் அடையாளங்களும் தாக்கங்களும் பயன்மதிப்புகளும் பலவிதமானவை. அதன் பின்னே அச்சுத்தொழிலிலின் பணச்சுழற்சி இருக்கிறது. காகிதத் தேவை என்னும் உற்பத்தித் தொழிலோடு தொடர்பிருக்கிறது. பலநாடுகளிலும் வாழும் தமிழர்களின் வருகை சார்ந்த சுற்றுலாப் பொருளாதாரம் அதனோடு உறவுகொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என்னும் தமிழ்க் கலை சார்ந்த பரப்புரைகள் அங்கே நடக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மனத்தின் நுண் ரசனையையும் கூட்டு மனநிலையையும் கட்டியெழுப்பும் நூல்கள் அங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.  இவற்றை உணரும் அரசமைப்பு தானே முன்வந்து நிரந்தரமான இடம் ஒன்றை அடையாளப்படுத்தி இலவசமாகவே வழங்க வேண்டும். அதற்கான முன்முயற்சிகளைச் செய்ய வேண்டியவர்கள் செய்ய வேண்டும்.

 

 

 

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை