: 36

தேர்தல்-2019/11 வெங்காய வெடிகுண்டு

தூங்கும் வெடிகுண்டுகள் (ஸ்லீப்பர் செல் ) தயாரிப்பதில் எப்போதும் ஆளுங்கட்சிகளுக்கே சாதகமான சூழல்கள் நிலவுகின்றன. தூங்கும் வெடிகுண்டுகள் பொதுவாகத் தங்கள் ஆட்சி மீதிருக்கும் அதிருப்தியில் பொதுவான வாக்காளர்கள் - கட்சி சாராத வாக்காளர்கள் முதன்மையான எதிர்க்கட்சிக்குத் திரும்பி விடக்கூடாது; அவர்களைத் திசை திருப்பும் நோக்குடன் புதிய கட்சியொன்றை அடையாளம் காட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படிக் காட்டும் முயற்சியே தூங்கும் வெடிகுண்டு என்னும் வெங்காய வெடிகுண்டு தயாரிப்பு.

மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் உருவாக்கிய தூங்கும் குண்டுகள் ஒரு தேர்தலுக்குப் பின் உலவும் குண்டுகளாக மாறி உருவாக்கிய காங்கிரஸையே பதம் பார்த்த வரலாறு இந்தியா முழுக்க உண்டு.தமிழ்நாட்டிலும் உண்டு. முதல் உதாரணம் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக. இரண்டாவது உதாரணம் திரு. விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. கட்சி ஆரம்பிக்க உதவும் தேசிய கட்சிகளை நேரடியாக எதிர்க்காமல் சில முன்வைப்புகளை விமரிசிக்கும் மனநிலையை வெளிப்படுத்துவதை அந்த வெங்காய வெடிகளின் தலைமைகள் செய்யும். காலப்போக்கில் உதவிய கட்சிகளையும் சேர்த்தே எதிர்த்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடித்த கட்சிகள் மாநிலங்களில் பல உண்டு.

தேச ஒற்றுமை, அனைவருக்குமான பங்கு, ஏற்றத்தாழ்வை நீக்கும் பொருளியல் உறவுகள் எனப் பேசும் தேசியக் கட்சிகள் முன்மொழியும் முகம் மாநிலக்கட்சி என்ற அளவில் அறியப் பெற்ற முகமாக இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றன. தங்கள் கட்சிக்கு இன்னொரு நகலை உருவாக்கி வளர்ப்பதை தேசிய கட்சிகள் விரும்புவதில்லை. ; மாநிலம் முழுவதும் அறிந்த முகம் ஒன்றைக் கொண்டு மாநிலக் கட்சிகளுக்கெதிராகவே உருவாக்கியிருக்கின்றன. .உடனடியாக வெடிக்கப் போகும் வெடிகுண்டுகளாகக் காட்டிவிடப் பிரபலமான நடிகர்களின் கவர்ச்சி முகங்கள் பயன்படும் என நினைப்பது தேசியக் கட்சிகளின் கணிப்பு. இந்தக் கணிப்பின் அடிப்படையிலேயே திரு.ரஜினிகாந்தின் உச்சநடிக முகமும் திரு. கமல்ஹாசனின் நாயக பிம்பமும் கண்டறியப்பட்டு இப்போது முன்மொழியப்படுகின்றனர்.

தேசியக் கட்சிகளின் எண்ணத்திலிருந்து மாறுபட்டவை மாநிலத்தின் ஆளுங்கட்சிகள். அவை தயாரித்து உருவாக்கும் வெங்காய வெடிகுண்டுகள், மாநில அளவிலான அடையாளத்திற்கு மாறாக வட்டார அல்லது சாதி அடையாளம் கொண்ட நபர்களின் தலைமையில் உருவாக்கப்படுகின்றன. சாதிப் பெரும்பான்மை கொண்ட வட்டாரத்தில் தங்களின் செல்வாக்கு குறைந்திருக்கிறது என்று நினைக்கும்போது அந்தப் பகுதியில் எதிர்ப்பு வாக்குகள் எதிர்க்கட்சிக்கு அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்பதற்காக இந்த வெடிகுண்டுகள் பல்வேறு தேர்தல் காலங்களில் உருவாக்கப்படுகின்றன. மாநில ஆளுங்கட்சிகள் உருவாக்கும் தூங்கும் வெடிகுண்டுகளும் சில நேரங்களில் நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தபின் தங்களை நடிகர்களாகக் காட்டிக்கொள்வதைவிட தங்களின் சாதி அடையாளத்தை முதன்மைப் படுத்துபவர்களாக மாறுகிறார்கள். இதுதான் அவர்களை அரசியல்வாதிகளாக உருவாக்கும் கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகளும் கூட. ஒருநடிகராகப் பொதுமனிதனாக -மாற்றங்களைப் பேசும் கலையோடு தொடர்புடைய மனிதன் அரசியல்வாதியாக ஆனவுடன் குறுகிய சாதி அடையாளத்தைத் தாங்கிக் கொள்ளுதல் தனது தொழில்சார்ந்த வளர்ச்சிக்கு எதிரானது என்பதைக் கூடக் கவனிக்காமல் அரசியல்வாதி ஆகிப் பின்னர் நகைச்சுவைக் காட்சிகளை அரங்கேற்றும் பிம்பங்களாகிக் காணாமல் போயிருக்கிறார்கள்.

லட்சிய திமுகவை உருவாக்கிய டி.ராஜேந்தர் தொடங்கி கே.பாக்யராஜ், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்களும் சின்னச் சின்னக் கட்சிகளை நடத்தும் - முன்னேறிய/ இடைநிலை சாதியத் தலைவர்களும் இவ்வகையான தூங்கும் வெடிகுண்டுகளே. அவர்கள் பெரும்பாலும் உருவாக்கக் காரணமாக இருந்த கட்சிகளைக் கடுமையாக எதிர்த்துப் பேசுவார்கள்.அதன்மூலம் அந்தக் கட்சியின்மீது அதிருப்தியை வெளிப்படுத்த விரும்பும் வாக்காளர்களைத் தங்களை நோக்கி இழுக்கும் விதமான பேச்சுகளுக்கு ஊடகங்களின் கவனமும் கிடைக்கும். அந்தக் கவனம் தேர்தலில் வாக்களிப்புடன் முடிந்துவிடும். அதன் பிறகு அந்த வெடிகுண்டுகள் தூங்கிவிடும். அடுத்த தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஈரத்துணியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெடித்துவிடுவேன்; வெடித்து விடுவேன் என வெங்காய வெடியாக மாறி வாசனையை- நாற்றத்தைக் கிளர்த்திவிடும்.

இந்தத்தேர்தலில் கூட்டணிகள் உருவானவுடன் சில வெங்காய வெடிகளின் நாற்றம் தமிழக வாக்காளர்களின் நாசியைத் துளைக்கக் காத்திருக்கின்றன. தேர்தல் கால வெங்காய வெடிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் செயல்படும் நாளிதழ்கள், இலக்கிய இதழ்கள் பதிப்பகங்கள், ஊடகங்கள் போன்றனவும் தங்களுக்கான வெங்காய வெடிகளை உருவாக்கித் தொடர்ந்து சேவையாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வெங்காய வெடிகள் எப்போதும் விருதுகள், விழாக்கள் மூலம் ஆளுமைகளை உருவாக்கி நடமாடச் செய்கின்றன. இவைகளையெல்லாம் தர்க்கம் சார்ந்த நவீனத்துவப்புரிதலில் விளக்கிவிட முடியாது. மிதக்கும் குமிழிகளை உருவாக்கிக் காரணம் கற்பிக்கும் பின்னை நவீனத்துவமே சில புரிதல்களை உருவாக்கும்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை