: 17

ஈஷாவின் சிவராத்திரி : வெகுமக்கள் சமயமாக்கும் முயற்சி

நிகழ்காலத்தில் இந்துசமயமாக முன்வைக்கப்படும் பெருஞ்சமயத்தை ஒற்றைச் சமயமாக ஏற்க மறுக்கும் வாய்ப்புகளை அதன் கட்டமைப்புக் கூறுகளே கொண்டிருக்கின்றன. இயற்கை வழிபாடுகள், கருவி வழிபாடுகள், ஆயுத வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள், காவல் தெய்வ வழிபாடுகள், பூர்வநிலம் தேடும் வழிபாடுகள் போன்றவை எப்போதும் ஒன்றோடொன்று இணையாமல் அதனதன் வட்டாரங்களில் செல்வாக்கோடு இருக்கின்றன. இவற்றோடு முரண்படும் முத்தெய்வ வழிபாடுகளும் அம்முத்தெய்வங்களின் குடும்ப உறுப்பினர்களாகக் கட்டமைக்கப்பட்ட தெய்வங்களுக்கான பெருங்கோயில் வழிபாடுகளும் வட்டாரத் தன்மையோடும் அதே நேரத்தில் ஒருவித இந்தியத்தன்மையோடும் இருக்கின்றன.

தனித்தனி வகையான வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் எனப் பிரிந்து கிடக்கும் அதன் வெளிப்பாடுகள் தொடர்ந்து ஒற்றைச் சமயமென்னும் கருத்திற்கு எதிராகவே இருக்கின்றன. அத்தோடு பிரபஞ்சம் - உயிர்கள் - அவற்றிற்கிடையேயான உறவுகள்- அவற்றின் இயக்கங்களுக்குக் காரணமான அதிசக்தியின்/ கடவுளின் இருப்பு பற்றிய கேள்விகளைத் தரிசனங்களாக்கிப் பேசும் சமயச் சொல்லாடல்களும் ஒன்றாக இருக்கவில்லை. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம், வேதாந்தம் போன்றனவும் வேறுபாடுகளை அதிகமாக்கவே செய்கின்றன.

சமய வாழ்க்கைதான் குடும்ப அமைப்பையும் இயக்கங்களையும் தீர்மானிக்கும் நிலை இந்தியச் சூழலில் நிலவுகிறது. அச்சமய வாழ்க்கை பொதுத்தள வாழ்க்கை ஒன்றை - அனைவருக்குமான கூடுகை, கொண்டாட்டம், வெளிப்பாடு போன்றனவற்றை உருவாக்கித் தரவில்லை. மனிதர்களைப் பல்வேறு வர்ணங்களாகவும் அதற்குள்ளும் சாதிகளாகவும் பிரித்து அவர்களுக்கான கடமைகளையும் உரிமைகளையும் பேசிய மதநூல்களின் ஆதிக்கம் அவ்வுருவாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது என்பதை இந்துசமயத்தைப் புத்தாக்கம் செய்துவிட நினைக்கும் நபர்களும், அமைப்புகளும், அதிகார மையங்களும் உணர்ந்துகொண்டனவாகத் தெரியவில்லை.ஆண்-பெண் எனப் பால் வேறுபாட்டையும் சரியாகப் புரிந்து கொள்ள நினைக்கவில்லை. உணர்ந்திருந்தாலும் அதனை மாற்ற விரும்புபவர்களாகவும் தெரியவில்லை.

அதே நேரத்தில் ஒற்றைப் பண்பாட்டை முன்வைக்கும் சமயமாக இந்துச்சமயத்தைக் காட்டி அரசியல் அதிகாரம் பெற நினைக்கும் அரசியல் போக்கோடு சமயவாதிகள் இணைகிறார்கள். அவர்களுடைய இணைவும் செயல்பாடுகளும் சமய எல்லைகளைத் தாண்டுவனவாகவும் இருக்கின்றன. அப்படித்தாண்டும் நவசாமியார்களின் வெளிப்பாடுகள் விதம்விதமானவை. சமையல் கட்டுகளுக்கான - குளியலறைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் சாமியார் ஒருவரின் வணிக முகத்தைக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.

நாளை இன்னொரு சாமியாரைப் பார்க்கப் போகிறோம். நம்காலக் கொண்டாட்ட வெளிப்பாட்டின் முதன்மை வடிவமான சினிமாவையும் தொலைக்காட்சி ஊடகத்தையும் கையில் எடுத்துள்ளார் இந்த நவசாமியார். ஆடல், பாடல், உரசல் வழியாக மனித உடல்களை உச்சத்திற்குக் கொண்டுபோய்த் தளர்ச்சி அடையச் செய்து சமய நம்பிக்கைகளை அதற்குள் ஞானம், தியானம், அறிவு எனச் சொற்களாகச் செலுத்தும் நிகழ்வு முழு இரவு/ நள்ளிரவுக் கொண்டாட்டமாக ஆகப்போகிறது. நடிக, நடிகர்களை - அவர்களின் உடல்களைத் தியானரூபமாகவும் ஆடிக்களைக்கும் மன ஓர்மை உடலாகவும் ஆக்கும் காட்சிகள் இடம்பெறும் என்பதை அதன் விளம்பரக் காட்சிகளே தருகின்றன.

புதுச் சாமியார்களால் செய்யப்படும் - உருவாக்கப்படும் இந்த மாற்றங்கள் அப்பெருஞ்சமயத்தைப் புதுப்பிக்கும் முயற்சி என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவை நிரந்தரமானவை அல்ல. ஒன்றிரண்டு நாட்களுக்கான - திருவிழா நாட்களுக்கான மாற்றங்கள் மட்டுமே. அதுவும் தேர்தல் திருவிழாவின் பகுதியாக ஆக்கப்படும் மாற்றங்கள் மட்டுமே.

Image may contain: 2 people, people smiling, text


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை