: 31

எழுத்தாளர்கள் இருக்கட்டும்; எழுத்தைப் பேசுங்கள்

பதிப்பகங்கள் அல்லது எழுதியவர்களே ஏற்பாடு செய்யும் புத்தக வெளியிடுகளே இலக்கியச் செயல்பாடுகளாகவும் விமரிசனச் செயல்பாடுகளாகவும் ஆகிவருகின்றன. அந்நிகழ்வுகளில் பேசுபவர்கள் பெரும்பாலும் எழுத்தாளர்களை மையப்படுத்தி எழுத்தைப் பாராட்டும் தொனியை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பதிப்பகமும் அதற்கான எழுத்தாளர்களைக் கொண்டிருப்பதுபோல, அதன் நூல்களை வெளியிட்டோ, அல்லது வாங்கியோ பேசுவதற்கும் ஆட்களை வைத்திருக்கின்றன. முன்பெல்லாம் சினிமாக்கம்பெனிகள் பராமரிக்கும் ‘கம்பெனி ஆர்ட்டிஸ்ட்’ போல இப்போது பதிப்பக எழுத்தாளர்கள், பதிப்பகப்பேச்சாளர்கள் என ‘கம்பெனிசெட்டு’களைத் தயார் செய்து விட்டார்கள்.
கம்பெனிப் பேச்சாளர்கள் நாளடைவில் விமர்சகர்களாக மாறிவிடும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இந்நிலைமை வளர்ப்பது இலக்கிய விமரிசனத்திற்கு நல்லதில்லை.

தொடர்ந்து சென்னையிலும் தமிழகத்தின் வெவ்வேறு பெருநகரங்களிலும் நடக்கும் கண்காட்சிகளையொட்டி நடக்கும் புத்தக வெளியீட்டு விழாக்கள், வாசகர் சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் எனப் பலவற்றைப்பார்க்க முடிகிறது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்தபின்பு அவை நடக்கப்போவது பற்றியும் நடந்து முடிந்தது பற்றியும் தகவல்களும் பதிவுகளும் படங்களும் கிடைக்கின்றன. ஆனால் என்ன பேசப்பட்டன; எவ்வகை வாசிப்பின் வழியாக நூல்கள் முன்வைக்கப்படுகின்றன என்ற விவரங்கள் கிடைப்பதில்லை.
ஒரு இலக்கியப்பிரதி எப்படி உருவாகியிருக்கிறது? அதற்குள் இலக்கியத்தின் எந்திரவியல் கூறுகளும் படைப்பாக்கக்கூறுகளும் இயைபுடன் இருக்கின்றனவா? எவையேனும் ஒன்று கூடுதல் குறைவாக இருக்கின்றன என்றால் எப்படி? இரண்டில் ஒன்று துருத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது எது? அதனால் கெடும் அழகியல் கூறு என்னென்ன? போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு விமரிசிக்கும் விமரிசனங்கள் இல்லை. இத்தகைய விமரிசனங்களே படைப்பாக்க விமரிசனக் கலையைக் கொண்டுவரும்.

இதற்குப் பதிலாக ஒரு இலக்கியப்பிரதி ஏன் உருவாகிறது? எழுதுபவனை உந்துத் தள்ளிய தத்துவம் அல்லது வாழ்வியல் நெருக்கடி என்பது எது என்ற கேள்வியோடு விமரிசனங்கள் செய்யப்படலாம். 1990 களில் செல்வாக்கோடிருந்த இந்தப்போக்கும் இப்போது இல்லை. அணுகுமுறைகளைக் கற்றுத்தேர்ந்து விமரிசனத்தைச் செய்யவேண்டிய நெருக்கடியைத் தரும் கோட்பாட்டு விமரிசனத்தை வளர்த்தெடுக்கவேண்டிய அவசியத்தை நாம் உணரவிலை.

இவ்விரண்டையும் கைவிட்டுவிட்டு ஓர் இலக்கியப்பிரதி வாசிப்பவரிடத்தில் என்ன வேலையைச் செய்கிறது என்ற கேள்வியோடு விமரிசனத்தைத் தொடரலாம். அப்படித் தொடங்கும்போது வாசிப்பவர்களிடத்தில் இப்படியான உணர்வுகளை உண்டாக்கும் நிலையான கூறுகளின் அர்த்தங்களும் நிரந்தரமில்லாமல் அலையும் தற்காலிகக்கூறுகளின் தற்காலிக அர்த்தங்களும் எவையென்பதை விமரிசகன் கண்டறியது அவசியம். அவற்றைக் கண்டறிந்து நிரல்படுத்திக் கொள்ளும் விமரிசகன், வாசகர்களின் அக மற்றும் புறச்சூழலின் அர்த்தங்களும் அவையும் எப்படி இணைகின்றன எனவும் விலகிப்போகின்றன எனவும் விளக்கிப் பேசமுடியும்.

பனுவல் மைய விமரிசனம் , ஆசிரிய மைய விமரிசனம், வாசிக மைய விமரிசனம் என ஏதாவதொன்றைப் பின்பற்றாமல், அல்லது பின்பற்றியாக வேண்டுமென்பதுகூடத் தெரியாமல் செய்யப்படும் எல்லாவகை பேச்சுகளும் எழுத்தாளனைப் பாராட்டும் பேச்சுகளாகவே நின்றுபோகும். கம்பன், வள்ளுவன், சேக்கிழார், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் எனக்கவிகளின் பெயர்களில் இயங்கும் தமிழ் மன்றங்களில் பேசப்படும் பேச்சுகளில் அந்தக் கவிகளின் சொற்களுக்குள் புதைந்துகிடக்கும் கருத்துகளை, இந்த உலக வாழ்க்கைக்கு அவை தேவைப்படும் முறையைத் (பொருந்தும் விதத்தையல்ல) தேடிக் கண்டுபிடித்து அதன் முன்பின் சொற்களின் நயத்தோடு இணைத்துப் பேசினார்கள் மரபான புலவர்களும் பேராசிரியர்களும். அந்த பேச்சுகள்- ரசனைப்பேச்சுகள் -விமரிசனமல்ல; பாராட்டுகள். பலநேரங்களில் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நடக்கும் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வு நிகழ்வுகளிலும் அவைதான் நடந்தன. இப்போது கல்விப்புலப் படிப்பாளிகளைக் கேலியும் கிண்டலும் செய்துகொண்டே எழுத்தாளர்களும் எழுத்தாள விமர்சகர்களும் அதையேதான் செய்கின்றனர்..


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை