: 10

மேற்கோளில் அலையும் கவித்துவம்

பெருந்தேவியின் கவிதைகளை முன்வைத்து.
============================ =========

பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களும் ஒரு மொழியின் அடிப்படை இலக்கணப்படியும் சிறப்புநிலை இலக்கணப்படியும் இணைந்து இலக்கியத்தை உருவாக்குகின்றன. அதன் வழியாக எழுதுபவருக்கும் வாசிப்பவருக்குமான நேரடி அர்த்தங்கள் கிடைக்கும் நிலையில் எளிமையான இலக்கியங்களாக நகர்ந்து விடுகின்றன. எழுதியவர் உருவாக்கும் அர்த்தங்கள் அவரின் சூழல் சார்ந்த ஒன்றாக இருந்து, அச்சூழலை அறியாத வாசகர் அதனோடு பொருந்த முடியாத நிலையில் தனக்கான எழுத்தில்லை என்று தள்ளிவைத்துவிட்டு நகர்வது நடக்கும்.

பொதுவான இலக்கிய வாசிப்பு வினையிலிருந்து கவிதை வாசிப்புவினை ஒற்றை வாசிப்பைவிடவும் கூடுதல் வாசிப்புகளைக் கோருவனவாக இருக்கின்றன. கூடுதல் வாசிப்பின்போது கவிதையில் இடம்பெறும் பெயர்ச் சொற்கள், பெயர்களாக இருந்துவிட்டால் அந்தப் பெயர்களைக் கடப்பது இன்னொருவிதமான அனுபவமாக மாறிவிடும். எல்லா மொழியிலும் கவிதைகள் பலவிதமான பெயர்களை உள்ளடக்குவதன் மூலம் வாசிப்பவரை வேறு தளத்திற்கு நகர்த்தப் பார்க்கின்றன. அப்படி இடம்பெறும் பெயர்களை மேற்கோள் பெயர்கள் எனச் சொல்லலாம். மேற்கோள் பெயர்கள்(Naming reference)இடப் பெயர்களாகவும் தொன்மப் பெயர்களாகவும் அமையும்போது அது சார்ந்த நிகழ்வொன்றை வாசிப்பவருக்கு முன்னால் வைக்கிறது கவிதை. அந்நிகழ்வு சார்ந்து கவியின் சார்புநிலை அல்லது பார்வைக் கோணம் வாசிப்பவருக்குக் கடத்தப்பட்டு வாசிப்பவரின் மனதிற்குள் எதிர்வினைகளை உருவாக்கும். நவீனத் தமிழ்க் கவிதைக்குள் அடிக்கடி மேற்கோளாக வந்துபோகும் அகல்யா ஒரு தொன்மப் பெயர்:வெண்மணி ஓர் இடப்பெயர். இவை உருவாக்கும் அர்த்தங்கள் நேரடியானவை.

இந்த மேற்கோள் பெயர்கள் பெருந் தத்துவங்களை முன்வைத்த சிந்தனையாளர்களாகவும் இருக்கலாம். வரலாற்றுப்பாத்திரங்களாகவும் காதல் குறியீட்டுப் பாத்திரங்களாகவும் கூட இருக்கலாம். அப்போதும்கூடக் குறிப்பான ஒரு பார்வையையே வாசிப்பவர்களுக்குக் கவிதை உருவாக்கும். இதற்கு மாறாக மேற்கோள் பெயர்கள் இன்னொரு எழுத்தாளராக இருந்துவிட்டால் வாசிப்பவரின் வேகம் தடைபடவும், தேடுதலுக்கும் புரிதலுக்கும் இட்டுச் செல்லவும் வாய்ப்புகளுண்டு.

இம்மாதக் காலச்சுவடில் கவி. பெருந்தேவியின் இரண்டு கவிதைகள் அச்சாகியுள்ளன. இரண்டு கவிதையிலும் மேற்கோள்களாக இரண்டு எழுத்தாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல் கவிதையில் தலைப்பிலேயே - வாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும் என்கிறான் ப்யூகோவ்ஸ்கி -என அந்த எழுத்தாளர் பெயர் உள்ளது. இரண்டாவது கவிதையில் -பிரபஞ்சத்தின் துரோகம் - தலைப்பில் இல்லை. அதற்குப் பதிலாக,
 
”அந்நியரின் கருணைக்குப் பஞ்சமே இல்லை. 
அசோகமித்திரனின் நாவல் ஒன்றில் வருகிறது”

எனக் கவிதைக்குள்ளே அசோகமித்திரனின் பெயர் மேற்கோளாகியிருக்கிறது. மரணம் சார்ந்து தவிக்கும் தனிமனிதர்களின் இக்கட்டான கணம் பற்றிய நம்பிக்கையைக் குறித்து ஒரு கேள்வியையும், சுற்றியிருக்கும் மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையைக் குறித்தொரு முன்மொழிவாகவும் மனப் படிமங்களை உருவாக்கும் இரண்டு கவிதைகளும் மேற்கோள் காட்டப்படும் அந்தப் பெயர்களின் வழியாகக் கூடுதல் அர்த்தங்களை அல்லது நேரடி அர்த்தங்களை உருவாக்க முடியும் எனக் கருதியிருக்கின்றன . கவி வெளிப்படுத்தும் விசாரணைக்குள் நுழையும் திறவுகோல்களாக அந்தப் பெயர்கள் அமையக்கூடும் என்றும் கருதியிருக்கலாம். ஆனால் வாசிப்பவர்களுக்கு பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் சூழலும் விசாரணைகளும் தெரியாத நிலையில் இப்பெயர்கள் வாசிப்பவர்களுக்குத் தடையாகவும் வாய்ப்புண்டு.

தமிழ்க் கவிதை மரபில் சமகால எழுத்தாளர்களைத் தனது எழுத்துக்குள் மேற்கோள் பெயராகச் சுட்டுவது புதியதல்ல. தன் காலத்திலேயே மேற்கோளாக ஆன பெண்கவி ஒருத்திச் சங்கமரபிலேயே இருந்தாள். வெள்ளிவீதி என்னும் அந்தப் பெயர் அங்கே பெயராக இல்லை. அவள் எழுதிய கவிதைக்குள் அலைந்த அவளின் மனப்பாங்காக இருந்தாள். அதுபோலவே கவி பெருந்தேவியின் கவிதைக்குள் அசோகமித்திரனும் ப்யூகோவ்ஸ்கியும் எழுத்தில் வெளிப்பட்ட மனப்பாங்கின் படிமமாக இருக்கிறார்கள். இப்பாங்கு கவிதையின் இன்னொரு தளமாக அலையும் தன்மையிலானது.

No photo description available.
No photo description available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை