: 42

போர்கள்: புறநானூற்றுப் பெண்கவிகளின் எதிர்க்குரல்கள்


பெண்களின் புறக்கவிதைகள்- சிலவிவரங்கள்:

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களான சங்கக் கவிதைகளை எழுதிய புலவர்கள் எண்ணிக்கை 473. அவர்களில் 37 பேர் பெண்கள். இவர்களில் 18 பெண்கள் புறக்கவிதைகளை எழுதியுள்ளர். அவை புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை புறநானூற்றில் 63; பதிற்றுப்பத்தில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எழுதிய 6 ஆம் பத்து ஆகியன. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 63 புறக்கவிதைகளில் ஔவை எழுதியன மட்டும் 33. அவருக்கு அடுத்தபடியாக மாறோக்கத்து நப்பசலை 7 கவிதைகளை எழுதியுள்ளாள். அடுத்த நிலையில் 3 கவிதைகளை எழுதியவர்களாகப் பொன்முடியாரும், பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையும், உள்ளனர். அள்ளுர் நன்முல்லையும், மாற்பித்தியும், வெறிபாடிய காமக்கண்ணியும் 2 கவிதைகளை எழுதியுள்ளனர். ஒரு கவிதையை மட்டும் எழுதியவர்களாக ஒக்கூர் மாசாத்தி, காவற்பெண்டு, காக்கைப் பாடினி நச்செள்ளை, குறமகள் இளவெயினி, தாயங்கண்ணி, பாரி மகளிர், பூங்கண் உத்திரை, பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, பேய்மகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தி, வெள்ளைமாளர் எனப் பதினொரு கவிகளின் பெயர்களைக் காண்கிறோம்.

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை எழுதியதாக மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளை மீது கொண்ட கைக்கிளைக் காதல் கொண்டு அவள் எதிர்கொண்ட பழிச்சுதல் செய்யும் நிலையைச் சொல்லும் இம்மூன்று பாடல்களும் புறநானூற்றில் இடம் பெற்றிருந்தாலும் (புறம் 83-85) அகப்பாடல்களே. கைக்கிளையைப் புறத்திணையாகக் கருதும் புறப்பொருள் வெண்பாமாலையின் அடிப்படையில் புறநானூறு தொகுக்கப் பட்டுள்ளதால் இவ்வாறு இடம் பெற்றுவிட்டன. அதே போல் தன் தலைவனை சொல்வலை வேட்டுவன் எனப் பாராட்டி மனம் மகிழும் தலைவியைக் காட்டும் மாற்பித்தை பாடிய இரண்டு கவிதைகள் புறநானூற்றில் 251,252 என வரிசைப் படுத்தப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறவுமில்லை; இன்னார் மீது பாடப்பெற்றது என்ற குறிப்பையும் தரமுடியாது. கவிதையில்  போர் சார்ந்த குறிப்புகளும் இடம்பெறவில்லை. தலைவன் முன்பு அருகில் இருந்தான்; இப்போது அருகில் இல்லை என்பதைச் சொல்லும் பெண்ணின் மனம் தான் அதில் வெளிப்பட்டுள்ளது. எனவே இவ்வைந்து கவிதைகளையும் அகக்கவிதைகளாகக் கொள்ளுதலே பொருந்தும் என்ற குறிப்பைச் சொல்லி விட்டு புற நானூற்றுக் கவிதைகளுக்குள் பயணம் செய்கிறது இக்கட்டுரை.

பெண்தன்னிலை உருவாக்கமும் வெளிப்பாடுகளும்:

பெண்கவிகளின் கவிதைகளைத் தனியே தொகுத்துக் கவிதையியல் நோக்கில் வாசிக்கும் போது அகக் கவிதைகளில் காணப்படும் பொதுக்கூறு புறக்கவிதைகளாகத் தொகுக்கப்பட்ட கவிதைகளிலும் காணப்படுகிறது. உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தின் வழியாக இன்னொரு உருவாக்கப்பட்ட பாத்திரத்தோடு உரையாடும்- உறவாடும்- தன்மை அகக்கவிதையின் பொதுக் கட்டமைப்பு. உருவாக்கப்படும் இவ்விரு பாத்திரங்களும் பெயர் சுட்டப்படாமல் பொதுவகைப் பாத்திரங்களாக- அகத்திணை மாந்தர்களாக- இருந்த நிலையில் அக்கவிதை அகக் கவிதைகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. எடுத்துரைப்பவள் ஒரு பெண் என்ற தன்னிலை உருவாக்கத்தை அகக்கவிதைகள் போலவே பெண்கள் எழுதிய புறக்கவிதையிலும் முதன்மையாகக்  காண முடிகின்றது. ஆனால் கேட்போர் இடத்தில் இன்னொரு பாத்திரத்தை உருவாக்கி அதனுடன் பேசுவதாக அமைக்காமல், புறக்கவிதையின் பொது இயல்பான பலருக்கும் -உலகத்தோர்க்குச் சொல்லுதல்- என்ற கட்டமைப்பைக் கொண்டனவாக ஆக்கப்பட்டிருப்பதன் மூலமே அக்கவிதைகள் புறக்கவிதைகளாகியிருக்கின்றன.

அகக்கவிதைகள் அகத்திணை மாந்தர்களின் மனம் மற்றும் உடலின் இருப்பை காமம் மற்றும் காதல் சார்ந்த பேசுபொருளாக ஆக்கியுள்ளன. ஆனால் புறக்கவிதைகள் உடலின் இருப்பைப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு உருவாக்கப்படும் பாத்திரத்தைப் பொதுவெளிக்குரியதாக மாற்றி நிறுத்தியுள்ளன. பொது வெளியில் முக்கியத்துவம் பெறும் அரசன், அவன் நடத்தும் போர்கள், அவன் அளிக்கும் கொடைகள், தனக்குக் கட்டுப்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது அவனுக்குள்ள ஆளுமை ஆகியவற்றை அதிகம் பேசுகின்றன. போர்களின் வழியாக உருவான தலைவர்களே அன்றைய சமூகத்தின் பொதுவெளிக்குரியனவற்றைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர் என்பதால் புறக்கவிதைகளில் போர் பற்றிய கவிதைகள் அதிகம் உள்ளன.  போர்களை அடுத்து அதிகம் பேசப்பட்ட பொருள் உலகத்தில் மனிதர்கள் இருக்க நேர்வதும் இல்லாமல் போவதும் பற்றியதாகும். அதனைத் தொடர்ந்த மனிதர்களை மேம்படுத்தும் என நம்பப்படும் அறிவு, கடமை, உரிமை, அன்பு, பாசம், மேல்- கீழ் என்னும் படிநிலைகளின் இருப்பும், அவற்றை நிராகரிப்பதன் வழியாக உருவாக்கப்படும் சமூகக் கட்டமைப்பின் தன்மையும் என எல்லாக் காலங்களிலும் பொதுவெளியில் முன் வைக்கப்படும் சொல்லாடல்கள் சங்கக் கவிதைகளின் உரிப்பொருளாகவும் ஆகியுள்ளன.

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே எனச் சொல்லும் நூற்பாவின் வழி திணையின் அடையாளமாக இருப்பது அவற்றின் உரிப்பொருள். அகத்திணைக்குரிய உரிப்பொருளுக்குக் காலமும் வெளியும் (இடம்) சுட்டுவது போல முதல், கரு சொன்ன தொல்காப்பியம் புறத்திணைக்கு அவற்றைச் சொல்லவில்லை என்றாலும் புறத்திணை ஒவ்வொன்றிற்கும் வெளிசார் அடையாளங்கள் சுட்டப்பட்டுள்ளன. புறத்திணைகளாகத் தொல்காப்பியம் சொல்லும் வெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு உரிப்பொருள்களோடு, அவற்றின் உட்பிரிவுகளான துறைகளையும் அவற்றிலிருந்து பின்னர் வளர்ச்சி பெற்று வகைப்படுத்தப் பட்ட பொதுவியல் போன்ற உரிப்பொருட்களையும் புறக்கவிதைகளில் காண்கிறோம். புறநானூற்றில் அவ்வுரிப்பொருட்கள் பல்நிலைப் பட்டதாகவும் பல பரிமாணங்கள் கொண்டதாகவும் இருக்க, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஆற்றுப்படைகள் போன்றனவற்றில் ஒற்றைப் பரிமாணத்தோடு ஏதாவது ஒரு புறச் சொல்லாடல் பல அடுக்குகளாகப் பேசப்பட்டுள்ளன.

பெண்களின் புறக்கவிதைகளைத் தனியாகத் தொகுத்துப் பார்க்கும் போது ஆண்களின் புறக்கவிதைகளிலிருந்து பெருமளவு மாற்றத்தையும் காண முடிகிறது. ஆண் தலைமை தாங்கும் குடும்ப அமைப்பும், ஆணைச் சார்ந்து வாழும் பெண்ணும் தான் அதிகமான பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ‘எனது இயங்குவெளி குடும்பம் என்ற எல்லைக்குள் இருக்கிறது; எனது இயக்கம் ஆணொருவனைச் சார்ந்ததாக இருக்கிறது; அவனது இருப்போடும், மகிழ்ச்சியோடும் எனது இருப்பும் இணைந்ததாக இருக்கிறது; அவனது இன்மை எனது வாழ்விலும் இன்மைக்கீடான நிலையையே உணர்த்துகிறதுஎனப் புறநானூற்றில் பெண் கவிகள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளனர். இந்நிலையைத் தாங்களே விரும்பி ஏற்றுக் கொண்டதாகச் சிலரும், சமூகம் தரும் நெருக்கடியால் அப்படியான உணர்வு ஏற்பட்டுள்ளது என்று சிலரும் சொல்கின்றனர். அப்படிச் சொல்லும்போது அன்றைய சமூகம் முக்கியமானதாகக் கருதிய போர்களையும், அதன் விளைவுகளையும் பெண்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே கவிதைகளின் உள்ளடக்கமும், வெளிப்படும் தொனியும் காட்டுகின்றன. ஆனால் இந்தப் போக்கு முழுமையான போக்கு அல்ல என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கவே செய்கின்றன. போரெனும் பெருநிகழ்வு ஏற்படுத்தும் இழப்பை மிகுந்த துயரத்துடன் எதிர்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்களும், அதனை மென்மையாகக் கடிந்துரைக்கும் வரிகளை எழுதிய பெண்களும் அவர்களுக்குள் இருந்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமான பதிவுகளாகக் கொள்ள வேண்டியவை. 

ஏற்பு மனநிலையையும் விலகில் மனநிலையையும்

போர் புரிவதையும் அதன் வழியாகச் சமூக உருவாக்கத்தை நிலைநிறுத்துவதையும் முதன்மையாகக் கருதி  நகர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அப்போக்கை எல்லா வகைப் படைப்பாளிகளும் அதனை ஏற்றுச் சமூகத்தின் மைய நீரோட்டத்தோடு இணைந்தே செயல்படுவார்கள் என்பதில்லை. புதிதாக உருவாகப் போகும் சமூக அமைப்பு யாருக்கெல்லாம் பயன்படுமோ அவர்கள் மட்டுமே அதனை ஏற்றுப் பாராட்டுவார்கள். அவ்வாறில்லாமல் தனக்கும் தன்னையொத்த மனிதர்களுக்கும், தான் சார்ந்த சமூகக் குழுவிற்கும் உள்ள உரிமைகளைப் புதிதாக உருவாகும் அமைப்பு அழித்து விடும் அல்லது பறித்து விடும் என நினைக்கும்போது அதற்கெதிரான மனநிலையைப் படைப்புகள் வெளிப்படுத்தவே செய்யும். அத்தகைய மனநிலையில் மைய நீரோட்டத்தோடு ஒத்துப் போகின்றவர்கள் அமைப்புகளின் ஆதரவாளர்களுக்கான பாராட்டுக்களையும் பட்டங்களையும் பெறுவர். விலகி நிற்பவர்கள் எதிர்ப்பாளர்களாகவும், வளர்ச்சியின் அல்லது மாற்றத்தின் போக்கை விரும்பாதவர்களாகவும் கணிக்கப்படுவர். இப்போக்கு இன்றைய மனநிலை மட்டுமல்ல. எல்லாவகை மாற்றங்களின் போதும் இதுவே நிலை..

புறநானூற்றில் எண்ணிக்கையில் அதிகமான கவிதைகளை எழுதிய ஒளவையும் மாறோக்கத்து நப்பசலையும் மட்டுமே பலவிதமான பாடுபொருளை- வெவ்வேறு தொனியில் எழுதியுள்ளனர். அத்தோடு அவர்களின் கவிதைக்குள் சொல்லும் இடத்தில் இருக்கும் நபர் பெண் தன்னிலையை உருவாக்கும் நோக்கத்தை முதன்மையாகக் கருதவும் இல்லை. அந்தக் கவிதைக்குள் இருக்கும் நபர் ஆணாகவும் இருக்கலாம்; பெண்ணாகவும் இருக்கலாம் என்பதான கட்டமைப்பையே அக்கவிதைகள் கொண்டுள்ளன. அதற்கு மாறான தன்மையை குறைவான - ஒன்றிரண்டு கவிதைகளை எழுதியவர்களிடம் காண முடிகிறது. அக்கவிதைகளில் பெண் தன்னிலை உருவாக்கம் முக்கியக் கூறாக இருக்கிறது. அதே போல் அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் தொனியும் ஒற்றைத் தொனியாகவே இருக்கிறது என்பதும் கவிதையியல் பற்றிய சொல்லாடலில் முக்கியத் தகவல்கள். இனி இக்கூற்றுகளுக்கான ஆதாரங்களை வாசித்துப் பார்க்கலாம்.

சங்ககாலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப்படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே நிறுவியுள்ளன. அதற்கான சான்றுகள் புறக்கவிதைகளில் ஏராளமாக உள்ளன என்றாலும் கவி பொன்முடியின் இந்தக் கவிதை முதன்மையான ஆதாரம் எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

என முடியும் (புறம். 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை வரிகளை ஒரு பெண்ணின் தன்னிலையிலிருந்து -நிகழ்காலத்தில் சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக எழுதப்பட்ட கவிதையாக நாம் வாசிக்க முடியும். என் தலைக்கடன் என அவள் ஆரம்பித்துச் சொல்லும் அந்த வார்த்தைகளின் வழியாக இன்று சமூகவியலாளர்கள் சொல்லும் குடும்பஅமைப்பும், அதன் இருப்பில் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கடமையும் சொல்லப்படுவதோடு, அவற்றையெல்லாம் இணைத்து சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பில் வேந்தன் இருந்தான் எனவும் விரிவான சித்திரம் ஒன்றைத் தருவதை நாம் அவதானிக்கலாம். தனது பெண் தன்னிலையைக் கட்டமைத்துத் தரும் பொன்முடியின் வரிகள் அக்கால கட்டத்துச் சமூகம் போரை மையப்படுத்திய சமூகம் என்பதை மட்டுமல்ல; குடும்ப அமைப்பும் வலுப்பெற்ற சமூகம் என்பதையும் உணர்த்துகிறது.  பொன்முடி எழுதிய மற்ற இரண்டு பாடல்களும் கூட இந்தக் கூற்றை வலுப்படுத்தவே செய்கின்றன. புறம். 310 இல் அவள் விரித்துக் காட்டும் சித்திரம் போர்க்களத்தில் முந்நாள் வீழ்ந்த உரவோர் மகனின் பயமின்மையைக் கூறும் சித்திரமாகவும், புறம் 299 இல் காட்டும் சித்திரம் போருக்குப் பின் ஓய்வெடுக்கும் குதிரைகளின் நிலையை முருகன் கோட்டத்துக் கலம் தொடா மகளிரின் நிலையோடு ஒத்துப் பேசும் சித்திரமாகவும் இருக்கின்றன. இப்பாடல்களின் வழி, போர்ச் சமூகமே அவளது காலத்துச் சமூகம் என்பதையும் , பெண்களுக்கு நேரிடையாகப் போரில் பங்கில்லை; அதற்கு மாறாகக் குடும்ப அமைப்பையும் கடமைகளையும் தனது கடமையாகப் பெண்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் அவள் சொல்லியுள்ளாள் என்பதை நாம் உணர முடியும். பொன்முடி போரை ஏற்றும் விரும்பியும் பேசுவது போலவே ஒக்கூர் மாசாத்தி ,

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;

மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,

யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,

பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;

இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,

வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,

பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

ஒருமகன் அல்லது இல்லோள்,

செருமுக நோக்கிச் செல்கஎனவிடுமே! (புறம்: 279)

என ஒரு பெண்ணின் போர் விருப்பத்தைப் பாராட்டிப் பேசுவதைக் காட்டுகிறாள். இவ்வரிகளில் ஒக்கூர் மாசாத்தி தன் குடும்ப உறுப்பினர்களைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்த பெண்ணின் சித்திரத்தை தருவதைப் போலவே போர்க்களத்தில் தன் மகன் இருக்கிறான் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு தாயின் மனநிலையைக்  காவற்பெண்டுவின்,

   சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல்அளை போல,

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!  (புறம்: 86)

என்ற வரிகளிலும் காண்கிறோம். கவி காவற் பெண்டுவை விடவும் கூடுதலாகக் காக்கைபாடினி நச்செள்ளையின் கவிதையில் இடம்பெறும் தாய் போர்க் களத்தில் வீரமரணம் அடைந்த மகனின் சிதைந்த உடலைக் கண்டு ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே! (புறம். 278) எனச் சொல்கிறாள். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அள்ளூர் நன்முல்லையின் கவிதைகள் தங்கள் அரசனுக்காகப் போர்க்களம் செல்ல விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளனர் என்கின்றன(306.340). கவி பூங்கணுத்திரையாரின் கவிதை (277) தன் மகன் களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே எனவும் பேசுகிறது.

போரும், போரில் பங்கேற்றலும் அப்போர்களில் தன் குடும்ப உறுப்பினர்களின் வீரமரணமும் பெண்களுக்கு உவகை கொள்ளும் ஒன்றாக இருந்துள்ளது.வெறிபாடிய காமக்கண்ணியின் கவிதை(புறம்.302) குதிரைப் படை நடத்திய போர்க் களக்காட்சியை விரித்துச் சொல்கிறது.குறமகள் இளவெயினி தனது அரசனுக்காகப் போரிட்ட இளைஞனைப் பாராட்டுகிறாள் (புறம்.157).சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடியதாக இடம் பெற்றுள்ள வெண்ணிக்குயத்தியின் கவிதையை நுட்பமாக வாசித்தால் அவனிடம் புறமுதுகிட்டதால் நாணி வடக்கிருந்தவனை அவள் பாராட்டுவதை உணரலாம்.

   வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

மிகப் புகழ் உலகம் எய்திப்,

புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே! (புறம்.66)

   என்ற வரிகளின் வழியே வடக்கிருந்து இறந்த செயல் பாராட்டப்படுகிறது. போரில் வெல்வது அல்லது வீரமரணம் அடைவது என்பதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டதையும், அவ்வாறு அடைய முடியவில்லை என்றால் அதற்குப் பின் வடக்கிருந்தாவது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் எனப் பேசுவதும் போரின் மீதான ஈர்ப்பையும் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையையும் வெளிப்படுத்துவன அல்லாமல் வேறில்லை.

   ஒக்கூர்மாசாத்தியார்,காக்கைபாடினியார் நச்செள்ளையார், குறமகள் இளவெயினி, பூங்கணுத் திரையார், வெண்ணிக் குயத்தி ஆகியோர் போர்க்களக்காட்சி, போர் விருப்பம், போரில்படுதல் போன்றவற்றைத் தங்கள் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளதற்கு மாறாக போரினால் பெண்கள் படும் துயரம் குறித்த கவிதைகளும் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. தனது புதல்வனின் தந்தைப் போர்க்களம் என்னும் பெருங்காடு ஏகிப் பட்டபின்னர் பெண்னுக்கு ஏற்படும் துயரக் காட்சியை விரிவாகத் தருகிறாள் தாயங்கண்ணியார் என்னும் பெண்கவி (புறம் 250)

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,

கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,

அல்லி உணவின் மனைவியடு, இனியே

புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!

வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்

முனித்தலைப் புதல்வர் தந்தை

தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

தாயங்கண்ணியார் தரும் துயரக்காட்சியைப் போன்றதொரு காட்சியை விவரிக்கும் பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டுவின் கவிதை வரிகள் (புறம்.246) சமூகவிதிகளை உருவாக்கி நடைமுறைப் படுத்தும் நிலையில் இருக்கும் பலவகை அறிவாளிகளையும் பார்த்துக் கணவன் போரில் மாண்டபின் உயிரோடு இருப்பது கொடுமையானது எனச் சொல்லிவிட்டு,

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!

பொய்கையும் தீயும் ஒன்றே எனப் பேசும் பெருங்கோப்பெண்டுவின் துயரம் தன் கணவனின் மரணத்திற்குக் காரணமான போரையும், போரில் தன் கணவன் இறந்த பின் வாழ வேண்டிய கைம்மை நிலையையும் ஒருசேரக் கோபத்துடன் பேசுவதை நாம் வாசித்திருக்கிறோம்.  இன்றைய முழுநிலவு நாளின் துயரம் இதற்கு முந்திய முழுநிலவு நாளில் இருந்ததில்லை; அன்று இருந்ததெல்லாம் மகிழ்ச்சி தான் எனப் பேசும் பாரிமகளிரின் துயரம் தோய்ந்த வரிகளின் பின்னணியில் இருப்பதும் போரின் விளைவே எனச் சொல்ல வேண்டியதில்லை.  இரண்டு முழுநிலவு நாட்களுக்கும் இடையில் நடந்த போரில் தங்களின் தந்தை பாரியின் மரணத்திற்கான போர் நிகழ்ந்து முடிந்து விட்டது என நேரிடையாகப் பேசாமல் 

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (புறம்.112)

எனப் பேசும் கவிதை வரிகளினூடாக இடையில் நிகழ்ந்த போரின் மீதான பாரி மகளிரின் வெறுப்புக் குரலை வாசிக்காமல் விட்டு விட முடியாது. இக்கவிதைகள் அனைத்திலும் எழுதிய பெண்களின் கூற்றாக அல்லது ஒரு பெண்ணின் பாத்திரக் கூற்றாக அமைந்து பெண் தன்னிலையை உருவாக்கி, போர் என்னும் அக்கால கட்டத்திய மைய நீரோட்டப் பெருநிகழ்வை ஏற்றும் விலகியும் பேசியதன் காரணங்களாகப் பார்க்கிறோம். அத்தோடு பெண்ணுக்கான இயங்குவெளி குடும்பம் என்பதையும், சமூகத்தின் அடித்தளமான நுண் அலகே குடும்பம் தான் என்பதையும் உணர்ந்தவர்களாக வெளிப்படும் அக்கால கட்டப் பெண்கள், சமூகத்தின் பெரும் போக்கோடு தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்த ஈடுபாட்டிற்காக மகிழ்ச்சியையும் உவகையையும் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இத்தகைய போர்கள் பெண்களின் வாழ்வில் பெருந்துயரங்களைக் கொண்டு வந்தன என்பதை உணர்ந்து, அதை விமரிசனம் செய்யும் தாபதநிலை, கையறுநிலை, ஆனந்தப் பையுள் என்னும் உணர்வுகளையும் கூட அக்கவிதைகள் மூலம் நாம்  வாசிக்கலாம். போருக்குச் சென்றவன் வந்துவிட்டால் எல்லாத்துயரமும் போய்விடும் எனச் சொல்லும் வெள்ளைமாலரின் கவிதைகளும், (புறம். 271, 296.), துயரத்தோடும் அச்சத்தோடும் சித்திரிக்கின்றன.

பொதுவெளியில் பெண்ணின் எல்லைகள்:

குடும்பம் என்னும் எல்லையைத் தாண்டிப் பொது வெளியில் இயங்கும் மனிதர்களும், அதிகாரப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் அரசர்களும் செயல்படும் முறையைப் பேசும் கவிதைகளை எழுதிய பெண்களாக மூன்று பேரை மட்டுமே சுட்டிக் காட்ட முடிகிறது. புறநானூற்றில் 33 கவிதைகளைப் பாடிய ஒளவையும், 7 கவிதைகளைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையும் பதிற்றுப் பத்தில் 6 ஆம் பத்தைப் பாடிய காக்கை பாடினியும் மட்டுமே ஆண்களின் புறக்கவிதையில் இடம் பெறும் பாடுபொருட்களைப் பாடியுள்ளனர். சேரமன்னர்கள் பத்துப்பேரைப் பற்றிய பத்துப் பாடல்கள் என்னும் அமைப்பைக் கொண்ட பதிற்றுப் பத்து வெவ்வேறு காலகட்டத்தில் பாடப் பெற்றதா? அல்லது சேரமன்னர்களின் பரம்பரையைப் பாராட்டுவதற்காக ஒரே நேரத்தில் பத்துப் பேரால் எழுதப்பட்டுத் தொகுக்கப்பெற்ற நூலா என்ற ஐயத்தைத் தரும் அந்நூலில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் வீரம், காதல், கொடை, ஆட்சிச் சிறப்பு , அழகு என அனைத்துக் கூறுகளும் போற்றப்படுகின்றன. வஞ்சித்துறை, பாடாண் பாட்டு,குரவைநிலை, செந்துறைப் பாடாண், காட்சி வாழ்த்து, செந்துறைப் பாடாண், ஒள்வாள் அமலை, விறலி ஆற்றுப்படை, செந்துறைப் பாடாண், மாகூர் திங்கள்,விறலி ஆற்றுப்படை, பதிகம் என அமைந்துள்ள அப்பதிற்றுப் பத்தில் பாராட்டும் போற்றுதலும் தவிர பிற பரிமாணங்கள் எவையும் இடம் பெறவில்லை. ஆனால் அதே காக்கை பாடினி நச்செள்ளை பாடிய தும்பைத் திணையின் உவகைக் கலுழ்ச்சித்துறைப் பாடலில் பெண்ணின் தன்னிலை உருவாக்கத்தோடு (புறம்.278)  வீரமும் அதன் தொடர்ச்சியாக இழப்பும் இடம் பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இந்தத்தன்மையை மாறோக்கத்து நப்பசலையாரிடம் வேறுவிதமாகக் காணமுடிகிறது.அவர் தான் பாடிய ஏழு பாடல்களில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக்காரி. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், அவியன் ஆகிய நான்கு பேரைப் பாடியுள்ளார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மூன்று பாடல்களில் பாடப் பெற்றுள்ளான், இரண்டு பாடல்கள்(37,39) அவனது பரம்பரைப் பெருமை, போர்த்திறம் பற்றிச் சொல்ல, ஒரு பாடல் (226)அவனது இறப்பு நெருங்கிய நிலையில் ஏற்பட்ட கையறுநிலையாக வெளிப்பட்டுள்ளது. திருமுடிக்காரி(126) , ஏனாதி திருக்கண்ணன்(174), அவியன்(280) ஆகியோரிடம் பொருள் பெறும் பொருட்டுப் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. ஒரு பாடல் மட்டும் ஆனந்தப் பையுள் (383) துறையில் மார்பில் புண் பட்டு வேதனைப் படும் ஒருவனின் வலியைச் சொல்லும் போது போர் தரும் துயரத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.

புறநானூற்றில் அதிக எண்ணிக்கையில் கவிதை பாடிய பெண் கவி ஔவை. அவள் பாடிய 33 கவிதைகளில் 24 கவிதைகள் அதியமான் நெடுமானஞ்சியையும் ஒருபாடல் அவன் மகன் பொகுட்டெழினியையும் பாராட்டிப் பேசுகின்றன. நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய ஒருபாடலும், யாரைப் பற்றிய பாடல் என்ற குறிப்பின்றி இருக்கும் வெட்சி மற்றும் கரந்தைத் திணைப்பாடல்களும் போர் விருப்பு, போர்க்களக் காட்சி, போரில் வென்ற அரசனின் பெருமை, அவனது கொடைச் சிறப்பு எனப் பேசுகின்றன. பெரும்பாலும் அதியமான் நெடுமானஞ்சியின் வீரம், கொடை, வல்லாண்மை ஆகியன ஒற்றைப் பரிமாணத்தோடு பலபடப் பாராட்டப்பெற்றுள்ளன என்றாலும் பொதுவியல் திணையில் அமைந்த மூன்று பாடல்களும், சேரமான் பெருமானும் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருந்த போது பாடிய பாடலும் வாழ்க்கையின் நிலையாமை குறித்து விரிவாகப் பேசுகின்றன. பொதுவியல் திணையில் பொருண்மொழிக்காஞ்சியாகத் (187 ) ஔவையார் எழுதிய

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

என்ற புகழ் மிக்க வரிகள் அவரது காலச் சமூகம் ஆண்களால் வழி நடத்தப்படும் சமூகம் என்பதைச் சொல்லும் முக்கியமான கவிதை வரிகள் என்பதை யார் மறுக்க முடியும்.  இந்த வரிகளை எழுதிய ஔவையின் மனநிலை அதனை ஏற்றுக் கொண்டு அடங்கிப் போக விரும்பிய ஏற்பு மனநிலை சார்ந்ததா? பெண்களுக்கு எந்த உரிமையையும் இந்தச் சமூகம் தரவில்லை என்ற விமரிசனத்தைக் கோபமாகச் சொல்லும் மனநிலையா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

முடிவுரை:

இக்கட்டுரையின் விவாதிக்கப்பட்ட கவிதையியலின் வழியாகப் பின்வருவனவற்றை முடிவுகளாகக் கூறலாம்.

பெண்களின் புறக்கவிதைகளும் அகக் கவிதைகளைப் போலவே பெண் தன்னிலையை உருவாக்கிப்பேசும் கூற்று முறையையே கொண்டுள்ளன. அகக்கவிதையில் கேட்போர் யார் என வெளிப்படுவது போலப் புறக்கவிதையில் வெளிப்பட வேண்டும் என நினைக்கவில்லை. இத்தன்மை புறக்கவிதையின் பொதுத்தன்மை. இப்பொதுத்தன்மை  பெண்களின் புறக்கவிதைகளிலும் வெளிப்பட்டுள்ளன.

கவிதைக்குள் உருவாக்கப்பெற்ற பெண்  தன்னிலை வழியாகத் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் போர் மீதும், போரைப் பொறுப்பேற்று நடத்தும் அரசன் அல்லது தலைவன் மீதும் கொண்ட பற்றை வெளிப்படுத்தப் பெண்கள் விரும்பியுள்ளனர். அதே நேரத்தில் போர் தரும் வலியும் இழப்பும், துயரமும் தன்னை நேரடியாகப் பாதித்த நிலையில் போர் வெறுப்புக் கவிதைகளையும் பெண்கள் எழுதியுள்ளனர்.

சமூக வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளையும் பாடுகிறவர்களாகப் பெண்கள் வெளிப்படவில்லை என்றாலும் வாழ்க்கையின் நிலையாமையையும், இன்மையின் தவிர்க்க இயலாத் தன்மையையும் ஒரு சில கவிகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளனர்.

====================================================================

                     போலந்து, வார்சா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டதின்

                               40 -வது ஆண்டு விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் ஆங்கில                                                         வடிவில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் தமிழ் வடிவம்

                                                                                        கட்டுரை. நாள் 16/5/2013


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை