: 18

தேர்தல் காலக்குறிப்புகள் - 2019 /1-6

நுண் ஆயுதங்கள் -6
-------------------------------
தமிழக மக்கள்/ வாக்காளர்கள் சினிமாக்கவர்ச்சியின் பின்னால் செல்பவர்கள் என்பதை உறுதிசெய்யத் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். அதன் மூலம் இங்கு உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை முன்வைத்து நடந்த சமூகநீதி அரசியல், மொழிப் பற்று சார்ந்த அடையாள அரசியல் , பிராமண எதிர்ப்பை முன்வைத்து உருவாக்கப்பட்ட சாதியொழிப்பு அரசியல், முதலாளித்துவ அரசியல் வழங்கும் உரிமைப் போராட்ட அரசியல் ஆகியன எல்லாம் வெற்றுக் கோஷங்கள் எனக் காட்ட முடியும் என நம்புகிறார்கள்.

தான் செயல்பட்ட அரசியல் கட்சியின் அடையாளமாகக் காட்டிக் கொண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் வெற்றி பெற்றதால் நாயக நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அது சாத்தியம் எனத் தூண்டப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என மூன்றுமுகங்கள் தென்பட்டாலும் இலக்கு ஒன்றுதான் . தமிழக மக்கள் அரசியலற்ற கூட்டம் எனக்காட்டுவதே அந்த நோக்கம். தமிழக மக்களின் அரசியல் அறிவின்மீது தாக்குதல் நடத்தும் நுண்ணாயுதங்கள் இவர்கள். எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

இந்த விளையாட்டை தனியார் ஊடகங்கள் அதன் வியாபார வளர்ச்சிக்காக ஆதரவு காட்டுகின்றன. அச்சு ஊடகங்கள் காலத்துத் தொடக்கம் மின்னணு மற்றும் காட்சி ஊடகங்கள் காலத்தில் விரிந்து பரவிப்பெருகுகின்றன.


முன்னும் பின்னும் மௌனங்கள்-5 
================================
தேர்தல்களின் காலம் மௌனங்கள் கலைக்கப்படும் காலம்; வசனங்கள் பேசப்படும் காலம்; ஒத்திகைகள் இல்லாமலேயே நேரடிக் காட்சிகள் அரங்கேற்றப்படும் காலம்.அரங்கேற்றங்கள் மேடைகளில் மட்டுமல்ல; தெருக்களை நாடியும், வீடுகளைத் தேடியும் வரும் காலம். ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறும் தேர்தல் அரசியலில் மௌனத்திற்கு ஏது இடம்? கேள்விகள் எழலாம். வாக்காளர்களின் மௌனங்கள் இரண்டு தடவை நிறைவேற்றப்படும். வாக்கைச் செலுத்துவிட்டுத் திரும்பும்போது பெரிய மௌனம். வாக்களித்த கட்சி அல்லது நபர் தோற்றுவிடும்போது இன்னொரு மௌனம்.

தேர்தல் அரசியலில் மௌனம் என்பது அதிகார வேட்டையின் கண்ணி வெடி ?டிஜிட்டல் திருவிழாக்கள் தொடரப் போகின்றன-4

=============== ==========================
நகரம் திருவிழாக்கோலம் பூண்டது. 
இந்த வாக்கியத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய அடையாளம் சுவர்களுக்கு வெள்ளையடித்தல், வண்ணக் கோலங்கள் போடுதல், புத்தாடைகள் அணிதல், தாரை தப்பட்டை முழங்க வீதி உலாக்கள் வரும் தெய்வங்களின் திருக்கோலம். அந்த நாட்களில் ஆட்டங்களையும் கூத்துக்களையும் ஏற்பாடு செய்து கண்டு களித்தல், நிறைவாக மஞ்சள் நீர் தெளித்து களியாட்டம் செய்தல் என்பதாக இருந்தன.

இந்த அடையாளங்களை மாற்றிப் புது அர்த்தங்களைக் கொண்டு வந்து சேர்த்தது ஜனநாயகமும் அதன் மையமான தேர்தலும். வாக்களித்தல் என்னும் திருவிழாவில் பங்கேற்கும் வாக்காளர்களின் களிப்பும் கொண்டாட்டமும் அவர் வாக்களித்த வேட்பாளரின் வெற்றியில் இருந்ததால் கொண்டாட்ட முறைகளும் மாறிப் போனது. திருவிழாக்களுக்குத் தயாராகும் முறை மட்டுமல்ல, திருவிழாக்களின் கொண்டாட்ட முறைமையும் கூட முற்றிலும் மாறிவிட்டது. திருவிழா என்பது காட்சிகளாக இருந்த நிலை மாறி ஓசையின் பெருக்கமாக ஆன போது. திருவிழாக்கள் கண்களின் களியாட்டம் என்பதைத் தொலைத்து காதுகளின் கொண்டாட்டம் என்பதாக மாறின.

ஒலி பெருக்கிகளும் திரைப்படங்களும் பழையனவற்றின் இடத்தைப் பிடித்தன. தலைவர்களின் வருகைகளை அலறி அலறிச் சொன்ன கூம்பு வடிவக் குழாய்கள் நகரெங்கும் நின்றிருந்த காட்சிகள் 15 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இருந்தன. நூறு அடிக்கு ஒன்று வீதம் மக்களின் செவிப் பறையைத் தாக்கிய அந்த ஒலிபெருக்கிகள் போன தேர்தல்களிலேயே காணவில்லை. இந்தத் தேர்தலில் இருக்கப் போவதில்லை.

காலம் சக்கரமாக மாறிச் சுற்றி விட்டுத் திரும்பவும் வந்து நிற்கும் என்பார்களே அதுபோல விழாக்கள் திரும்பவும் காட்சிகளின் ஜோடனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படியே எல்லாமும் திரும்பி வந்துவிடவில்லை. காதுக்கு விருந்தளித்த ஒலி பெருக்கிகள் தொலைந்து கொண்டிருக்கின்றன என்பது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் ஆட்டமும் பாட்டமும், வண்ணக்கோலங்களும் திரும்ப வந்து விட்டன என்று சொல்வதற்கில்லை.
அவ்வப்போது நடக்கும் தலைவர்களின் வருகைகள் இந்த மாற்றத்தை ஒவ்வொரு நகரத்துக்கும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் நடக்கும் அரசியல் மாநாடுகள் திருவிழாக் கோலத்தின் புது அர்த்தங்களை எழுதிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுதெல்லாம் நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பிளாஸ்டிக் தாள்களில் அச்சடிக்கப்பட்ட வண்ணப் படங்களில் நடக்கிறார்கள்; நிற்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; யோசிக்கிறார்கள்; எழுதுகிறார்கள். மிகச் சமீபத்தில் அவர்கள் வெள்ளைப் பற்கள் பளிச்சிட அலைபேசியில் பேசியபடியும் காட்சி தருகிறார்கள். தலைவர் ஒருவரின் பிறந்த நாள் என்றால் திருவிழாவின் புதிய அர்த்தத்தை நமது நகரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பிளக்ஸ்போர்டு என அச்சகத்தொழில் சார்ந்தவர்களால் அழைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் நகரத்தின் முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் நிற்கின்றன. பெருநகரங்களில் தொடங்கிய வண்ணப் பதாகைகளின் ஆக்கிரமிப்பு சிறுநகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள் என நீண்டு விட்டன. நூறு அடிக்கு ஒரு ஒலி பெருக்கி என்பதற்குப் பதிலாக இன்று நிற்பவை வண்ணப் பதாகைகள். அனைத்தும் புதுவகைத் தயாரிப்புக்கள். மதில்களில் ஒட்டாமல், பதாகைகளாகவும் தொங்கும் தோரணங்களாகவும் நிமிர்ந்து நின்ற அந்தக்கோலம் கண்ணிற்குத் தான் விருந்து. பிரமாண்டங்களைக் கட்டமைக்கும் இந்தக் காட்சிகளில் தலைவர்கள் சிரிக்கின்ற அதே நேரத்தில் - அதே இடத்தில் தொண்டர்களும் சிரிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தங்களைத் தாங்களே கண்டு ரசிக்கும் சுய மோகம் யாருக்குத் தான் இல்லை.

தலைவர்களின் படங்களை அச்சிட்டு நிறுத்துபவர்கள் அவர்களின் பக்கத்தில் நின்று களிக்கப்போகிறார்கள்.

தேர்தல் திருவிழா என்பது ஒருவிதத்தில் டிஜிட்டல் திருவிழாவாக மாறிக்கொண்டிருக்கின்றன.ளிகளுக்கு மருத்பயங்கரவாதம் -வன்முறை -தேர்தல் உத்தி-3

============================================

பயங்கரவாதத்தை விளங்கிக் கொள்ள முயல்வது வன்முறையை விளங்கிக்கொள்ள முயல்வதின் தொடர்ச்சி. அதிகாரத்தைக் கைப்பற்ற வன்முறையைப் பயன்படுத்தலாம் என்பது கேள்விக்கப்பாற்பட்ட உரிமையாக உலகத்தில் நம்பப்படுகிறது என்றாலும் வன்முறை எப்போதும் விருப்பத்திற்குரியதாக இல்லை என்பதும் சுவாரசியமான முரண்பாடு.

வன்முறைக்கு முன் எல்லா உயிர்களும் நடுங்குகின்றன்; எல்லா உயிர்களும் இறப்புக்குப் பயப்படுகின்றன; எல்லா உயிர்களும் வாழ்வை நேசிக்கின்றன என்ற தம்மபதத்தின் கூற்றை நிராகரிக்க ஒருவரும் இல்லை.

தான் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் தொடங்கும் ஒருவனின் மனநிலையை நீ மட்டும் அல்ல; நீ சார்ந்த குழுவே அங்கீகரிக்கப்படவில்லை என விரிப்பதின் மூலம் அவனது அறிவைத் தூர விலக்கி வைக்க முடியும் என நம்புகிறது வன்முறை சார் நம்பிக்கை.

அங்கீகரிக்கப்படாத வெளியில் தனது அடையாளத்தை உருவாக்கிக் காட்டும் பணியைத் தொடங்கும் மனநிலை, அப்பணியை அநீதிக்கெதிரான போராட்டமாக மாற்றுவதும், அப்போராட்டத்தின் வெற்றிக்கு வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாதது என்று நம்பி விடும் நிலையில் பயங்கரவாதக் கருத்தியல் உருவாகி விடுகிறது.

பயங்கரவாதம் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று எனச் சொல்லப்பட்டாலும், அதன் மறுபக்கத்தில் லட்சியவாதமும் புனிதப்போர்களும் இருந்தன ; இருக்கின்றன. உருவாக்கப்படும் அரசுகள் தொடர்ந்து வன்முறை வடிவத்தைப் பயன்படுத்திக் கொண்டே பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் கூட்டமும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கைவிட்டு விடும் என நினைப்பதும் அபத்தம்தான். முள்ளால் முள்ளால் எடுக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழிகள் மாற்று முறைகளை மறைக்கப் பார்க்கும் எண்ணங்களின் வெளிப்பாடு.

காதலை அனுபவித்துப் பார்த்துச் சொன்னவர்களைப் போலப் பயங்கரவாதத்தை அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம். காதலின் இன்பமோ துயரமோ அது தனிமனிதர்கள் சார்ந்த ஒரு விளைவு. ஆனால் பயங்கரவாதம் தனிமனிதர்களை அல்ல; மனித சமுதாயத்தை அலைக்கழிக்கும் ஆபத்து.

விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை; ஆபத்துக்கள் தவிர்க்க வேண்டியவை.

மரணம் - தற்கொலை -தேர்தல் கால வன்முறை-2

================================================

மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கருத்து ரீதியானவையல்ல; செயல் ரீதியானவை.
தனிநபர்கொலைகளும் கும்பல்கொலைகளும் செயல்களால் விளக்கக்கூடியன அல்ல. கருத்தியல் ரீதியானவை.
புறவய யதார்த்தத்தைக் குறித்துக் கொண்டிருக்கும் ஒரு சொல்லைப் புனைவாகவும் கருத்தாகவும் நினைப்பாகவும் இருக்கும் ஒன்றிற்குப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் புனைகதை ஆசிரியர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கட்டுரை எழுதுபவர்கள் அப்படி எழுதினால் நிச்சயம் மொழிப்பிழை என்பதைச் சொல்ல வேண்டியதில்ல.
ஊடகங்களும் ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் இந்தச் சொற்களையெல்லாம் அதனதன் நியாயகங்களோடுதான் பயன்படுத்துகிறார்களா?

இப்போதைக்குக் கேள்விகள் மட்டும்தான். விடைகள் என்னிடம் இல்லை


கருத்துத் திணிப்புகள்-1
----------------------------------------------------------------
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் 
மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப் படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.

இந்தியாவில் எந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி எல்லாவகை ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விடுவது வாடிக்கை. வாக்குப் பதிவு தொடங்கிய நாள் முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதை இந்திய ஊடகங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை நிறுத்திக் கொண்டுவிட்டன என்பது பெரும்பாலோரது நம்பிக்கை.

நமது நம்பிக்கை சரியானது தானா? என்று மட்டுமல்ல; உண்மையில் கருத்துக் கணிப்பு என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றும் கூடக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஒரு செய்திப் பத்திரிகை அல்லது தொலைக்காட்சி அலைவரிசை தங்களின் ஊழியர்களைக் கொண்டோ அல்லது தாங்கள் ஏற்பாடு செய்த நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்டோ தேர்தலில் பங்கெடுப்பதாக நம்பும் வாக்காளர்களைச் சந்தித்துத் தங்களின் வினாக்களுக்கான விடைகளைப் பெற்று அதன் அடிப்படையில் சொல்லும் கணிப்புகளை மட்டுமே கருத்துக்கணிப்பு என நம்புகிறோம். 
ஏற்பாடு செய்யப்பட்ட நிறுவனங்களும் சரி, பத்திரிகையின் ஊழியர்களும் சரி தாங்கள் சொல்லப்போகும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டுவது நபர்கள் சார்ந்த புள்ளிவிவரங்களைத் தான். இத்தனை சதவீதம் பேர் இப்படி நினைக்கிறார்கள்; அத்தனை சதவீதம் பேர் அப்படி நினைக்கிறார்கள் எனச் சொல்லிவிட்டு, இவற்றிற்கிடையே செயல்படப் போகும் வேறு விதமான உண்மைகள் மற்றும் போக்குகள் இவையிவை எனக்கூறிக் கருத்துக்கள் கணிக்கப்படுகின்றன. கருத்துக்கள் கணிக்கப்படுகின்றன என்று சொல்வதை விடக் கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.
புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகப் பாவனை செய்யப்படும் கருத்துக் கணிப்புகள் மட்டுமே இங்கு நடைபெறுகின்றனவா? அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றாமல் இங்கே கருத்துக்கணிப்புகள் நடைபெறுவதில்லையா என்று யோசித்துப் பாருங்கள். பெரும்பாலான கணிப்புகள் இத்தகைய நடைமுறையைப் பின்பற்றாமல் தான் இங்கே நடக்கின்றன. தேர்தல் அறிவிக்கப்படும் நாள் தொடங்கிப் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும், தனிநபர்களும் தேர்தல் சார்ந்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். அந்தக் கருத்துக்களே இங்கு வேட்பாளர் நியமனம் தொடங்கி, வெற்றி பெறுபவர் யார் என்ற யூகத்தை வெளியிடுவது வரை வினையாற்றுகின்றன.

தொடர்ந்து நமது பத்திரிகைகள் தொகுதி நிலவரம், புள்ளிவிவரங்கள்,பெரும்பான்மை சமூகத்தவர், இந்தச் சமூகம் இதற்கு எதிராக நிற்கக் கூடியது; இந்தச் சாதியுடன் அந்தச் சாதி முரண்படும்; இதனோடு ஒத்துப் போகும் என்றெல்லாம் விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இப்படி விவாதிப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலைக் கூட உள்ளூரோடு தொடர்படுத்தி ஊராட்சித் தேர்தல் அளவுக்குச் சுருக்கிவிடுகின்றன. இத்தகைய போக்கு கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமாகிவிட்டது. ஒட்டு மொத்த இந்தியாவில் தேசியக் கட்சிகள் வலுவிழந்ததுபோல் 2000 -க்குப் பிறகு மாநிலக் கட்சிகளும் கூடத் தங்கள் வலிமையை- பரப்பளவின் விரிவை-இழந்து கொண்டு வருகின்றன.

ஜனநாயக தேசங்களில் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் ஊடகங்களுக்கான சிறப்பான தீனி என்பதில் சந்தேகங்கள் இருக்க முடியாது. ஆனால் இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்கள் உள்ளூர்த் திருவிழாக்களுக்கீடாக மக்களின் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றதில்லை. வாக்காளர்களுக்கு உள்ளூர்க்காரர்கள் போட்டியிடும் ஊராட்சித் தேர்தல்களே முக்கியமான நிகழ்வுகள். அவை ஏறத்தாழ உள்ளூர்த் திருவிழாக்களுக்கு ஈடாக மக்களின் கவனத்தையும் பங்கேற்பையும் பின்விளைவுகளையும் கொண்டதாக இருந்திருக்கின்றன என்பதை இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் உறுதி செய்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களுக்கு அடுத்தபடியாக மாநிலச் சட்டமன்றங்களுக்கு நடக்கும் தேர்தல்களுக்கு இந்தியர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இதுவரை இதுதான் நடைமுறை.ஆனால் இந்த முறை நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை அப்படிச் சொல்லி விட முடியாது. ஊராட்சித் தேர்தல்கள் அளவுக்கு இல்லை யென்றாலும் சட்டமன்றத் தேர்தல் அளவுக்கு முக்கியத்துவம் உடையதாக 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் மாறிவிட்டன. தேசத்தை எந்தக் கட்சி ஆள்வது என்ற கேள்விக்கு விடைதேடும் தேர்தலாக இல்லாமல், அமையப்போகும் மத்திய அரசில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு பங்கு கிடைக்கும் என்ற கேள்வி முக்கியத்துவம் உடையதாக மாறிவிட்டது.

தேசியக் கட்சிகளின் செல்வாக்கு எல்லா மாநிலங்களிலும் கேள்விக்குள்ளாக்கப் பட்டு விட்ட நிலையில் பொதுத்தேர்தலின் மையம் நகர்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. 
தேசியக் கட்சிகள் மட்டும் அல்ல; தமிழ்நாட்டின் அனைத்துப் பரப்பிற்கும் பொதுவான கட்சி என்ற அடையாளத்தை மாநிலக் கட்சிகள் கூட இழந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் செல்வாக்குடன் இருக்கும் சாதிகளின் பின்னணியில் வட்டாரக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளில் இருக்கும் சாதியத் தலைவர்களும் அலட்சியம் செய்து ஒதுக்கி விட முடியாத அளவு முக்கியத்துவம் பெறுவார்கள். இதன் பருண்மையான வெளிப்பாடு வி.சி.க - பா.ம.க. எதிரிணை. வட தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருப்பதாகக் கணிக்கப்படும் பாமகவுடன் ஓர் அணி கூட்டணி அமைத்தால் அதன் எதிர்நிலையில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளுடன் இன்னோர் அணி கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது தலைவர்களின் கருத்தியல் விருப்பமாக இருக்கலாம்; ஆனால் வட தமிழ்நாட்டின் நிலவியல் சமூக முரண்பாடு அதனை ஏற்காததாக இருக்கிறது என்பது நிகழ்கால வரலாறு. அதே போல தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோரின் ஆதரவைப் பெறும் கட்சியையோ கூட்டணியையோ புதிய தமிழகம் போன்ற வட்டாரக் கட்சியை – குறிப்பிட்ட சாதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை ஆதரிக்கும் வாக்காளர்கள் ஆதரிக்க முடியாது என்பதும் நிலவியல் சார்ந்த சமூக முரண்பாடு.

இத்தகைய நிலவியல் முரண்பாடுகளையே நமது ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளாக- கருத்தியல் திணிப்பாக முன் நிறுத்துகின்றன. சாதி மதம், உட்பகை என இவையெல்லாம் வேண்டாம் எனப் பாவனை செய்யும் ஊடகங்களும் அவற்றின் பெயராலேயே கருத்துக் கணிப்புகளையும் கருத்தியல் பரவலையும் உருவாக்கும் போது என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்று கேட்டால், ஊராட்சித்தேர்தல்களுக்குப் பிந்திய விளைவுகளே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னும் ஏற்படும் என்று கூறுவது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

தேர்தல் களம் என்பது போட்டியின் களம். ஆனால் கிராமங்களில் நடக்கும் கோழிச் சண்டை, ஆட்டுக்கிடாய் மோதல் மாதிரியான களம் அல்ல. மனிதர்கள் ஒருவரோடு மோதிக் கொள்ளும் மல்யுத்தக் களம் போன்றதும் கூட அல்ல. உடல் வலிமையில் சமநிலை இருப்பதாக நம்பும் இருவர் மோதி , ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் போட்டி முடிவுகள் இங்கு இல்லை. இப்போட்டி பலருக்கும் இடையே நடக்கும் போட்டி. போட்டியில் பங்கேற்கும் நபரின் பலம் என்பது குறிப்பிட்ட வட்டாரத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பலம் தான். உண்மையில் ஒருவரின் பலம் என்பது அவரே உண்டாக்கிக் கொள்ளும் பலம் அல்ல; அவரைப் பற்றி உண்டாக்கப்படும் கருத்து பலம் தான் அது. 
ஒருவரைப் பற்றிய கருத்து அவர் வாழும் வாழ்க்கை முறையாலும் பிறரோடு கொள்ளும் உறவு முறையாலும் உண்டாக்கப்படும். மக்களாட்சி முறைக்கு மாறிய பின்பு ஒருவரைப் பற்றிய கருத்தைத் தீர்மானிப்பதில் அவர் சாந்துள்ள கட்சியும் அதன் கொள்கைளும் முக்கிய பங்கு வகிப்பனவாக மாற்றம் பெற்றன. இவர் இப்படிப் பட்டவர்; அவர் சார்ந்த கட்சி இத்தகைய கொள்கைகளைக் கொண்டது ; அதனால் அவரது வாழ்க்கை முறையும், பழகும் முறையும் இவ்வாறு இருக்கும் என்று நம்பப்பட்டது. இன்று நடைமுறையில் ஒருவரைப் பற்றிய கருத்துருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் இடம் பிடித்துள்ளனவா? கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். பதிலைப் பின்னர் பார்ப்போம்.முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை