: 57

பாலியல்: விருப்பங்கள்- குற்றங்கள்-தண்டனைகள்

பாலியல் பற்றிய பேச்சுகள் தொடக்கநிலையில் தனிமனிதர்கள் தொடர்பானதாக இருக்கிறது. அப்போது அந்தரங்கமானதாகவும் இன்னொருவரின் தலையீட்டை மறுப்பதாகவும் கருதப்படுகிறது. அந்தரங்கமானதாக இருக்கும் நிலையில்கூட ஒருவிதக் குற்றம் என்றே சொல்கிறது சமூக நடைமுறை. சமூக நடைமுறையைத் தனது விடுதலை உணர்வுக்கெதிரானது என நினைக்கும் தன்னிலை அதைக் குற்றமாகக் கருதாமல் சாகசமாகக் கருதுகிறது. குற்றத்தைச் சாகசமாக்கிடும் இயங்குநிலை பாலியல் சார்ந்த இயங்குநிலையாக மட்டும் இல்லை. எல்லாக் குற்ற நிலைப்பாடுகளையும் தண்டிக்கும் அதிகாரம் கொண்ட சட்டத்திலிருந்து தப்பித்துவிடும் சாகசமாகக் கருதி, அதன் மொத்த அடையாளமாக இருப்பவர்களைத் தலைமைப்பண்புடையவர்களாக ஏற்றுக்கொண்டுள்ளது இந்திய சமூகம்.

இந்த ஏற்பை வழங்கும் மரபான அமைப்பாக இருப்பது இந்தியாவில் சாதி. சாதி காரணமாகக் குற்றங்களைச் சாகசங்களாக்கிவிட முடியும் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் நகர்ந்திருக்கிறது நவீன இந்திய சமூகம். அந்த நகர்வைச் செய்தது பணம். பணப்பரிவர்த்தனை/முதலாளிய உறவுச் சமூகமாக இந்திய சமூகம் மாறியபோது சாகசக்காரர்கள் மட்டுமே பணக்காரர்கள் ஆனார்கள். பணமும் சாகசங்களும் அரசியலின் கருவியாகிவிட்டன. தேர்தல் அரசியலின் இருமுக்கிய ஆயுதங்களாக இருப்பன சாதியும் பணமும். இவ்விரு ஆயுதங்களையும் தேடித்தேடிச்சேமித்துக் கையாளத் தெரிந்தவர்கள் மேலும் சாகசக்காரர்களாக ஆகிறார்கள். அவர்களாலேயே நிரம்பி வழிகின்றன நமது ஆட்சிமன்றங்கள். ஊராட்சி மன்றம் தொடங்கிப் பாராளுமன்றம் வரை நாம் அனுப்பும் நமது பிரதிநிதிகள் எப்படிப் பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இவர்கள் தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை / சமூகப் பாதுகாப்பைத் தரும் அமைப்புகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் புரிந்தவர்களாக இருக்கிறார்களா?/ குற்றங்களைக் குறைப்பதற்கான சட்டங்களை உருவாக்கவும் அதில் செயல்படும் மனிதர்களுக்கு அடிப்படைப் புரிதல்களை உருவாக்கும் பயிற்சிகளை வழங்கமுயல்கிறார்களா? எல்லாவற்றையும் பணம் காய்க்கும் மரங்களாகப் பார்த்துப் பழகிவிட்டவர்களால் நமது பாதைகள் அமைக்கப்படுகின்றன. அவர்களைத் தொடர்ந்தே நமது பயணங்கள் நடக்கின்றன. அந்தப் பாதைகளில் இறங்குபவர்களையும் அவர்களாகவே ஆக்குகின்றன அந்தச்சாலைகள். அப்படி ஆக விரும்பாத பெருங்கூட்டம் சாலையோரங்களில் நின்று வேடிக்கை பார்க்கிறது. வேடிக்கை பார்க்கும் ஒவ்வொருவரின் தன்னிலையும் அச்சத்துடனும் அவநம்பிக்கையும் சூழ்ந்து நிற்கின்றன.

தனிமனிதப் பாலியல் விருப்பங்கள் குற்றமாக ஆகும் வாய்ப்புகள் பலப்பல விதமாய் இருக்கின்றன என்பதைத் தனிமனிதத் தன்னிலைகள் தொடக்கத்தில் அலட்சியம் செய்கின்றன. விளைவுகளை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. காரணங்களும் காரணிகளும் பேசுவதற்குரியனவாக இல்லாமல் திரள்மக்களின் கருத்துருவாக ஆகிவிடும் நிலையில் பாலியல் விருப்பம் பாலியல் குற்றங்களாகிவிடுகின்றன. தொடர்புடைய தனிநபர்கள் பாதிக்கப்பட்டோராக - பரிதாபத்துக்குரியவராக ஆகிறார்கள்.

இதன் காரணிகள் நமது குடும்ப அமைப்பின் இறுக்கத்தில் தொடங்குகின்றன. கல்விக் கூடங்களின் கற்பித்தல் போதாமையில் விரிகின்றன. பண்பாட்டு அமைப்புகளின் பரிதாபமான தோல்விகளில் அதிர்ச்சிகளாகின்றன. அரசமைப்பு நிறுவனங்களின் நியாயமற்ற சார்புநிலைகள் - சாதி ஆதரவு, பண ஆதரவு, அரசியல் ஆதரவு என எல்லாவகைச் சார்புநிலைகளும் மொத்தமாக நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செயபவர்களை வேடிக்கை பார்க்கும் மனிதத் திரட்சிகளாக ஆகிப்போன நானும் நீங்களும் அவர்களும்தான் எவர்களும் காரணிகளின் பகுதிகளாகவே இருக்கிறோம்

ஒவ்வொருவரின் கண்களிலும் உத்தரங்கள் மிதக்கின்றன. அதைக் கவனிக்கும் திராணியற்றுத் துரும்புகளைப் பற்றிப் பேசுக்கொண்டிருக்கிறோம்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை